வயிறுதாரி

வயிறுதாரி

பேரன் சோமேஸ்வரனுக்குப் பூணூல் கல்யாணம் அமோகமா நடந்துண்டிருக்கு.எங்கள் வீட்டுப் பெரிய ஹால். எத்தனையோ கல்யாணம் காட்சிகளெல்லாம் கண்ட விஸ்தாரமான ஹால் இது.

பேரன் சோமேஸ்வரனுக்குப் பூணூல் கல்யாணம் அமோகமா நடந்துண்டிருக்கு.
எங்கள் வீட்டுப் பெரிய ஹால். எத்தனையோ கல்யாணம் காட்சிகளெல்லாம் கண்ட விஸ்தாரமான ஹால் இது.
 இருநூறு பேர்வரை உட்காரலாம். இதுதவிர, பின்கட்டுல நூறு பேருக்கு மேலே ஒரே நேரத்துல இலை போட வசதியா இன்னொரு ஹால் இருக்கு. போறாததுக்கு மாடியில பெரிய ரூம். அதுக்கும் மேல மைதானம் மாதிரி ஒரு மொட்டை மாடி. பந்தல் போட்டால் ஒரு பட்டாளத்தையே தங்க வைக்கலாம். ஜமீன் கிட்டப்பா வீடுன்னா சும்மாவா?
 வீட்டு விசேஷம் எதுவானாலும் இதே எடத்துலதான். என் நாத்தனார்கள் கல்யாணம், எங்களோட அறுவது கூட இங்கேதான். எண்பது பண்ணிக்கிறதுக்குத்தான் அவர் இல்லை.
 பொண்ணு சுகுணாவோட கல்யாணமும் இங்கேதான் பண்றதா இருந்து, சம்பந்திகள் கேட்டுண்டதால மாயவரத்துல ஒரு கல்யாண மண்டபத்துல வெச்சிண்டோம். பொண்ணைக் கொடுத்திருக்கிறது என்னவோ இதே ஊர் பக்கத்துத் தெருவுல இருக்கிற எல்.ஐ.சி. ஆபீசர் பையன் விசுவுக்குத்தான். அவாளுக்கு டவுண் கல்யாண மண்டபத்துல வெச்சுக்கணும்னு ஆசை வந்துடுத்து. பொண்ணைப் பெத்தவாளுக்கு ஏதாவது அதிகப்படி செலவு வெக்கறதிலே ஒரு சந்தோஷம். பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி, அந்தப் பொண்ணோட வயத்துல என் பேரன் பொறந்து அதைத் தொட்டிலில் போட்டுப் பேர் வைச்சதும் இங்கேதான்.
 இந்த சோமேஸ்வரன் அவன் அம்மா வயத்துலே இருக்கச்சே, என் பையன் சங்கரசுப்புவையும், மாட்டுப்பொண்ணு சுசீலாவையும் மணையில உட்கார்த்திவெச்சு "ஜே ஜே'ன்னு ஊரும் உறவும் கூடியிருக்க சீமந்தம் நடத்தியதும் இதே வீட்லதான்.
 எல்லாம் சரி.
 என்னோட வீடு, என்னோட வீடுன்னு நான் இப்போ ஒரேயடியா பெருமை பேசிண்டு என்ன பிரயோஜனம்.
 ஊர் உலகமெல்லாம் திரண்டிருக்கிற இந்த உபநயனத்துல என் ஒரே பொண்ணும் மாப்பிள்ளையும் வரக் கொடுத்து வைக்கலியே இந்தக் கிழவி.
 அது கூடப் பரவாயில்லை. என் பொண்ணு பெத்த ரெண்டுங்கெட்டான் பிள்ளைப்பூச்சி, பதினஞ்சு வயசிலயும் சதா வாயில விரலைச் சூப்பிண்டு திரியற அந்த வயிறுதாரி வந்து, ஒருவாய் ரசம் சாதம் சாப்பிடாததுதான் என் ஹிருதயத்தைப் போட்டு அப்பிடியே பிசையறது. வகை வகையாய் சாப்பிடணும்னு அது ஆலாய்ப்பறக்கும், பாவம்.
