கொடுக்கலும் வாங்கலும்

எவ்வளவு நேரம்தான் ரோட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பது. எப்பவும் மெயின்ரோட்டில் காணும் கலவையான மனிதர்களும் விதவிதமான மோட்டார் சைக்கிள்களும் கண்ணையும் மனதையும்
கொடுக்கலும் வாங்கலும்

எவ்வளவு நேரம்தான் ரோட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பது. எப்பவும் மெயின்ரோட்டில் காணும் கலவையான மனிதர்களும் விதவிதமான மோட்டார் சைக்கிள்களும் கண்ணையும் மனதையும் கவரும். ஆனால் தற்போதய மனநிலையில் சலிப்புத்தட்டியது. நேர் எதிரே எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் என்று சுவரில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இடப்பக்கம் வரிசையாய் பெண்கள் கூடைகளில் வெள்ளரிப்பிஞ்சுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். பஸ் வந்தால் வேகமாய் ஓடிச்சென்று வியாபாரம் பார்ப்பதும் மற்ற நேரங்களில் உட்கார்ந்திருப்பதுமாய் பகலெல்லாம் தொடரும் வியாபாரம். ஒருசிலர் கூடைகளில் பூம்பிஞ்சுகளாய் இருந்தது. பூவிருக்க பிடுங்கிய பிஞ்சுகளில் ஓர் ஓரத்தில் ஒட்டியிருந்த வெள்ளை நிறத்திலான குட்டிப்பூ அடித்த வெயிலில் அவர்களின் முகங்களைப்போல் வாடிப்போய் இருந்தது. மாலை வேளை என்பதால் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எல்லாம் அக்கம் பக்கம் கூட திரும்பாமல் வேகவேகமாய் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். லட்சுமிகாந்தன் தன் பையனை ஒருகையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ரோட்டுக்கு எதிர்ப்புறம் சென்று கொண்டிருந்தார். பையன் எதையோ கையைக் காட்டி கேட்க ஏறக்குறைய இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். ரோட்டில் "சர் சர்' என்று செல்லும் எல்லோரும் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்தான். டிவிஎஸ் 50 மாதிரியான சின்ன வண்டிகளே அருகிப் போய்விட்டது. பெரிய பெரிய வண்டிகள்தான். பெரிய நகரங்களில் பழைய புல்லட் திரும்பும் இடமெல்லாம் "தட தட'வென ரோட்டை அதிர வைக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கு அதில் போகத்தான் பிடித்திருக்கிறது. "தடதட'வென்று வேகமாகப் போகும்போது பெற்றோர்களின் இதயங்களும் அப்படித்தானே அடித்துக் கொள்ளும். டீ சாப்பிடாதது தலை வலிப்பது போல் இருந்தது. எப்பவும் இந்நேரம் வீட்டில் டீ சாப்பிட்டுவிட்டு ஹாயாக டிவியில் பொழுது போய்க்கொண்டு இருக்கும்.
 முருகேசனை இன்னும் காணோம். கடையில் வேலை பார்க்கும் பையன் இன்னும் அந்த துருப்பிடித்த ரிம்மை விடாமல் துடைத்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் ஸ்பேனர்களும் பழைய வண்டியின் கழற்றிப் போட்ட பாகங்களும் ஒரே யுத்த களேபரமாய்க் கிடந்தது. இரண்டுமுறை கேட்டாகிவிட்டது மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவன் போல, ஒரே
 பதிலை சரியாகச் சொன்னான் சிறுவன்.
