அம்மாவுக்காக ஒரு பிரார்த்தனை

காலையில் எழுந்து காபியோடு அன்றைய தினசரியில் உள்ள செய்திகளையும் பருகிக் கொண்டே மனைவியைப் பார்த்த பொழுதுதான் ஏதோ வித்யாசமாய் உணர்ந்தான்.
அம்மாவுக்காக ஒரு பிரார்த்தனை

காலையில் எழுந்து காபியோடு அன்றைய தினசரியில் உள்ள செய்திகளையும் பருகிக் கொண்டே மனைவியைப் பார்த்த பொழுதுதான் ஏதோ வித்யாசமாய் உணர்ந்தான்.
என்னவென்று யோசித்தப் பொழுதுதான் வழக்கமாக இந்நேரம் எழுந்து மருமகளுக்கு ஒத்தாசையாக காய் அரிந்து கொடுத்துக் கொண்டே, அல்லது தேங்காய் துருவிக் கொடுத்துக் கொண்டோ இருக்கும் அவனது அம்மாவை காணவில்லை.
சமையலறையின் பொறுப்புகளை யாரும் சொல்லாமலே அவர்களாக பிரித்துக் கொண்டார்கள். புலாவ், பிரியாணி, பட்டர் மசாலா என்று ஏதாவது புதுவிதமான சமையல் என்றால் அன்று சந்தியா சமையல் பண்ண வேண்டும். சாதாரணமாக சாம்பார், ரசம், பொரியல் மாதிரி அயிட்டங்கள் என்றால் அவனது அம்மா பண்ணுவாள். ஒருவர் சமையல் பண்ணினால், மற்றவர் கையாளாக இருந்து உதவி பண்ண வேண்டும்.
ஆனால் இன்று அவனது மனைவி மட்டும் தனியாக சமையலை பண்ணிக் கொண்டு இருந்தாள்.
"அம்மாவிற்கு என்ன? எப்போதுமே காக்காவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு காலையிலே எந்திருச்சி, ஒரு சொம்பு தண்ணியை தலைக்கி ஊத்திக்கிட்டு, தன்னோட வேலையை ஆரம்பிச்சிடுவாளே' சூரியன் கூட மழைக்காலங்களில் மேகப் போர்வையை போர்த்திக் கொண்டு, முழிக்க சோம்பல்
பட்டுக் கொண்டு இருக்கும். ஆனால் அம்மா முடங்கியதே கிடையாது.
"என்னவாயிற்று அவளுக்கு?' என அம்மாவின் அறையை எட்டிப் பார்த்தான். அவள் ஒரு போர்வைக்குள் முடங்கியவாறு பினாத்திக் கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. உள்ளே நுழையும் இவனது காலடி ஓசையைக் கேட்ட அவள்,
""டேய் நாரயணா... நேத்து ராத்திரியில் இருந்து தலை ஒரே பாரமாக இருக்குடா... உடம்பெல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்குதுடா... வாயெல்லாம் கசப்பா இருக்குடா... உடம்பு அனலா கொதிக்குதுடா... ராத்திரி உன்னை தொந்திரவு பண்ண வேண்டாம்னு சமாளிச்சுக்கிட்டேன்... இப்ப என்னை டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போடா'' என்று ஈனஸ்வரத்தில் அம்மா சொல்லவும், மொதநாள் ஆபிûஸ விட்டு கிளம்பும் போதே, அவங்க சீப் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது,
""மிஸ்டர் சத்யநாரயணன், நாளைக்கு வழக்கத்தை விட சீக்கிரம் வந்திடுங்க... நம்ம டைரக்டர்ஸ் எல்லாரும் நாளைக்கு வர்றாங்க... அவங்க கேக்குற விபரத்தை நாம கொடுக்க ரெடியாயிருக்கணும். வர்ற வழியிலே வண்டி ரிப்பேராயிட்டு, டிராப்பிக்லே மாட்டிக்கிட்டேன்னு எந்தக் கதையும் நாளைக்கு எங்கிட்ட வந்து சொல்லக் கூடாது. கதை சொல்ற வேலையெல்லாம் உங்க பிளாக்குல, பேஸ்புக்குலே எழுதுறதோட நிப்பாட்டிக்கோங்க'' என்று எச்சரித்தது ஞாபகத்திற்கு வந்தது.