 உறவுக்காராள் நிறைய பேர் நேத்தே வந்து சேர்ந்துட்டா. வேத பாராயணம் ஒரு பக்கம், நாதஸ்வரம் ஒரு பக்கம்னு கொட்டி முழக்கிண்டிருக்கா.
 "ஏன் மாமி! பொண்ணு மாப்பிள்ளை வரலியா?'' ன்னு அக்கறையாகவும், வம்புக்காகவும் கேட்கிறவாளுக்கு பதில் சொல்ல முடியாமத் திண்டாடறேன்.
 என்னதான் வாய்த் தகராறுன்னாலும், கூடப் பிறந்தவளோட குடும்பத்தையே பகிஷ்காரம் பண்ணிட்டு தன் பிள்ளைக்குப் பூணூல் கல்யாணம் பண்ணூவானோ ஒருத்தன்.
 
 போன மாசம்தான் இது நடந்தது.
 எங்களோட நஞ்சையை ஒட்டியே சுகுணாவோட மாமனாருக்கும் கொஞ்சம் நிலபுலம் இருக்கு. ரெண்டு பேரும் குத்தகைக்குத் தான் விட்டிருக்கோம், நேரடியா பயிரிடறதில்லே. வாய்க்கால் பாசனம். நிலத்துக்கு மடைமாத்தித் தண்ணி விடறதுலே குத்தகைக்காராள் ரெண்டு பேருக்கும் ஏதோ மனஸ்தாபம்.
 அவாளே இதைத் தீர்த்துக்கட்டும்னு விடாமே, இவன் போய் நேரா சம்பந்தியிடமே சண்டை பிடிச்சிருக்கான்.
 அவர் என்ன கேட்டாரோ தெரியாது, "இனி என் மூஞ்சியிலே நீங்க யாரும் முழிக்கப்படாது, என் அக்கா உட்பட''ன்னு சொல்லிட்டு வந்திருக்கான்.
 பையனோட பூணூல் கல்யாணத்துக்கும் அவாளை அழைக்க மாட்டேன்னுட்டான். என்னையும் போய் அழைக்கக் கூடாதுன்னுட்டான். சுகுணாவுக்கும் ரோஷம், இருக்காதா பின்னே. இங்கே வர்றதை நிறுத்திட்டாள். அது மட்டுமா, அந்த வயிறுதாரியையும் இப்பல்லாம் இந்தாத்துக்கு அனுப்பறதில்லை. இந்தப் பகை என்னிக்குத் தீருமோ, இவனுக்கு எப்பிடித்தான் இந்த ஆங்காரமும் குரோதமும் வந்ததோ புரிபடவே மாட்டேங்கிறது.
 கிட்டப்பாவையர் உசிரோட இருந்தாலும் ஏதாவது பண்ணியிருப்பார். நான் வயசான பொம்மனாட்டி, நினைச்சு நினைச்சு மருகுவதைத் தவிர வேறென்ன செய்யறது?
 உபநயன ஹோமப்புகையிலே சோமேஸ்வரன் கண்ணுல தண்ணி வந்துதோ இல்லையோ, என் கண்ணு ரெண்டும் தளும்புறது. அப்பப்போ புடவைத் தலைப்பிலே துடைச்சுக்கறேன்.
 "எனக்கும் மனசு கஷ்டமாத்தாம்மா இருக்கு, உங்க பிள்ளைய எதுத்துப் பேசறதுக்கும் பயமா இருக்கேம்மா!''
 எனக்கே ஆறுதல் சொல்ற என் மாட்டுப்பொண்ணு, என் முழங்கையை இதமா பிடிச்சு விடுறா.
 "எல்லாம் அவன் சித்தம். நீ போய் விருந்தாளிகளை கவனிம்மா, சுசீலா!''
 வந்த ஜனம் வந்தபடி, பந்தி விசாரணை நடந்தபடி இருக்கு.
 "சங்கரசுப்புவாத்து விசேஷம்னா சும்மாவா?'' ன்னு வந்த ஜனங்கள் பேசறது காதுல விழறது. சங்கரசுப்புவாம் சங்கரசுப்பு.
 கூடப்பிறந்தவள்னும், கூடப்பிறந்தவளைக் கல்யாணம் பண்ணிண்ட அத்திம்பேர்ன்னும் கொஞ்சம் நினைச்சுப் பார்த்திருந்தான்னா இப்படி ஒரு நெலமை வந்திருக்குமா.
