அது ஒரு நோன்புக்காலம்...

அப்ப்ப்பா... முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகான குரோம்பேட்டையைப் பார்த்து நிறையவே மிரண்டு போனேன். அன்றைய கல்லூரி நாட்களில் எம் ஐ டி மட்டுமே குரோம்பேட்டையின் முகவரியாக விளங்கிய காலம் மாறி....
அது ஒரு நோன்புக்காலம்...

அப்ப்ப்பா... முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகான குரோம்பேட்டையைப் பார்த்து நிறையவே மிரண்டு போனேன். அன்றைய கல்லூரி நாட்களில் எம் ஐ டி மட்டுமே குரோம்பேட்டையின் முகவரியாக விளங்கிய காலம் மாறி.... இன்று சென்னையின் அத்தனை வியாபார சாம்ராஜ்ஜியங்களுமே கை கால் பரப்பி வேரூன்றியுள்ள நிலையில் தனி நகரமாகவே உருமாறி உள்ளது.
வளைகுடா வாழ்வுகாரணமாக பொறியாளனாக இல்லாமல் வியாபாரியாக மாறிவிட்ட குற்ற உணர்வினாலோ என்னவோ இதுநாள் வரை இங்கு நான் வந்திருக்கவில்லை.
ஏதோ ஒரு நல்ல நேரத்தில், "சம்பாதித்தது போதும்' என்ற ஞானோதயம் உதிக்கவே கடந்த மாதம்தான் நிரந்தரமாகத் தாய்நாடு திரும்பினேன். திரைகடலோடியதில் நஷ்டப்பட்டுப்போன ஓரோர் உறவுக்கும் உணர்வுக்கும் மறுபடி புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளுள் ஒன்றாகத்தான்... கல்லூரி நோக்கிய இந்தப் பயணம்!
அக்னி நட்சத்திர வெயில் நேரத்து நோன்பு காலப் பயணம் என்பதால் எலக்ட்ரிக் ட்ரெயினில் போய் இறங்குகையில் சுருண்டு போயிருந்தேன். ஐம்பத்தைந்து வயதுக்கு அது அதிகப்படி சாகசமாக இருக்கவே... நேரே கல்லூரிக்குப் போகாமல்.. சாலையோர பள்ளிவாசலுள் அபயம் தேடி அமர்ந்தேன். "கல்லூரி காலத்து சின்னஞ்சிறிய பள்ளி இருந்த அதே இடத்தில்தான் இந்த பிரம்மாண்ட மசூதியா?' - என்பதைக் கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத விசுவரூப உருமாற்றம் குரோம்பேட்டைக்கு! பழைய நினைவுகளோடு ஒத்துப்போய் கொஞ்சமேனும் பரிச்சயம் காட்டியது வெற்றி தியேட்டர் மட்டுமே!
பள்ளித் தொழுகை இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு... சுவரில் சாய்ந்திருந்து... லுஹர்
தொழுகைக்காக வரும் நபர்களை மையமாக நோட்டமிடுகையில் சட்டென சம்ஷுத்தீன் சார் நினைவுக்கு வர... உடம்பெல்லாம் ஆடிப்போயிற்று. எப்படி சாரை மறக்க முடிந்தது?
மூன்று வருட குரோம்பேட்டை வாழ்வில் கல்லூரி தாண்டிய ஒரேஉறவு அவர் மட்டும்தானே?

அது எனக்கு கல்லூரி இறுதி ஆண்டு. படிப்போடு மாணவ எழுத்தாளனாக பணியாற்றும் வாய்ப்பும் கிட்டவே... தந்தையை இழந்த நிலையில் செலவுகளைச் சமாளிக்க முடிந்தது. அந்த நன்றியுணர்வினாலோ என்னவோ அடிக்கடி பள்ளிவாசலுக்கு போக ஆரம்பிக்க... அங்குதான் ஷம்சுதீன் சார் அறிமுகம்! 
""தம்பியை அடிக்கடி பள்ளியிலே பார்க்கிறேன்... இளமையில் பக்தி பெரிய கொடுப்பினை. ரொம்ப நன்றி. எம் ஐ டி தானே? எந்த வருஷம்?'' 
சொன்னேன்.
""கடைசி வருஷமா? உங்க செட்ல ஒருத்தர் பத்திரிகைகள்ல எழுதுறாரே.. தெரியுமா?''
""நல்லாவே தெரியும்... அது நான்தான்''
""யா அல்லாஹ் என்ன ஓர்ஆச்சர்யம்.. உங்களைச் சந்திக்கணும்னு ஆசைப்பட்டிருந்தேன். அதை இத்தனை சுலபமா ஆண்டவன் நிறைவேத்திட்டானே''
அப்படி ஆரம்பித்த அறிமுகம், அந்த வருடத்து மொத்த நோன்புகளையும் அவர் வீட்டில் வைத்தே நான் திறக்கும் வண்ணம் நெருக்கமாக்கிற்று. வாலிபத்து கூச்சம் மறந்து அத்தனை நாட்களுமே திருக்கழுக்குன்றம் கழுகாக.. அவர் வீட்டில் ஆஜராகக் காரணம், சம்சுதீன்சாரின் அன்பு மட்டுமல்ல, அவர் மனைவியின் விருந்தோம்பலும்... அவரது மூன்று பிள்ளைகளின் சகோதர பாசமும்தான். கல்லூரி காலம் முடிந்த பின்னும் ஓரளவு பேணப்பட்ட அந்த உறவை... மைசூர் வேலையின்போதுதான் தொடர முடியாமல் போயிற்று. செல்போன் மட்டுமல்ல லேண்ட் லைன் போனும் அரிதான காலம் ஆயிற்றே! கடிதத்தொடர்பு கூட ஆறேழு மாதங்களுக்கு மேல் நீடிக்காமல் போகவே... சீக்கிரமே நினைவோடையில் சம்சுதீன் சார் வறண்டுதான் போயிருந்தார்.