 "இப்ப வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனார் சார்'' இனியும் கேட்க முடியாது அப்படிக் கேட்டால் நம்மை ஒருமாதிரி நினைத்துவிடுவான். கைபேசியில் தொடர்புகொண்டால் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாய்க் கூறிக்கொண்டு இருந்தது. எங்கே போயிருப்பான். ஒருவேளை நாம இருக்குறது தெரிஞ்சுதான் வராமல் இருக்கிறானோ... சந்தேகமாய் இருந்தது. ஒருத்தனை நம்பியது பாவமா? இத்தனை நாள் இப்படி நம்மகிட்ட அவன் நடக்கலியே. நடக்கலியே என்ன நாம அவனைப்பத்தி தெரிஞ்சுக்கலை... அவ்வளவுதான். கோவத்துல நல்லா திட்டிடலாமுன்னு வந்தா, பார்த்தவுடன் சிரிச்சிடுறான். உடனே கோபமெல்லாம் எங்க போகுதுன்னு தெரியலை. நம்மளுக்கும் மொகத்துல கெந்தலிப்பு வந்துடுது. வந்த சோலிய மறந்துட்டு பேச்சு எங்கெங்கோ போயி எதுலயோ முடியுது. பேச்செல்லாம் முடிந்து சரியாய்க் கிளம்பும்போது பார்ப்போமுன்னு சொல்லும்போது "பூம்பூம்' மாடு மாதிரி தலையாட்டிக்கிட்டு ஊமக்கொட்டானா திரும்பி வந்துடுறது. அடுத்த வாரம் பார்ப்போம் அல்லது ஒரு பத்து நாள் ஆகட்டும் இப்படி மறைமுகமாய் சிக்னல் கொடுத்து பேசினாக்கூட சரின்னு புரிஞ்சுக்கலாம். அவன் அந்த நினைப்பே இல்லாதது மாதிரி போயிட்டு வான்னுட்டு வேறு வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுறான். அந்த நேரத்துல கண்டிசனா ரெண்டு வார்த்தை பேச முடியலை. பேசுறதுக்கு மனசு வரமாட்டேங்குதே... கூடப்படித்தவன் மட்டுமல்லாமல், படிக்குற காலத்துல அவன்தான் லீடர். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் உடன் படித்தவன்.
 பணிமாறுதலில் சாத்தூர் வந்து ஏறக்குறைய ஒருமாதமாகிவிட்டபின் ஒருநாள் மாலையில் இனிப்பு கடையில் சேவு வாங்கிவிட்டுத் திரும்பும் போது தோளில் ஒரு கை விழுந்தது. "என்னப்பா எப்படி இருக்கே'. யார் இவர் பார்த்த ஞாபகமே இல்லையே. நினைவு அடுக்குகளை கிளறிப் பார்த்தும் பலன் இல்லை. காக்கி பேன்ட் கலர்ச்சட்டையில் கையெல்லாம் கிரீஸ் கருப்பாய் ஒட்டியிருக்க சிரித்த முகம். தலையெல்லாம் நரைத்து கொஞ்சம் வயதான தோற்றம். நேத்து சாப்பிட்டதே ஞாபகம் இல்லை.
 ""நேரிடையாகவே "சார் நீங்க...?' "என்னப்பா மறந்திட்டியா? ஒங்கூட படிச்ச முருகேசன்'' கடைவாய்ப்பல் தெரிய வெள்ளந்தியாய்ச் சிரித்தான். படிக்கிற காலத்தில் இவன்தான் பெரிய பையன். லீடருங்குற கித்தாப்பு வேற. பயங்கர ஆட்டம்தான். ஃபுட்பால் டீமில் இவன்தான் புல்பேக். இந்தக் கடைசியில் இருந்து பந்தை அடித்தால் அந்தக் கடைசிக்குப் போகும். படிக்கிற காலத்தில் இவனுக்கென்று ஒரு செட் கூடவே திரிவார்கள். என்னையெல்லாம் அதில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அந்தச் சமயத்தில் நான் நறுங்கிப் போய் பொடியானாய் இருப்பேன். ரொம்ப நாளைக்குப் பின் எதிர்பாராத சந்திப்பு. அப்போது மீண்டும் துளிர்விட ஆரம்பித்த பழக்கம். வண்டியில் சின்னச்சின்ன வேலைகளுக்காக வரும்போது பள்ளி நாட்களை சிலாகித்துக் கொண்டோம். போகும் போதெல்லாம் வம்படியாய் வேண்டாமென்றாலும் கேட்காமல் டீ வாங்கிவர பையனை அனுப்பிவிடுவான். டீ வாங்கி கொடுத்து நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டானே. சின்னப் பையனாய் இருக்கும் போது பழகியது. இத்தனை வருசத்துக்கு அப்புறம் எப்படியெல்லாம் மாறியிருப்பான் என்பது அந்தநேரத்தில் மரமண்டைக்கு ஏறவில்லை. ரொம்பத்தான் நம்பிட்டோம் போல... சின்ன வயசுல இருக்குற மாதிரியேவா இப்பவும் இருப்பாங்க.