 அந்த ரெண்டுங்கெட்டான் வயிறுதாரிப் பிள்ளை ""மாமா மாமா''ன்னு இவன் காலையே சுத்திச் சுத்தி வருமே. அது மேலேயாவது கொஞ்சம் பாசம் வெச்சானா. கூடப்பிறந்தவளையும், வீட்டு மாப்பிள்ளையையும், அஜாதசத்ருவான தன் மருமானையும் விட்டுட்டுதான் தன் பிள்ளைக்குப் பூணூல் போடறான், பெரிய பூணூல்.
 
 இந்த சங்கரசுப்பு எப்படியும் பெரிய படிப்புப் படிச்சு ஆபீஸர் உத்யோகம் போகப்போறது இல்லைன்னு தீர்மானம் ஆய்டுத்து. கிட்டப்பாவையர் சேர்த்து வெச்ச சொத்தை செலவழிக்கிறதுக்குன்னு அவதாரம் எடுத்தவனாச்சே.
 எஸ்.எஸ்.எல்.சி. தேறலை. விட்டுப்போன பேப்பரையும் எழுதமாட்டேன்னுட்டான். ஊர் சுத்தல் பிரதான காரியம் ஆச்சு. அதுக்கப்புறம் இந்தப் பாழாப்போன சினிமா. இந்தப் பரம்பரையிலேயே இல்லாத
 படிக்கு மீசை வெச்சுக்க ஆரம்பிச்சான். கேட்டால் ரஜினி ஸ்டைல்னான். ஆத்தங்கரை, கல்மண்டபம் இங்கெல்லாம் கூட்டளிகளோடு சேர்ந்துண்டு பீடி சிகரெட்டு பிடிக்கறான்னு தகவல் வர ஆரம்பிச்சுது.
 இவனை இப்பிடியே விடக்கூடாதுன்னு இவனுக்கோசரமே ஒரு ரைஸ் மில் ஆரம்பிச்சு அதில அவனை உக்கார வெச்சார் கிட்டப்பாவையர், எங்காத்துக்காரர்.
 கொஞ்சமே கொஞ்சம் பொறுப்பு வந்தாப்புல தெரிஞ்சுது. கொஞ்ச நாள்லேயே, ரைஸ் மில்லைக் கூட்டிப் பெருக்கறதுக்கு வேலைக்கு வெச்ச ஒரு எளவட்டப் பொண்ணு கூட சகவாசம் வெச்சிண்டிருக்கான்னு புகைஞ்சுது. பயலுக்கு வயசு இருபதுதான்.
 அக்கா இருக்கச்சே தம்பிக்குப் பண்ண முடியாதே. பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போறேன்னு பிடிவாதம் பிடிச்ச சுகுணாவை சமாதானம் செய்து, டிகிரியோட முடிச்சுக்கச் சொல்லி உடனடியா அந்த எல்.ஐ.சி ஆபீஸரோட பையனுக்கு நிச்சயம் பண்ணிக் கல்யாணம் கட்டி வெச்சோம்.
 மில்லைக் கூட்டிப் பெருக்கற பொண்ணைத் துரத்தி விட்டுட்டு, ஒரு காத்திரமான கிழவியைப் போட்டோம்.
 ஒழுங்கா இருந்திருந்தால் அந்தஸ்துக்கேத்த ஒரு பொண்ணு கிடைச்சிருக்கும். சீர்காழி பக்கத்துல ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணை சங்கரசுப்புவுக்குப் பேசி முடிச்சோம். அமோகமான கல்யாணம், எங்க செலவிலே. மாட்டுப் பொண்ணு சுசீலாவைக் குறை சொன்னா நாக்குலே புத்து வெச்சிடும். தங்கமான பொண்ணு, தங்க விக்ரஹமாட்டம் இருப்பாள். அவள் வந்தப்புறம்தான் இவன் ஆட்டமெல்லாம் அடங்கி ஒரு வழிக்கு வந்து ரைஸ் மில்லைப் பொறுப்பா கவனிச்சுக்க ஆரம்பிச்சான்.
