வீழ்வேன் என்று நினைத்தாயோ?: சிங்கப்பூரில் பஸ் ஸ்டிரைக்!

வீட்டுக் கடனுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுத்துக் கொள்வதற்கு ஏதுவாகச் சட்டம் திருத்தப்பட்டதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையா என்பது இந்தியர்களாகிய நமக்கு இயல்பாக எழக்கூட
வீழ்வேன் என்று நினைத்தாயோ?: சிங்கப்பூரில் பஸ் ஸ்டிரைக்!

வீட்டுக் கடனுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுத்துக் கொள்வதற்கு ஏதுவாகச் சட்டம் திருத்தப்பட்டதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையா என்பது இந்தியர்களாகிய நமக்கு இயல்பாக எழக்கூடிய கேள்வி. அதுவும் அண்மையில் நடந்த பஸ் ஸ்டிரைக்கை எதிர் கொண்டவர்கள் மனதில் தொழிற்சங்கங்கள் பற்றிய பல்வேறு பிம்பங்களும் எண்ணங்களும் ஏற்பட்டிருக்கக் கூடும்.
இந்தியத் தொழிற்சங்கங்களுக்கும் சிங்கப்பூர் தொழிற்சங்கங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் மகத்தான பங்களித்தன. ரஷ்யப் புரட்சிக்கு முன்பே, 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 23 முதல், மார்ச் 3 வரை ஒன்பது நாள்கள் வ.உ.சி, தூத்துக்குடி கோரல் நூற்பாலையின் ஆங்கிலேய நிர்வாகத்திற்கு எதிராக நடத்தி காட்டிய வேலை நிறுத்தமே அந்தப் பகுதியில் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்தெழுவதற்கான விதைகளாயின என்பது வரலாறு. சுதேசிக் கப்பலுக்காக மட்டுமல்ல, இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்காகவும்தான் அதே 1908-ஆம் ஆண்டு மார்ச் மாதம்
12-ஆம் தேதி, வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த 10-ஆவது நாள்களுக்குள், வ.உ.சியைக் கைது செய்தது.
கோரல் நூற்பாலைப் போராட்டத்தின் முக்கியமான கோரிக்கைகளாக கூலி உயர்வு, வேலை நேரம் குறைப்பு, கூடுதலாக விடுமுறை நாள்கள் என்பவை இருந்தன. சிங்கப்பூரிலும், பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, இதே பிரச்னைகளை தொழிலாளர்கள் எதிர்கொண்டார்கள். 12 முதல் 14 மணி நேர வேலை, ஆண்டுக்கு இரு விடுமுறை தினங்கள் (சீனப் புத்தாண்டு, மற்றும் இன்னுமொரு நாள்) என்ற நிலை இருந்தது. பிரிட்டிஷ் அரசு தனக்கு ஆதரவான வணிகர்களை சட்டமன்றம், நகராட்சி, ஆலோசனைக்குழு ஆகியவற்றில் நியமித்து நிர்வாகத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தது. அதனால் ஆரம்ப காலப் போராட்டங்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட்டன.
சுருக்கமாகச் சொன்னால் அரசியலும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்தவை. தொழிலாளிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ,அவர்கள் அரசியலில் முக்கியப் பங்கேற்க வேண்டும். எனவே தொழிலாளர் இயக்கங்களிலிருந்து அரசியல் போராட்டங்களைப் பிரிக்க முடியாது என்பது தொழிற்சங்கவாதிகளின் வாதம். 
