காணாமல் போகாதவர்

நாகப்பட்டினம் பேருந்து, சென்னைக் கோயம்பேடு வந்து நின்றபோது, மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த விடியல் பொழுது, இன்னமும் இருள் விலகாமல் இருந்தது.
காணாமல் போகாதவர்

நாகப்பட்டினம் பேருந்து, சென்னைக் கோயம்பேடு வந்து நின்றபோது, மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த விடியல் பொழுது, இன்னமும் இருள் விலகாமல் இருந்தது.

மழையைப் பொருட்படுத்தாமல் பேருந்திலிருந்து பயணிகள் ஒவ்வொருவராக உதிர்ந்தார்கள். கடைசி ஆளாக இறங்கினான் கரிகாலன். 

மழையின் காரணமாக வழக்கமான பரபரப்பு குறைந்திருந்த பேருந்து நிலையத்தில், ஒரு டீக்கடையில் ஒதுங்கி நின்றான்.
ஆவி பறக்க வந்த காபியை அருந்திக் கொண்டே அந்தப் பேருந்து நிலையத்தைப் பார்வையால் அளந்தான்.
""கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும்... கந்தனே.... உனை மறவேன்'' என்று டீக்கடை ரேடியோ வழியே பக்தியில் உருகிக் கொண்டிருந்தார் டி.எம் செüந்தரராஜன்.
எத்தனையோமுறை கேட்டு ரசித்த பாடல்தான். ஆனால், பல்லாண்டுகளுக்குப் பின் இப்போது கேட்கும்போதுதான் அதன் தத்துவம் தலைக்குள் ஏறுகிறது என்பது அவனுக்குப் புரிந்தது. நாம்தான் செய்கிறோம்... நாம்தான் சாதிக்கிறோம் என்பதையெல்லாம் என்னமாய் கட்டுடைக்கிறது இப்பாடல். 
""நிற்பதும்... நடப்பதும்... நின் செயலாலே.... நினைப்பதும்... நிகழ்வதும்... நின் செயலாலே....'' டி.எம்.செüந்தரராஜனுடன் சேர்ந்து அவனும் உள்ளம் உருகிப் போனான்.
பாட்டு முடிந்தது. காபியும் தீர்ந்தது. மழை நின்றது. மனதும் நிறைந்தது. 
சென்னை எவ்வளவோ மாறிப் போயிருந்தது.
குழந்தைப் பருவத்திலிருந்து தான் வளர்ந்து ஓடியாடித் திரிந்த சென்னையைவிட்டுப் பிரிந்து போவோம் என்று அவன் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. வாழ்க்கையின் சுவாரசியமே அடுத்த நொடி நடப்பது தெரியாதிருப்பதுதானே... 
சென்னை வந்து இறங்கினாலே கடற்கரைச் சாலைக்குச் செல்லாமல் வீட்டுக்குப் போகமாட்டான் கரிகாலன். அந்த வழக்கத்தின்படியே பாரிமுனைக்குப் பேருந்து பிடித்து வந்திறங்கினான். 
தன் குழந்தைப் பருவத்தில் பார்த்த சென்னையின் நினைவுகள் தாலாட்ட, கடற்கரைச் சாலையில் காலார நடந்து செல்வதில் அவ்வளவு சுகம் அவனுக்கு. கோட்டை முதல் காந்தி சிலை வரை நடக்கிற பொழுதுகளில் கால எந்திரத்தில் பயணிக்கிற உணர்வில் இருப்பான் கரிகாலன். 
எத்தனை நினைவுகள். ஒன்றா இரண்டா? வரிசையாய் கண்ணில் தென்படுகின்ற ஒவ்வொன்றும் காலத்தையும் ஜாலத்தையும் "ஹோலி' பண்டிகையின் கலவையாய் கலந்து அவன் மனதில் அப்பும். 
காற்றில் பறப்பதுபோன்ற உணர்வுடன் கரிகாலன் கடந்து செல்லும் கடற்கரைச் சாலை, அவனை அமரத்துவம் பெற்ற மனிதனாக உணரச் செய்யும். அந்த உணர்வெய்தலில் பிறவிப்பயன் கிட்டுவதுபோல நெஞ்சம் நிறைந்து போவான்.
அன்றைய காலைப்பொழுதும், அவன் பிறவிப் பயன் எய்தும் பொழுதாகவே அமைந்தது. பாரிமுனையிலிருந்து சுரங்கப் பாலம் வழியே நடக்கத் தொடங்கினான்.
கோட்டை தெரிந்தது. வெள்ளையர் காலத்தில் எழும்பிய ஜார்ஜ் கோட்டையில் இருந்தபடிதான் தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்த கர்ம வீரர்கள் ஆட்சி செலுத்தினார்கள்.