 ""சார்... சார்..'' திரும்பினால் ப்ரியாகார்த்தி.
 "என்ன சார். ரொம்ப யோசனையா உட்கார்ந்திருக்கீங்க''
 "இல்லை முருகேசனைப் பார்த்துட்டு போகணும் அதான்...'' இழுத்தேன்.
 "என்ன சார் வண்டியில ஏதாவது பிரச்னையா? கோயிலுக்கு அந்தப் பக்கம் உள்ள மெக்கானிக் கடையில பார்த்துடலாமா?''
 "இல்ல சும்மாதான் பார்த்துட்டு போகலாமுன்னு இருக்கேன்''
 "ஓ... அப்படியா வாங்களேன் ஒரு டீ சாப்பிடலாம்''
 "இல்ல பரவாயில்லை இப்பதான் சாப்பிட்டேன்''
 "சரி சார் பார்ப்போம்'' கிளம்பிவிட்டார்.
 ஒருநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் வீடு தேடி வந்துவிட்டான் முருகேசன். எப்பவும் வந்ததில்லை. பார்த்தவுடன் திகைப்பாய் இருந்தது. வீடுகட்ட இடம் பார்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்தான். அது சம்பந்தமாய் வந்திருப்பானோ? வீட்டுக்குள் வற்புறுத்தி அழைத்தும் வரவில்லை. பக்கத்துக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டே, ""பையனுக்கு பீஸ் கட்டணும். இன்னைக்கு கடைசிநாள் ஒரு ஐயாயிரம் ரூபாய் உடனே வேண்டும்'' அதே புன்னகை மாறாத முகம். பதிலே பேசவில்லை நான்.
 ""கொஞ்சம் இரு வாரேன்'' என்று வீட்டுக்குச்சென்று பணத்தை எடுத்துவந்து கொடுத்தேன். பையனுடைய படிப்பு விசயம் என்றவுடன் வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. ""ரெண்டு நாளில் தருகிறேன்'' என்று சொல்லிச் சென்றான். அதன் பின் ஒரு மாதத்திற்கு அதைப்பற்றிய ஞாபகமேஇல்லை. எப்பவாவது அசந்து மறந்து வண்டியில் எதிர்படும்போது ஒரு வணக்கம் வைக்கிறதோட சரி. நானும் கேட்கவில்லை. அவனும் அதைப்பற்றி பேசவில்லை. பணம் வந்தவுடன் கொடுத்துவிடுவான் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு பணத்தைப் பற்றி கேட்கவே இல்லை. இரண்டு மாதமாயிடுச்சு. அவனும் தரவில்லை நானும் அதைப்பற்றி கேட்கவில்லை. முருகேசனின் மெக்கானிக் கடைப்பக்கம் பெரும்பாலும் போகவில்லை. அப்படியே போகவேண்டிய வேலை வந்தாலும் அவனைப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தேன். ஏதோ பணமுடையில் இருப்பான் போல கிடைத்ததும் கொடுத்துவிடுவான் அதற்குள் அவனை ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? என்று அவன் முகத்தை பார்ப்பதைத் தவிர்த்தேன். பெரும்பாலும் அவன் கடைக்கு போகாமல் இருந்ததற்கு காரணம் நம்மைப் பார்த்தவுடன் பணத்தை கேட்கத்தான் வந்திருக்கிறானோ என்று நினைத்து அவன் மனது வேதனைப்படக் கூடாது என்பதற்குத்தான்.
