திரைக் கதிர்

பொதுவாக சமூக பிரச்னைகள் குறித்து சினிமா பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.
திரைக் கதிர்

• பொதுவாக சமூக பிரச்னைகள் குறித்து சினிமா பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். சிலர் தனது மன வேதனைகளை சுட்டுரைப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் சமூக பிரச்னைகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், சமீபகாலமாக பொதுவான பிரச்னைகளுக்கு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த மாதம் சென்னையில் நடந்த "மெர்சல்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும் போது, "தமிழகத்தை தமிழன் ஒருவன்தான் ஆள வேண்டும்''என்று பேசினார். இது குறித்து பல விவாதங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். தன்னுடைய "ஒன் ஹார்ட்' கன்சர்ட் படத்தின் பிரீமியர் காட்சியை வெளியிட மும்பை வந்த ரஹ்மானிடம், பெங்களூருவில் நடந்த கவுரி லங்கேஷ் படுகொலை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்துப் பேசிய ரஹ்மான், "கவுரி லங்கேஷின் கொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இவை அனைத்தும் இந்தியாவில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். அன்பும், மனித நேயமும் மட்டுமே இந்த நாட்டின் பிரதானம். ஆனால் சமீபமாக அதற்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படுவது வருத்தம் அளிக்கிறது. இது என்னுடைய இந்தியா என்று மெச்சும் நாள் விரைவில் வர வேண்டும்'' என்றார்.

• ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. தற்போது இயக்கி வரும் "ஸ்பைடர்' படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு.  மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டன.  இதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது, "10 வருடங்களுக்கு முன்பு விஜயவாடாவில் "ஒக்கடு' படத்தைப் பார்த்தேன்.  அந்தப் படம் ஒரு திருவிழா போல் இருந்தது. அப்போதே மகேஷ்பாபுவை  வைத்து படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது தான் அந்த வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது.  அதை வீணாக்கி விடக் கூடாது என்றுதான் அதை தமிழிலும் இப்படத்தை கொண்டு வருகிறேன். மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் முழுக்க, ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்தோம். அமீர்கானுக்குப் பிறகு, படம் முடிந்த பிறகும் ஏதாவது காட்சி எடுக்க வேண்டும் என்றால் கூறுங்கள் தேதிகள் தருகிறேன் என்று சொன்ன நடிகர் மகேஷ்பாபு மட்டுமே. இப்படத்தின் வெற்றி அவரையே  சாரும்.  இந்த படத்தின் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. எஸ்ஜே சூர்யாவிடம், இதில் வில்லனாக நடிக்க கேட்டபோது எந்த தயக்கமும் இன்றி நடிக்க சம்மதம் தெரிவித்தார்'' என்றார்.

• சமீபத்தில் வெளியான "விவேகம்'  படத்துக்காக பெரும் ரிஸ்க் நிறைந்த காட்சிகளில் நடித்தார் அஜித். பல்கேரியா, செர்பியா நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்பில் பனிமலைகள், வனப்பகுதிகளில் ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்து இருந்தார். இதன் சண்டைக்காட்சிகளுக்காக கடுமையாக முயற்சி செய்து நடித்துக் கொடுத்தார். எந்தவொரு சண்டைக்குமே டூப்பின்றி நடித்திருந்தார்.   அந்தப் படப்பிடிப்பில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்துக்காக,    கடந்த 7-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 

• தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் சூர்யா.  பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகர்கள் வரிசையில் ஒருவராகத் திகழ்கிறார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் சூர்யா. இதனை முன்னிட்டு தனது சுட்டுரைப் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்... "சாதிக்க முடியாததை சாதிப்பதைப் பற்றியதே எனது கடந்த 20 வருட திரையுலக பயணம். நீங்கள் அனைவரும் அதை எனக்காக சாத்தியமாக்கினீர்கள். இந்த 20 வருட பயணத்துக்கும், இனி பயணிக்க போகும் பல மைல் தூரத்துக்கும் உங்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி'  என்று நெகிழ்ந்துள்ளார் சூர்யா.  
- ஜி.அசோக்

• மணிரத்னம் இயக்கும் அடுத்தப் படத்தின் கதாநாயகன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தன. விஜய்,  சூர்யா, விக்ரம் இந்த மூவரில் ஒருவரை இயக்குவார் என்பது பிரதான செய்தியாக இருந்தது.  இந்த தகவல் நாளைடைவில், விஜய் - விக்ரம் இணையும் படத்தை இயக்குவதாக மாறி வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மணிரத்னத்தின் அடுத்த  படத்தில் நடிக்க இருப்பவர் சிம்பு. "காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம், தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அதில் நடிக்க பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கதையின் பிரதான வேடங்களை ஏற்கின்றனர். சிம்பு தவிர நானி, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோருக்கும் படத்தில் வேடங்கள் இருப்பதாக தெரிகிறது.   விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com