பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தமிழகம்!

"பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தமிழகம்' என்று கற்பனை செய்து பார்த்தாலே சும்மா மகிழ்ச்சி.. சந்தோஷம் கிர்ரென்று ஏறும். பிளாஸ்டிக் பயன்பாடு
பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தமிழகம்!

"பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தமிழகம்' என்று கற்பனை செய்து பார்த்தாலே சும்மா மகிழ்ச்சி.. சந்தோஷம் கிர்ரென்று ஏறும். பிளாஸ்டிக் பயன்பாடு அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக மாறி, நிலம், காற்றில் நஞ்சாக கலந்துவிட்டுள்ளது. ஏரி, குளம், வாய்க்கால், கடல் என்று எதையுமே பிளாஸ்டிக் விட்டுவைக்கவில்லை. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணோடு மண்ணாக மக்குவதற்கு ஆயிரம் வருடங்கள் தேவைப்படும். சரி.. எரித்து இல்லாமல் ஆக்குவோம் என்று தீயிட்டால், கிளம்பும் புகையைச் சுவாசிக்க நேரிடும் . அதனால் புற்று நோய் ஏற்படும் அபாயம் உண்டு. இந்த சூழ்நிலையில் "பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தமிழகம் சாத்தியம்தான். அதை விரைவில் நிகழ்த்திக் காட்டுவேன்' என்கிறார் கரூர் பள்ளபட்டியைச் சேர்ந்த காஜா மொய்னுதீன். இவர் வடிவமைத்திருக்கும் ஆலையில் பைரோ ஆயில் தயாரிக்கப்படுகிறது, அதற்குத் தேவையான மூலப் பொருள் பிளாஸ்டிக் கழிவுகள்தாம்.
பைரோ ஆயில் என்றால் என்ன... அதன் தயாரிப்பில் பிளாஸ்டிக் கழிவுகள் எப்படி சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாமல் மாயமாய் மறைகின்றன... என்பதை குறித்து காஜா மொய்னுதீன் விளக்குகிறார்:

