ஒன்ஸ் மோர்

அந்நாளில் பௌராணிகர்கள் கைகளில் சிக்கியிருந்த கம்பனை விடுதலை செய்தவர்கள் இருவர். கம்பன் கழகங்களை நிறுவி கம்பனை மேடைக்குக் கொண்டு வந்தவர்
ஒன்ஸ் மோர்

அந்நாளில் பௌராணிகர்கள் கைகளில் சிக்கியிருந்த கம்பனை விடுதலை செய்தவர்கள் இருவர். கம்பன் கழகங்களை நிறுவி கம்பனை மேடைக்குக் கொண்டு வந்தவர் சா. கணேசன். இராமாயணம் என்றால் வால்மீகிதான் என்று நினைத்திருந்த ஒரு திருக்கூட்டத்தாரை மடக்கிப் பிடித்துக் கம்பன் பெருமையை உணருமாறு செய்தவர் டி.கே.சி.  வாழ்நாள் முழுவதையும் கம்பனுக்காகவே செலவிட்டவர் இவர். பாடல்களை எடுத்து ஆய்ந்து அதிலுள்ள நுணுக்கங்கள், இலக்கணச் சிறப்புகள், பாடல் அமைப்பு முறை என்பனவற்றைப் பேசும் தமிழறிஞர்கள் போன்றவர் அல்லர் இவர். ஒரு பாடலை, ஏறத்தாழ ஆறு, ஏழு முறை படிப்பார். கேட்பவர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய சிந்தனையைப் பெறுவர். அதற்குக் காரணம் டி.கே.சி.  அந்தப் பாடல்களைப் படிக்கும் முறைதான். பெரும்பாலும் பேச்சாளர்கள் கேட்கின்றவர்கள் முகபாவங்களைப் பார்த்துக்கொண்டே பேசுவர். எவ்வளவு சிறந்த பேச்சாளராயினும் பேசுவோர் தம்மை மறப்பதேயில்லை. டி.கே.சிக்கு அவர் பேச்சைக் கேட்பவர்கள் இரண்டு பேராயினும், இருநூறு பேராயினும் ஒன்றுதான். முதன்முறை பாட்டைப் படிக்கும்போது - கம்பன் பாடல், அதனைப் படிக்கும் டி.கே.சி. அதனைக் கேட்போர் என்ற மூன்றிருக்கும். இரண்டு அல்லது மூன்றாம் முறை படிக்கும்போது டி.கே.சி., இருக்க மாட்டார். கேட்போரும் இருக்க மாட்டார்கள். பாடல் ஒன்று மட்டுமே இருக்கும். அந்தப் பாடலில் டி.கே.சி. தம்மை மறக்கும்போது எதிரேயுள்ளவர்கள் தங்களை மறப்பதில் அதிசயமில்லை, தமிழகத்தின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராகிய இராஜாஜியும், தம்மை மறக்கும் நிலையிலுள்ளவர்களில் ஒருவர்தான். டி.கே.சி.யைச் சொற்பொழிவாளர் என்று கூறுவதைக் காட்டிலும் நாதோபாசனை செய்யும் ஒரு முனி என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாக இருக்கும்.
 1944-இல் காரைக்குடி கம்பன் கழகத்தில் பட்டிமண்டபம் புதிதாக முதன்முறையாகத் தொடங்கியது. பட்டிமண்டபம் என்றால் பேராசிரியர் இராதாகிருஷ்ணன், தோழர் இராமகிருஷ்ணன் (S.R.K), அ.ச.ஞா என்ற மூவர்தான் அணித்தலைமை. இருபது, இருபத்திரண்டு ஆண்டுகள் இந்த மும்முனைக் கூட்டு முறியாமல் நடைபெற்று வந்தது. பேராசிரியர் ராதாகிருஷ்ணனும், தோழர் ராமகிருஷ்ணனும் மிகச் சிறந்த பேச்சாளர்கள். பட்டிமண்டபத்தின் பாங்கறிந்து ஏறிக் கேட்போரைப் பிரமிக்க வைக்கும் முறையில் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்கள். தம் புலமையைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் வெளிப்படுத்தியவர்கள். இதன் பயனாக காரைக்குடி அல்லாத பிற ஊர்களிலும் பட்டிமண்டபம் என்றால் நாங்கள் மூவருமே அணித்தலைமை ஏற்றிருந்தோம்.
 காரைக்குடி கம்பன் கழகத்தில் தொடக்க காலந்தொட்டு கவியரங்கம் என்றொரு தனிப்பகுதி நடைபெற்று வந்தது. சொற்பொழிவுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கவியரங்கப் பகுதியிலும் எல்லாச் சமயத்தினரும் பங்கு கொண்டனர். அந்நாள்களில் ஒருமுறை கவிக்கோ அப்துல் ரகுமான் கவியரங்கத்தில் இடம்பெற்றிருந்தார். அவர் பிரபலமடையாத காலமது. ஒரு சுவையான நிகழ்ச்சி. கவியரங்கம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் பல நாமங்களைத் தரித்திருந்த வைணவப் பெரியவர் ஒருவர் சா. கணேசனைப் பார்த்து, "இது என்ன நியாயம்? அப்துல் ரகுமான் என்ற இஸ்லாமியர் "பாதுகை' என்ற தலைப்பில் பாடுவதா?'' எனக் கோபத்தோடு கேட்டார். சா. கணேசன் சிரித்துக்கொண்டே பக்கத்திலிருந்த என்னைக் கை காட்டி "இவன்தான் ஏற்பாடு செய்தான். அற்புதமாக கவிதை இயற்றுவார் என்று கூறினான். நம்முடைய மேடையில் எல்லாச் சமயத்தினருக்கும் இடமுண்டு. ஆதலால் இவருக்கும் இடந்ததந்துள்ளேன்'' என்றார்.
 கவியரங்கம் தொடங்கியது. ரகுமான் எழுந்தார். "இங்குள்ள பலருக்கு, அப்துல் ரகுமானுக்கும், இராமாயணத்திற்கும் என்ன தொடர்பு? இவன் ஏன் இங்கு நிற்கின்றான் என்ற ஐயம் மனதில் உண்டு. ஒன்று சொல்லட்டுமா! உங்கள் ராமாயணமே, ரகு, மான் பின் சென்ற கதைதானே ஐயா! ரகு, மானின் பின் சென்ற கதையைப் பாட ரகுமானுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்குண்டு?'' என்றார். கர ஒலி வானைப் பிளந்தது!
 அடுத்தபடியாகப் பாதுகை பற்றி மிகப் புதிய கருத்துகளைப் பாடி முடித்தார் அப்துல் ரகுமான். இங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கவியரங்கத்தில் ரகுமானைப் போட்டதற்காக சினம் கொண்டிருந்த அந்த வைணவர் வெகுவேகமாக எழுந்து வந்து, ரகுமானைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.  "ஐயா, நீர்தான் உண்மையான வைஷ்ணவர். பாதுகா சகஸ்ரத்தில்கூடச் சொல்லப்படாத புதிய கருத்துகளைப் பாடியுள்ளீர்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்''  என்று கூறினார். கவிக்கோ அப்துல் ரகுமான் கம்பன் மேடையில் அறிமுகமான முறை இதுதான். பாதுகா சகஸ்ரத்தில் சொல்லாத கருத்துக்களைக் கூட ரகுமான் பாடியதால் அன்றே அவர் "கவிக்கோ' ஆனார்.
"நான் கண்ட பெரியவர்கள்' என்ற நூலில் 
பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com