தொழுகை கூட்டத்தில் சம்சுதீன் சாரை தேடி ஏமாந்ததால்... தொழுகை முடிந்த கையோடு சம்சுதீன்சார் வீடு தேடும் படலம் துவக்கினேன். போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னான பகுதியில் பச்சை கம்பி கிரில் போட்ட வீடு நன்றாக நினைவு இருக்கவே... சீக்கிரமே வீட்டை கண்டுபிடிக்க முடிந்தது. சின்ன கேட்டைத் திறந்து உள்ளே நுழைகையில் பச்சை கிரில்லுக்குப் பின்னான வராண்டாவில் ஜீசஸ் புன்னகைக்கவே பெரும் ஏமாற்றம்!
""ஆமாமா... இது அவங்க இருந்த வீடுதான். ஆனா அவங்கெல்லாம் போய் வருஷம் பதினைஞ்சுக்கு மேலே இருக்குமே... நீங்க அவங்க சொந்தக்காரங்களா?''
""இல்லை. இங்கே காலேஜ் படிக்கிறப்போ சாரோட ஏற்பட்ட பழக்கம். இடையிலே வெளிநாடு போனதுல தொடர்பு இல்லாம போச்சு''
""அப்போ சம்சுதீன் சார் இறந்து போனது உங்களுக்குத் தெரியாதா?''
""என்ன? சார் இறந்து போய்ட்டாரா? எப்போ?''
""அது ஆச்சு.. பத்து வருஷம்''
""எனக்கு தெரியாதே... அவங்க சம்சாரம்?''
""வஹிதா மாமி பாடுதான் ரொம்ப கஷ்டம்''
""என்னங்க சொல்றீங்க? அவங்களுக்கு ரெண்டு பொண்ணும் ஒரு பையனுமா மூணு பிள்ளைங்க உண்டுமே..''
""ஒண்ணுக்கு மூணா புள்ளைங்களை கொடுத்த ஆண்டவன்.. அவங்களோட சேர்ந்து வாழ்ற பாக்கியத்தை அந்த அம்மாவுக்கு தரலை''
""நீங்க தப்பா சொல்றீங்க... அந்த அம்மாவோட வாழறதுக்கு பிள்ளைகளுக்குத்தான் பாக்கியம் இல்லைன்னு சொல்லுங்க. சாப்பாட்டோடு சேர்த்துப் பரிமாறுன அந்தம்மா அன்புக்காகவே எத்தனை நாள் வெட்கம் விட்டு ஓடி ஓடி வந்திருக்கேன் தெரியுமா?''
""நூத்துல ஒரு வார்த்தை. எனக்கு அவங்க வீட்டு விஷயம்லாம் நல்லாவே தெரியும். இதுலேர்ந்து நாலாவது வீட்டுலதான் குடி இருந்தோம். மூணுபிள்ளைகளும் ஒத்துமையா இருந்து முயற்சி பண்ணியிருந்தா.. இந்த வீட்டை எனக்குப்பதில் அவங்களே விலைக்கு வாங்கி ஒரே குடும்பமா இருந்திருக்கலாம். ம்... இப்ப இந்த ஊர்ல ஒருத்தியும் தாம்பரத்துல ஒருத்தியும் மூத்தவர் செங்கல்பட்டிலேயுமால்ல பிரிஞ்சு கிடக்கிறாங்க''
""அந்த அம்மா?''
""பிள்ளைங்க மூணு பேர் கூடவும் இல்லாம.. அன்பா கூப்பிடற சொந்தக்காரங்க வீடு... தெரிஞ்சவங்க வீடுன்னு வஹிதா மாமி காலம் தள்ளுறாங்க. இந்த மாசம் எங்கே இருக்காங்களோ? ஆண்டவருக்குத்தான் வெளிச்சம்''
""என்னங்க இப்படி சொல்றீங்க? அவங்க எங்கே இருக்காங்கன்னு நிஜமாவே தெரியாதா?''
""சத்தியமா தெரியாது. இங்கே வந்தா நான் லேசுல விடுறதில்லை. என் வற்புறுத்தலுக்காக ஒண்ணு ரெண்டு மாசம் இருந்துட்டு... திடீர்னு சொல்லாம கொள்ளாமலே பொறப்பட்டு போய்டுவாங்க. மறுபடியும் மூணு மாசமோ நாலு மாசமோ... கைகாசு தீர்ந்ததும் வருவாங்க''