இன்னைக்கு அம்மாவை கண்டிப்பாக தான் டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போக முடியாது. அவன் சொல்லும் விளக்கத்தைக் கண்டிப்பாக அவன் எம்.டி கேட்கப் போவதில்லை. இன்று சம்பளத்தையும் அள்ளி தருகிறார்கள். அதற்கேற்றவாறு கடைசி சொட்டு ரத்தம் இருக்கிற வரை, சக்தியை உறிஞ்சி எடுத்து சக்கையாகப் பிழிஞ்சி வேலையையும் வாங்கி விடுகிறார்கள்.
அவனது அப்பா காலையில் பத்து மணிக்கு வேலைக்கு போயிட்டு, சாயங்காலம் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்திருவார். அன்னைக்கு எல்லாரும் அப்படிதான் வேலை பாத்துக்கிட்டு இருந்தாங்க.
ஆனா இன்னைக்கு காலையில் கிளம்பும் நேரம் மட்டும்தான் தெரியும். இரவு எப்பொழுது பணி முடித்து எப்போ வீட்டுக்கு வருவோம் என்பது நிச்சயமாகச் சொல்ல முடியாத நிலை. எத்தனையோ தடவை வீட்டுக்கு கிளம்பலாம் என மூட்டை கட்டும் பொழுதுதான் தலைமை அலுவலகத்தில் இருந்து அவசர அவசரமாக ஏதாவது தகவல் கேட்பார்கள். பின்பு அதை தயார் செய்து ஸ்கேன் எடுத்து ஈ மெயில் பண்ணிவிட்டோ, ஈ கொரியர்ல அனுப்பிவிட்டோ கிளம்புவதற்கு முன் அவனது கைக்கடிகாரத்தில் உள்ள பெரிய முள் குறைந்தது கடிகாரத்தை இரண்டு தடவையாவது சுற்றி வந்திருக்கும்.
பிள்ளைகளுக்கு பிறந்தநாள், அதனால டின்னருக்கு ஹோட்டலுக்கு சாயங்காலம் கண்டிப்பாக வந்து கூட்டிப் போகிறேன் என்று பிள்ளைகளுக்கு வாக்குக் கொடுத்திருக்கும் போதுதான் அவசர வேலை வந்து விடும். வேலையில் பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்கை மறந்து விட்டு வீட்டிற்கு போன பிறகு அவர்களது வாடிய முகத்தைப் பார்க்கும் பொழுதுதான் தான் காலையில் கொடுத்த வாக்கே ஞாபகத்திற்கு வரும். ஆனால் என்ன பண்ண? போட்டிகள் நிறைந்த உலகம். நாம் கொஞ்சம் தயங்கி நின்றாலும், நம்மை கீழே தள்ளி நம்மீது ஏறி மிதித்துக் கொண்டு செல்ல அடுத்தவர்கள் தயாராக இருக்கிற அவசரயுகம் இது. நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் நாமும் கூட சேர்ந்து ஓடத்தான் வேண்டுமே தவிர, சோர்ந்து நிக்கக்கூடாது என்று தனது வேலையைப் பற்றி நினைத்தவாறே,
""சந்தியா... அம்மாவை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போக முடியுமா? எனக்கு இன்னைக்கு ஹெட் ஆபிஸில் இருந்து டைரக்டர்ஸ் வருகிறார்கள். நான் இன்னைக்கு லீவு போட முடியாது. லீவு போட்டால் மெமோ நிச்சயம். பிறகு ஒண்ணு இன்கிரிமெண்டைக் கட் பண்ணுவாங்க... இல்லே... புரமோசனைக் கட் பண்ணுவாங்க... அதனாலே... ப்ளீஸ் நீ கொஞ்சம் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போயேன்...'' என்று அவன் கெஞ்சவும்,
""ஏங்க உங்களுக்கு மட்டும்தான் டைரக்டர்ஸ் வர்றாங்களா? எனக்கும் இன்னைக்கு ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு. நானும் லீவு போட முடியாது... ஏன் சாதாரண காய்ச்சல்தானே.... ஒரு குரோசினோ... பாரசிட்டமாலோ போட்டுக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்லுங்க... சாயங்காலம் வந்து டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகலாம்'' என்று வெடுக்கென்று சொல்லி விட்டாள். இந்த மாதிரி ஒரு பதில்தான் அவகிட்ட இருந்து வருமென்று தெரிந்தாலும், ஒருவேளை அம்மா இருக்கும் நிலையைப் பார்த்து மனசு இரங்கிக் கூட்டிக் கொண்டு போக நினைக்கலாம் என்ற நப்பாசையின் காரணமாகவே கேட்டான்.
