மாணவர்களுக்காக... மாணவர்கள் உருவாக்கிய குறுந்தகடு!

வகுப்பறை கல்வியை எளிதாக்கவும், பள்ளி மாணவர்களைக் கவரவும் பாடங்களைக் கற்பிக்கும் முயற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மாணவர்களுக்காக... மாணவர்கள் உருவாக்கிய குறுந்தகடு!

வகுப்பறை கல்வியை எளிதாக்கவும், பள்ளி மாணவர்களைக் கவரவும் பாடங்களைக் கற்பிக்கும் முயற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விளக்கக் குறிப்புகள், மாதிரிகளுடன் பாடங்கள் ஒளி, ஒலிப்பதிவு செய்யப்பட்டு குறுந்தகடுகளாக வணிகரீதியாக விற்கப்படுகின்றன. 

இப்படிப்பட்ட  சூழ்நிலையில், தங்களுடைய செய்முறை பாடத்திட்டத்துக்காக 9, 10 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆசிரியர்கள் எளிதில் கற்பிக்கும் வகையிலும் எளிமைப்படுத்தி கணினியில் Power Point Presentation (PPT) வடிவில் தயாரித்து ஒப்படைத்து பாராட்டு பெற்றுள்ளனர் சமயபுரம் அருகேயுள்ள கல்வியியல் கல்லூரி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வெங்கங்குடியில் உள்ளது பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி. சுமார் 5ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் அதிகமாகப் பயின்று வருகின்றனர். 

இங்கு ஆங்கிலத் துறை பேராசிரியராகப் பணியாற்றிவரும் ந.ஜான் கென்னடி செய்முறை வகுப்புகளுக்கான மாதிரிகளை மாணவர்கள் சொந்தமாக உருவாக்க வேண்டும் என்று யோசித்ததன் விளைவுதான், ஆங்கிலப் பாடத்துக்கான இந்த குறுந்தகடு. இந்த குறுந்தகட்டின் சிறப்பு, இதை உருவாக்குவதில் மாணவர்கள் காட்டிய ஆர்வம் ஆகியவை குறித்து பேராசிரியர் ஜான் கென்னடி கூறியதாவது:

"கடந்த 2015-17 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு செய்முறை பாடங்களுக்கு ஒரு புதிய திட்டத்தை ஒப்படைக்க விரும்பினேன். ஆங்கிலப் பாடத்தில் வழக்கமான மாதிரிகளைச் செய்வதையோ, கடைகளில் வாங்கி வந்து வைப்பதையோ நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில், மாணவர்கள் உருவாக்கும் மாதிரிகள் அவர்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் பயன்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றும் கருதினோம். 

இதையடுத்து, ஏதேனும் ஓர் ஆங்கிலப் பாடத்தை எடுத்து அந்தப் பாடத்தை விளக்கி கணினியில் PPT உருவாக்குமாறு கூறினேன். இதில் சில மாணவர்கள் ஒரே பாடத்தை ரிபீட் செய்திருந்தனர். எனவே, இதை செம்மைப்படுத்தும் விதமாக திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, 9, 10 ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் 44 மாணவர்களையும் குழுவாகப் பிரித்து ஒப்படைத்தோம். இந்த PPT-யைப் பார்த்து பள்ளி மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அதை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினோம். 

இதை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு ரம்யா, கண்மணி ஆகிய மாணவிகளின் ஒருங்கிணைப்பில், 6 மாதங்களில் 815 ஸ்லைடுகளில் அனைத்து பாடங்களையும் எளிமையாகக் கற்கும் வகையில் மாணவர்கள் உருவாக்கிவிட்டனர். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இந்த மாணவர்களில் பெரும்பாலானோரின் வீடுகளில் கணினி கிடையாது. இதற்காக அவர்கள் சொந்தச் செலவில் இணையதள மையங்களுக்குச் சென்று ஸ்லைடுகளை உருவாக்கினர். இந்த 815 ஸ்லைடுகளும் மிர்திக் என்ற மாணவி மூலம் தொகுக்கப்பட்டுள்ளது.

9,10 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடங்களில் தேர்வுக்கான மெட்டீரியல் முழுமையாக இந்த PPT-ல் வழங்கப்பட்டுள்ளது. இது எளிமையாகவும், புரிந்துகொள்ளக் கூடிய ஆங்கிலத்திலும் இருப்பதால், கிராமப்புற மாணவர்களுக்கு பெருமளவில் துணையாக இருக்கும். மேலும், ஸ்மார்ட் கிளாஸ் வசதிகொண்ட பள்ளிகளும் இதைப் பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த பிபிடி உருவாக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இந்த முயற்சி, மேலும் பல கல்லூரி மாணவர்களுக்கான முன்னெடுப்பாக இருக்கும் என நம்புவதோடு, ஏழை, கிராமப்புற, வகுப்பில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமானால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்''  என்றார்.
-இரா. மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com