திரைக் கதிர்

"டிக் டிக் டிக்' படத்தின் மூலம் தனது 100-ஆவது படத்தை நிறைவு செய்திருக்கிறார் டி.இமான். இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் "டிக் டிக் டிக்'.
திரைக் கதிர்

* "டிக் டிக் டிக்' படத்தின் மூலம் தனது 100-ஆவது படத்தை நிறைவு செய்திருக்கிறார் டி.இமான். இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் "டிக் டிக் டிக்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது. ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டி.இமான் பேசும் போது... "பொதுவாக கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள படங்களுக்கு பின்னணி இசை அமைக்கும் போது ஏராளமான மாற்றங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் வருவதற்கு முன்னரே இயக்குநர் ஒவ்வொரு காட்சியின் நீளம் குறித்தும், அதில் இடம்பெறும் விஷயங்கள் குறித்தும் விவரித்ததால் பின்னணி இசையை விரைவாக முடிக்க முடிந்தது. அதேபோல் என்னுடைய இசைப் பயணத்தில் இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

• தீவிர அரசியலுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்த், தனது கொள்கைளை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒரு படத்தில் நடிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 
இதுகுறித்து விசாரித்தபோது.... "ஷங்கர் இயக்கத்தில் "2.0' படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கியுள்ளா "காலா' திரைப்படப் பணிகளும் நிறைவு பெற உள்ளன. இந்நிலையில் தற்போதைய அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து அடுத்து நடிக்க உள்ள படம், அரசியல் பின்னணி படமாக அமைந்தால் மக்களை நெருங்குவதற்கு மேலும் உதவியாக இருக்கும் என்பது அவரது கணிப்பு. ஆகவே, "2.0', "காலா' படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக நடிக்கும் படம் அரசியல் பின்னணி களமாக இருக்கட்டும் என்ற முடிவில் இருக்கிறார். அதோடு இயக்குநர்கள் ஷங்கர், பா.இரஞ்சித் இருவரிடம் அதற்கு தகுந்தமாதிரி கதை இருக்கிறதா என்பதையும் அவர் கேட்டிருக்கிறார். விரைவில் சரியான அறிவிப்பு இருக்கும்'' என்கின்றனர் ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள். 

• 'துருவ நட்சத்திரம்', "சாமி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ராஜேஷ் எம்.செல்வாவின் கதையை விக்ரம் ஏற்றுக் கொண்டுள்ளார். கமலிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ் எம்.செல்வா. "விஸ்வரூபம்' மற்றும் "உத்தமவில்லன்' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமன்றி, "தூங்காவனம்' படத்தையும் இயக்கியுள்ளார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதி என்றும், கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் குறித்து ராஜேஷ் எம்.செல்வா மறுத்து கருத்து எதுவும் தெரிவிக்காததால், இச்செய்தி உண்மை என்றே கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 

• 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து "மகளிர் மட்டும்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார் மாதவன். தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தாலும், எதிலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார். நிறைவான கதைகளுக்காக காத்திருந்த நிலையில் இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்போது அந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை இயக்குநர் சற்குணத்தின் தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமன்றி, இணை தயாரிப்பாளராகவும் சற்குணம் பொறுப்பேற்கிறார். இப்படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. தாய்லாந்து, மங்கோலியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் "ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2' மற்றும் "ட்ராகுலா அண்டோல்டு' படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் ரசிக்கும் விதமாகவும் காட்சிகள் அமைக்கப்படவுள்ளன. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 

* 'மெர்சல்' படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்துக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று செய்திகள் பரவி வந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் இதை மறுத்துள்ளார். "இது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை'' என்று தெரித்துள்ளார். இதனால் விஜய் ஜோடியாக நடிப்பது யார் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் தேர்வும் நடந்து வரும் நிலையில், படத்துக்கான இசையமைப்பாளர் யார் என்பது குறித்தும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அனிருத் இசையமைப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், ஏ. ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 வருட இடைவெளிக்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைகிறது. 
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com