பிறகு அம்மாவிடம், ""அம்மா இன்னைக்கு எனக்கும், சந்தியாவிற்கும் வேலை ஜாஸ்தி, ஒரு பாரசிட்டமால் போட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... சாயங்காலம் வந்து டாக்டர் கிட்டே கூட்டிக்கிட்டுப் போறேன்'' என்று அவள் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் சுவற்றைப் பார்த்தபடியே சொல்லிவிட்டு, உடனே வெளியே வந்து விட்டான். அவனது அம்மா மறுத்து ஏதாவது சொன்னால் என்ன பண்ணுவது என்ற பயம்தான் காரணம்.

சாயங்காலம் வீட்டிற்கு வந்தபோது அம்மாவின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தது. பக்கத்தில் போனாலே அனலடிப்பது போல இருந்தது. இவன் வந்தது கூட தெரியாமல் அரை மயக்க நிலையில் இருந்தாள். அதைப் பார்த்ததும் குற்ற உணர்வு தலை தூக்கியது. ஆனால் தான் என்ன வேண்டுமென்றா அம்மாவை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகவில்லை. தன்னுடைய சூழ்நிலை அப்படி என்று தன்னைத்தானே சமாதானம் பண்ணிக் கொண்டு டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனான்.
டாக்டரிடம் போய் காட்டிய பொழுது, ""காய்ச்சல் ரொம்ப அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இவர்களை அலைய வைக்க வேண்டாம். இன்று இரவு மட்டும் அட்மிட் போட்டிரலாம். நாளைக்கு காலையில் அவங்க நெலைமையைப் பாத்துட்டு வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க'' என்று சொன்னார்.
இரவு அட்மிட் போட்டால் தான்தான் அம்மாவுக்கு துணைக்கு தங்க வேண்டும். மேலும் இந்த ஹாஸ்பிட்டலில் ஒரு நாள் அட்மிட் போட்டாலே குறைந்தது ஆயிரம் ரூபாய் பில் போடுவார்கள். தேவையில்லாமல் ஏன் ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். இங்கே தங்கியிருந்தால் என்ன மருந்து கொடுப்பார்களோ, அதே மருந்தை வீட்டில் வைத்து கொடுத்து விடலாம். ஆட்டோ வைத்து வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போனால் மிஞ்சிப் போனால் நூறு ரூபாய்தான் செலவாகும் என மனதிற்குள் கணக்குப் போட்டவன்,
""இல்லே டாக்டர், அம்மா கூட தொணைக்கு தங்கிப் பாத்துக்கிட ஆள் கிடையாது. அதனாலே வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போறேன்'' என்று சொல்லிவிட்டு கூட்டிக் கொண்டு வந்து விட்டான்.
அவன் அம்மாவை கையைப்பிடித்து இறக்கியவன், ஆட்டோவிற்கு காசைக் கொடுத்துக் கொண்டு இருந்தபோது, வீட்டுப்படியில் ஏற முயற்சி செய்த அவனது அம்மா, அப்படியே பின்னால் சாய்ந்து விட்டாள்.
""பணம் கொடுக்கிறது முன்னாடி என்னம்மா அவசரம்? உன்னாலே பெரிய இம்சையாப் போச்சு...'' என்று ஓடிப்போய் அவளை தூக்க முயற்சி செய்ய,
""ஐயோ வலி தாங்க முடியலைடா... என்னைத் தொடாதே...!' என்று கத்த ஆரம்பித்தாள்.
வந்த ஆட்டோவிலேயே திரும்ப ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றான்.
இவர்கள் திரும்ப வருவதைப் பார்த்த டாக்டர்,
""என்ன திரும்ப வந்திட்டீங்க... வீட்டுக்குப் போனபிறகுதான் அட்மிட் போட்டா நல்லதுன்னு தோணுச்சா?'' என்று நக்கலாக கேட்க,
அம்மாவால் ஆட்டோவை விட்டு இறங்க முடியவில்லை. ஆட்டோ டிரைவரும், சத்தியநாரயணனும் சேர்ந்துதான் அம்மாவை தூக்கிக் கொண்டு வந்து அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்தார்கள்.
அம்மா யாரையும் தொடவிடாமல் கத்துவதைப் பார்த்த டாக்டர் உடனே எக்ஸ்ரே எடுக்க ஏற்பாடு செய்து விட்டார்.
எக்ஸ்ரேவைப் பார்த்த டாக்டர், ""நான் நினைச்சது
சரியாத்தான் இருக்கு. இவங்களுக்கு இடுப்பு எலும்பு முறிந்திருக்கிறது. இனி இவங்களால் எழுந்து நடமாட முடியாது. எல்லாமே படுக்கையில்தான்'' என்றார்.
""அம்மாவை சரியாக்க ஏதாவது வழியிருக்கா டாக்டர்?''
