குறளோவியம் - கலைஞர் மு.கருணாநிதி

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே " பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது
குறளோவியம் - கலைஞர் மு.கருணாநிதி

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே " பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட்டிருக்கிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் வள்ளுவர் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று குறள் தீட்டியுள்ளார்.
 எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் குறித்தவுடன், விலங்கினங்களும், பறவையினங்களும், ஊர்ந்து சென்றிடும் புழு பூச்சி இனங்களும் - அவரைப் பார்த்துக் கேள்விகளை அடுக்கின.
 "எங்களுக்குள் சாதிப் பூசல்களே என்றைக்கும் இருந்ததில்லை. சாதி உணர்வுகள் தலைதூக்கி அதன் காரணமாக நாங்கள் அமளிகளை உருவாக்கியதே இல்லை. அங்ஙனமிருக்க பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எம்மையும் சேர்த்து இழிவுபடுத்துதல் முறைதானே?''
 - இவ்வாறு மிருகங்கள் கேட்டன, பறவைகள் கேட்டன, ஊர்வன கேட்டன!
 "உயிர்கள் என்று பொதுவாகச் சொன்னதால் எல்லா உயிர்களையும் குறிப்பிடுமெனினும் உங்களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இல்லாத காரணத்தால் உங்களிடையே சாதிப்பூசல்கள் எழுவது இல்லை. பகுத்தறிவுள்ளவர்களாகக் கூறிக்கொள்ளும் மனிதர்களிடையேதான் பல்லாயிரம் சாதிகள், சண்டைகள்! உயர்வு தாழ்வு உணர்வுகள் குறளைப் படிக்கக் கூடியவர்களுக்காகத்தான் இதனை எழுதினேன். நீங்கள் படிக்க இயலாதவர்கள். உங்களுக்காக, இதனை நான் எதற்காக எழுதப்போகிறேன். எனவே நான் "உயிர்கள்' என்று குறிப்பிட்டிருப்பது இந்த குறளைப் பொறுத்தவரையில் மனிதர்களை எண்ணித்தான்''
 வள்ளுவர் விளக்கமளித்துவிட்டு வேறு வழியாகப் பயணம் தொடர்ந்தார். அங்கே இருவர், விவாதித்துக் கொண்டிருந்தனர்.
 ஒருவர்: பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லையென்று குறள் கூறினாலும் கூட அவரவர் செய்கின்ற தொழில்கள் வேற்றுமையால் சிறப்பு இயல்புதான் மாறுகின்றன என்று சுட்டிகாட்டியிருக்கிறது. அதனால் இசைவாணனாகிய நான், ஆசிரியத்தொழில் புரியும் உம்மைவிடச் சிறப்புடையவன்.
 மற்றவன்: இல்லை மறுக்கிறேன். ஆசிரியர் தொழிலே சிறந்தது. அதற்கு ஒப்பிடக் கூடியது கூட அல்ல உமது இசைத் தொழில்.
 இருவரின் உரையாடல் சூடேறுவதற்கு முன்பு வள்ளுவர் குறுக்கிடுகிறார்.
 "சொற்போரை நிறுத்திடுக! நான் தொழிலுக்குத் தொழில் உயர்வு தாழ்வு இருப்பதாகவோ - சிறப்பு இயல்புகள் மாறுவதாகவோ கூறிடவில்லை. ஒவ்வொரு தொழிலுமே அதனைச் செய்வோரைப் பொறுத்து வேறுபடுகின்றன. இதோ உங்களையே எடுத்துக்கொள்வோம். ஓர் இசைவாணர், பாடினாலே ஊரார் காது கொடுத்துக் கேட்க மறுத்து வேறு அலுவல்களைக் கவனிப்பர். மற்றொரு இசைவாணரின் இனிய இசையை விடிய விடியக் கேட்டு மகிழ்வர். அது போலத்தான் ஓர் ஆசிரியர் மாணவரிடையே கேலிப் பொருளாக விளங்குவார். இன்னொரு ஆசிரியரேர மாணவரால் மதிக்கத்தக்க மாண்புடையவராகத் திகழ்வார். ஆகையால் தொழிலுக்குத் தொழில் வேறுபாடு காண நான் விழைந்திடவில்லை. செய்யுந் தொழில் எதுவாயினும் அதிலே எய்துகிற சிறப்புகள் வேறுபடுகின்றன. செய்பவரின் அறிவாற்றலைப் பொறுத்து. இப்படித்தான் என் கருத்துக்கு விளக்கம் பெற வேண்டுமேயல்லாமல் நீங்கள் மோதிக் கொள்வது முறையல்ல''.
 குறள் தந்த கோமானின் விளக்கவுரை கேட்டு, இசை வாணரும், ஆசிரியரும் மகிழ்ந்து வணங்கினர்.
 வள்ளுவர்:
 "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
 செய்தொழில் வேற்றுமை யான்''
 என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com