 மாப்பிள்ளை விசு மாயவரத்துல ஒரு தனியார் பார்சல் கம்பெனியில மேனேஜர். பஸ்ல மாயவரம் போய் வந்துண்டிருந்த விசுவுக்கு, ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தோம். விசுவும் சுகுணாவும் செüஜன்யமா ஸ்கூட்டர்லே கோயில் குளம், சினிமா தியேட்டர்னு அவ்வப்போது போய்ட்டு வர்றதைப் பார்க்கும் போது மனசு சந்தோஷத்துல திம்முன்னு ஆயிடும். மாமியார்க்காரியும் நல்லவதான்.
 முதல்ல சுகுணாவுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. ராஜ குமாரனாட்டம் இருந்துது. ராஜமெüலின்னு பேர்வெச்சோம். தன்னோட நாத்தனார் பிரசவத்துக்கு ஓடி ஓடி உழைச்ச என் மாட்டுப்பொண்ணு சுசீலாவுக்கு அடுத்த வருஷமே இந்த சோமேஸ்வரன் பொறந்தான்.
 பேரன்களைப் பார்த்துவிட்ட சந்தோஷத்துல கிட்டப்பாவையரும் சடார்னு மாரைப் பிடிச்சுண்டு ஒரு நாள் போய்ச் சேர்ந்துட்டார்.
 
 சுகுணாவோட குழந்தைக்கு ராஜமெüலின்னு வெச்ச பேர்ல யார் கூப்ட்டா. சம்பந்தியோட குலதெய்வம் மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி பேரும் எங்க குலதெய்வம் சந்த்ரமெüலீஸ்வரர் பேரும் சேர்ந்து வர்றாப்புல வெச்ச வெகு லட்சணமான பேர் அது.
 ஜுக்குலு, பப்புலு, மெüலு, ஜம்புன்னு வாய்க்கு வந்த பேர்தான். கொழுக்கு மொழுக்குன்னு இருந்த குழந்தை வளர வளரத்தான் தெரிஞ்சது... உடம்பு வளர வளர அந்த அளவுக்கு ஈடு கொடுத்து மூளை வளரமாட்டேங்கிறதுன்னு.
 நாதஸ்வர வித்வான் சீவாளியைச் சொருகிண்டாப்புல வாயில வெச்ச விரலை எடுக்கிறதில்லை. குற்றால அருவியாட்டம் சதா வழியற ஜொள்ளு. அம்மா, அப்பான்னு வாயைத் திறந்து கூப்பிடவே அஞ்சு வயசுக்கு மேலே ஆச்சு.
 பையன் வயித்துப் பேரன் சோமேஸ்வரன் டிப் டாப்பா யூனிபாம், டை எல்லாம் போட்டுண்டு, ஸ்கூல் பஸ் ஏறி மாயவரத்துக்குப் போய் படிக்க ஆரம்பிக்கச்சே, இந்த ராஜமெüலி அம்மா புடவையைப் பிடிச்சுண்டு "ங்கா' ங்கிறது.
 சுகுணா மருகி மருகி உடம்பு துரும்பா எளைச்சுப் போனதுதான் மிச்சம். மாப்பிள்ளை விசுவும், சுகுணாவும் மெட்ராஸ் வரைக்கும் போய் எப்பேர்ப்பட்ட டாக்டரையெல்லாம் பார்த்துட்டு வந்தாச்சு. உடனடியாய்ப் பையன் குணமாறதாகத் தெரியல்லே.
 நானும் என் பங்குக்கு சமயபுரம் , குணசீலம்னு குழந்தையைக் கூட்டிண்டு போனேன். குணமாவதாகத் தெரியலை.
 குழந்தைக்கு நாலு வயசாகும்போது வடதேசத்திலேருந்து இந்த ஊர் வழியா ராமேஸ்வரம் போன சன்யாசி ஒருத்தர் கால்லே குழந்தையைப் போட்டுட்டு நானும் சுகுணாவும் கதறினோம்.
 "பதினஞ்சு வயசுலேருந்து கொஞ்சம் கொஞ்சமா குணம் ஆகும். இருவத்தஞ்சு வயசுலே கல்யாணமே பண்ணி வெக்கலாம்''ன்னு அந்த வடக்கத்தி சன்யாசி ஹிந்தியில் சொன்னதாக என் பொண்ணு புரிஞ்சுண்டாள். குழந்தை உடம்பு முழுக்க விபூதி பூசி ஆசீர்வாதம் செஞ்சார்.
