பிரியமுடன் பெற்ற பரிசு! 

யாருக்குத்தான் விருது வாங்க ஆசை இருக்காது? அதுவும் வெளிநாட்டில் அதைப் பெற்றால் கண்டிப்பாக சந்தோசம் தான்.
பிரியமுடன் பெற்ற பரிசு! 

யாருக்குத்தான் விருது வாங்க ஆசை இருக்காது? அதுவும் வெளிநாட்டில் அதைப் பெற்றால் கண்டிப்பாக சந்தோசம் தான். அதிலும் பல்வேறு வெளிநாட்டுப் படங்களுடன் போட்டி போட்டு அதில் வெற்றி பெற்றால் அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்? அதைத்தான் பெற்று வந்திருக்கிறார் நடிகர் அசோக் குமார். இவர் "முருகா', "பிடிச்சிருக்கு', "கோழி கூவுது',ஆகிய படங்களில் நடித்ததுடன் நில்லாமல் தெலுங்கில் "காக்கி', மலையாளத்தில் "முல்லா' ஆகிய படங்களிலும் நடித்தவர். இவர் பெற்ற பரிசு என்ன என்ற கேள்விக்கு அவரே பதில் கூறுகிறார்:

"நான் நடித்து முடித்துள்ள படம் " பிரியமுடன் பிரியா'. இது ஒரு வகையான சைக்கோ திரில்லர் கதை. இதை இயக்கியவர் சுஜித். இந்தப் படம்தான் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படம். இந்தப் படம் முடிவதற்கும், மலேசியாவில் PIFFA சர்வதேச திரைப்பட விழா நடப்பதற்கும் சரியாக இருந்தது. இந்த திரைப்படத்தை அந்த விழாவிற்கு அனுப்பலாம் என்று முடிவு செய்து அனுப்பி வைத்தோம். அந்த திரைப்படத்தின் நாயகன் என்ற முறையில் நானும் அந்த விழாவிற்குச் சென்றிருந்தேன். 
இது சர்வதேச திரைப்பட விழா. இந்த விழாவில் பல்வேறு உலக நாடுகளில் இருந்து படங்கள் வந்திருந்தன. குறிப்பாக ஈரான், ஜப்பான், தாய்லாந்து,
சிங்கப்பூர், தைவான், கொரியா, மலேஷியா போன்ற பல்வேறு நாடுகளின் படங்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. இந்த கடும் போட்டியில் நம்மை கவனிப்பார்களா என்ற எண்ணமும் இருந்தது. 
ஆனால் திடீரென்று என்னை அழைத்தார்கள். "பிரியமுடன் பிரியா' படத்தில் நான் சிறப்பாக நடித்ததனால் எனக்கு "மோஸ்ட் ப்ராமிஸிங் ஆக்டர் இன் தி இன்டர்நேஷனல் அரினா' (The most promising actor in the international arena) என்ற விருதை எனக்களித்து என்னைத் திக்கு முக்காடச் செய்துவிட்டார்கள். சர்வதேச அரங்கில் நான் பெரும் முதல் விருது என்றாலும், என் நாட்டிற்கு என்னால் முடிந்த சிறு பங்களிப்பு என்றுதான் சொல்வேன். நம் நாட்டில் இருந்து இன்னொரு இந்திப் படமும் சென்றிருந்தது. அவற்றை எல்லாம் தாண்டி இந்த விருது எனக்கு வழங்கப்பட்டவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த விருதினால் எனக்கு தெரிந்தது ஒன்றுதான். எதைப்பற்றியும் கவலைப் படாமல் நம் வேலையை நாம் சரியாக செய்தால் பரிசும் பாராட்டும் நம்மை தேடி வரும் என்பதுதான். இந்தப் படத்துடன் நான் மேலும் சில படங்களில் நடித்து வருகிறேன். 
நான் முறையாக நடனம் பயின்றவன். முழுமையான உடல் நலம் பேண நடனமும், மனமும் உடலும் இணைந்து வாழ்வில் சரியான பாதையில் செல்லவும், மனம் தெளிவாக இருக்கவும் "பிரீகத்தோன்' (Freak-a-thon) என்ற ஒரு புது வகை செயல் திட்டத்தை எனது தலைமையில் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறேன். இதையும் மக்கள் சரியாகப் புரிந்து கொண்டு ஆதரவு அளிக்கிறார்கள். காலையிலும் மாலையிலும் சென்னையில் உள்ள எங்களது வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கிறேன். என்னை பொருத்தவரை உடலும் மனமும் சரியாக இருந்தால் அதுவே வாழ்வின் மகிழ்ச்சி, இல்லையா?'' என்கிறார். 
-சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com