சிங்கப்பூரில் வலிமை வாய்ந்த தொழிற்சங்கமாகத் திகழ்ந்தது சிங்கப்பூர் ஆலை மற்றும் கடைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் (Singapore Factory and Shop Workers Union - SFSWU). அதன் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜேம்ஸ் புதுச்சேரி இந்த அணுகுமுறை குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
1955-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் பொற்காலம். அந்த ஆண்டு வெறும் 372ஆக இருந்த SFSWUவின் உறுப்பினர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்தது (காண்க: Paths Not Taken: Political Pluralism in Post-war Singapore, edited by Michael D. Barr, Carl A. Trocki TdLm 212) சிங்கப்பூர் வரலாற்றிலேயே மிக அதிகமாக வேலை நிறுத்தம் நடைபெற்ற ஆண்டும் அதுதான். அந்த ஓராண்டில் மட்டும் 275 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 
அவற்றில் முக்கியமானது ஹாக் லீ பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக். சிங்கப்பூரில் இயங்கிக் கொண்டிருந்த பதினோரு பஸ் கம்பெனிகளில் ஒன்று ஹாக் லீ அமால்கமேட்டட் பஸ் கம்பெனி. 1955-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு தொழிற்சங்கம் தொடங்கப்பட்டதையடுத்து, நிர்வாகம் போட்டித் தொழிற்சங்கத்தைத் தொடங்கியது. புதிதாக 200 ஊழியர்களை வேலைக்கு எடுத்து அவர்களை அந்தச் சங்கத்தில் சேர்த்தது. இடதுசாரி சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்ய நோட்டீஸ் கொடுத்தனர். அந்தத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 229 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது. அதனால் அந்த ஆண்டு (1955) ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கியது.
இன்று நமக்குப் பழகிப் போனக் காட்சிகள் அன்று அங்கும் அரங்கேறின. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணிமனை முன் மறியல் செய்தார்கள். பஸ்களை வெளியே எடுக்க விடாமல் தடுத்து நின்றார்கள். சிங்கப்பூரில் அப்போது 11 தனியார் பஸ் கம்பெனிகள் இருந்தன. அவற்றில் ஆறு கம்பெனி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு அனுதாபம் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். ஊழியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். நிலைமை மோசமடைந்தது. ஒருபுறம் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பஸ்களை வெளியில் எடுக்க விடாமல் மறித்து நிற்க, மறுபுறம் அவர்களை "அள்ளிப் போடுவதில்' காவல்துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. தண்ணீர் பீரங்கிகள் கொண்டுவரப்பட்டு போராட்டக்காரர்கள் மீது நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
மாணவர்கள் களமிறங்கிய பின்னர் போராட்டம் உக்கிரமடைந்தது. வேலை நிறுத்தம் தொடங்கி 19 நாள்களுக்குப் பிறகு மே 12-ஆம் நாள் அலெக்ஸாண்ட்ரா ரோடு என்கிற இடத்தில் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் கைகலப்பு நடந்தது. கைகலப்பாகத் தொடங்கியது வன்முறையாக வெடித்தது. அப்போது அந்த இடத்தில் 2000 மாணவர்கள் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் இறந்து போனார்கள். (அவர்களில் ஒருவர் பத்திரிகையாளர்!) 
அந்த நால்வரில் இருவர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். ஒரு காவல்துறை அதிகாரி காரில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டார்.
மற்ற ஒருவர் மாணவர். சிங்கப்பூரின் ஆங்கில நாளிதழான "ஸ்ரெயிட் டைம்ஸ்' மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார் என்றும், சம்பவம் மருத்துவமனைக்கு ஒரு மைல் தொலைவில் நடந்த போதும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மாணவர்கள் அவரை ஊர்வலமாகத் தூக்கிச் சென்று கூடியிருந்தவர்களை வெறி கொள்ளத் தூண்டினார்கள் என்றும் எழுதியது. (பின்னர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அப்படிச் செய்தவர்கள் மாணவர்கள் அல்ல, சமூக விரோதிகள் என்று முடிவாயிற்று) 
இந்தக் காட்சிகளையெல்லாம் நாம் இந்தியாவிலும் பார்த்திருக்கிறோம். இவையெல்லாம் நமக்கும் பரிச்சயமானவை.1965-இல், இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கிளர்ச்சியின் போது, திருப்பூரில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வண்டிச் சக்கரத்தில் கட்டி வைக்கப்பட்டு இதே போல எரிக்கப்பட்டார். 
