தளை 

அந்த விடியற்காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலிலிருந்து ஒலிபெருக்கியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்த ஸ்லோகம் ராகத்துடன் ஒலித்து, கோமளவல்லியை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.
தளை 

தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,000 பெறும் சிறுகதை

"காதே காந்தா- தனகத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா!
த்ரிஜகதி ஸஜ்ஜன-ஸங்கதி-ரேகா
பவதி பவார்ணவ- தரணே நெüகா'

அந்த விடியற்காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலிலிருந்து ஒலிபெருக்கியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்த ஸ்லோகம் ராகத்துடன் ஒலித்து, கோமளவல்லியை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.
ஒலி சன்னமாக இருந்தாலும் கோமளவல்லியின் செவிகள் வழியாக பயணித்து, நாளங்களை உசுப்பி, அவளை முழு விழிப்பு நிலைக்கு கொண்டு வந்தது.
ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் கோமளவல்லியின் கணவர் வேதமூர்த்திக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரும் தூக்கத்தினின்று விழித்து கேட்கிறாரா என்பதை அறிய சற்று தள்ளி தனியாக அவர் படுக்கும் கட்டிலைப் பார்த்தாள்.
அவளுக்கு "துணுக்'கென்றது.
கட்டிலில் அவர் இல்லை.
சற்று சுதாரித்துக் கொண்ட பின்புதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
முன்தினம் அவர் புறப்பட்டு தாம்பரம் முடிச்சூர் மெயின் ரோட்டில் உள்ள அவர்களது பெண் வீட்டிற்கு அவர் சென்றது நினைவுக்கு வந்தது.
முன்தினம் மாலை நான்கு மணி இருக்கும். பெண் அகிலா போன் செய்தாள்.
கோமளவல்லிதான் போனை எடுத்து அவளுடன் பேசினாள். 
"அம்மா... உங்க மாப்பிள்ளை இன்னைக்கு கார்த்தால கிளம்பி ஆபீஸ் போயிட்டு அங்கேந்து டைரக்டா பாம்பேக்கு கிளம்பி போறார். அவரோட கூட இன்னும் ரெண்டு பேர் போறாங்க. ஏதோ டிரெய்னிங்னு சொன்னார். திரும்பி வர நாலு நாள் ஆகுமாம். நானும் உன் பேத்தியும் தனியா இருப்போம். நான் சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு கார் அனுப்பறேன். நீயும் அப்பாவும் வந்துடுங்கோ. எங்களுக்கு துணையா இருக்கும். உங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்'' என்றாள் அகிலா.
"அகிலா, என்னால வர முடியும்னு நெனைக்கலை. நான் பெருமாளுக்கு வேண்டிண்டு ஒன்பது நாள்ல பாராயணம் முடிக்கறா மாதிரி "சுந்தரகாண்டம்' பாராயணம் ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் நாலுநாள் பாக்கியிருக்கு'' என்றாள் கோமளவல்லி.
"அதனாலென்னம்மா? இங்கே பெருமாள் சந்நிதியிலே ராமர் பட்டாபிஷேகம் படம் இருக்கு. இங்கேயே மீதி நாள் பாராயணத்தை நீ முடிச்சிக்கலாம்'' என்றாள் அகிலா.
"இல்ல அகிலா. இங்கேயே பாராயணத்தை முடிச்சாதான் எனக்கு திருப்தியா இருக்கும். இங்க இருக்கற ரவிவர்மா வரைஞ்ச பட்டாபிஷேகம் படத்துல இருக்கற சீதையைப் பார்க்கறப்போ எனக்கு நேர்ல சீதையைப் பார்க்கறா மாதிரியே இருக்கும். நான் இப்ப வரலை. அப்பாவோட பேசிட்டு போன் பண்றேன். அவரை அனுப்பறேன்'' என்றாள் கோமளவல்லி.
கோமளவல்லி விஷயத்தைச் சொன்னதும் வேதமூர்த்தி எகிறினார்.
""கோமளா. நீ சொல்றது சரியேயில்லை. அகிலா இது மாதிரி சந்தர்ப்பம்னு சொல்லி கூப்பிடறச்சே, நாம ரெண்டு பேரும் போகத்தான் வேணும்'' என்றார்.
"இதோ பாருங்கோ... நான் அவகிட்டே என்னைப் பத்தி சொல்லிட்டேன். அவளும் சரின்னுட்டா. உங்களால முடியலேன்னா நீங்களும் போக வேண்டாம். அவ பாத்துப்பா. ஏன் கோபப்படறேள்?'' என்றாள் கோமளவல்லி.