""உங்கம்மாவுக்கு வயசாயிடுச்சு... அதனாலே எலும்பு பழையபடி பொருந்திறது சந்தேகம். இப்ப அவங்களுக்கு காய்ச்சல் இருக்கு. அது கொறையட்டும். அப்புறம் அடுத்தது என்ன பண்ணன்னு யோசிக்கலாம்'' என்று சொல்லிவிட்டு அடுத்த பேஷண்டை அவர் கவனிக்கப் போய்விட,
விடிந்தவுடன் அலுவலகத்திற்கு போனிலேயே லீவு சொல்லிவிட்டு, வீட்டில் போய் குளித்து உடைமாற்றி விட்டு, தானும் சாப்பிட்டு விட்டு, அம்மாவிற்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டு, சாப்பிட வைத்து விட்டு டாக்டரின் வருகைக்காக காத்திருந்தான். அவர் வந்து செக்கப் பண்ணியபொழுது,
""டாக்டர் எங்கம்மாவுக்கு ஆபரேஷன் எதுவும் பண்ண முடியாதா...?'' என்று கேட்டான்.
""ஓ...! பண்ணலாமே...! ஆனா உங்கம்மாவுக்கு வயது இருபதில்லே... அறுபது... அதனாலே எலும்புகள் மறுபடி ஒண்ணா சேர்றது ரொம்ப சிரமம். இரண்டாவதா உங்கம்மாவுக்கு ஏற்கெனவே காய்ச்சல் வேற இருக்கு.. அதனாலே உடம்பு ரொம்ப பலகீனமா இருக்கு... ஆபரேஷனை அவங்க உடம்பு தாங்குமான்னு தெரியலை... காய்ச்சல் கூட சாதாரண வைரஸ் பீவர்தான். ரெண்டுநாள்ல சரியாயிடும். ஆனா இந்த நிலையிலே ஆபரேஷன் பண்ணுறது ரொம்ப ரிஸ்க்... வேணா ரெண்டு நாள் கழிச்சிப் பாக்கலாம்'' என சொல்லிவிட்டு, அடுத்த ரூமுக்குப் போய்விட்டார்.
அடுத்து வந்த இரண்டு நாளும் அவனால் அவன் அம்மாவைப் பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவனது அக்கா, தங்கைகள் எல்லாம் தாங்கள் வரமுடியாது என்று நாசுக்காக கழன்று கொண்டார்கள்.
அதே அக்கா, தங்கச்சிமார்கள் அம்மா நல்லா இருக்கிறப்ப எத்தனை நாள் வந்து டேரா போடுவார்கள்.
""அம்மா நானும் எத்தனையோ தடவை பண்ணிப் பாக்குறேன், நீ சுடுற அடை மாதிரி வரமாட்டேங்குது. அப்புறம் உம் பேரப்பிள்ளைக்கு பால்கொழுக்கட்டைன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா அத பொறுமையா பண்ண எங்க நேர
மிருக்கு. இன்னைக்கு சாயங்காலம் டிபனுக்கு அத பண்ணிடும்மா'' என்று ஒவ்வொன்னா பண்ண சொல்லி பிள்ளைங்க பேரச் சொல்லி அவங்க சாப்பிட்டுக்குவாங்க.
ஊருக்கு கெளம்புறச்ச கத்திரி வெயிலை வீணாக்காம அவங்க அம்மா போட்டுக் கொடுத்த கூழ் வத்தல், வெங்காய வடகம், கத்திரி, கொத்தவரங்காய், மாங்கா வத்தல்னு ஒரு மூட்டை தயாரா இருக்கும். இதத் தவிர சாம்பார் பொடி, ரசப்பொடி, வேப்பிலைக் கட்டின்னு வேணுங்கிறத எடுத்துட்டுப் போவாங்க.
அவனோட அக்கா, தங்கைகள் வந்து தங்கும் நாட்களில் சந்தியாவிற்கு தலைவலி, தலைச்சுற்று எல்லாம் வந்து தலையில் இறுகக் கட்டிய டவலுடன் கட்டிலிலேயே அடைக்கலமாக இருப்பாள். மற்ற வகையில் எதிர்ப்பு காட்டினால் ராமர் போன்று சிரித்த முகத்துடன் இருக்கும் சத்தியநாரயணன் பரசுராமர் போன்று கோபமுகத்தை காட்டிவிடுவான். அதனால் அவர்கள் வந்து போகும்வரை பல்லைக்கடித்துக் கொண்டு, பெட்ரூமிலேயே அடைந்து கிடப்பாள்.
