வீழ்வேன் என்று நினைத்தாயோ? - 5: ராஜரத்தினத்தின் ராஜதந்திரம்!

உள்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, ராணுவம் ஆகிய பொறுப்புகளை முனைவர் கோ கெங் ஸ்வீ ஏற்றுக் கொண்டார். அவர் அதற்கு முன்
வீழ்வேன் என்று நினைத்தாயோ? - 5: ராஜரத்தினத்தின் ராஜதந்திரம்!

உள்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, ராணுவம் ஆகிய பொறுப்புகளை முனைவர் கோ கெங் ஸ்வீ ஏற்றுக் கொண்டார். அவர் அதற்கு முன் ராணுவத்தில் பணி புரிந்தவர் அல்ல. காவல்துறையில் கூட பணியாற்றியவரல்ல. அவர் பொருளாதார நிபுணர். லண்டனில் உள்ள "ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' என்ற சர்வதேசப் புகழ் பெற்ற கல்வி நிலையத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர். படிக்கும் போதே அங்கு அளிக்கப்படும் மிக உயர்ந்த பரிசான "வில்லியம் ஃபார்' பரிசையும் பெற்றிருந்தார். அவர் கேட்டு வாங்கிக் கொண்ட துறை இது.

ஒரு நாட்டின் பாதுகாப்பை துப்பாக்கிகள் மட்டும் தீர்மானித்துவிட முடியாது. இன்னும் சொல்லப் போனால் துப்பாக்கிக்கு வேலை  கொடுக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியுமானால் அதை விடச் சிறந்தது வேறெதுவும் இல்லை. அதுவும் சிங்கப்பூருக்கு அதுதான் சிறந்த வழி. ஏனெனில் அதன் ராணுவம் சிறியது.
பாதுகாப்புக்குப் பெரும்பாலும் அச்சுறுத்தல் அண்டை வீட்டிலிருந்துதான் வரும். ஒரு சர்வதேச மாநாட்டில் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர்,  அங்கிருந்த மீடியா சென்டரில் எங்களோடு வந்து அமர்ந்து கொண்டார். எங்களோடு என்று சொல்லக் காரணம் என்னோடு இன்னொருவரும் இருந்தார். அவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர்.

""இங்கே பாருங்க நீங்க இரண்டு பேரும் எதிரிகளாக இருக்கலாம்'' என்று ஆரம்பித்தார்.  எங்களுக்கோ சிரிப்பு . ஏனெனில் நாங்கள் இருவரும் சண்டை எதுவும் போட்டுக் கொள்ளவில்லை. நேற்றைய நிகழ்வின் குறிப்புகளை பாகிஸ்தானியர் என்னிடம் வாங்கிக் கொண்டு போய்தான் அவர் அலுவலகத்திற்கு செய்தி அனுப்பினார். அதன் பின் மீடியா சென்டரில் ஆளுக்கொரு காபியை எடுத்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். "சரி, பெரியண்ணன் பேசட்டும், என்னதான் பேசுகிறார்' என்று பார்ப்போம் என்று புன்னகையை ஒளித்துக் கொண்டு காதுகளைத் திறந்தோம்.

""இங்க பாருங்க, நீங்க இரண்டு பேரும் எதிரியாக இருக்கலாம். ஆனால் புவியல் ரீதியில் பக்கத்து வீட்டுக்காரர்கள். வரலாற்றின் வழி தோழர்கள். பொருளாதாரத்தில் பங்குதாரர்கள். தலையெழுத்தோ அல்லது அதிர்ஷ்டமோ, தோழர்களாகவும், சிநேகிதர்களாகவும், ஏன் குடும்பமாகவும் கூட நேசம் பாராட்ட வேண்டும். ஏனெனில் உங்கள் இருவருக்கும் தலையெழுத்து பொதுவானது''  என்றார்  அவர். ""போய்யா, சண்டை கிண்டை போடாம, போய்ப் பிள்ளைங்களைப் படிக்க வை'' என்ற தொனியில் இருந்தது அவர் பேச்சு. ""அப்படீங்களாண்ணா, சரி அப்படியே செய்துருவோம்'' என்று நானும் நண்பரும் மறுபடியும் கை குலுக்கிக் கொண்டு கிளம்பி விட்டோம்.

