ஆனந்தம் விளையாடும் வீடு

சம்பந்தம்  தன்னுடைய  மனைவி சுசீலாவோடு தோட்டத்தில்  இருந்த சிறிய பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  இருவருடைய முகத்திலும் கவலை ரேகைகள் படர்ந்திருந்தன.
ஆனந்தம் விளையாடும் வீடு

சம்பந்தம்  தன்னுடைய  மனைவி சுசீலாவோடு தோட்டத்தில்  இருந்த சிறிய பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  இருவருடைய முகத்திலும் கவலை ரேகைகள் படர்ந்திருந்தன.   தோட்டத்தில் பலவிதமான  செடிகள் காணப்பட்டன.  அதைச் சுற்றிலும் சில பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.  சம்பந்தம்  பிறந்ததே அந்த வீட்டில்தான்.  அது அவருடைய அப்பா கட்டிய வீடு.   ஒரு  கிரவுண்டு நிலத்தில் முன்பக்கம் வீடும் பின்பக்கம் தோட்டமும் வைத்து பார்த்துப் பார்த்துக் கட்டிய  ஓட்டு வீடு.  அது அவரைப் பொருத்தவரை ராசியான வீடு.  அவருடைய மூன்று குழந்தைகளும் தவழ்ந்து ஓடியாடி விளையாடி வளர்ந்த வீடு அது. 
அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.  மகளுக்குத் திருமணம் செய்து முடித்தாயிற்று.   இதுவரை மகிழ்ச்சியாகச் சென்ற வாழ்க்கைப் பாதையில் புதிதாக ஒரு சிக்கல் முளைத்தது.   அந்த தெருவில் அடையாளம் மாறாமல் இருந்தது அந்த ஒரு ஓட்டு வீடு மட்டும்தான்.  அதற்கும் இப்போது வந்தது வினை.
அவருடைய மூத்த மகன் ஒருநாள் அப்பாவிடம் பேசினான்:
"அப்பா...  தம்பிக்கு இந்த வீடு வசதியா  மாடர்னா இல்லையாம்.   இந்த காலத்திலே  யார்  ஓட்டு வீட்டிலே வாழுறாங்க?   ஒரு பில்டர்கிட்டே பேசி இந்த வீட்டை இடிச்சிட்டு  பிளாட் கட்டிக்கலாம்னு அபிப்பிராயப்படறான்.  வீடும் புதுசா ஆன மாதிரி இருக்கும்.  கையிலே  கொஞ்சம் பணமும் கிடைக்கும்.   மூணு ஃப்ளாட்டுகள்  நமக்குக் கிடைச்சிடும்.   மீதி அஞ்சு பிளாட்டை அவன் வித்து நமக்குக் கொஞ்சம் பணத்தைக் குடுத்துட்டு மீதியை அவன் எடுத்துப்பான்''
இதைக் கேட்ட அப்பா அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
அவருடைய   காதுகளில் யாரோ ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதைப் போல உணர்ந்தார்.
"தம்பி மட்டும்தான் அபிப்ராயப்படுறானா ?  உனக்கு இதிலே விருப்பம் இல்லையா ?''
"எனக்கும் கொஞ்சம் விருப்பம் இருக்குப்பா.  இந்த தெருவிலே நம்ம வீடு மட்டும்தாம்பா அப்படியே அந்தக்கால வீடு மாதிரி இருக்கு''
"டேய்.  இது உங்க தாத்தா வாங்கின வீடுடா.  இந்த வீட்டிலேதான் நான் பொறந்தேன்.  நீங்க மூணு பேரும் ஓடியாடி விளையாடி வளர்ந்த வீடு இது,   எத்தனை நல்ல நல்ல விஷயங்கள் நடந்திருக்கு தெரியுமா ?  இதைப்போய் இடிக்கணும்னு சொல்றீங்களே.  இதுக்கு நான் உயிரோட இருக்கிற வரைக்கும் சம்மதிக்கவே மாட்டேன்''
"அப்பா வீணா பிடிவாதம் பிடிக்காதீங்கப்பா.  சென்ட்டிமெண்ட்டுக்கெல்லாம் இப்ப  வேல்யூ இல்லே.  வீணா சென்ட்டிமெண்ட் அதுஇதுன்னு பேசி எங்க நிம்மதியைக் கெடுக்காதீங்க''
அதுவரை அமைதியாகப் பேசிக்கொண்டிருந்த மூத்த 
மகன் கோபாலின் பேச்சில் இப்போது அப்பட்டமாகக்  கோபம் தெரிந்தது.  