கோட்டைக்கு மேலே பறக்கும் தேசியக் கொடியைப் பார்த்தபடி நின்ற கரிகாலன், ஒரு சல்யூட் அடித்தான். 
சாலையோரம் பைக்கில் இருந்தபடியே கைப்பேசியில் கலகலத்துக் கொண்டிருந்த ஒருவன், கரிகாலனை ஏதோ வேற்று கிரகவாசியைப் பார்ப்பதுபோல பார்த்தான். கரிகாலன் அவனைப் பார்த்து புன்னகைக்க, அவனோ பாராமுகமாய் திரும்பிக் கொண்டான்.
கோட்டையைக் கடந்து போர்வீரர்கள் நினைவுச் சின்னம் வந்து நின்றபோது, மனம் கனத்துப் போனான். மினார்களைப் போல் நிற்கும் கோபுரங்கள் நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த தியாகிகளின் நினைவினைப் போற்றுகின்றன. சென்னையின் அடையாளங்களில் முக்கியமானதாக, தலைமுறை தலைமுறையாகத் தியாக உணர்வினை தூண்டவல்ல சின்னம். 
அடுத்து நடந்தவனின் கண்ணில் பட்டது நேப்பியர் மேம்பாலம். யானைத் தந்தங்களை ஜோடி ஜோடியாய் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டது போல காட்சி
யளிக்கும் அந்த மேம்பாலத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் அலாதியானது. சென்னையின் கழிவுகளை ஏந்தியபடி கறுப்பு வண்ணத்தில் ஓடும் கூவம் ஆற்றின் மீது அமைந்திருந்தாலும், வெள்ளை வெளேர் என்று காட்சியளிக்கும் அந்தப் பாலத்தின் கம்பீரமே தனிதான். கோயிலில் அடிவலம் வரும் பக்தனின் நேர்த்தியுடன் அந்தப் பாலத்தைக் கடந்தான் கரிகாலன்.
வலப்புறம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட செங்கோட்டை போன்று செந்நிற வண்ணத்தில் மிளிர்ந்தது சென்னைப் பல்கலைக்கழகம். இந்தியாவின் குடியரசுத் தலைவர்களான டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் அப்துல்கலாம் போன்ற மாமனிதர்களைத் தந்தது அந்த மகத்தான கல்வித் திருத்தலம். அதற்கு நேரெதிரே அறிஞர் அண்ணாவும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அணையா விளக்காய் சுடர்விட்டபடி நினைவிடம் கொண்டிருக்கிறார்கள்.
கறுப்பு வெள்ளைக் காலகட்டத்தில், திரைப்படங்களை திரைப்பாடங்களாக்கி, திரையரங்குகளை திண்ணைப் பள்ளிக்கூடங்களாக்கி நல்ல கருத்துகளை மக்களின் மனதில் விதைத்த காரணத்தினாலேயே மக்கள் திலகமாக உயர்ந்து நின்றவர் எம்.ஜி.ஆர்.
கரிகாலனின் குழந்தைப் பருவ நாட்கள், தொலைக்காட்சி என்ற மாயப்பெட்டி நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிதாய் தலைகாட்டத் தொடங்கியிருந்த எண்பதுகளின் துவக்கத்தில் இருந்த சென்னையுடன் பின்னிப் பிணைந்திருந்த நாட்கள்.
திரும்பும் இடமெல்லாம் ஓலைக் குடிசைகள் நிறைந்திருந்தது அன்றைய சென்னை, கம்ப்யூட்டர், செல்போன், சாட்டிலைட் சேனல் என அதிநவீனம் எட்டிப்பார்த்திராத சென்னையின் அழகே தனிதான். ஒரு ரூபாய் கொடுத்து மாநகரப் பேருந்தான பல்லவனில் ஏறினால், சென்னையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்றுவிடலாம்.
சென்னை... இல்லை, அந்தக்கால மெட்ராஸ் நினைவுகளை அசைபோட்டபடி கடற்கரைச் சாலையில் கரிகாலன் நடையைத் தொடர்ந்தபடி இருந்தான்.
கடற்கரைச் சாலையில்தான் சென்னையில் வேறெங்கும் காணக்கிடைக்காதபடி நாட்டுக்கும் மொழிக்கும் தொண்டு செய்த மாமனிதர்களை வரிசையாய்க் காணமுடியும். 
திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒüவையார், கம்பர், வீரமாமுனிவர், ஜி.யு போப், பாரதியார், பாரதிதாசன், உ.வே.சா., அண்ணல் காந்தி என நிற்கும் மாமனிதர்களின் திருவுருவச் சிலைகளைக் காணும்போதெல்லாம் மகத்துவமிக்க அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை மின்னல் வெட்டெனக் கரிகாலன் மனத்திரையில் தோன்றி மறையும்.
"ஊருக்காக வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்' என்ற உண்மையை உணர்த்தியபடி சிலையாய் நிற்கும் மாமனிதர்களைக் கண்டபடியே நடையைத் தொடர்ந்தான். 
அண்ணல் காந்தியின் சிலையைச் சுற்றி ஒரு வலம் வந்தபின், வலப்புறம் செல்லும் சாலையில் திரும்பினான்.
அவன் கடற்கரைச் சாலையில் நடக்கும் வரை ஓய்ந்திருந்த மழை, இப்போது பூமழைச் சாரலாய் தூறலிடத் தொடங்கியதால், காற்றில் ஈரப்பதம் கூடி சிலுசிலுவென குளிர் ஏறத் தொடங்கியது. 
ஒரு டீ குடித்தால் குளிருக்கு இதமாக இருக்குமென நினைத்தவன், சாலையின் இடப்புறமிருந்த டீக் கடையை நெருங்கினான்.
மழைமேகத்தின் இருளை கிழக்கு வேகமாய்க் கிழித்துக் கொண்டிருந்தது.
கரிகாலனுக்கு ஒதுங்கி நின்றிருந்த பிளாட்பாரத்தில் இருந்த ஒரு கடை வாசலில் சுருண்டு கிடந்த ஒரு கிழவர், தன் முகத்தை மூடியிருந்த லுங்கியை விலக்கிக் கொண்டு, முட்டைக்குள் இருந்து வெளிவரும் கோழிக்குஞ்சென வெளிப்பட்டார்.
முகத்தை மூடிய நரைத்த தாடியும் மீசையும், இளைத்த உடலுமாய் இருந்தவர், குளிருக்குப் பயந்து மீண்டும் லுங்கியை இழுத்து தலைக்கு முக்காடிட்டு, உடலைப் போர்த்திக் கொண்டு அமர்ந்தார்.
கரிகாலனுக்குச் சுடச்சுட டீ வந்தது. மழைக்கு இதமாய் இருந்தது. 
சாலையில் "விர்விர்'ரென வாகனங்கள் விரைந்து செல்வதையும், மழையையும் பொருட்படுத்தாமல் மெரினாவில் நடைப்பயிற்சிக்கு சிலர் செல்வதையும் ரசித்துக் கொண்டிருந்தவனை, ""தம்பி...'' என ஒலித்த குரல் திருப்பியது.
அந்தக் கிழவர்தான். சைகையால் ஒரு டீ கேட்டார்.
சற்றும் யோசிக்காமல் அவருக்கும் ஒரு டீ சொல்லிவிட்டு, அவர் முகத்தைப் பார்த்தான். எங்கோ பார்த்த முகம் போலத் தோன்றியது. ஆனால் சட்டென அவர் முகம் நினைவுக்கு வராமல் போக்குக் காட்டியது. முடிகளால் மூடப்பட்டிருந்த முகத்துக்குள் இருக்கும் இவருக்கும் தனக்கும் என்ன தொடர்பு? பரிச்சயமானதாகத் தெரியக் காரணம்? 
கரிகாலனுக்குச் சென்னையே எப்போதும் இப்படித்தான். அவன் முதன்முறையாக ஒரு சந்துக்குள் சென்றாலும், அந்தச் சந்து பொந்துக்குள் அவன் எப்போதோ சென்று வந்த மாதிரியே தோன்றும். 
சென்னை... இல்லை, மெட்ராசுக்கும் அவனுக்கும் அப்படி என்ன உறவோ? என்ன பிரிவோ? எந்த ஜென்மத் தொடர்போ?
டீ வந்தது. அதை அவர் கைகளில் கொடுத்தபோது அவனது நினைவுத் திரையில் பளீரென மின்னல் வெட்டியது. அவர் யாரென்று தெரிந்தது. 
""முருகேசன் அண்ணே'' மூளைக்குள் தட்டிய பொறி, அவன் வார்த்தையில் தெறித்தது. தன் பெயரை அவன் சொல்லக் கேட்டதில் பெரியவரின் ஒளியிழந்த கண்களில் சட்டெனச் சுடர் வீசியது. 
""தம்பி.... என்னை... உனக்கு?...'' அவர் தடுமாறினார்.
""தெரியும். உங்களை நல்லாவே தெரியும்'' என்றவன், அவனது குடும்பமும் முருகேசனின் குடும்பமும் ஒரே தெருவில் இருந்ததை நினைவூட்டினான். 