"நீ சொன்னாலும், சொல்லாட்டாலும் நான் போகத்தான் போறேன்'' என்றார்.
அகிலா கார் அனுப்ப தனியாக கிளம்பிப் போனார்.

அன்று மாலை அவர் போனதும் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஆதி கேசவ பெருமாள் கோயிலுக்கு கோமளவல்லி போனாள்.
""மாமி... தனியா வந்துருக்கேள்... மாமா ஏன் வரலை'' என்று கோயில் பட்டாச்சாரி கேட்டார்.
""பெண் வீட்டுக்கு போயிருக்கார். வர நாலு நாள் ஆகும்'' என்றாள்.
"உங்களை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டாரே...?'' என்றார் பட்டாச்சாரி.
சிரித்தபடி கோமளவல்லி பேசாமலிருந்துவிட்டாள்.
வீட்டிற்கு வந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்து, வேலைகளை முடித்து, இரண்டு தோசைகளை மட்டும் வார்த்து சாப்பிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.
தந்தை வந்து சேர்ந்து விட்டதை அகிலா போனில் சொன்னாள். வேதமூர்த்தி போன் பேசவில்லை.

இரவு படுக்கப் போனபோதுதான் கோமளவல்லிக்கு வேதமூர்த்தி இல்லாதது நெருட ஆரம்பித்தது. அவரும் அவளும் தனித்தனியாக கட்டில்களில் தூங்குவார்கள். ஒரே அறையில்தான். அவர் விளக்கை போட்டுக்கொண்டு இரவு பத்தரை மணி வரை அன்றைய தின பேப்பரில் காலையில் படிக்காமல் விட்டவற்றை வரிவரியாகப் படிப்பார். விளக்கு எரிவதால் அவளுக்குத் தூக்கம் வராது. அதனால் கோமளவல்லி படுக்கும் வரை ஹாலில் ஊஞ்சலில் படுத்து தூங்கிவிட்டு பிறகு உள்ளே வருவாள். அன்று அவர் இல்லாது அவரது கட்டில் காலியாக இருந்தது நெருடியது.
தூங்கிப் போனாள்.
ஆனால் மறுநாள் பஜகோவிந்தம் பாடலை கோயில் ஒலிபெருக்கியில் கேட்டு விழிப்பு வந்த பின்புதான் வேதமூர்த்தி வீட்டில் இல்லாத வெறுமை கோமளவல்லியை அணு அணுவாக பாதிக்கத் தொடங்கியது.
விழிப்பு வந்த பின்பும் எழுந்திருக்காமல் தன் கட்டிலில் புரண்டபடி அவரைப் பற்றிய சிந்தனைகள் மேளதாளத்துடன் அவளுள் வலம் வந்தன.
""கோமளா, எனக்கு பஜகோவிந்தம் ஸ்லோகத்துல தனி ஈடுபாடு உண்டு. அதுவும் கவிஞர் கண்ணதாசன் "ஞான ரகசியம்'ங்ற பேர்ல பஜகோவிந்தத்துக்கு உரையும், கவிதையையும் படிச்சப்புறம் பிரீத்தி இன்னும் ஜாஸ்தி ஆயிடுத்து. பஜகோவிந்தமும், விவேக சூடாமணியும் ஆதிசங்கரர் நமக்கு அளித்துள்ள இரண்டு பொக்கிஷங்கள். வேதத்துல பல இடங்கள்ல "தத் த்வம் அஸி' அப்படின்னு வந்துண்டே இருக்கு. அப்படி இருக்கச்சே "நீயேதான் பிரம்மம்' என்று ஆயிடறப்போ "த்வைதம்' எங்கேந்து வரும்னு அவர் லாஜிக்கா ஆர்க்யூ பண்ணினத்துக்கு இன்னிக்கி வரை சரியான பதில் வரலை'' என்பார். முழுவதும் புரியாவிட்டாலும் அவள் கேட்டுக் கொள்வாள்.
அவளைத் தனியே விட்டு அவர் இதுமாதிரி போனதே இல்லை. திருமணமான புதிதில் ஒருமுறை நான்கு நாட்கள் பிரிந்து இருந்துள்ளனர். அகிலா பிறந்த சமயத்தில் கூட அவர் அவளைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருந்ததில்லை.
