குழந்தைகள் சுகமா? சுமையா?: மாலன் 

இந்தத் தொடரை வாசித்து வரும் நண்பர் ஒருவர், "இந்தியாவின் வளர்ச்சி வேகத்திற்கு, நம்முடைய மக்கள் தொகை பெருக்கம் முட்டுக்கட்டையாக
குழந்தைகள் சுகமா? சுமையா?: மாலன் 

வீழ்வேன் என்று நினைத்தாயோ? 16
இந்தத் தொடரை வாசித்து வரும் நண்பர் ஒருவர், "இந்தியாவின் வளர்ச்சி வேகத்திற்கு, நம்முடைய மக்கள் தொகை பெருக்கம் முட்டுக்கட்டையாக அமைந்தது என்பதை நீங்கள் ஏற்பீர்கள் எனக் கருதுகிறேன். சாலைகளில், வங்கிகளில், மருத்துவமனைகளில், ஏன் டீக்கடைகளில் கூட கூட்டம். இத்தனை கூட்டத்திற்கு நடுவே பொது ஒழுங்கைப் பராமரிப்பது எளிதல்ல. மேலை நாடுகளில், குறிப்பாக சில ஐரோப்பிய நாடுகளில் அப்படிப்பட்ட பிரச்னைகள் இல்லை. தெருக்களில் "ஜிலோ' என்று இருக்கிறது. வழி கேட்கக் கூட சாலையில் ஆளிராது. சிங்கப்பூரில் மக்கள் தொகை குறைவு, குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்கப் பணம் கொடுக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டேன். மக்கள் தொகை அதிகம் இல்லாததும் அதன் வளர்ச்சிக்கு ஒரு காரணம் அல்லவா?' எனக் கேட்டு மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இருந்தார். 
இந்த மின்னஞ்சலை வாசித்தபோது நான் மெல்லச் சிரித்தேன். உண்மைதான். இப்போது மூணு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு 750 வெள்ளி வரை சலுகை கொடுக்கிறது. அதுவே நான்காவது குழந்தை என்றால் 750 வெள்ளியுடன் தாயின் வருமானத்தில் 15% வரை சலுகை. 28 வயதுக்குள் இரண்டாவது குழந்தை பெற்றால் 20 ஆயிரம் வெள்ளி வரை வரிச்சலுகை. இப்போது அரசின் கோஷமே முடிந்தால் மூன்றுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்களேன் என்பதுதான்! (Have three or more - if you can afford)
ஆனால் 90-களுக்கு முன் நிலைமை தலைகீழ். அப்போது இரண்டு குழந்தைகள் போதுமே என்பது அரசின் கொள்கையாக இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்குப் பல சலுகைகள், பேறு கால விடுப்பு உள்பட மறுக்கப்பட்டன. காரணம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்ற அரசின் முடிவு.
சிங்கப்பூர் குடியரசாக மலர்ந்த காலத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த நாடாக இருந்தது. உலகிலேயே மிக வேகமாக மக்கள் தொகை பெருகிய (ஆண்டுக்கு 4.4 சதவீதம்) நாடாக இருந்தது.1965-இல் ஆயிரம் மக்களுக்கு 29.9 குழந்தைகள் என்றிருந்த பிறப்பு விகிதத்தைப் பார்த்து அரசு மிரண்டது
ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் குடும்பத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் சுமை கூடுகிறது என்று அது கருதியது. ஏனெனில் அதனுடைய ஆரோக்கியம், அதன் தாயின் ஆரோக்கியம், அதன் கல்வி, பின்னர் அதன் வேலை வாய்ப்பு எனப் பல விஷயங்கள் அரசோடு தொடர்பு உடையவை. நாட்டின் வளர்ச்சிக்காகப் போட்டுவரும் திட்டங்களை, காற்று சீட்டுக்கட்டு கோபுரத்தைக் கலைப்பது போல், மக்கள் தொகை பெருக்கம் கவிழ்த்து விடுமோ என்பது அதன் கவலை. மக்கள் தொகைப் பெருக்கத்தை ஐந்தாண்டுகளில் கணிசமாகக் குறைப்பது (1965-இல் ஆயிரத்திற்கு 29.9 என்ற நிலையில் இருந்து 1970-இல் ஆயிரத்திற்கு 20) என முடிவு செய்தது லீயின் அரசு. அதற்கான பிரசாரத்தில் இறங்கியது. இது வழக்கமானதுதான். ஆனால் அந்த பிரசாரத்தில் அது மேற்கொண்ட உத்திகள் சற்று அசாதாரணமானவை. 
பிரசாரம் நேரடியாக உளவியலைக் குறி வைத்தது. குழந்தை என்பது பெண்களுக்கு ஒரு பேறுதான். ஆனால் குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானால் அவளோடு மல்லுக்கட்டவே அவளுக்கு நேரம் சரியாகி விடுகிறது. அவள் சக்தி எல்லாம் அதிலேயே கரைந்து போகிறது. குறைவாகப் பெற்றுக் கொள்ளுங்கள், சுதந்திரமாக இருங்கள்... குழந்தைகள் மகிழ்ச்சி தருவதாக பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் வீட்டில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால், ஒவ்வொன்றிற்கும் சரியான உணவு கிடைக்க வேண்டுமே, தரமான கல்வி கிடைக்க வேண்டுமே என்றெல்லாம் கவலைதான் மிஞ்சுகிறது. பதற்றம்தான் கிட்டுகிறது என்று பெண்களின் மனதைக் குறி வைத்த பிரசாரங்கள் நடந்தன. 
