எல்லை தாண்டும் உதவிகள்!

தற்போது சமூக வலைதளங்கள் நிறைய வந்துவிட்டதால் ஒருவருக்கு உதவி தேவை என்பதை அதில் பதிவு செய்துவிட்டால் அதன்மூலம் உதவி செய்ய மனம் இருப்பவர் எந்த நாட்டிலிருந்தாலும்
எல்லை தாண்டும் உதவிகள்!

தற்போது சமூக வலைதளங்கள் நிறைய வந்துவிட்டதால் ஒருவருக்கு உதவி தேவை என்பதை அதில் பதிவு செய்துவிட்டால் அதன்மூலம் உதவி செய்ய மனம் இருப்பவர் எந்த நாட்டிலிருந்தாலும் "க்ரவுட் பண்ட்' (crowd fund) மூலம் உதவ முடியும். உதவி தேவைப்படுபவர்களுக்கு ஒருவராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து உதவுவதுதான் க்ரவுட் பண்ட். உதாரணமாக, வறுமையிலிருக்கும் ஒருவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது என்றால் அவருக்கு பலர் சேர்ந்து உதவுவது. அதாவது, தனி ஒருவராக செய்ய முடியாததைப் பலர் சேர்ந்து செய்ய முடியும் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம். இதில் யார் வேண்டுமானாலும் உதவ முன் வரலாம், உதவியும் கோரலாம்'' என்கிறார் "மில்லப்' என்ற க்ரவுட் பண்ட் ஆன் லைன் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் அனோஜ் விஸ்வநாதன்.
""என்னுடைய படிப்பு முடிந்ததும் ஹைதராபாத்தில் ஒரு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கே 2 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அந்த நிறுவனத்தில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் டாய்லெட் கட்டுவதற்காக லோன் கேட்டு வந்தவர்கள்தாம் அதிகம். அது என்னை மிகவும் பாதித்தது. அந்த சமயத்தில் சிங்கப்பூரில் உள்ள என் நண்பர்கள் சிலர், தன் தாய் நாட்டிற்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் யாரை நம்புவது, எந்த அறக்கட்டளையை நம்புவது, எந்த என்.ஜி.ஓவை நம்புவது என அவர்களுக்கு தெரியவில்லை. அதேசமயம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நேரடியாக மக்களுக்கு உதவி செய்யவும் தயாராக இருந்தார்கள். இந்நிலையில் தான்தான் மில்லப் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.
அதன்பின் 2010- இல் என்னுடன் பணிபுரிந்த
நண்பரின் உதவியுடன் மில்லப்பைத் தொடங்கினேன். இதன் மூலம் பின்தங்கிய கிராமப்புறங்களிலும், வளர்ந்துவரும் கிராமப்புறங்களுக்கும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று வருபவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான நிதி உதவி செய்ய தொடங்கினோம். பின்னர், கல்வி தேவை மற்றும் மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். மருத்துவச் செலவு எனும்போது ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட், கேன்சர் என வரும்போது மக்களுக்கு தங்களிடம் உள்ள சேமிப்புகளைத் தாண்டி செலவுகள் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்காக உதவினோம்.
மெல்ல மெல்ல எங்களின் உதவிகளை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தனி நபராக இருந்தாலும் சரி, ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு ஏதாவது விபத்து நேரிட்டு, உதவி தேவைப்பட்டாலும் அவர்களுக்கு அவர்களின் நிறுவனத்தின் உதவியோடும் எங்களின் உதவி போய்ச் சேரும்.
கல்வி உதவி எனும் போது கல்வி நிறுவனங்களுக்கு அடிப்படை தேவையான சேர், பெஞ்ச்சுக்கான தேவையிலிருந்து மாணவர்களின் மேற்படிப்புக்கான உதவி வரை செய்கிறோம். இது தவிர, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கும் உதவி வருகிறோம். மேலும் உணவுத் தொழில், விவசாயம், சானிட்டேஷன், வொக்கேஷனல் டிரைனிங் தேவைப்படுபவர்களுக்கு, சிறு தொழில்களுக்கு, ஏரி, குளங்கள் தூர் வாருதல், சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்கு , பாலங்கள் கட்டுவதற்கு போன்றவற்றிற்கும் உதவி வருகிறோம். அதுபோன்று சிறிய நிலங்களில் காய்கறி பயிரிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் உதவுகிறோம். உதவ நினைப்பவரும், உதவி பெறுபவரும் நேரடியாகவும் தொடர்பு கொள்ள முடியும்.
இதில் நாங்கள் முக்கியமாகக் கடைப்பிடிப்பது. எங்கள் கணக்கு முழுவதையும் வெளிப்படையாக வைத்திருக்கிறோம், அதாவது ஒரு ரூபாய் கொடுத்தவராக இருந்தாலும் சரி, ஒரு லட்ச ரூபாய் கொடுத்தவராக இருந்தாலும் சரி அந்த ஒரு ரூபாய் என்ன ஆனது, ஒரு லட்ச ரூபாய் என்ன ஆனது என்பதை எல்லாருமே பார்க்க முடியும்.
எங்கள் டீம் என்பது 45 பேரைக் கொண்ட ஒரு குழு. அதில் 35 பேர் பெங்களூரில் இருக்கிறார்கள். மற்றவர்கள் இந்தியா முழுக்க பரவியிருக்கிறார்கள். 120 நாடுகளில் இருந்து உதவி செய்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு லட்சம் பேர் இதுவரை பயன் அடைந்துள்ளனர்'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com