வேதமூர்த்திக்கு திடமான உடல்வாகு. திருப்தியாக சாப்பிடுவார். முற்பகல் டிபனுக்கு காஞ்சிபுரம் இட்லி என்றால் மிகவும் பிடித்தமாக சாப்பிடுவார். ஐந்துக்கும் குறைவின்றிச் சாப்பிடுவார். அதனுடன் மிளகாய்பொடி, நல்லெண்ணெய், நெய், தேங்காய் சட்னி இருக்க வேண்டும். பிற்பகல் டிபனும் சாப்பிட்டு விட்டு இரவும் ஸ்கொயராக சாப்பிடுவார். ரசம் சாதம், தயிர்சாதம் கூட ஏதாவது கறிகாய் இருக்க வேண்டும்.
டிபனுக்கு பூரி செய்தால் "தள தள'வென்று உருளைக்கிழங்கு "சப்ஜி' செய்தாக வேண்டும். அதுவே சப்பாத்தி என்றால் "குருமா' கூட வேண்டும்.
உணவில் மட்டுமின்றி எல்லா விஷயங்களிலும் அவருக்கு சிறப்பான தனி ரசனை உண்டு. அதில் கவனிப்பும் விஷய ஞானமும் கூடி நிற்கும்.
கோமளவல்லியை விட அவருக்கு ஒன்பது வயது கூட. சென்ற வருடம் அவளுக்கு அறுபது வயது பூர்த்தியானபோது, அதை அவர் கொண்டாடியதை அவளால் ஒருநாள் கூட நினைக்காமல் இருக்க முடியாது.
""கோமளா... மத்தவங்க என்ன சொல்வாங்கங்கிறதைப் பத்தி எனக்கு கவலை கிடையாது. உன்னோட அறுபது வயது நிறைவை நான் கொண்டாடப் போறேன்'' என்று சொன்னவர், ஐந்து பவுன்ல தங்கச் சரடு வாங்கி வடபழனி முருகன் சந்நிதியில் அவளுக்கு அணிவித்து, முருகனுக்கு அபிஷேகம் செய்தார்.
அன்று ஓர் அநாதை ஆஸ்ரம சிறுவர்களுக்கு உணவளிக்க பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்து அந்த குழந்தைகளுடன் அவரும் அவளும் சேர்ந்து உணவருந்தவும் ஏற்பாடு செய்தார்.
கோமளவல்லி மகிழ்ந்து போனாள்.
எல்லா விஷயங்களிலும் தனக்கென தனியான அபிப்ராயம் சொல்வார். வாதம் செய்யாமல் எதையும் ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் மற்றவர்கள் வாதத்தையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொள்வார். அது சரியென்றால் தயங்காமல் ஒப்புக் கொள்வார்.
கர்நாடக சங்கீதத்தில் அபரிமிதமான ரசிப்பு அவருக்கு. சாஸ்தீரிய சங்கீத ஞானமும் உண்டு. 
""கோமளா, நீ பாடறச்சே எனக்கு லோகமே மறந்து போயிடறது. ஆபோகியும், ஆபேரியும் கரகரப்பிரியாவோட ஜன்யங்கள்தான். நீ அவைகள்ல பாட்டு பாடறச்சே அதோட தனித்தனியான ஸ்வரூபங்களைக் கொண்டுவந்து பாடறது எவ்வளவு அபூர்வமா இருக்கு தெரியுமா? நீ சங்கீதத்துல எவ்வளவோ உயர்வு நிலைக்கு போக வேண்டியவ. என்கிட்டே வந்து மாட்டிண்டு எனக்கு மட்டும் பாடும்படி ஆயிடுத்து!'' என்றார்.
சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவாள்.
"ஏன், நான் பெருமாள் சந்நிதியிலே உட்கார்ந்து பாடறச்சே அவருக்கு போய் சேர்ந்துடறது. எனக்கு அது போதும்!'' என்பாள்.
ஒருநாள் சங்கீதம் சம்பந்தமாக அவளை ஒரு கேள்வி கேட்டது கோமளவல்லியின் நினைவுக்கு வந்தது.
""கோமளா, எனக்குள்ளே ஓர் அபிப்பிராயம் இருக்கு. அது சரிதானான்னு நீ "கன்ஃபர்ம்' பண்ணனும். கேட்கட்டுமா?'' என்றார் வேதமூர்த்தி.
"இதிலென்ன யோசனை? கேளுங்கோ!'' என்றாள்.
