திரைக் கதிர்

விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மீண்டும் இணையவுள்ள படம் "விசுவாசம்'. "விவேகம்' படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. 
திரைக் கதிர்

விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மீண்டும் இணையவுள்ள படம் "விசுவாசம்'. "விவேகம்' படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. 

அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற போட்டியில் நயன்தாரா வெற்றிப் பெற்றுள்ளார். இப்படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. 

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யார் என்பதிலும் குழப்பம் நிலவி வந்தது. 
தற்போது டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு எடுத்துள்ளது. மார்ச் 2-ஆம் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்க தற்போது படக்குழு முடிவு செய்துள்ளது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளிக் கொண்டு வர பணிகள் தொடங்கியுள்ளன. 


நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏற்கெனவே ராதா மகள்கள் கார்த்திகா, துளசி, நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். அடுத்து மற்றொரு நடிகையின் மகள் கதாநாயகி ஆகியிருக்கிறார். கமலுடன் "விக்ரம்' படத்தில் நடித்தவர் லிசி. இயக்குநர் பிரியதர்ஷனை மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார். லிசி - பிரியதர்ஷன் மகள் கல்யாணிதான் தற்போது கதாநாயகியாகியுள்ளார். தமிழ் சினிமாவில் ஓரிரு வாய்ப்புகள் வந்த போதிலும், தெலுங்கில் வந்த வாய்ப்பை தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார். விக்ரம் கே.குமார் இயக்கிய "ஹலோ' படத்தில் அகில் அகினேனி ஜோடியாக நடிக்கிறார் கல்யாணி. அடுத்து சர்வானந்த் நடிக்கும் புதிய படத்துக்கு பேச்சுவார்தை நடந்து வருகிறது. இப்படத்தை சுதீர் வர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்கிறார். 

சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான படம் "தும்ஹாரி சுலு'. வித்யாபாலனுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில், சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், பிரபல ரேடியோ சேனலில் தொகுப்பாளராகிறார். இதனால் பல பிரச்னைகளைச் சந்திக்கிறார். இதைப் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம் ஹிந்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அதில் ஜோதிகா நடிக்க உள்ளார். இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார். "மொழி' வெற்றிப் படம் கொடுத்த ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. "நாச்சியார்' படத்தைத் தொடர்ந்து "செக்க சிவந்த வானம்' படத்தில் கவனம் செலுத்திவரும் ஜோதிகா, அந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் ஏப்ரல் இறுதியில் ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்புக்கு புறப்படுவார் என்று தெரிகிறது. இதனிடையே பாலாவின் இயக்கத்தில் "நாச்சியார்' படத்தில் நடித்துள்ள ஜோதிகாவுக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. படத்தின் கதையம்சம் சுமார் என்றாலும், ஜோதிகாவின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் ஜோதிகாவுக்கு தங்களது சுட்டுரைப் பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகையாக வாழ்ந்து மறைந்தவர் சாவித்ரி. வறுமை, செழுமை, ஏற்றத் தாழ்வுகள் என பல பின்னணிகள் இவரது வாழ்வில் உண்டு. அவருடைய வாழ்க்கையின் முழுத் தழுவலாக உருவாகி வரும் படம் "நடிகையர் திலகம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடிக்கிறார். தெலுங்கில் இப்படத்துக்கு "மகாநதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சென்னை போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. சாவித்ரி வாழ்ந்த காலத்தில் உள்ள சூழ்நிலையை பிரதிபலிக்கும் விதமாக காட்சிகள் உருவாக்கப்பட்டதால், படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வார காலத்தில் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாவித்ரியின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். பத்திரிகையாளராக சமந்தா நடிக்கிறார். சாவித்ரியுடன் நெருங்கிப் பழகிய அக்காலத்து நடிகர்கள், நடிகைகள் என பல வேடங்கள் இதில் உண்டு. "யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தை எழுதி இயக்குகிறார். விஜயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் படம் திரைக்கு வருகிறது.

வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் எழுதி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். திருநெல்வேலியை கதைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்துக்கு பெயரிடப்படாத நிலையில், கடந்த வாரம் "சீமராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து "நேற்று இன்று நாளை' ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்கான முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். இதற்கான கதாநாயகி தேர்வு சமீபமாக நடந்து வந்தது. முன்னணி கதாநாயகிகள் பலரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மார்ச் மாதத்துக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் "சீமராஜா' படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com