 இளையமகன் சந்திரனும் அப்பாவிடம் தன் பங்கிற்குப் பேசிப் பார்த்தான்.
 அப்பா  கடைசிவரை இதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை.  இரண்டு மகன்களும் இந்த விஷயத்தில் பிடிவாதமாக 
இருந்தார்கள்.
 சம்பந்தத்திற்கு தான் சிறுவயதில் அந்த வீட்டில் விளையாடிய நிகழ்ச்சிகள் ஞாபகத்திற்கு வந்தன.  எத்தனை மகிழ்ச்சியான தருணங்கள் அவை.  அவருடைய அப்பாவிற்கு ஒரே தம்பி.  அவருக்குக் குழந்தைகள் இல்லை.  எனவே பாகம் பிரிக்கப்பட்டபோது சம்பந்தத்தின் அப்பா தன் தம்பிக்குச் சேர வேண்டிய நியாயமான தொகையைக் கொடுத்து அந்த வீட்டை முறைப்படி தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.   
 அப்பா, அம்மா வாழ்ந்த வீடு.   தான் பிறந்த வீடு.  தன் பிள்ளைகள்  மூவரும்  ஓடிஆடி விளையாடிய வீடு.   இதைப் போய் 
இடித்துத் தள்ளி  புதுவீடு கட்ட நினைக்கிறார்களே  என்று நினைத்தபோது 
துக்கம் தொண்டையை அடைத்தது.
"முடியவே முடியாது.    என்ன ஆனாலும் சரி.    இந்த வீட்டை இடிக்கவே விட மாட்டேன்'
 சம்பந்தம் தனக்குத் தானே இப்படி பேசிக்கொண்டதைக் கேட்ட அவருடைய மனைவி சுசீலா அதிர்ச்சி அடைந்தாள்.   அவருக்கு ஏதாவது ஆகிவிடப்போகிறது என்று நினைத்து பயந்தே போனாள்.
"என்னங்க.  ஏன் வீணா மனசைப் போட்டு குழப்பிக்கிறீங்க.  பசங்களை உட்கார வெச்சி அமைதியா பேசிப் பார்க்கலாம்.  சொன்னா புரிஞ்சிப்பானுங்க. நீங்க வளர்த்த பிள்ளைகள்தானே?''
மனைவி  வாஞ்சையாகப் பேசி ஆறுதல் சொன்னாள்.  அவளுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
"என்னங்க.  நாம ரெண்டு பேரும் காஞ்சிபுரம் வரைக்கும் போயிட்டு வரலாமா ?  உங்களோட நண்பர் மூர்த்தியைப் பார்த்து ரொம்ப நாளாச்சி.  அப்படியே கோயிலுக்குப் போயிட்டு வரலாம்.  மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்''
யோசித்துப் பார்த்தபோது சுசீலா சொல்வதும் சரியென்றுபட்டது. 
"சரி...  நாளைக்குப் போயிட்டு வரலாம்''

அடுத்தநாள் காலை இருவரும் புறப்பட்டு காஞ்சிபுரத்திற்குச் சென்றார்கள்.  காமாட்சி அம்மனை வழிபட்டு பின்னர் கோயிலுக்கு அருகில் இருந்த நண்பர் மூர்த்தியின் வீட்டிற்குச் சென்றார்கள்.   சம்பந்தம் சில வருடங்கள் காஞ்சிபுரத்தில் பணியாற்றினார்.  அப்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தியும் உடன் பணியாற்றினார்.  இருவரும் நல்ல நண்பர்களானார்கள்.  அந்த நட்பு ஓய்வு பெற்ற பின்னரும் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 தன் நண்பரைக்  கண்ட மூர்த்தி மகிழ்ச்சியை முகத்தில் வெளிப்படுத்தினார்.
"வாப்பா.... என்ன சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிக்கறே.  ஒரு போன் பண்ணியிருந்தா பஸ் ஸ்டாண்டுக்கே வந்திருப்பேனே.  வா... வா...''
நண்பர் மூர்த்தி அவர்கள் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.  அவருடைய மனைவி இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
"என்னப்பா...  எப்பவும் கலகலப்பா இருப்பே.  இன்னைக்கு உன் முகம் ரொம்ப டல்லடிக்குதே.  ஏதாவது பிரச்னையா ?''
