திரைக் கதிர்

"வனமகன்' படத்தைத் தொடர்ந்து ஏ.எல். விஜய் எழுதி இயக்கி வரும் "கரு'. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சாய் பல்லவி, நாக ஷவுர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
திரைக் கதிர்

* "வனமகன்' படத்தைத் தொடர்ந்து ஏ.எல். விஜய் எழுதி இயக்கி வரும் "கரு'. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சாய் பல்லவி, நாக ஷவுர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் சாம் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை பிரபுதேவா சமீபத்தில் வெளியிட்டார். இதற்கு சமூகவலைத்தளத்தில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. இம்மாத இறுதியில் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. "கரு' படத்தின் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளார் ஏ.எல்.விஜய். இதில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ட்ரைண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு துவங்குகிறது. சென்னை, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது. பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* 70-களின் தொடக்கத்திலிருந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டி போட்டன அதன் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரின் படங்களும் ஒரே நாளில் வெளியானது. இது திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் யார் படம் பெஸ்ட் என்பது போன்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், கடந்த சில வருடங்களாவே நட்சத்திர நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகால் இருந்து வருகிறது. குறைந்தது 2 வாரங்கள் இடைவெளியில் அடுத்தடுத்த படங்கள் வெளிவருகின்றன. வசூல் கணக்கு நிலவரத்தை ஒட்டி இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டில் ரஜினி, கமல் நடித்த படங்கள் வெளியாகவில்லை. விஜய்க்கு "மெர்சல், அஜித்துக்கு "விவேகம்' என படங்கள் திரைக்கு வந்தன. இந்த ஆண்டில் ஒட்டு மொத்த நடிகர்களுக்கும் படங்கள் வெளிவரும் சூழல் உருவாகியுள்ளது. ரஜினிக்கு "2.0', "காலா' படங்கள் தயார் நிலையில் உள்ளன. கமல் நடித்துள்ள "விஸ்வரூபம் 2' தயாராகி கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், சூர்யா நடிக்கும் "தானா சேர்ந்த கூட்டம்', விக்ரம் நடிக்கும் "ஸ்கெட்ச்', தனுஷ் நடிக்கும் "வட சென்னை', "என்னை நோக்கி பாயும் தோட்டா', கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படம், விஷால் நடிக்கும் "இரும்புதிரை', "சண்ட கோழி 2', மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஜெயம் ரவி நடிக்கும் "டிக் டிக் டிக்', விஜய் சேதுபதியின் "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', சிவகார்த்திக்கேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கும் படங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

* கன்னடத்தில் பவண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் "யு-டர்ன்'. விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. 
இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மற்ற மொழிகளுக்கான ரீமேக் உரிமைக்கு கடும் போட்டு நிலவி வருகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்குகளுக்கான உரிமை விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது. தெலுங்கு உரிமையை அங்குள்ள நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், தமிழ் ரீமேக் உரிமையைக் கன்னடத்தில் தயாரித்த அதே நிறுவனமே தயாரிக்கவுள்ளது. பவண்குமாரே தமிழிலும் எழுதி இயக்குகிறார். இதில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதனிடையே ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுளது. ஆனால், இதனை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மறுத்துள்ளார். தமிழில் பவண்குமார் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், சமந்தா நாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சென்னை மற்றும் கேரளப் பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

* ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கொரில்லா'. ஹாலிவுட் உலகில் தனித்துவம் வாய்ந்த பாணியாக விளங்கும் "ஹெய்ஸ்ட்' காமெடி த்ரில்லர் வகை படமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிம்பன்சியுடன் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்சியை வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சிக்கு தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான "சாமுட்'-இல் பயிற்சி அளிக்கப்பட்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்சிகள்தான் "ஹேங்ஓவர்-2', "ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ்' ஆகிய ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இந்த படத்தில் சிம்பன்சி, ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் இடம் பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தாய்லாந்தில் பிரத்யேகமாக ஒரு சிம்பன்சி 4 மாதங்களாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் இப்படத்தில் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ஆர்.கே.நாகு கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

* தமிழ் சினிமாவில் இன்னும் பேய் சீஸன் படம் ஓய்ந்தபாடில்லை. இந்தப் பாணியில் அடுத்து வரவுள்ள படம் "ஆறாம் திணை'. கதையின் நாயகியாக வைஷாலி நடிக்கிறார். ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அருண்.சி. இப்படத்தை எழுதி இயக்குகிறார். இதன் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேய் இருக்கா இல்லையா என்று விவாதம் நடந்தது. இயக்குநர் பேரரசு பேசும் போது, ""பேய் உண்மையில் இருக்கிறது. அது பணப் பேய், பதவிப் பேய், காமப் பேய், ஜாதிப் பேய், மதப் பேய் என பல வகை உண்டு. அது போல்தான் சினிமாவையும் பல வருடங்களாக பேய் பிடித்திருக்கிறது. இது சினிமாவை வாழ வைக்கும் பேய். யாரைக் காப்பாற்ற விட்டாலும், தயாரிப்பாளரை இந்த பேய் காப்பாற்ற வேண்டும்'' என்றார். இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, " சின்ன வயதில் நான் கூட பேய் இருக்கிறது என்று நினைத்து பல முறை பக்கத்தில் இருக்கிற வீட்டுக்கு பல கிலோ மீட்டர் சுத்தி வந்திருக்கிறேன். கொல்லப்பட்ட ஒருவர் பேயாக மாறுகிறார் என்றால், அந்த பேயே வந்து கொன்றவனை பழி தீர்த்து விட்டு போய் விட்டால், அதற்கு பிறகு போலீஸ், நீதிமன்றம் போன்றவற்றுக்கு வேலை இல்லாமல் போய் விடும். அப்படி ஏன் பேய் கொல்வது இல்லை'' என்றார். 
- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com