ஆனால் அவர் சொன்னதில் அர்த்தம் இருந்தது. அண்டை வீட்டாரோடு ஒட்டுறவு இல்லை என்றால் தலைவலிதான். அது பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாளப்பட வேண்டிய விஷயம். அது வேறெவரையும் விட லீக்கு நன்றாகத் தெரியும். அதனால் அயலுறவுத் துறையை நிர்வகிக்கத் தமிழரான ராஜரத்தினத்தைத் தேர்ந்தெடுத்தார். ராஜரத்தினம் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலை சிங்கப்பூரை ஒரு தனி நாடாக உலகம் ஏற்கச் செய்வது. குடியரசாக அறிவிக்கப்பட்ட இரண்டாம் நாள்  ஆகஸ்ட் 11}ஆம் தேதி அவர் இங்கிலாந்திற்குப் புறப்பட்டார். சிங்கப்பூர் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனி. அவர்களது படைகள் சிங்கப்பூரில் இருந்தன.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூரும் பிரிவதை அரசியல் காரணங்களுக்காக பிரிட்டன் விரும்பவில்லை. கடைசி நிமிடத்தில் கூட தனது தூதரை அனுப்பி பிரிவினையை நிறுத்தப் பார்த்தது. அதனால் அதை முதலில் "கன்வின்ஸ்' செய்ய வேண்டும். 

அதில் சில சாதகங்களும் இருந்தன. பிரிட்டன் அங்கீகரித்து விட்டால் பல காமென்வெல்த் நாடுகள் அங்கீகரித்து விடும். முக்கியமாக ஆஸ்திரேலியா. அது சற்றுத் தொலைவில் உள்ள அண்டை நாடு. பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் அங்கீகரித்து விட்டால் அமெரிக்காவும் அங்கீகரித்துவிடும். பொருளாதாரத்தை வலுப்படுத்த அது மிகவும் அவசியம்.

ராஜரத்தினத்தின் அணுகுமுறை பலன் தந்தது. பிரிட்டன் சிங்கப்பூரைத் தனி இறையாண்மை கொண்ட குடியரசாக அங்கீகரித்தது.  அது பல கதவுகளைத் திறந்தன. குடியரசான மூன்று மாதங்களில் சிங்கப்பூர் காமென்வெல்த்தில் இணைந்தது. அதற்கு ஒரு மாதம் முன் ஐக்கிய நாடுகள் சபையில்.
 அப்போது உலகம் இரு கோளங்களாகப் பிளவுண்டு கிடந்தது. கம்யூனிசத்தை ஏற்காத அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான "நாட்டோ' (வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்) ஒரு புறம். சோவியத்தின் தலைமையில் கம்யூனிசக் கொள்கைகளை ஏற்ற கிழக்கு, மத்திய, ஐரோப்பிய நாடுகளை கொண்ட "வார்சா' ஒப்பந்த நாடுகள் மறுபுறம்.

யாரோடு சேர்ந்து கொண்டாலும் ராணுவ உதவியும் பொருளாதார உதவியும் கிடைக்கும். ஆனால் வேறு சில நிர்பந்தங்களில் சிக்கிக் கொள்ள நேரிடும். எந்தப் பக்கம் சாய்ந்தாலும் அது தங்களது சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் என ராஜரத்தினம் நினைத்தார்.

அதனால் சிங்கப்பூர் ஐம்பெரும் தலைவர்கள் (யுகோஸ்லோவியாவின் டிட்டோ, இந்தியாவின் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ, கானாவின் நெக்ரூமா) உருவாக்கிய அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பில் சேர முடிவு செய்தது. அன்றைய நாளில் அது வல்லரசுகள் எதிர்பார்க்காத ஓர் ஆச்சரியம். ஏனெனில் சுகர்ணோ சிங்கப்பூருக்குத் தலைவலி கொடுத்து வந்தவர். டிட்டோ கம்யூனிஸ்ட்.  ஏன் ஐம்பெரும் தலைவர்களுமே இடதுசாரிச் சிந்தனையாளர்கள். சிங்கப்பூர் கம்யூனிசத்தை எதிர்க்கும் நாடு!

இதுதான் சிங்கப்பூரின் அடிப்படையான அணுகுமுறை. நாட்டுக்கு எது நல்லதோ அதுதான் நம் கொள்கை. புத்தகங்களில் உள்ள தத்துவங்கள் அல்ல.
ராஜரத்தினம் இதைக் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கினார்:  இரண்டு வகையான அணுகுமுறைகள் உள்ளன. கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த அயலுறவு (Foreign policy of principles) என்பது ஒன்று. செயல்களின் அடிப்படையில் அமைந்த அயலுறவு என்பது ஒன்று (Foreign policy of deeds) மற்ற நாடுகளுடனான தனது உறவைச் சில கொள்கைகள் சார்ந்து அமைத்துக் கொள்ள ஒரு நாடு விரும்பலாம். ஆனால் நடைமுறையில் அது செயல்கள், நடத்தைகள் சார்ந்தே செயல்பட முடியும் என்பதே யதார்த்தம் என்பது அவர் வாதம்.