"ஆமாப்பா.  அப்புறமா சொல்றேன். வந்ததும் வராததுமா அதைச் சொல்லி உன்னையும் நான் கஷ்டப்படுத்த விரும்பலே''
இருவரும் காபி குடித்துவிட்டு சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.   டிவியில் ஏதோ ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.
"என்னப்பா பிரச்னை?  என்கிட்டே சொல்லக் கூடாதா ?  என்னாலே ஏதாவது உதவ முடிஞ்சா உன் பிரச்னை தீரலாமில்லையா ?''
"சொல்றேன் மூர்த்தி.  உன்கிட்டே சொல்லாம  வேற யார்கிட்டே சொல்லப் போறேன்''  என்று தன் பிரச்னையைச் சொல்லத் தொடங்கிய போது காலிங்பெல் ஓசை கேட்டது.
 மூர்த்தியின் எதிர்வீட்டில் புதிதாய் ஒரு ஃபிளாட் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.  அதனுடைய உரிமையாளர் மூர்த்தியின் நண்பர்தான்.  அந்த சமயத்தில் அவர் மூர்த்தியின் வீட்டிற்கு வந்திருந்தார்.
"வாங்க... வாங்க.,,    சம்பந்தம்.  இவர் என்னுடைய நண்பர்.    எதிர்வீட்டிலே ஃப்ளாட் கன்ஸ்ட்ரக்ஷன் நடந்துகிட்டிருக்கில்லே.  அது இவரோடவீடுதான்''
"அப்படியா ?''
ஃப்ளாட் என்றதும் அவருக்குக் கோபம் வந்தது.   அடக்கிக் கொண்டார்.
மூர்த்தியின் நண்பரே இப்போது பேச ஆரம்பித்தார்.
"நாங்க மூணு தலைமுறையா வாழ்ந்த வீடு.  பசங்களுக்குப் பிடிக்கலை.  இடிச்சிட்டு ஃபிளாட் கட்டணும்னு பிரியப்பட்டாங்க.  முதல்லே மறுத்த நான் கடைசியிலே ஒப்புக்கொள்ளும்படியா ஆயிடுச்சி''
"மூணுதலைமுறை வீடுன்னு சொல்றீங்க.  அப்புறம் உங்களுக்கு அதை இடிக்கிறதுக்கு எப்படிங்க மனசு வந்துச்சி ?''
சம்பந்தத்தின் கேள்வியில் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. 
சம்பந்தம் இப்படி கோபப்படுபவரல்ல என்பது மூர்த்திக்குத் தெரியும். ஆனால் இப்போது ஏன் இப்படி கோபமாய்ப் பேசுகிறார் என்று அவருக்குப் புரியவில்லை.
"நீங்க கேட்கறது  வாஸ்தவம்தான்.   இந்த காலத்துப் பசங்களோட மனசு வேற.  நான் முடியாதுன்னு சொன்னப்ப அவங்க அதைப் புரிஞ்சிக்கவே இல்லை.   ரொம்ப முரண்டு பண்ணினா கடைசியிலே பசங்க நம்மளை விரோதியாப் பார்ப்பாங்க.  மருமகள்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் நாம ஆகாதவங்களா ஆயிடுவோம்.  ஒரு கட்டத்திலே கோர்ட்டுக்குப் போவாங்க.   பத்து பன்னிரண்டு வருஷம் ஆயிடும்.  நம்ம ஆயுசும் முடிஞ்சி போயிடும்.  யோசிச்சிப் பார்த்தேன்.   ஒருவேளை கேஸ் என் பக்கம் தீர்ப்பாச்சின்னா  பிள்ளைங்க ஆளுக்கு ஒரு பக்கமா வேற வீட்டைப் பார்த்துகிட்டுப் போயிடுவானுங்க. பாசமா வளர்த்த பிள்ளைகள் எதிரிகளாயிடுவாங்க.  எங்க காலம் முடிஞ்ச பிறகு  வீட்டை யாரோ ஒருத்தன்கிட்டே குடுத்து ஃப்ளாட் கட்டுவாங்க.    ஒருநாள் உட்கார்ந்து நானும் என் மனைவியும் தீவிரமா யோசிச்சுப் பார்த்தோம்.   பசங்களோட விருப்பத்துக்கு சம்மதிச்சா நாம வாழ்ந்த மண்ணிலேயே  நாம தொடர்ந்து  வாழலாம்.    பசங்களும் அப்பா நம்ம பேச்சைக் கேட்கிறாரேன்னு சந்தோஷப்பட்டு நம்மளை   கடைசி காலம் வரைக்கும் நல்லா பார்த்துப்பாங்க.  அவங்களும் ஒரே பில்டிங்கிலேயே  நம்ம கண்ணுமுன்னாலேயே இருப்பாங்க.  அவங்க சந்தோஷம்தானே நம்ம சந்தோஷம்?  கடைசி காலத்திலே பேரப்பிள்ளைகளோடு விளையாடறதை விட்டுட்டு  சென்ட்டிமென்டுக்கெல்லாம் இடம் குடுத்தா  நிம்மதி நம்மளைவிட்டுப் போயிடும்''   
இப்போது சம்பந்தம் யோசிக்கத் தொடங்கியிருந்தார்.