 வண்டியில் ஏற்படும் சின்னச் சின்ன வேலைகளைக் கூட தூரமாய் இருந்தாலும் பரவாயில்லை என்று வேறு இடங்களில் பார்த்துக் கொண்டேன். எக்குத்தப்பாய் பார்க்கிற இடங்களில் மனசுக்குள் ஏதோ சஞ்சலம்... இயல்பாய் இருக்க முடியவில்லை. கடன் வாங்கியவர்கள்தானே இப்படியெல்லாம் மனசுக்குள் மறுகித் தவிப்பார்கள். நம்ம விசயத்துல எதிர்மறையாய் இருக்கிறதே. ஒருவேளை அவனும் அப்படித்தான் மறுகித்தவிப்பானோ. பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. எப்பவாவது பேசுற காலத்துல மனசுக்குள்ள அந்த தவிப்பும் சங்கோஜமும் நமக்குத்தான் இருக்குது. அவனைப் பார்த்தால் எப்பவும் போலத்தான் இயல்பாய் எதுவுமே நடக்காதது போல அல்லது கடன் வாங்கியதையே மறந்து விட்டது போலத்தான் பேசுகின்றான். நாலு மாதம் முடிந்துவிட்டது முருகேசன் பணம் வாங்கி. மெதுவாய் பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று மறந்து இருக்க முடியவில்லை. அவனைப் பார்க்கும்போது பணத்தைப்பற்றி பேசாமல் இயல்பாய் அவன் இருப்பதைப் பார்த்தால் மண்டைக்குடைச்சலாய் இருந்தது. வேலை செய்யும் இடத்தில் கூட இந்த நினைப்பே ஓடி இயல்பாய் இருக்க முடியாமல் தடங்கல் செய்தது. போற போக்கைப் பார்த்தால் அவனாகக் கொடுக்கமாட்டான் போல இருந்தது, அவன் நடவடிக்கை. பேச்சுவாக்கில் கூட கடன் வாங்கியதைப்பற்றி அசந்து மறந்துகூட பேசமாட்டேன்றானே. ஒருநாளைக்கு வீட்டுக்கு போய்க் கேட்டுவிடலாம் என்றால் அவன் வீடு இருக்கின்ற இடம் கூடத் தெரியாது. அந்த லட்சணத்துலதான் நம்ம பழக்கம் இருந்திருக்கு. கடன் கேக்குற அவன் வீட்டை தெரிந்து வைத்திருக்கிறான். கடன் கொடுத்தவன் வீடு எங்க இருக்குதுன்னு தெரியாமல் இருக்கிறேன்.
 "பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று உள்மனது தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பணமுடை வேறு சேர்ந்துகொள்ள மனதைத் திடப்படுத்திக் கொண்டு, வீறுகொண்டு கிளம்பிப் போகும் போதுதான் அவ்வளவு எளிதில் முருகேசனைப் பார்க்க முடியவில்லை. போற நேரமெல்லாம் மதுரை கோவில்பட்டி சிவகாசி என்று ஏதாவது ஒரு வெளியூர் போயிருப்பதாய் கடைப்பையன் கூறுவான். செல்போன் பலநேரங்களில் தொலைதொடர்புக்கு அப்பால்தான். இதையெல்லாம் மீறி ஒருநாள் அலுவலகத்தில் வேலை இருப்பதாய் வீட்டில் கூறிவிட்டு மாலையில் முருகேசன் கடையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். கண்டிப்பாய் இன்று கேட்டு வாங்கி விடவேண்டும் என்று மனதில் திடசங்கல்பமெடுத்து காத்திருந்தேன். அன்று சீக்கிரமாகவே வந்து ஆச்சரியப்படுத்தினான். "டீ சாப்பிடுவோமா?' என்று கேட்டபோது சட்டடியாய் மறுத்துவிட்டேன். மனதை உசுப்பேத்தி உசுப்பேத்தி டெம்பராய் இருந்தால்தான் கறாராய்ப் பேசமுடியும். மனதையும் முகத்தையும் கடுமையாய் வைத்துக்கொள்ள நினைத்து தோற்றுக் கொண்டிருந்தேன். பேச்சை ஆரம்பிக்கும் நேரத்தில் பழைய வண்டி விசாரிக்க வந்த ஒருவருடன் பேசுறான் பேசுறான் பேசிக்கிட்டே இருக்கான். அந்த ஆளும் விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். மனுசனுக்கு
 எப்படி எல்லாம் சந்தேகம் வரக்கூடாதோ அப்படிப்பட்ட சந்தேகமெல்லாம் வந்து முத்தாய் உதிர்ந்து கொண்டிருந்தது. முருகேசன் சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். உட்கார்ந்து இருந்த எனக்கு பொறுமை இழந்துவிட்டது. இந்த நேரத்தில் எப்படிக் கேட்பது என்று கிளம்பிவிட்டேன்.