 
 ஏழெட்டு வயசுக் குழந்தைக்கு மூளை வளரலியே தவிர வாய் நன்னா வளர்ந்தது. நாக்கு ருசி அமோகமா இருந்தது. ரெண்டு வீட்டுக்கும் செல்லம். ஐயோ பாவம்ங்கிற நெனைப்பு வேறே. குழந்தை ராஜமெüலி அம்மா -அப்பாவுக்கு அப்புறம் சாதம், பலகாரம் ரெண்டு வார்த்தையையும் வேகமாக் கத்துண்டான். சுகுணாவாத்திலேயும் சரி, எங்காத்துலேயும் சரி குழந்தை எதை சாப்பிடக் கேட்டாலும் அப்படியே தூக்கிக் கொடுத்துடுவோம். சாப்பாடு, சாப்பிட்டதும் விரலைச் சூப்பிண்டு தூக்கம். இதுவே பிரதானமாச்சு. கொஞ்சம் கொஞ்சமாக வயிறு பெருத்துப் போய் ராஜ கணபதியாட்டம் தொப்பை போட்டது.
 தூங்குற நேரம் போக மற்ற நேரமெல்லாம் சதா தின்றுகொண்டே இருந்த குழந்தையைப் பார்த்து சுகுணாவோட மாமியார், "இதென்னடி இது இப்படி வயிறுதாரியா இருக்கு?'' ன்னு கேட்டாளாம்.
 அதிலேருந்து ராஜமெüலி, ஜுக்குலி, பப்பிளி எல்லாப் பேரும் மறந்து போய், வயிறுதாரிங்கிற பேர் நிலைச்சுடுத்து.
 "டே சங்கரசுப்பு, அந்த கிருஷ்ணஜெயந்தி பட்சணத்தை எடுத்துண்டு போய் கொடுடா, வயிறுதாரி ஆசையாச் சாப்பிடும்...''
 "அம்மாடி சுசீலா, நான் கொஞ்சம் தூங்கப்போறேன். அந்த வயிறுதாரிப்பிள்ளை இந்தப் பக்கம் வந்தா மறக்காமல் ஜவ்வரிசிப் பாயசம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லு...''
 இதெல்லாம் அடிக்கடி கேட்கும் வசனமாகிவிட்டது.
 அந்தக் காலத்து "மகாகவி காளிதாஸ்' படத்தில் சிவாஜி பண்ணுவது போல பட்சணங்களைக் கண்டால் ஏகத்திற்கும் குஷியாகிவிடுவான் வயிறுதாரி. முழு தேன்குழல் முறுக்கை வாயில் அடைத்துக்கொண்டு, டிராயரின் ரெண்டு பக்கப் பைகளிலும் நாலு முறுக்கைத் திணித்துக் கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டு போவான்.
 வீட்டில் எதைச் செய்தாலும் வயிறுதாரிக்கென்று தனியாக எடுத்து வைப்பது வழக்கமாச்சு. சுகுணாவும் மாப்பிள்ளையும் வயிறுதாரியோடு எங்காவது கோயில் குளம் டாக்டர் என்று வெளியூர் போனாலும், அவர்களெல்லாம் திரும்பிவரும் வரை பட்சணத்தை அடைகாத்து வெச்சிருப்பேன். சுசீலாவும் தன் மருமகன் வயிறுதாரியிடம் பாசமாகத்தான் இருப்பாள். அவனுக்கும் தன் பையன் சோமேஸ்வரனுக்கும் தின்பண்டங்கள் பங்கிடுவதில் சண்டை கிளம்பினால், வயிறுதாரிக்கு ஆதரவாகத் தன் பையன் முதுகில் இரண்டு வைத்துப் பிரச்னைக்கு முடிவு கட்டுவாள்.
 
 முகூர்த்தம் களை கட்டறது.
 ஹால் மூலையில ஒரு நாற்காலியில உக்காந்திருக்கேன். விசேஷத்துக்கு வந்திருக்கிறவா யாரோடும் பேசப்பிடிக்கலை. பேச ஆரம்பிச்சுடுவாளோன்னு அடிவயத்துல ஒரு பயம் வேற.
