"பேட்மேன்' முருகானந்தம்  

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கினை குறைந்த விலையில் சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று முயற்சித்து
"பேட்மேன்' முருகானந்தம்  

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கினை குறைந்த விலையில் சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று முயற்சித்து வெற்றி பெற்ற தமிழர் அருணாசலம் முருகானந்தம் கதை தான், தற்போது பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் "பேட்மேன்'.
 கோவையைச் சேர்ந்த முருகானந்தம் 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்த பின் தன் மனைவி சாந்தி, மாதவிலக்கு காலங்களில் கடைகளில் விற்கும் நாப்கினை வாங்கினால் செலவு அதிகமாகுமென்று கருதி, பழைய துணிகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தார். நாமே சொந்தமாக நாப்கின் தயாரித்தால் என்ன என்று நினைத்த முருகானந்தம், சில மருத்துவ மாணவர்களின் ஆலோசனைகளைக் கேட்டார். அவர்களும் ஒத்துழைப்பு தர மறுத்தனர்.
 சில பெண் ஊழியர்கள் உதவ முன்வந்தாலும், மாதவிலக்கு பிரச்னையை வெளிப்படையாக முருகானந்தத்துடன் விவாதிக்கத் தயங்கினர். பின்னர் இவரே ஆட்டு ரத்தம் நிரம்பிய செயற்கை கர்ப்பப்பை ஒன்றை உருவாக்கி, தன் அடிவயிற்றுப் பகுதியில் இறுக்கமாகக் கட்டி, வெளியேறும் ரத்தத்தை நாப்கின்கள் எந்த அளவுக்கு உறிஞ்சுகிறது என்பதைக் கணக்கிட்டார். கிராமப்பகுதிகளில் உள்ள பெண்கள் தான் இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றறிந்த முருகானந்தம், தன் ஆராய்ச்சி மூலம் தயாரித்த நாப்கின்களை மருத்துவ மாணவர்கள் மூலம் இலவசமாக விநியோகித்தார்.
 இரண்டாண்டு ஆராய்ச்சிக்குப் பின் குறைந்த விலையில் சுகாதாரமான நாப்கின்களைத் தயாரிக்க வெளிநாட்டு இயந்திரங்களைத் தருவிக்க பணம் அதிகம் தேவைப்படுமென கருதிய முருகானந்தம், தானே சொந்தமாக தயாரிப்பு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இதற்கான செலவு ரூ.65 ஆயிரம் மட்டுமே.
 2006-ஆம் ஆண்டு சென்னை ஐஐடிக்கு சென்று தன்னுடைய கண்டுபிடிப்பை நேஷனல் இனோவேஷன் பவுண்டேஷனின் "கிராஸ்ரூட்ஸ் டெக்னலாஜிகல் இனோவேஷன்' விருதுக்கு பதிவுக்கு செய்தார். இவரது முயற்சி வெற்றி பெற்றது.
 ஜெயஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் இவரது ஆலோசனைப்படி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்ய முன்வந்தது. நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் இவரது கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டினர்.
 இவரது அயராத முயற்சியைப் பாராட்டி அமித்விர்மணி, எடுத்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. மத்திய அரசும் முருகானந்தத்துக்கு "பத்மஸ்ரீ விருது' வழங்கி கெüரவித்துள்ளது. பாலிவுட் இயக்குநர் பால்கியும், அக்ஷய்குமாரை வைத்து "பேட்மேன்' என்ற தலைப்பில் திரைப்படம் எடுத்து இவரது புகழைப் பரப்பியுள்ளார்.
 இதுகுறித்து முருகானந்தம் கூறுகையில், ""மாதவிலக்கு என்பது இயற்கையானது. ஒதுக்கப்பட வேண்டிய விஷயமல்ல. இது குறித்து பெண்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சுகாதாரத்தையும் அறிவுறுத்த வேண்டியது அவசியம். கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் தாங்களாகவே முன்வந்து இப்பிரச்னை குறித்து விவாதிப்பது நல்ல மாற்றமாகும். சமூகத்தில் மேலும் மாற்றம் செய்ய விரும்பினால் நீங்கள் விவசாயிகளுக்கு உதவ முன் வாருங்கள். சில ஆண்டுகளுக்குப்பின் நம் தேவைக்கான பொருள்கள் அனைத்தும் கிடைக்கலாம். ஆனால் உணவு கிடைக்காது. உணவு உற்பத்தியை அதிகரிக்க என்னிடம் சில ஆலோசனைகள் உள்ளன. அதன் மூலம் விவசாயத் துறையில் விரைவில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com