""டிரைவர் ராமுவோட மகனா நீ?'' என்று சரியாக நினைவு கூர்ந்தார் பெரியவர் முருகேசன்.
பாதாளச் சாக்கடையில் இறங்குவதுதான் முருகேசனின் தொழில். அதற்காக அவரை ஏளனமாகப் பார்த்தவர்கள், அவர் தன் மகன்கள் இருவரையும் பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்தபோது வியந்து பார்த்தார்கள். தனக்குக் கிடைத்த அவமானத்தைத் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வெகுமானமாக்கியவர் முருகேசன்.
""நீங்க எப்படி இங்கே... இந்தக் கோலத்திலே?...'' கரிகாலன் கவலையுடன் கேட்டான்.
தன் இருகரங்களாலும் பொத்திப் பிடித்திருந்த தேநீர் குவளையை மெதுவாக இடதும் வலதுமாய் உருட்டியபடி விரக்தியான புன்னகையுடன் அவனைப் பார்த்தார் முருகேசன்.
""எல்லாம் இந்தச் சமூகம் தந்த பரிசுதான் தம்பி. வேறென்ன சொல்ல?'' சொன்ன முருகேசன் கண்களில் நீர் தளும்பியது. 
""பெத்த பிள்ளைகளுக்கே நான் வேண்டாதவனா போயிட்டேன். நான் சாக்கடைக் குழியிலே இறங்குறது அவங்களுக்கு மானக்கேடா இருக்குதுன்னு விரட்டி விட்டுடானுங்க. சாக்கடையில் இறங்கித்தான் அவங்களைப் படிக்க வைச்சு, கல்யாணம் பண்ணி வைச்சு ஆளாக்கினேன். அதை மறந்துட்டானுங்க'' அதற்குமேல் வார்த்தை வராமல் தொண்டை அடைக்க, முருகேசன் ஒரு வாய் டீயை விழுங்கித் தன் துக்கத்தை அடைத்தார். 
""தம்பி... வேலையிலேருந்து எப்பவோ ரிடையர் ஆகிட்டேன். இருந்தாலும் அப்பப்போ கார்ப்பரேசன்காரங்க நம்மளைத் தேடி வருவாங்க. ஏதோ உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் செஞ்சிட்டுப் போவோமேன்னு நம்ம வாழ்க்கை வண்டி ஓடுது. நேத்து கார்ப்பரேசன்காரங்க இங்கே வரச்சொன்னாங்கன்னு வந்தேன். மழை பேஞ்சதால அவங்க வரலே. அதான் ராத்திரி இங்கேயே சுருண்டுட்டேன். நான் வச்சிருந்த சில்லரையை எந்தச் சில்லரைப் பயலோ சுருட்டிக்கிட்டுப் போயிட்டான்'' விரக்தியில் சிரித்தார் முருகேசன்.
கரிகாலன் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
எவ்வளவோ மாறிப்போய்விட்ட சென்னையில் மாறாமல் காட்சியளிக்கும் முருகேசன்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பது கரிகாலன் மனதில் கரித்துண்டாய் கோடிட்டது. 
செயற்கைக்கோள்களுக்கும் ஏவுகணைகளுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்த வல்லரசு நாட்டில் இன்னமும் மலக்குழியில் மனிதன் இறங்குவதற்கு ஒரு முற்றுப்புள்ளி விழவில்லையா?.
கண்ணெதிரே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் உலவிக் கொண்டிருந்த பூம்பூம் மாட்டுக்காரர், பஞ்சுமிட்டாய்க்காரர், குச்சி ஐஸ் விற்பவர், கோலமாவு விற்பவரெல்லாம் "காணவில்லை' பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால்... முருகேசன் போன்றவர்களை இன்னமும் காணமுடிகிறதே. என்ன காரணம்?
சென்னையில் தற்போது கில்லி, கோலி, பம்பரம், பல்லாங்குழி ஆட்டத்தையெல்லாம் காண முடியவில்லை. ஆனால்... சாக்கடைக் குழியில் மனிதன் இறங்கும் ஆட்டம் தொடர்ந்தபடிதான் இருக்கிறது.
""அண்ணே, வாங்க வீட்டுக்குப் போகலாம்'' அவரது கைகளில் இருந்த வெற்றுக் குவளையை வாங்கியபடியே சொன்னான்.
""எந்த வீட்டுக்கு?'' 
""நம்ம வீட்டுக்கு. அப்பா உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவார்''
என்ன நினைத்தாரோ முருகேசன். அவன் கைகளை அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டார். அவர் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வரவில்லை... 
கண்ணீர் மட்டும் வழிந்தபடியே இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com