""நீலாம்பரி, பிலஹரி ரெண்டுமே சங்கராபரண ராகத்தின் ஜன்யங்கள்தான். ஆனா பிலஹரிலே "தொரகுனா'வை நீ பாடி கேட்கறப்போ எனக்குள் ஏற்படுகிற சந்தோஷமும் மனதிருப்தியும் ஆதிசங்கரர் சொல்ற "பிரம்ம ஆனந்தமாவே' தோணறது. ஏனோ "நீலாம்பரிலே' அது எனக்கு கெடைச்சதே இல்லை. உன்னோட அபிப்ராயம் சொல்லேன்'' என்று கேட்டார்.
"அதெல்லாம் அவரவர் மனோ ரசனையைப் பொருத்தது. இதுக்கு நான் பதில் சொல்லலை'' என்று ஒரு புன்முறுவலுடன் அவள் ஒதுங்கிக் கொண்டது அவளது நினைவுக்கு வந்தது.
பொதுவாக "ஆர்க்யுமெண்ட்' என்று வந்துவிட்டால் அவர் அடங்கவே மாட்டார். "டென்ஷன்' ஆகிவிடுவார். "பிளட் பிரஷர்' அந்த சமயங்களில் ஏகமாக கூடிவிடும் என்பதால் அவள் எதுவும் பேசாமல் அடங்கி விடுவாள். ஆனால், பிறகு தானாக அவர் அவளிடம், தவறாக இருந்தால், தன் கருத்து தவறுதான் என்று ஒப்புக்கொள்வார்.
படுக்கையில் புரண்டபடி இவ்வாறு கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த கோமளவல்லி காலை ஆறு மணி ஆனதை கடிகாரத்தில் கண்டதும்தான் திடுக்கிட்டு எழுந்தாள்.
"அதென்ன, இன்று என் மனசு அலைபாய்கிறது? பெண்ணுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தானே நாலு நாளைக்கு போயிருக்கிறார். இந்தப் பிரிவுக்காக மனசு ஏன் கிலேசப்பட வேண்டும்?' என்கிற எண்ணம் உள்ளத்தில் ஓடினாலும், உள்ளுக்குள் நிதானமின்மையும் ஒருவித படப்படப்பும் இருந்து கொண்டே இருந்தது அவளுக்குப் புரிந்தது.

காபி போடும்போது அவளுக்கு மறுபடியும் கணவரின் நினைவு!
கலந்த காப்பியை சுட வைத்து கொடுத்தால் முதல் முழுங்கிலேயே கண்டுபிடித்து விடுவார். பயங்கர கோபம் வரும். டிகாஷனையும், பாலையும் தனித்தனியாக சுட வைத்து "ஸ்ட்ராங்காக' கலந்து சர்க்கரை கம்மியாக அவருக்குக் கொடுக்க வேண்டும்.
அகிலாவிடமிருந்து அங்கு வரச்சொல்லி போன் வருவதற்கு முன்பு அவர் சொன்ன ஒரு விஷயம் அவளது நினைவுக்கு வந்தது.
""கோமளா, நாம்ப ரெண்டு பேரும் வெளியூர் போய் ரொம்ப நாளாகறது. ஒரு கார் எடுத்துண்டு சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி போய் ஈஸ்வரனையும், அம்பாளையும் தரிசனம் பண்ணிட்டு வரலாமா?'' என்று கேட்டார்.
"ஓ... போகலாமே... அப்படியே போகிற வழிலே திருவிடந்தை போய் நித்ய கல்யாண பெருமாளையும், கோமளவல்லி தாயாரையும் தரிசனம் பண்ணி மாலை சாத்திட்டு போகலாம். என்னோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அங்கே போய் வேண்டிண்டுதான் கல்யாணம் நடந்ததாம். அதனாலதான் கோமளவல்லின்னு அந்த ஊர் தாயார் பெயரை வெச்சாளாம்'' என்றாள்.
""நானும் போனதில்லை. போகலாம்'' என்றார்.
நினைவுகளினின்று மீண்டு வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.
இதே மாதிரி நாலு நாள் தன்னால் தனியாக தள்ள முடியாது என்று தோன்றியது.
மாலையில் படிக்கும் சுந்தரகாண்டத்தை காலையிலேயே பாராயணம் செய்தாள்.
தளிகை எதுவும் செய்யாமல் இரண்டு தோசை வார்த்து சாப்பிட்டாள்.
