திரைக் கதிர்

தமிழில் "வாகை சூட வா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. மலையாளப் படங்களில் தற்போது நடித்து வரும் இவர், மியா என்ற நடனப் பெண்ணின் வாழ்க்கையை
திரைக் கதிர்

* தமிழில் "வாகை சூட வா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. மலையாளப் படங்களில் தற்போது நடித்து வரும் இவர், மியா என்ற நடனப் பெண்ணின் வாழ்க்கையை 8 நிமிட வீடியோ ஆல்பமாக தயாரித்து நடித்துள்ளார். "மியா' என்ற பெயரிலேயே உருவாகியுள்ள இந்த ஆல்பம் தமிழில் வெளியாகியுள்ளது. இது பற்றி இனியா பேசும் போது... 
"நடிப்பைப் போன்றே நடனத்திலும் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் அதை வெளிப்படுத்துவது போன்ற சினிமா வாய்ப்பு எனக்கு அமையவில்லை. மியா மிகவும் துடிப்பான பெண். பிரபல நடனக் கலைஞராகி சாதிக்க வேண்டும் என்பதே அவளின் ஆசை. அந்த இலக்கை அடைய அவள் போராடுகிறாள். அதற்கு எவ்வளவோ தடைகள். இருந்தாலும் இலக்கை நோக்கி பயணமாகிறாள். அந்த இலக்கு அவளுக்கு கைவசம் ஆனதா என்பதே இந்த ஆல்பத்தின் கதை. வழக்கமான சினிமா ஆல்பமாக இல்லாமல் சினிமாவுக்கே ஆன நேர்த்தியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது என் முதல் முயற்சி. மியா கேரக்டரில் நடித்துள்ளேன். அஸ்வின் ஜான்சன் இசை. மகேஷ் இயக்கியுள்ளார். இந்த வீடியோ ஆல்பம் மூலம் வசூலாகும் பணத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ இருக்கிறேன். இந்த உலகில் நடனத்தில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் இந்த ஆல்பத்தை சமர்ப்பிக்கிறேன்'' என்றார் இனியா. 

* பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, அர்த்தனா பினு, பிரியா பவானி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் "கடைக்குட்டி சிங்கம்'. சத்யராஜ், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், பானுபிரியா உள்ளிட்டோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இசை வெளியீட்டுவிழாவில் பங்கேற்று சூர்யா பேசும் போது...
"இந்தப் படத்தில் கிளிசரின் போடாமல் அழுது, பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்குப் படத்தின் மீது அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும்தான் இதைப்போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நானும் கார்த்தியும் இணைந்து நடிப்போம். எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால், அது கண்டிப்பாக நமக்கு பலனைத் தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால், இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது'' என்றார். 

* தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலுமே முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் காஜல் அகர்வால். தற்போது கைவசம் அதிக படங்கள் இல்லாமலிருக்கிறார். "பாரிஸ் பாரிஸ்' என்ற ஒரேயொரு தமிழ் படத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்த "குயின்' இந்தி படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஏற்கெனவே இந்தி படங்களில் நடிக்கச் சென்று வாய்ப்பில்லாமல் தென்னிந்திய படங்களில் மீண்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பஞ்சாபி மொழி படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இது குறித்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில்... "ஹிந்தி படம் குயின் ரீமேக்காக உருவாகும் பாரிஸ் பாரிஸ் படத்தின் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். இந்தியில் கங்கனா நடித்திருந்தார். அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கக் கூடாது என்ற முடிவுடனே இப்பாத்திரத்தில் நான் நடித்து வருகிறேன். எனது பாணியில் கதாபாத்திரத்தில் எப்படி வாழ முடியுமோ அப்படி உள்வாங்கி நடித்து வருகிறேன். பஞ்சாபி படமொன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். அதுபற்றிய முழுவிவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

* பாலிவுட்டில் நடித்தாலும், தென்னிந்திய சினிமாவே தனக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளார், ரகுல் பிரீத் சிங். செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கார்த்தியுடன் தேவ், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். தெலுங்கிலும் ஒரிரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தியில் "அய்யாரி' என்ற படத்தில் நடித்திருந்த அவர், அஜய் தேவ்கன் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். "அஜய் தேவ்கனுடன் நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. "அய்யாரி' எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் வருத்தப்பட்டேன். ஆனால், என் நடிப்பு காரணமாக அஜய் தேவ்கன் படம் கிடைத்தது. பாலிவுட்டில் இதன் மூலமாக உயரத்துக்குச் சென்றாலும், தென்னிந்திய சினிமாவை நான் மறக்கமாட்டேன். ஒருவேளை ஹிந்தியில் பரபரப்பாகி விட்டாலும், தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடிப்பேன். தென்னிந்திய சினிமா எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார் ரகுல். "தேவ்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கியது. தற்போது கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் முக்கிய பகுதிகளின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளனர். காவல்துறை சாகசப் பின்னணி களத்தில் இப்படம் உருவாகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் கார்த்திக், பிரகாஷ்ராஜ்,, ரம்யா கிருஷ்ணன் நடிக்கின்றனர். 
-ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com