கண்ணை மூடிக்கொண்டு எழுதும் தமிழறிஞர்!

தொன்னூறு வயதை கடந்துவிட்ட போதிலும் இருபது வயது இளைஞருக்கு உரிய உற்சாகத்தோடு எழுதிக்கொண்டிருக்கிறார் இளங்குமரனார்.
கண்ணை மூடிக்கொண்டு எழுதும் தமிழறிஞர்!

தொன்னூறு வயதை கடந்துவிட்ட போதிலும் இருபது வயது இளைஞருக்கு உரிய உற்சாகத்தோடு எழுதிக்கொண்டிருக்கிறார் இளங்குமரனார். மதுரை திருநகர் குமரன் தெருவில் மகனோடு வசிக்கும் தமிழறிஞர் இளங்குமரனாரைத் தெரியாத தமிழறிஞர்களோ, இலக்கியவாதிகளோ இருக்க முடியாது. தமிழுக்கான ஆளுமைகளில் இளங்குமரனாரும் ஒருவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், அவருக்கென்று யாரும் அறியாத ஒரு தனித்தன்மை இருக்கிறது. தமிழாக வாழ்ந்த திரு.வி.க.வுக்கு பிறகு இருட்டிலும் எந்த தடுமாற்றமும் இன்றி தமிழ் இலக்கியத்தை எழுதும் தனி ஆற்றல் பெற்றவராக இளங்குமரனார் இருக்கிறார் என்பது வியப்புக்குரியதாக உள்ளது. கண்ணாடி இல்லாமலேயே எழுதும் உடல்நலம் பெற்ற இளங்குமரனார் கண்ணை மூடிக்கொண்டும் எந்தவித வளைவுமின்றி கோடிட்டதுபோல நேராக சொற்றொடர்களை எழுதுவதைப் பார்க்கும் போது அடடா... என்று நம்மை அறியாமலேயே அவரை பாராட்டத் தோன்றும். அவரது தமிழ் இலக்கிய பயணம், தமிழின் மீதான தாளாத பற்று ஆகியவற்றுடன் இருட்டில் எழுதும் தனித்தன்மை குறித்த ஒரு கலந்துரையாடல் இதோ:
 எப்படி இருட்டிலும் எழுதும் பழக்கம் உங்களுக்கு ஏற்பட்டது?
 எனது இருபத்து ஒன்பதாவது வயதில் கண் அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆறுமுறை கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நான் தொடர்ந்து எழுதிவருகிறேன். அதற்கு காரணம் பார்வை போனால் எழுத முடியாமல் போய்விடுமோ எனும் பயத்தில் பார்க்காமலே எழுதும் பயிற்சியை மேற்கொண்டேன். இதற்கு எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர் திரு.வி.க.அவர்கள்தான். அவர் தனது வயதுக்கு ஏற்ப நூல்களை எழுதி வெளியிட்டார். பார்வையற்ற நிலையில் "இருளில் ஒளி' என்ற நூலை எழுதினார். வயதானதும் "முதுமை உளறல்' எனும் நூலை எழுதினார். பின்னர் "படுக்கையில் பிதற்றல்' என நடக்கமுடியாத நிலையில் நூல் எழுதினார். இப்படி வாழ்க்கையை நூலாக எழுதிய அவரது வழியில்தான் நானும் இருட்டுக்குள்ளும் எழுதும் ஆற்றலை பயிற்சி மூலம் பெற்றேன்.
 பார்வையின்றியே நீங்கள் ஏதேனும் இலக்கிய நூலை எழுதியிருக்கிறீர்களா?
 ஆம். தமிழ் இலக்கியத்தில் குண்டலகேசிக்கு 16 பாடல்களே கிடைத்திருந்தன. அதன் முழுக்கதையும் நீலகேசியில்தான் வருகிறது. ஆகவே 1127 குண்டலகேசிக்கான பாடல்களையும் இருட்டிலேதான் எழுதினேன். இரவில் முழுமையாக எழுதி வெளியிடப்பட்ட எனது நூல் குண்டலகேசியாகும். முழுமையான உரையுடன் குண்டலகேசியை சிங்கப்பூர் தமிழன்பர் கோவலன்கண்ணன் வெளியிட்டார்.
 மொத்தம் 100 பக்கங்கள் கொண்ட அந்த நூலை 4 நாள்களில் எழுதி முடித்தேன் என்பதை நம்பமுடிகிறதா? அதுதான் உண்மையும் கூட.
 தற்போதும் காலை 6 மணிக்கு ஆரம்பித்து சாப்பிடும் நேரம் போக மாலை 5 மணி வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுத்தே எனது சுவாசம் போலாகிவிட்டது.
 நேரங்காலம் பாராமல் அப்படி என்னதான் எழுதுவீர்கள்?
 தமிழில் எழுதுவதற்கா பஞ்சம்? இலக்கியம் எழுதுவேன். திருக்குறள், இலக்கணம் என அனைத்துக்கும் புதிய உரைகள் விளக்கங்களை எழுதுகிறேன். வாழ்க்கையின் முழு அனுபவமே தமிழ் இலக்கியங்களாக மலர்ந்திருக்கின்றன. ஒரு பறவையைப் பார்த்தால் அது பறக்கும் விதத்தை வைத்து "பறவைபோல பறக்கிறான்... பண்பை மட்டும் மனிதன் மறக்கிறான்' என கவிதை எழுதமுடியும். அந்த அளவுக்கு தமிழ் இலக்கியம் என்னைப் பண்படுத்தியுள்ளது.
 உங்களின் தமிழ் இலக்கியப் பங்களிப்பாக எத்தனை நூல்கள் வெளிவந்துள்ளன?
 இதுவரை 550 நூல்களை எழுதியுள்ளேன். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நூலாகாமலேயே உள்ளன. தமிழால் கிடைக்கும் வருவாயை தமிழுக்காகவே செலவிட்டு வருகிறேன். கனடா நாட்டு தமிழ் இலக்கிய அமைப்பினர் எனக்கு விருது வழங்கி ரூ.50 ஆயிரம் பரிசளித்தனர். அதற்கு தொல்காப்பிய விரிவுரையை எழுதியுள்ளேன். செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் பத்து தொகுதிகள் வெளியிட்டுள்ளேன். இதற்கான உதவியை குவைத் பொங்கு தமிழ் மன்றத்தினர் செய்தனர். ஒரு தொகுதிக்கு ஒரு லட்ச ரூபாய் என அவர்கள் தந்ததில் எழுதுவதற்கு என தந்த ரூ.1 லட்சத்தை வைத்து "பன்மணிக்குவியல்' என தனி நூல் எழுதியுள்ளேன்.
