திரைக் கதிர்

தீபாவளி வெளியீடாக விஜய் நடிக்கும் "மெர்சல்' படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல படங்கள் அதே நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
திரைக் கதிர்

• தீபாவளி வெளியீடாக விஜய் நடிக்கும் "மெர்சல்' படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல படங்கள் அதே நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது. "சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வரும் "தீரன் அதிகாரம்' என்ற படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது வரை இந்த இரு படங்களும் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கி வரும் "ஸ்கெட்ச்' படத்தில் விக்ரம், தமன்னா நடிக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வந்தன. படத்தின் முழு வேலைகளும் இந்த மாத இறுதியில் முடிந்து விடும் என்பதால், படத்தை தீபாவளிக்கு வெளியிடலாமா என்று படக்குழு யோசித்து வந்தது. ஆனால், இதில் இருந்து தற்போது படக்குழு பின் வாங்கியுள்ளது. "மெர்சல்', "தீரன் அதிகாரம்' என இரு பெரிய படங்கள் வரும் போது, இப்படமும் வெளிவந்தால் வசூல் பாதிக்கும் என நினைத்ததால், படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது. டிசம்பரில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

• நடிகர், நடிகைகள் பல்வேறு பிரச்னைகள் பற்றியும், அரசியல் பற்றியும் தங்களது வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் "சிக்கிம் மாநிலம் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டது' என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் திடீரென்று இந்த கருத்தில் இருந்து பின் வாங்கி அந்த மாநிலத்திடம் மன்னிப்பு கோரினார். சமீபத்தில் ஒரு பேட்டியில், "நான் தெரிவித்த கமென்ட் பலரின் மனதை பாதித்திருக்கும் என்று எண்ணுகிறேன். சிக்கிம் கிளர்ச்சி பகுதி என்ற அர்த்தம் தொனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் எதுவும் பேசவில்லை. அப்படி ஒருபோதும் சொல்லவும் மாட்டேன். சிக்கிமில் வாழ்பவர்கள் தம்மை பெருமையாக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், நான் வெளியிட்ட கருத்து சிலரின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில சமயம் சில தகவல்கள் என்னிடம் தவறாகப் பகிரப்பட்டுவிடுகின்றன. ஆனால் இதுபற்றி நான் இன்னமும் நன்கு விசாரித்தறிந்து பேசி இருக்க வேண்டும். எனது பேச்சுக்காக நான் முழுபொறுப்பும் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

• முழுக்க முழுக்க புதுமுகங்களின் கூட்டணியில் உருவாகி வரும் படம் "இமை'. சரிஷ், அக்ஷயப்பிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் விஜய் கே. மோகன். கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரிக்கிறார். உண்மைச் சம்பவத்தைத் தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வரும் போது, இயக்குநர் விஜய் கே.மோகன் சந்தித்த ஒரு ரவுடியின் வாழ்க்கைதான் கதை. தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், காதல், ரவுடியாக அவர் மாறிய தருணம் என பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நபரிடம் முறையாக அனுமதி பெற்று இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கான ஒரு சில மாற்றங்களுடன் இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் மாத
வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.

• "துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் ரசிகர்களின் பரவலான பாராட்டுக்களைப் பெற்றவர் கார்த்திக் நரேன். திரைக்கதை அமைப்பு, சொல்லப்பட்ட பாணி என ஒவ்வொரு விதத்திலும் அந்தப் படம் தனித்துவத்தை பெற்றது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன் தயாரிப்பதாக செய்திகள் வெளிவந்தன. அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், படத்துக்கு "நரகாசுரன்' என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கியுள்ள முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது. அரவிந்த்சாமியுடன் சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "துருவங்கள் பதினாறு' போலவே இப்படமும் பாடல்கள் எதுவுமின்றி உருவாகவுள்ளது. அடுத்த ஆண்டு மே மாத வெளியீடாக படத்தைத் திரைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் "தானா சேர்ந்த கூட்டம்'. கீர்த்தி சுரேஷ், செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ்மேனன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் இறுதிக் கட்டப் படப்பிடிப்பை நடத்த படக்குழு தீர்மானித்துள்ளது. இதில் இரு பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. சென்னை மற்றும் மைசூரில் இந்தக் காட்சிகள் படமாகவுள்ளன. இதையடுத்து பொங்கல் வெளி
யீடாக இப்படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. நவம்பரில் டீஸர், டிசம்பரில் முழுப் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியிடப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com