அன்பின் மேன்மை அறிந்தவன் நீ! - கவிஞர் வாலி

வாய்புளிக்கச் சொல்லுவார்"வந்த பின் பார்ப்போம்' என்று;
அன்பின் மேன்மை அறிந்தவன் நீ! - கவிஞர் வாலி

 சதா
 சர்வகாலமும்
 மக்கள் பக்கம் தான்
 மன்னா! உன் சிந்தையே
 என்ன செய்யும்?
 ஏது செய்யும்?
 
 சிலர்
 வாய்புளிக்கச் சொல்லுவார்
 "வந்த பின் பார்ப்போம்' என்று;
 வள்ளலே! நீ தான் சொன்னாய்
 "வருமுன் காப்போம்' என்று!
 சாதிக்கும் சாதிக்கும்
 சண்டைகள் வராமல்
 சாதிக்கும்-நீ கட்டிய
 சமத்துவபுரங்கள்; அவை
 வன்பகை தீர மன்பதைக்கு-நீ
 வழங்கிய வரங்கள்.
 
 இனி
 இங்கு
 கூன்பிறையும் கோதண்டமும்
 கைகுலுக்கும்;
 சிலுவையும் அவற்றை
 சினேகிக்கும்!
 ஏசுதேவனும்,
 வாசுதேவனும் கூடுவர்; இது காறும்
 "டூ' விட்டிருந்தவர்
 டூயட் பாடுவர்!
 நாடாளும் நல்லவனே
 நீ சாதித்திருக்கிறாய்
 சமயப்பொதுமறை;
 இது சாதரணமானதல்ல
 இமயப்பொறை!
 அன்பின் மேன்மை
 அறிந்தவன் நீ;
 "அன்பின் வழியது உயிர்நிலை!' என
 அய்யன் வள்ளுவன்-
 செப்பிய ஞானம்-
 செறிந்தவன் நீ!
 உன்னைப் பற்றி... நான்
 ஓர்ந்ததைச் சொல்வேன்!
 
 நீ
 தாடியில்லாத பெரியார்;
 பொடியில்லாத அண்ணா... அவ்
 இருவரும் உன்வடிவில்
 இருக்கின்றார் ஒண்ணா!
 
 நீ
 வாலறிவன்; உன்னில் நான்
 காலறிவன்
 எனினும் என்
 எழுத்துக்களை ஏற்று
 "நன்று! நன்று'
 எனக்களித்தாய்; இன்று
 நல்விருதும்
 எனக்களித்தாய்!
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com