பெருமாள் சந்நிதியில் இருந்த ரவிவர்மா வரைந்த ராமர் பட்டாபிஷேக படத்தை எடுத்து கண்ணாடி மற்றும் ஃப்ரேமை ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து ஒரு ந்யூஸ் பேப்பரில் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு தயார் செய்தாள். சுந்தர காண்டம் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டாள்.
தானும் பெண் அகிலாவின் வீட்டிற்கு போய் தங்கி விடுவதுதான் அவள் முடிவு.
பெண்ணை கார் அனுப்பச் சொல்லாமல் அவர்கள் வழக்கமாக செல்லும் ஆட்டோகாரருக்கு போன் செய்து அரை மணியில் வரச் சொன்னாள்.
சொல்லாமல் திடீரென்று போய் பெண்ணையும் கணவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்பது அவளது திட்டம்.
அவள் கட்டுவது ஒன்பது கஜம் மடிசார் புடவைதான். கணவருக்குப் பிடித்த கிளிபச்சை நிற உடம்பும், சிவப்பு நிற பார்டர் மற்றும் தலைப்புமான சில்க் காட்டன் ஒன்பது கஜ புடவையை கட்டிக்கொண்டு, தலையும் மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு கிளம்ப தயாரானாள். போகும் வழியில் பெண்ணுக்கு இரண்டு மூன்று வித பழங்கள் வாங்கிக் கொள்ள முடிவு செய்தாள்.
கையில் பையை எடுத்துக் கொண்டு கிளம்ப அவள் தயாரானாள்.
வாசல் "காலிங் பெல்' அடித்தது.
போய் கதவை திறந்தாள்.
வேதமூர்த்தி நின்று கொண்டிருந்தார்.
" பேப்பர் வெளியிலேயே கிடக்கறது'' என்று கூறியபடி பேப்பருடன் உள்ளே வந்தார்.
"என்ன விஷயம் சீக்கிரம் வந்துட்டீங்க?''
"உள்ளே வா சொல்றேன்'' என்றார்.
அவர் ஊஞ்சலில் உட்கார, அவள் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
அவளை ஏற இறங்க பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.
""ம்..ம்.. சொல்லுங்க'' என்றாள்.
"அவளோட மச்சினன் பையன் வந்து தங்கிக்கறேன்னு சொன்னானாம். அகிலா என்கிட்ட சொன்னா. நான் கிளம்பறேன்னு சொன்னேன். சரின்னா. வந்துட்டேன். கார்ல அனுப்பிட்டா'' என்றார்.
கோமளா எதுவும் பேசவில்லை.
போன் மணி அடித்தது.
வேதமூர்த்தி பேப்பரில் மூழ்கினார். 
போன் மணி அடித்ததும் கோமளவல்லிதான் எடுத்தாள். மறுமுனையில் பெண் அகிலா.
"அம்மா... அப்பா வந்துட்டாரா?'' அகிலா கேட்டாள்.
"ம்... ம்... வந்துட்டார்'' என்றாள் மெதுவாக.
"அம்மா... அப்பாவால உன்னை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியலை. மொத்த பேச்சும் உன்னைப் பத்திதான்! எந்த "டாபிக்கை' பேசினாலும் அவர் முடிவுல உன்னைப் பத்தி பேசிதான் முடிப்பார். டி.வி. பார்க்க அவர் இஷ்டப்படலை. அவருக்குப் பிடிச்ச சமையல்தான் செஞ்சேன். சரியா சாப்பிடலை. உன்னோட சமையல் பத்திதான் பேசினார்.
ராத்திரி பதினோரு மணிக்கு தூங்காம கட்டில்ல "பிரம்மம்' மாதிரி உட்கார்ந்திருந்தார். அவரை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னுதான் மச்சினர் பிள்ளையை வரச் சொல்லிட்டேன். அந்த பையன் வரான்னு சொன்னதுமே, "நான் கிளம்பறேன்'னு சொல்லிட்டு அப்பா கௌம்பிட்டார். இனிமே நீ கூட இல்லாம அவரை எங்கேயும் அனுப்பாதே!'' என்று சொல்லிவிட்டு அகிலா போனை வைத்தாள்.
வேதமூர்த்தி பேப்பரில் இருந்து பார்வையை எடுத்து கோமளவல்லியை உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல் மறுபடியும் பேப்பரில் மூழ்கினார்.
கோமளவல்லியும் அவரிடம் எதுவும் கூறாமல் வேலைகளை கவனிக்கச் சென்றாள், உள்ளத்தில் விவரிக்க முடியாத சுகானுபவத்துடன்!
பி. ரங்கநாயகி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com