 வகைதொகை இல்லாம மாட்டுற மாதிரி ஒருநாள் முருகேசன் காய்கறிக் கடையில் எக்குத்தப்பாய் மாட்டிக்கொண்டான். மனசை ஒருமாதிரி தயார் செய்துகொண்டு முகம் பார்த்து இயல்பாய்ப் பேசுமுன் கேட்டுவிட்டேன்.
 ""முருகேசா ரொம்ப டைட்டா இருக்குது... பணம் வேணுமே'' கேட்டவுடன் எப்பவும் போன்ற முகமலர்ச்சியுடன், "மதுரைக்கார அண்ணாச்சி ரெண்டுலட்சத்துக்கு செக் கொடுத்திருக்கிறார். பணம் இன்னும் போடவில்லை. ரெண்டு நாளில் கொடுத்துடுறேன்''
 அன்றைக்கு சரியென்று உடனே திரும்பிவிட்டேன். வீட்டுக்கு வந்தபின்தான் யோசித்தேன். இவன் என்னடா லட்சக்கணக்கில் பேசுறான் ஐயாயிரம் கொடுத்து அஞ்சு மாசமாச்சு. உண்மையைத்தான் பேசுறானா இல்லை எல்லோரையும் போல நம்மையும் ஏமாத்துறானா? அன்று முழுவதும் மனக்குழப்பத்திலேயே தூக்கம் வராமல் சஞ்சலப்பட்டதுதான் மிச்சம்.
 ரெண்டு நாள் தவணைக்குப் பதிலாக ஒருவாரம் கழித்து விடக்கூடாது என்று திரும்பத் திரும்ப படையெடுத்து அலுத்துச் சலித்துவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு காரணம். புதிது புதிதாய் சிரித்துக்கொண்டே சொல்ல பதிலுக்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் கடுமையாய் பேச முடியவில்லை. மீண்டும் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடிங்கற கதையாய் தலையை ஆட்டிவிட்டுத் திரும்புவதும் வளமையாகிவிட்டது. தினசரி காலையில் எழுந்ததும் இதே நினைப்பு நிம்மதி இழக்கச் செய்கிறது. காலை எழுந்ததும் இந்த நினைப்பு மண்டைக்குள் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. அதே யோசனையில் மெம்மறந்து பித்துப்
 பிடித்த மாதிரி உட்கார்ந்து நினைவோட்டம் சுற்றி சுற்றி வர நேரம் போவது தெரியாமல் இருந்த இடத்திலேயே இருப்பது தொடர்ந்தது. இயல்பான நடவடிக்கைகள் வேறுபட்டுப் போனது.