இந்த பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தை காலனியவாதிகளுக்கும் கம்யூனிஸ்ட்களுக்குமான போராட்டம் என வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூர் குடியரசு நாடாக ஆகும் முன்பே தொழிற்சங்கங்களின் நிலையில் தலைகீழ் மாற்றங்கள் நேர்ந்தன. தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் மீது செல்வாக்குச் செலுத்த வேண்டுமா அல்லது அரசியல் கட்சிகளின் பிடியில் தொழிற்சங்கங்கள் இருக்க வேண்டுமா என்று கம்யூனிஸ்ட்களுக்கும் கம்யூனிஸ்ட் அல்லாதவர்களுக்குமிடையே விவாதம் எழுந்தது. அந்த விவாதம் தொழிற்சங்கங்கள் பிளவுபடுவதில் வந்து முடிந்தது.
1961-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதன்மைத் தொழிற்சங்கமான STUC (Singapore Trade Union Congress) கம்யூனிஸ்ட்களின் சார்பு கொண்ட SATU (Singapore Association of Trade Unions), கம்யூனிஸ்ட்கள் அல்லாத NTUC (National Trades Union Congress)  என இரண்டாகப் பிரிந்தது. இந்தப் பிளவிற்கு முக்கிய காரணம், சிங்கப்பூரின் முதன்மையான அரசியல் கட்சியான மக்கள் செயல் கட்சியில் (PAP - People's Action Party) ஏற்பட்ட பிளவு.1961-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி டஅடயில் இருந்த கம்யூனிஸ்ட்கள் வெளியேறி பாரிசான் நேஷனல் என்ற கட்சியைத் தொடங்கினர். நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 25ஆம் தேதி, தொழிற்சங்கத்தில் பிளவு ஏற்பட்டது, அரசியல் கட்சிகளின் பிடியில்தான் தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன என மௌனமாகப் பதில் சொல்லி காலம் புன்னகைத்து நின்றது.
கம்யூனிஸ்ட்களின் பிடியில் இருந்த SATU ஸ்டிரைக் கலாசாரத்தைக் கைவிட்டுவிடவில்லை. PAP பிளவுண்ட ஜுலை21-ஆம் தேதிக்கும் அந்த ஆண்டு (1961) இறுதி நாளான டிசம்பர் 31-க்கும் இடைப்பட்ட ஆறுமாத காலத்தில் சிங்கப்பூரில் நடந்த வேலை நிறுத்தங்கள் 84. அவற்றில் 77 SATUவால் ஏற்பாடு செய்யப்பட்டவை. 1963- ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது SATU. பல்கலைக்கழக மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அறைகூவல்
விடுத்தது. இதனைக் காரணமாகக் காட்டி, ஒரு மாதத்தில், 1963 நவம்பரில் SATUவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. சிங்கப்பூர் குடியரசாக மலர்ந்த போது அங்கு ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருந்தது. அது PAPயின் ஆதரவு பெற்ற NTUC.
இன்று சிங்கப்பூரில் ஊழியர்களின் வேலை நீக்கம், பணியிடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை குறித்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவற்றிற்கான அதிகாரம் முதலாளிகளின் கையில். குடியரசான மூன்றாண்டுகளுக்குள், 1968-இல் அதற்கான சட்டம் இயற்றப்பட்டு விட்டது (Employment Act) அதே போல ஊதிய உயர்வு எவ்வளவு என்பதை நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, அரசு, முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரது பிரதிநிதிகளும் கொண்ட தேசிய ஊதியக் குழு (National Wages Council) தீர்மானிக்கும். அதைப் பின்பற்ற வேண்டியது சட்டப்படி கட்டாயமில்லை என்றாலும் அதுதான் நடைமுறையில் இருக்கிறது.
இவற்றையெல்லாம் செய்யாமல் தொழிற்சங்கம் வேறு என்னதான் செய்யும்? அது இன்ஷூரன்ஸ் கம்பெனி நடத்துகிறது. டாக்சி சர்வீஸ் நடத்துகிறது. காய்கறிகள், பலசரக்கு விற்கும் அங்காடிகள் நடத்துகிறது! அதுதான் சிங்கப்பூர்! 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com