"பிளாஸ்டிக் கழிவுகள் இரண்டு வகைப்படும். மறுசுழற்சிக்கு ஏற்றது முதல் வகை. மறுசுழற்சி செய்யப்படாத பிளாஸ்டிக்குகள் இரண்டாவது வகை. என்னால் இந்த இரண்டு ரக பிளாஸ்டிக்குகளுக்கும் ஒரு தீர்வை வழங்க முடியும். பிளாஸ்டிக் கழிவுகளை இல்லாமல் செய்ய முடியும். ஆனால் நான் முக்கியத்துவம் தருவது மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்குகளுக்குத்தான். 
எனக்கு பழைய இரும்பு பிளாஸ்டிக் சாமான்களை வாங்கும் தொழில். கூடவே சின்னச் சின்ன கண்டுபிடிப்புகளையும் உருவாக்குவது பொழுது போக்கு. செவிகளை சுத்தம் செய்யும் "இயர் பட்ஸ்' தயாரிக்கும் நிறுவனம் சென்னையில் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் விற்க அனுப்ப இயலாத தரக்கட்டுப்பாட்டில் விலக்கப்பட்ட "இயர் பட்ஸ்'ஸுகள் மலை போல குவிக்கப் பட்டிருந்தது. அதை எப்படி அழிப்பது என்று அந்த நிறுவனம் திணறிப்போயிருந்தது. என் ஆலையில் அவற்றைப் போட்டு உருக்கி இல்லாமல் செய்தேன். இப்படித்தான் எனது பைரோ பயணம் தொடங்கியது . 
உணவு விடுதிகள் அல்லது கல்யாண மண்டபங்களிலிருந்து வரும் கழிவுகளில் பிளாஸ்டிக் பைகள், விரிப்புகள், பாட்டில்கள், இலைகள், சாப்பிடாமல் ஒதுக்கிய உணவுப் பொருள்கள், எலும்புத் துண்டுகள் எல்லாம் கலந்திருக்கும். பைரோ ஆயில் தயாரிக்க இவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற தேவை இல்லை. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே போட்டு எரிப்பதில்லை. எல்லா கழிவுகளையும் காற்று புகாத இரும்பு அறைக்குள் போட்டு முன்னூறு டிகிரி உயர் வெப்பத்தில் உருக்கப்படுகிறது. புகை வெளியே வராததால் சுற்றுப்புறச் சூழலில் மாசுகள் படிவதில்லை. முன்னூறு டிகிரி வெப்பத்தில், ஆக்சிஜன் இல்லாத அறையில் உருகும் போது பிளாஸ்டிக்கின் மூலக்கூறுகள் சிதைந்து போகிறது. அப்போது அவற்றிலிருந்து ஆவி வெளியேறும். அந்த ஆவி குழாய் வழியாக வெளியே கொண்டு வரப்பட்டு அந்த ஆவியை குளிர்விக்கும் போது அது பைரோ ஆயிலாக மாறுகிறது. எரி அறையில் மிச்சம் உள்ள கழிவு கரிக்கட்டையாகிவிடும். அது சாதாரண கரிக்கட்டையைவிட எரிதிறன் அதிகமானது. அதையும் சிமெண்ட் ஆலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். எந்தத் தயாரிப்பிலும் ஏதாவது கழிவு ஏதாவது ஒரு வடிவில் உண்டாகும். ஆனால், பைரோ ஆயில் தயாரிப்பில், கழிவுகள் என்பதே இல்லை. நான் இந்த ஆலையை இயக்க Stir Engine ஒன்றை வடிவமைத்திருக்கிறேன். அது வெப்பத்தால் இயங்குவது. இதை பயன்படுத்தினால் பைரோ ஆயிலில் உற்பத்தி செலவு பலமடங்கு குறையும்
பைரோ ஆயில் தயாரிக்கும் ஆலையை நானே வடிவமைத்து உருவாக்கினேன். பைரோ ஆயிலை மறுசுழற்சி செய்யும் தரமுள்ள பிளாஸ்டிக்குகளிலிருந்து தயாரிக்கலாம். அந்த முறையை மாற்றி, சுற்றுப்புற சூழலுக்கு எமனாக மாறியிருக்கும் மறுசுழற்சி செய்யப்பட முடியாத பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பைரோ ஆயில் தயாரிக்கிறேன். இந்த ஆயில் டீசலைவிட தரமானது. விலையும் குறைந்தது. இந்த ஆயிலை, தெரிந்தவர்களின் நான்கு, மூன்று, இரண்டு சக்கர வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தோம். வெளிவரும் புகையில் உள்ள மாசுகளின் அளவு டீசல் புகையிலிருந்து வரும் அளவைவிட குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக வாகனங்கள் வெளியேற்றும் புகையில் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் கந்தகம் உள்ளது. கந்தகம் எந்த உருவத்திலும் பயோ ஆயில் உபயோகிப்பதால் வெளியேற்றப்படும் புகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இதை திருச்சி தேசிய தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் சோதனை செய்து டீசலை விட பைரோ ஆயில் தரமானது என்று உறுதிப்படுத்தியுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் பயோ ஆயிலைத் தயாரித்துக் காட்ட உள்ளேன். இந்த எண்ணெய்க்கும் ஒரு வாசம் உண்டு. பாச்சா உருண்டை எனப்படும் நாப்தலின் உருண்டையின் வாசம் இருக்கும். ஆனால் எரிபொருளாக பயன்படுத்தும் போது எந்த வாசனையும் வராது . ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எழுநூறு மில்லி ஆயில் கிடைக்கும் 
"இப்போதைய விதிமுறைகளின்படி, வாகனங்களுக்குப் பயன்படுத்த வேண்டுமென்றால் பெட்ரோல், டீசல் விநியோகிக்கும் நிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்யவேண்டும். ஆனால், மின் உற்பத்தி செய்யும் சிறிய ஆலைகள், தொழிற்சாலைகளில் உள்ள ஜெனரேட்டர்களை பைரோ ஆயில் மூலம் இயக்கி மின்சாரம் பெறலாம். 
ஒரு முறை பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி பைரோ ஆயில் தயாரிக்க எட்டு மணி நேரம் தேவைப்படும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். பிளாஸ்டிக் கழிவுகளுக்காக கரூர் நகரசபையையும் அணுக உள்ளோம். தமிழ்நாடு அரசின் ஆதரவு கிடைத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலைகள் அமைத்து, உலகிலேயே பிளாஸ்டிக் கழிவுகள் எந்த உருவிலும் இல்லாத முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றலாம்'' என்கிறார் காஜா மொய்னுதீன். 
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com