 தமிழின் 473 புலவர்களின் ஊர், வரலாற்றைத் தொகுத்து நூல் வெளியிட்டுள்ளேன். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பயிலும் வகையில் எனது நூல்கள் எளிமையாக தமிழை வலிமையாக மனதில் இருத்தும் வகையில் இருக்கிறது என்பதே உண்மை.
 எழுதியவற்றில் மிகவும் பிடித்த நூல் எது?
 பெற்ற குழந்தையில் எந்தக் குழந்தை சிறந்தது? என்று கேட்டால் எப்படி? சிறந்தவற்றை மட்டுமே எழுதுவேன். பிடிக்காத கருத்தை நூலாக்கமாட்டேன். ஆனாலும், மேலிருந்தும் மேலான என்ற குறளுக்கு மட்டும் 80 பாடல்களை எழுதி விளக்கியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த 1963 ஆம் ஆண்டு எனது திருக்குறள் கட்டுரை தொகுப்பை மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் வைத்து வெளியிட்டார். மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இதுவரை சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை 64நூல்களை எழுதியுள்ளேன். அதேபோல சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு எனும் நூலை மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்டார். கோவிலூர் மடாலயம் சார்பில் வெளியான அந்த நூலை கலாம் விமர்சித்தும், பாராட்டியும் பேசினார். எனது "ஆதிரைஆபுத்திரன் கதை' சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 தற்கால இளந்தலைமுறை தமிழாசிரியர்கள் இலக்கணம், இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை இன்றி இருக்கிறார்கள் என்ற கருத்து குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
 பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள் வரை தமிழைச் சரியாக கற்பிப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை. தடுக்கி விழுந்தால் "அம்மா' என நாம் அழைத்தோம். ஆனால், நமது குழந்தைகளோ தடுக்கினாலே "மம்மி...' என கூச்சலிடுகிறது. தமிழ் மொழி பற்று என்பதெல்லாம் அரசியல் சார்ந்த சில அமைப்புகளுக்கு சொந்தம் போலாகிவிட்டது. ஆகவேதான் நான் மத்திய, மாநில அரசுகள் தரும் விருதுகள் வேண்டாம் என மறுத்துவிட்டேன். தமிழ் வளர்ச்சிக்கு உண்மையாக பாடுபடும் அமைப்புகள் தரும் விருதுகளை மட்டுமே ஏற்று வருகிறேன். அமெரிக்க தமிழ் அமைப்புகள் தந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏற்ற நான் செம்மொழி விருதுக்கு விருப்பம் கேட்டபோது வேண்டாம் என கூறிவிட்டேன்.
 நீங்கள் எத்தனை வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? இத்தனை வயதாகியும் தொடர்ந்து எழுதும் ஆற்றல் எப்படிக் கிடைத்தது?
 ஐந்தாவது வயதில் மேடையேறி பேசியுள்ளேன். ஆசிரியரானதும் பதினாறு வயதில் எழுதத் தொடங்கினேன். சொந்தப் பள்ளிக்கூடம் நடத்தியுள்ளேன். இதுவரை 4614 தமிழ் சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். தமிழால் மேம்பட்ட நான், தமிழுக்காக தொடர்ந்து இயங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. எனது உள்ளத்தை அந்த அளவுக்கு இளமையோடு வைத்திருக்கிறது தமிழ். ஒரு மனிதரை சாகா வரத்துக்குள்ளாக்குவது எழுத்து. கம்பனை இன்றும் நாம் பேசக் காரணம் அவரது எழுத்து என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
 தமிழகத்தில் ஐந்தாவது வரை கட்டாயம் அனைவரும் தமிழ் படிக்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து விரும்பும் மொழியை கற்கும் நிலை வர வேண்டும். பன்மொழிப்புலமை என்பது அனைவருக்கும் அவசியம்.
 சந்திப்பு: வ.ஜெயபாண்டி

தமிழில் எழுதுவதற்கா பஞ்சம்? இலக்கியம் எழுதுவேன். திருக்குறள், இலக்கணம் என அனைத்துக்கும் புதிய உரைகள் விளக்கங்களை எழுதுகிறேன். வாழ்க்கையின் முழு அனுபவமேதமிழ் இலக்கியங்களாக மலர்ந்திருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com