குடும்பம் சிறியதாக இருந்தால் நிறைய சேமிக்கலாம், வீடு, கார் வாங்கலாம் என்று பொருளாதார நோக்கில் ஆண்களை ஈர்க்கும் விதத்தில் பிரசாரங்கள் அமைந்தன. 
இரண்டு போதுமே, அடுத்ததற்கு என்ன அவசரம் எனப் பொதுவாக சில விளம்பரங்கள் பேசின. 
இந்த எல்லா விளம்பரங்களிலும் வசீகரமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் படங்கள் பயன்படுத்தப்பட்டு, அழகியல் உணர்வோடு வடிவமைக்கப்பட்டன. 
வெறும் பிரசாரத்தோடு நின்றுவிடவில்லை. சில சலுகைகளும் அளிக்கப்பட்டன. இரண்டாவது பிரசவத்தின்போது கருத்தடை செய்து கொள்ளும் பெண்ணின் மருத்துவ மனைச் செலவு முழுவதையும் அரசே ஏற்றது. அதே நேரம், மூன்றாவது பிரசவத்திற்கு சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுப்பு கிடையாது. 
இன்னொரு புறம், முதல் இரண்டு குழந்தைகளுக்குத் தரமான பள்ளியில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை, ஆனால் மூன்றாவது குழந்தை பிறந்தால் அதற்கு எந்தச் சலுகையும் கிடையாது, அது முழுக்க முழுக்க பெற்றோரின் பொறுப்பு.
அதே போல வீட்டு வசதிக் கழக வீடுகள் ஒதுக்குவதிலும் இரு குழந்தைகள் அல்லது அதற்கும் குறைவான சிறிய குடும்பங்களுக்கு முன்னுரிமை. 
பிரசாரம், சலுகை, அதிகரித்த கல்வி அறிவு, பெண்களிடம் அதிகரித்த நாம் வெறும் பிள்ளை பெறும் இயந்திரம் மட்டுமல்ல என்ற விழிப்புணர்வு எல்லாமுமாகச் சேர்ந்ததில் சிங்கப்பூர் அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெற்றது. சாதாரண வெற்றியல்ல. மகத்தான வெற்றி. ஆனால் - அந்த வெற்றிக்கு பலியானது யார்?
வேறு யார், சிங்கப்பூரேதான்! 
1965-இல் தொடங்கித் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட மக்கள் தொகைக் கொள்கைகளால் எண்பதுகள் வாக்கில் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அதனால் உடலுழைப்புடன் கூடிய மனித ஆற்றலுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. 2023 வாக்கில் சிங்கப்பூர் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள். இதனால் இப்போது அரசு அது போன்ற பணிகளை மின்மயமாக்குகிறது. உதாரணமாக, உணவு விடுதிகளில் உங்கள் மேடை மீது ஓர் ஐபேட் இருக்கும். அதில் காணப்படும் மெனுவில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவு ஒரு பட்டியலாக உருவாகும். நீங்கள் ஓ கே செய்தால் அந்தப் பட்டியல் சமையலறைக்கு இணையம் வழி சென்றுவிடும். உணவு தயாரானதும் செய்தி வரும். நீங்கள் போய் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்! அதேபோல ஓட்டுநர் இல்லாத பேருந்துகளை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.
மக்கள் தொகை கொள்கை குடும்ப அமைப்பிலும் தாக்கங்களை உருவாக்கியிருக்கிறது. திருமணம் இல்லாமல் தனித்து வாழ்வோரின் எண்ணிக்கை, விவாகரத்துக்களின் எண்ணிக்கை இரண்டும் அதிகரித்து வருகின்றன.
நிலைமையை மாற்ற அரசு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மூன்றாவது குழந்தைக்கு ஊக்கத் தொகை தருகிறது. பள்ளி, வீட்டு வசதி முன்னுரிமைகள் மாறிவிட்டன. பேறுகால விடுப்பிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மாறிவிட்டன. அரசு இன்னும் ஒரு படி மேலே போய் டேட்டிங் சர்வீஸஸ் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், அங்கீகாரம் அளிக்கும் பணியையும் செய்கிறது !

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com