 ""சுகுணா வரல்லியா...''ங்கிறது தவிர வேறு எதையும் பேச மாட்டேங்கிறா.
 காலமே ஆறு ஆறரைக்கெல்லாம் டிபனுக்கு இலை போட்டாச்சு. என்ன ஐட்டம்னு தெரிஞ்சுக்கக் கூடத் தோணல்லே. கூப்பிட்டவாளுக்கெல்லாம், வயிறு சரியில்லை, சாதம் சாப்பிடறேன் அப்பிடின்னு சொல்லிச் சமாளிச்சேன்.
 எங்கேர்ந்தோ வந்த சுசீலா,"இங்கே வாங்கம்மா''ன்னு டி.வி.ரூமுக்குக் கூட்டிண்டு போய் ரெண்டு இட்டிலியும் வடையும் கேசரியும் தட்டிலே கொண்டுவந்து,"சாப்பிடுங்கோம்மா'' அப்பிடின்னதும் தட்ட முடியலே.
 "இன்னும் ரவாப்பொங்கல், கிச்சடி கூட பண்ணியிருக்கும்மா, கொண்டு வரட்டுமா?''
 ""வேணாம்டி கண்ணு, பாவம் அந்த வயிறுதாரி இருந்தால் ஆசை ஆசையாச் சாப்பிடும். அதை விட்டுட்டு சாப்பிடப் பிடிக்கவேயில்லேம்மா...''
 "அதுக்காக நீங்க பட்டினி கிடந்து உடம்பைக் கெடுத்துக்கதீங்கோம்மா. காலம் இப்பிடியே போயிடாது. உங்க பிள்ளையோட மனசு மாறும். இதைவிட பெரிசா ஏதாவது விசேஷம் நம்மாத்துல வரும். அப்போ சுகுணா அக்காவை மாப்பிள்ளை குழந்தையோட வரவழைச்சு உபசரிக்கலாம்மா. நான் கேரண்டி. இப்போ சாப்பிடுங்கோம்மா''
 தங்கமான பொண்ணு. சுசீலாவோட முகவாய்க்கட்டையைத் தடவி முழங்கையிலே முத்தமிட்டு, "நீ இது சொன்னதே போறும்டா கண்ணு, நீ மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பாரு'' ன்னு சொல்லி டிபனைச் சாப்பிட்டேன்.
 மறுபடியும் ஹால் மூலையில் ஒரு நாற்காலி.
 பவதி பிக்ஷôம் தேஹி....
 பூணூல் போட்ட பிரம்மச்சாரிப் பையனுக்கு யார் யாரெல்லாமோ அரிசியிடறா. ஒரே அத்தை சுகுணா அரிசியிடக் குடுப்பினையில்லே. இவ்ளோ ஏன் அந்தப் பிள்ளை வயிறுதாரிக்கு சோமேஸ்வரனை விட ஒரு வயசு அதிகம். எல்லாப் பிள்ளைகள் போலவும் இருந்தால், அதுக்கும் இந்நேரம் பூணூல் போடலாம். அதன் கலருக்கும், தேஜஸ்ஸýக்கும் சாக்ஷôத் ஆதிசங்கரர் மாதிரியே இருக்கும்.
 ஏன்தான், மனசு திரும்பத் திரும்ப இப்பிடியே நினைக்கிறதோ. மனசு நினைச்சுட்டுப் போகட்டும். ஒவ்வொரு நினைப்புக்கும் கண்ணுல ஜலம் தளும்பறதைக் கட்டுப் படுத்த முடியல்லியே....
 ""பையனோட பாட்டி எங்கே, ஆத்துப் பெரிய மனுஷி முதல் ஆளா வந்து ஆசீர்வாதம் பண்ண வேண்டாமா?''
 புரோஹிதர் சொன்னது ஸ்பஷ்டமாகக் காதிலே விழறது. நாற்காலியிலேர்ந்து எழுந்து முன்னே போறேன்.
 ""வாங்கோ, வாங்கோ, உங்களைத்தான் எல்லாரும் கேக்கிறாள். வந்து பேரனை ஆசீர்வாதம் பண்ணுங்கோ''
 யார் யாரோ என்னை வரவேற்க, சுசீலா மணையிலிருந்து எழுந்து வந்து என் கையைப் பிடிச்சு அழைத்துப் போகிறாள்.