யதார்த்தங்களின் அடிப்படையில் கொள்கைகளை மதிப்பிட பயன்படுத்திக் கொள்கிற இந்த அணுகுமுறை நடைமுறைவாதம் (Pragmatism)
 ஒரு காலத்தில் இந்தியா தனது அயலுறவுக் கொள்கைகளில் Foreign policy of principles என்ற அணுகுமுறையைப் பின்பற்றியது. பாலஸ்தீனப் போராட்டங்களின் அடிப்படையில் நாம் இஸ்ரேலைப் புறக்கணித்தது ஒரு காலம். அண்மைக் காலமாக நாமும் இந்த நடைமுறைவாதத்திற்கு மாறியிருக்கிறோம். இஸ்ரேல் பிரதமருக்கு நாம் அளித்த வரவேற்பு ஓர் அடையாளம்.

வல்லரசுகளைக் கையாள்வதை விட அண்டை நாட்டாரைக் கையாள்வதற்கு அதிக சாமர்த்தியமும் மதிநுட்பமும் வேண்டும். இந்தியாவிற்குப் பாகிஸ்தானைப் போல சிங்கப்பூருக்கு மலேசியா. தனிக் குடியரசாக மலர்ந்து விட்ட போதிலும் வேர்களில் சில அங்கு பரவிக் கிடந்தன. பல சிங்கப்பூரர்களின் உறவுகள் அங்கே வசித்தார்கள். வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன. இரு தரப்பு இலக்கியமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் சாயல் கொண்டிருந்தன. சிங்கப்பூரில் மலாய் மொழியினர் சிறுபான்மை. மலேசியாவில் சீன மொழியினர் சிறுபான்மை. சிறு உரசலும் தீப்பொறியாகும் தீப்பெட்டிச் சூழல்.

1969-இல் நடைபெற்ற மலேசியத் தேர்தல்களையொட்டிய பிரசாரத்தின் போது கோலாலம்பூரில் கலவரம் வெடித்தது. அதன் விளைவாக சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பதற்றம் பரவியது. அதனை அடுத்து இரு நாடுகளிலும் கலவரம் மூண்டது. இரு நாட்டரசுகளும் விழிப்போடு செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. ஆனால் அது ஒரு செய்தியைச் சிங்கப்பூருக்குச் சொல்லாமல் சொல்லியது. அது: சிங்கப்பூர் மலேசிய உறவை வெறும் அயலக உறவுக் கொள்கை அடிப்படையில் கையாள முடியாது. அதற்கு தனித்த அணுகுமுறை வேண்டும்.

மலேசியாவைப் பொருத்தவரை அயலக உறவுக் கொள்கையோடு, ஒரு தேசியக் கொள்கையும் வேண்டும் என ராஜரத்தினம் கருதினார்.

சிங்கப்பூர் இந்தச் சூழ்நிலையைக் கெட்டிக்காரத்தனமாகக் கையாண்டது. மலாய் மொழி தேசிய மொழியாகத் தொடரும் என அறிவித்தது. சிங்கப்பூரின் தேசிய கீதமாக மலாய் மொழியில் அமைந்த பாடலை ஏற்றது. யூசஃப் பின் இஷாக் என்ற இஸ்லாமியரை அரசின் தலைவராக (ஜனாதிபதியைப் போல அலங்காரப் பதவி, Head of the State) அறிவித்தது. அதே சமயம் இரு நாட்டிற்கும் பொதுவாக இருந்த விமான நிறுவனம், பங்குச் சந்தை, ரப்பர், வங்கி வணிக அமைப்புக்கள் இவற்றிலிருந்து விலகித் தனக்கெனத் தனி அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டது.

இந்தோனேசிய உறவை "விலை கொடுத்து' வாங்கியது. இந்தோனேசிய வர்த்தகர்களுக்கு 15 கோடி டாலர்கள் கடனுதவி செய்தது. ஆனால் உறவுகள் மேம்பட்டு வருகிற நேரம் சறுக்கல்களும் நேர்ந்தன. 1964-இல் நடந்த குண்டு வெடிப்பை நிகழ்த்திய இரு இந்தோனேசிய படைவீரர்களுக்கு 1968-ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை அடுத்து இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் இருந்த சிங்கப்பூர் தூதரகமும், தூதர் வீடும் தாக்குதலுக்குள்ளானது. பின்னர், 1973-இல், லீ குவான் யூ  இந்தோனேசியா சென்ற போது அந்த வீரர்களது கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் வரை இரு தரப்பிலும் இறுக்கம் இருந்தது.

சிங்கப்பூரை ஆயுத்தத்தால் பாதுக்காத்தவர்களுக்கு சற்றும் குறைவில்லாதது அறிவால் பாதுகாத்த ராஜரத்தினத்தின் பணி. ஆனால்  பின்னர் வந்த தலைமுறை அவரது பெயரால் அமைந்த S.Rajaratnam School of International Studies என்ற உயர்கல்வி நிலையத்தை RSIS என்று சுருக்கிவிட்டார்கள்.
ரத்தினச் சுருக்கம்!         
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com