"ஆனா நமக்கு எந்தவிதத்திலேயும்  சம்பந்தமே இல்லாத ஏதோ நாலு குடும்பம் நம்ம கூட வந்து ஒட்டிக்குமே ?''
"நீங்க கேட்கறது சரிதான்.   உங்க வீட்டுலே  நாலு போர்ஷன் இருந்தா என்ன பண்ணுவீங்க.  பூட்டியா   வெச்சிப்பீங்க.  நாலு குடும்பத்துக்கு வாடகைக்கு விடுவீங்க இல்லியா.  அதுமாதிரி நினைச்சிக்க வேண்டியதுதான்''
சம்பந்தத்தின் மனதில் பலவிதமான யோசனைகள் ஓடின. 
"சுசீலா...  உடனே புறப்படு.  நாம வீட்டுக்குப் போகணும்''
சுசீலாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
"என்னப்பா.  இப்பதான் வந்தே.  
அதுக்குள்ளே புறப்படுறேன்னு சொன்னா எப்படி ?''
"இல்லே மூர்த்தி.   எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு.   அதை முடிச்சிட்டு நாங்க திரும்பவும் இங்கே வர்றோம்''
சம்பந்தம் சுசீலாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்தார்.
"நீங்க ரெண்டு பேரும் சொன்னதை யோசிச்சிப் பார்த்தேன்.  சரின்னே தோணுது.  உடனே அந்த பில்டரை வரச்சொல்லு.  பேசி முடிச்சிடலாம்''
கோபாலும் சந்திரனும்  அப்பா எப்படி திடீரென்று மாறினார் என்று புரியாமல் விழித்தார்கள்.
பில்டரிடம் பேச்சு வார்த்தை நடந்தது.   எட்டு ஃப்ளாட் கட்டிக் கொள்ள சம்மதித்தார் சம்பந்தம்.   அதில் மூன்று ஃப்ளாட்டுகளை தங்களுக்குத் தரவேண்டும் என்றும் கூடவே சில இலட்சங்கள் பணத்தையும் தரவேண்டும் என்று முடிவானது.
"நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ஃப்ளாட்டுக்குப் போயிடுங்க. நானும் அம்மாவும் ஒரு ஃப்ளாட்லே இருக்கோம்.   எங்க காலத்துக்குப் பிறகு  அதை வாடகை விட்டு நீங்க ரெண்டு பேரும் சரிசமமா பிரிச்சிக்கங்க.  உங்களுக்கும் நிலையா ஒரு வருமானம் வந்த மாதிரி இருக்கும்''
பிள்ளைகள் இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
"சந்திரன்...  எனக்கு ஒரு யோசனை தோணுது.  சொல்றேன். நீ சம்மதிச்சா அதைச் செய்திடலாம்''
"என்ன கோபால் சொல்லு ?''
"அப்பா அம்மா வாழ்ந்த ஃப்ளாட்டை  அவங்க காலத்துக்குப் பிறகு நம்ம தங்கச்சிக்குக் கொடுத்தா என்ன?  யோசிச்சுச் சொல்லு''
"இதுலே யோசிக்க என்ன இருக்கு?  எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே''
இதை எதிர்பார்க்காத சம்பந்தம் சுசீலா இருவருமே திகைத்துப் போனார்கள்.  சுசீலா தன் கணவர் சம்பந்தத்தைப் பார்த்தாள்.   உங்கள் வளர்ப்பு வீணாகவில்லை என்பது அவளுடைய பார்வையில் தெரிந்தது.   அந்த வீட்டில் தொடர்ந்து ஆனந்தம் விளையாடும்.    
ஆர்.வி. பதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com