பேல்பூரி

சுங்குவார் சத்திரம் அருகே உள்ள சந்தவேலூர் என்ற ஊரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர் - 'என்னப்பா இருக்கு'.
பேல்பூரி

கண்டது

(சுங்குவார் சத்திரம் அருகே உள்ள சந்தவேலூர் என்ற ஊரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

என்னப்பா இருக்கு

ஒய்.ராபர்ட், ஓச்சேரி.


(நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே ஒரு வாய்க்காலின் பெயர்)

நரி தின்ன வாய்க்கால் 

ந.ரகுநாதன், ரிஷியூர்.



(இராமநாதபுரம் வடக்குத் தெருவில் ஒருவரின் பெயர்)

பி.ஆர்.நவசக்தி

எம்.சுகாரா, ராமநாதபுரம்.


(சென்னை வில்லிவாக்கத்தில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)

தேவையை உணராமல் போராட முடியாது; போராடத் தெரியாமல் வாழ முடியாது.

எஸ்.செந்தில்குமார், திருமுல்லைவாயில்.

கேட்டது

(எரகுடியில் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது)

""ரொம்பநாள் கழிச்சி உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும்தானா மச்சி?''
""பின்னே என்ன வேணும்?''
""கடிக்க... ஏதாவது?''
""நாய் இருக்கு... அவிழ்த்து
விடவா?''
துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.


(விருதுநகர் திருமண மண்டபத்தில் இருவர்)

""உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே''
""எங்கேயும் பார்க்கல... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் முதல் பந்தியிலே ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம்''
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்.

மைக்ரோ கதை

""அன்பை வெளிப்படுத்துகிற மாதிரி எந்தப் பொருளையாவது கொண்டு வாருங்கள்'' என்றார் ஆசிரியர். 
மூன்று மாணவிகள் வெளியே சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தனர்.
ஒரு மாணவியின் கையில் ஒரு மலர் இருந்தது. இன்னொரு மாணவியின் கையில் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மூன்றாவது மாணவியின் கையில் எதுவுமில்லை.
""நீ எதுவும் கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டார் ஆசிரியர். 
அதற்கு அந்த மாணவி, ""பூவைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. பறிக்க மனம் வரவில்லை. வண்ணத்துப் பூச்சியைப் பிடித்தால் அது துன்பப்படுமே என்று நினைத்தேன். அதைப் பிடிக்க மனம் வரவில்லை. ஒரு பறவைக் குஞ்சைப் பார்த்தேன். அதைப் பிடித்துக் கொண்டு நான் வந்துவிட்டால் தாய்ப் பறவை அதைத் தேடுமே என்று நினைத்தேன். அதையும் என்னால் பிடிக்க முடியவில்லை. எனவே வெறும் கையுடன் வந்துவிட்டேன்'' என்றாள். 
""நீ தான் உண்மையிலேயே அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட பெண்'' என்று பாராட்டினார் ஆசிரியர்.
ஆர்.அஜிதா, கம்பம்.
சிலரிடம் சில விஷயங்களைப் புரிய வைக்க 
கஷ்டப்படுவதை விட...
சிரித்துவிட்டு கடந்து செல்வதே மேல்.
எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.


எஸ்.எம்.எஸ்.

கோபம் என்பது ஒரு நிமிடப் பைத்தியம்.

எஸ்.செந்தில்குமார், ஆத்தூர்.

அப்படீங்களா!

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு என நோய்கள் சூழ் உலகில் வாழும் ஒருவர், உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. நாக்கைக் கட்டுப்படுத்த முடியாத பலர், உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடிவதில்லை. நம் உடலுக்கு எவ்வளவு உணவு தேவை... எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து கொண்டால்... அதுவும் துல்லியமாகத் தெரிந்து கொண்டால்... ஓரளவுக்கு இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். 
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேனாசோனிக் நிறுவனம் ஒரு மைக்ரே வேவ் அடுப்பின் அளவே உள்ள ஒரு "டேபிள்டாப் கலோரி கவுன்ட்டர்' கருவியை உருவாக்கியுள்ளது. இந்தக் கருவிக்குள் நாம் உண்ணும் உணவை வைத்துவிட்டால், பத்து நொடிகளுக்குள் அந்த உணவில் எவ்வளவு கலோரிகள் அடங்கியுள்ளன என்பதைத் தெரிவித்துவிடும். அதுமட்டுமல்ல, உணவில் எவ்வளவு கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச் சத்து அடங்கியுள்ளது என்பதையும் தெரிவித்துவிடும். 
இந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது? என்று அந்த நிறுவனம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. எவ்வளவு விலை? எப்போது, எங்கே கிடைக்கும்? ஆகிய தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை. 

என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com