""அய்யோ அண்ணி அடிக்கடி உனக்கு தலைவலி, தலைச்சுத்து வருதே. ஸ்கேன் பண்ணிப் பாரு. இப்படிதான் எங்க பக்கத்து வீட்டுலே'' என்று ஆரம்பித்து, அவளது வயிற்றிற்குள்ளும் பிரச்னையை ஏற்படுத்தி விடுவார்கள்.
அம்மா நன்றாக இருக்கும் வரை ""எங்கம்மா மாதிரி வருமா?'' என்று நாய்க்குட்டி மாதிரி சுற்றி சுற்றி வந்தவர்கள்தான், இன்று சாக்கு, போக்கு சொல்லிக் கொண்டு விலகிப் போகிறார்கள்.
ஒரு தாய் பத்துப்பிள்ளைகளைக் கூட வளர்த்து விடுவாள். ஆனால் பத்துப் பிள்ளைகள் சேர்ந்து ஒரு தாயைப் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று எப்போதோ படித்தது அவனது நினைவுக்கு வந்தது. சொன்னவன் வாயில சர்க்கரையைத்தான் அள்ளிப் போடணும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
இன்னைக்கு வரத் தயங்குற இதே தங்கச்சிக மாசமாயிருக்கிறப்ப, அவளுக எடுக்கிற வாந்தியை அருவெறுப்பு பாக்காம அள்ளிப்போட்டு, அவளுக வாய்க்கு இதமா சமைச்சிப் போட்டு, பிள்ளைகள பெத்தப்ப, டெலிவரியாகி ரத்தத்தில் நனைஞ்ச சேலையில இருந்து, பிள்ளங்க பீத்துணிவரை அலசிப் போட்டு, அவுக பிள்ளையை பத்து மாசம்தான் வயித்துல சொமந்தாங்க, ஆனா அவுக அம்மா அதைவிட அதிகமான மாசம் அவங்களை கையில தாங்கிக்கிட்டு இருந்தா... அத சொன்னா ஓரே வார்த்தையிலே சொல்லிடுவாங்க... "அதெல்லாம் ஒரு அம்மாவோட கடமை'ன்னு. அம்மாவுக்கு மட்டும்தான் கடமை உண்டு, பிள்ளங்களுக்கு கடமையில்லைங்கிறது யார் வகுத்த சட்டம்னு தெரியல. இதெல்லாம் யோசிச்சி என்ன ஆகப்போகுது? எப்படியும் அம்மாவ இப்ப நாமத்தான் பாத்துக்கணும். வேற வழியில்லே...
காலையில் நர்ஸ் வந்து பெட்பேன் வைத்து, டவல்பாத் கொடுத்தாலும், கூடமாட அவன்தான் அவனது அம்மாவை தூக்க வேண்டியது இருந்தது. ஒரு குழந்தையை அம்மா பிறந்த கோலத்தில் பார்ப்பது சாதாரண விஷயம். ஆனால் அம்மாவை ஒரு மகன் பிறந்த கோலத்தில் பார்ப்பது கொடுமை. நர்ஸ் டவல்பாத் கொடுக்கும் போது, வேறு யாரும் இல்லாததால் அவன்தான் கூட இருந்து உதவ வேண்டியதாக இருந்தது. கனத்த மனதுடனே அம்மாவுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு இருந்தான். கடவுளே இந்த இரண்டு நாளே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே... இவர்களை எப்படி இனி தினமும் பார்த்துக் கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பே மலைப்பாக இருந்தது.
காய்ச்சல் குறையவும், ஒரு வாரம் கழித்து டாக்டர் ஆபரேஷன் பண்ண நாள் குறித்து விட்டார்.
ஆனால் ஆபரேஷன் பண்ணும் பொழுது பிழைப்பதற்கான சான்ஸ் பிஃப்டி பெர்சண்ட்தான் இருக்கு. அப்படியே ஆபரேஷன் முடிஞ்சாலும் அவங்களுக்கு வயசானதாலே பழையபடி நல்லா நடப்பாங்களான்னு சொல்ல முடியாது. எங்களால முடிஞ்சதை நாங்க பண்ணுறோம். அதுக்கு மேல கடவுள் விட்ட வழின்னு டாக்டர் சொல்ல, சரியென்று தலையாட்டி விட்டான் சத்தியநாரயணன்.
ஆபரேஷன் பண்ண வேண்டிய நாளும் வந்தது. அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி விட்டு, பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோயிலில் சத்தியநாரயணன் வேண்டிக் கொண்டு இருந்தான், அம்மா நல்லபடியாகத் திரும்பி வர வேண்டுமென்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com