 புடவைத் தலைப்பில் முடிந்து வைத்திருக்கும் ஆயிரத்தொரு ரூபாயைக் கொடுத்து பேரன் சோமேஸ்வரன் தலையை உச்சிமோந்து, ""தீர்க்காயுசா இருடாப்பா....!'' ன்னு மனசார ஆசீர்வாதம் பண்ணினேன். ""நீயாவது உன் அப்பனைப் போல மூர்க்கமா இருக்காதேடாப்பா'' அப்பிடின்னு மனசுக்குள்ளே சொல்லிண்டேன்.
 வந்திருக்கிறவாள் எல்லாரும் பையனுக்கு ஆசீர்வாதம் பண்ணியாகிறது. சோமேஸ்வரனோடு ஸ்கூல் படிக்கிற பையன்கள் ஒன்றிரண்டு கூட கையில பிரஸண்டேஷன் கொடுத்துட்டுப் போட்டோ எடுத்துக்க நிக்கறதைப் பார்க்கிறேன். அந்த வயிறுதாரியும் ஒழுங்கா வளர்ந்திருந்தால் இந்த மாதிரி விசேஷத்துலே எப்பிடியெல்லாம் ஜாலியாகக் குறுக்கும் நெடுக்குமா அலைஞ்சிண்டிருக்கும்னு தோணித்து.
 ""சாப்பிட வாங்கோம்மா''ன்னு இன்னொரு சம்பந்தியம்மா, சுசீலாவோட அம்மா மரியாதையா கூப்பிடறா.
 ""காலமே சுசீலா நிறைய டிபன் கொடுத்துட்டா. இப்போ பசியில்லைம்மா, நீங்களும் சம்பந்தி மாமாவும் சாப்பிடுங்கோ''ன்னு அவாளை அனுப்பிச்சிட்டு மெதுவா எழுந்தேன்.
 வீட்டுப் பின்கட்டிலே பந்தல் போட்டு சமையல் நடக்கிற எடத்துக்கு மெதுவா நடக்கிறேன்.
 ""வாங்கோம்மா, காலையிலே டிபன்லாம் நன்னா இருந்துதா?''ன்னு ஓடி வந்தார் ஹெட் குக் ராஜவையர்.
 "எல்லாம் பிரமாதமாக இருந்தது ராஜா மாமா. நீங்க இப்போ என்ன செய்யறேள்னா, ஒரு டிபன் கேரியர்லே எல்லா ஐட்டங்களையும், முக்கியமா பட்சணங்களைப் போட்டு, ஒரு பையனை என் கூட அனுப்புங்கோ, அவசரம்''னேன்.
 பின்கட்டுக் காம்பவுண்டு கேட்டு வழியாக அந்தப் பையனையும் அழைச்சுண்டு, பின்பக்கத் தெருவைப் பிடிச்சு சுகுணா வாக்கப்பட்ட வீட்டைப் பார்த்து நடந்தேன்.
 சம்பந்தி மாமி இல்ல சுகுணா யார் காலையாவது பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி அந்த வயிறுதாரி மட்டுமாவது இதையெல்லாம் சாப்பிடவைக்கும்படி சொல்லணும்.
 ராஜவையர் அனுப்பிச்ச இளவயசுப் பையன் என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினது தெரிஞ்சது.
 ""கொஞ்சம் வேகமா வாடாப்பா, அம்பி''.
 சுகுணா வீட்டு வாசல்லே யாரோ பொம்மனாட்டி நிக்கிறது தெரியறது.
 "என்ன மாமி, உங்க சம்பந்தியாத்து விசேஷத்துக்கு உங்களை அழைக்கலியாமே?''ன்னு மூட்டி விடறதுக்கு யாராவது ஒரு உள்ளூர்க்காரி வந்திருப்பாளாக்கும்.
 கிட்டப்போனாத் தான் தெரியறது, ஒரு எவர்சில்வர் தூக்கைத் தூக்க முடியாமல் தூக்கிண்டு, சுகுணாவாத்துக் கதவைத் தட்டிண்டு நிக்கிறது சுசீலான்னு.
 ஸ்ரீதுரை
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com