 "ஆபிசில் ஏதும் பிரச்னையா, யாராவது ஏதும் சொல்லிட்டாங்களா... பின்னே ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?வர வர உங்க நடவடிக்கையே சரியில்லையே.. இப்ப என்ன குடிமுழுகிப் போச்சுன்னு இப்படி மெகாலு மாதிரி இருக்கீங்க... என்ன கப்பலா கவுந்து போச்சு'' அசிங்கமாக் கனாக் கண்டவன் வெளியே சொல்ல மாட்டாங்குற மாதிரி ஆகிப்போச்சு என்னுடைய நிலைமை. என்னதான் இல்லையென்று சொன்னாலும் முகம் காட்டிக் கொடுத்து விடுகிறதே, மறைக்க முடியாமல் அல்லது மறைக்கத் தெரியாமல்.
 வெறும் ஐயாயிரம்தானே? இதற்கு போய் மனதை இப்படி அலட்டிக்குவானேன் என்று உள்மனது சொன்னாலும் அதன் குரல் மேலெழும்ப விடாமல் அமுங்கிப்போய் விடுகிறது. இவனிடம் எப்படித்தான் வாங்குவது மனம் ஒரு போராட்டமே நடத்திக் கொண்டு இருந்தது.
 மணி ஏழே முக்கால். ""டேய் தம்பி இதப் பஞ்சர் பாருடா...
 ""போங்க சார்! இத எத்தனை தடவைதான் பாக்குறது. வழு வழுன்னு டயர வச்சிக்கிட்டு வேற மாத்தச் சொன்னா மாத்துறீங்களா?'' சடைச்சுப் புளிச்சு பதில் கூறிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு ஐடியா... இப்படியும் செய்யலாமே.
 "என்ன சார் கிளம்பிட்டீங்க?''
 ""முருகேசன் வந்தா நான் வந்துட்டுப் போனேன்னு சொல்லு''
 "என்னப்பா வேலைக்குப் போகலியா?'' முருகேசன் ஆச்சரியமாய்க் கேட்டான்.
 "ஒரு சின்ன வேலை இருந்துச்சு... அதோட வண்டிக்கு டயர் டியூப் மாத்திடலாமுன்னு இருந்துட்டேன்''
 "இது இன்னும் ஆறுமாசத்துக்கு ஓடும்ப்பா... அதுக்குள்ள ஏன் மாத்தணுங்குறே?''
 "அடிக்கடி பஞ்சர் ஆகுதுப்பா... இருக்கட்டும் நீ மாத்தி விட்டுரு''
 "எந்த கம்பெனி டயர் வாங்க?''
 "நல்ல டயர் டியூபாய் வாங்கு. ரேட் கூட இருந்தாலும் பரவாயில்லை''
 என்ன நினைத்தானோ மளமளவென வேலை நடந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டான். புதிய டயர் மாட்டியவுடன் வண்டி கொஞ்சம் பார்வையாய் இருப்பது போல் தோன்றியது. வண்டியை ஸ்டார்ட் செய்தேன். முருகேசன் ஒரு சீட்டை நீட்டினான். மொத்தம் நாலாயிரத்து முன்னூறு. "ஐயாயிரத்தில இத கழிச்சுக்க மிச்சத்தை அப்புறம் பாத்துக்கலாம்''
 முருகேசனால் ஒன்றும் பேச முடியவில்லை. எதுவும் பேச முடியாமல் நின்றான்.
 "வர்றேன் முருகேசா''
 வண்டியை கிளப்பி ரோட்டில் வேகமாய் ஓடவிட்டேன். அந்த வெயிலிலும் காற்று சில்லென்று முகத்தில் பட்டது. மனமும் உடலும் லேசாகி காற்றில் பறப்பதுபோல் இருந்தது.
 
 மறுநாள் காலையில் எழுந்தபோது மீண்டும் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டு இருந்தது.
 "கேவலம் பணத்துக்கு மதிப்புக் கொடுத்து நண்பனை இப்படிச் செஞ்சிட்டியே' என்று மனம் இடித்துரைத்தது. அவன் என்ன சூழ்நிலையில் இருந்தானோ? அந்தப் பணத்துக்கு அவன் எப்படி சிரமப்பட்டானோ? இப்போது மனம் மீண்டும் வேறு கோணத்தில் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.
 கா.சி.தமிழ்க்குமரன்
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com