""என்ன சொல்றீங்க? காசுக்காக உங்களைத் தேடி வருவாங்களா?''
""இல்லை... இல்லை... நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. நான் ஏடிஎம்ல எடுத்து குடுக்கறது அவங்க பென்ஷன் காசைத்தான். அங்க இங்க போறதுல தொலைஞ்சு போயிடக்கூடாதேன்னு கார்டை எங்கிட்டேதான் குடுத்து வச்சிருக்காங்க...'' 
""ஹும் கார்டு தொலைஞ்சு போயிடும்னா உங்க கிட்டே குடுத்து வச்சிருக்காங்க? நிச்சயமா இருக்காது. புருஷன் புள்ளைகளோட ஒண்ணா வாழ்ந்த இந்த வீட்டை அடிக்கடி பார்க்கணும்கிற ஏக்கத்திலேதான் உங்க கிட்டே குடுத்து வச்சிருக்கணும்''
""நீங்களும் அவங்களைச் சரியாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க...''
""சரி மேடம்.. அவங்களை தொடர்பு கொள்ள என்னதான் வழி?'' 
""அவங்க செல்போன்ல ட்ரை பண்ணி பார்க்குறீங்களா?''
""அட இதை மொதல்லேயே சொல்லக் கூடாதா?''
பரபரப்போடு எண்களை ஒற்றித் தொடர்பு கொள்ள... தெள்ளத்தெளிவாக ரிங் போயும் எடுப்பார் இல்லை. மறுபடி மறுபடி முயன்று தோற்றபின், """ஒருவேளை தெரியாத நம்பர்னு எடுக்கலையோ என்னவோ.. உங்க போன்லேயே போடுங்களேன்''" என அவசரப் படுத்தினேன். அப்போதும் ஏமாற்றமே!
""அவங்க எடுக்க மாட்டாங்கன்னு உறுதியா தெரிஞ்சும் உங்க ஆர்வத்தை தடுக்க வேணாம்னுதான் சொல்லாம இருந்தேன். நினைச்சாப்பிலே அவங்களா போன் பண்ணி விசாரிக்கிறது தவிர... நான் போட்ட எந்த காலையும் இதுவரை அட்டெண்ட் பண்ணது இல்லை. அப்படி ஒரு விரக்தி''
""அவங்க பிள்ளைகள் அட்ரúஸா போன் நம்பரோ இருக்கா?''
""ரெண்டுமே இருக்கு. அதிலேயும் கடைசி பொண்ணு வீடு இதோ ரெண்டு தெரு தள்ளிதான் இருக்கு... அங்கே போறீங்களா?''

அங்கே போகவில்லை! நோன்பும் வெயிலும் ஒருசேர வாட்டிய போதும் அருகிலிருந்த மகள் வீட்டிற்கு போகாமல் பஸ் பிடித்து செங்கல்பட்டுக்குத்தான் போனேன். மூத்த பிள்ளை... அதுவும் ஆண்பிள்ளையைச் சந்திக்கிற ஆர்வத்தில் அவர் பணிபுரியும் வங்கிக்கே சென்றேன். ஆரம்ப குசல விசாரிப்பு முடியும் முன்னரே... நேரே விஷயத்தைத் தொட்டு விட்டேன்.
""சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க. உங்க குடும்பமும் எங்க குடும்பமும் கிட்டதட்ட ஒரே லெவல்தான்.. தனக்குன்னு சுயநலமா எதையும் அனுபவிக்காத அப்பாவோட பிள்ளைங்கதான் நாம ரெண்டுபேருமே! நாலு காசு சம்பாதிச்சு கொஞ்சம் வசதியா வாழறச்சே.. என் கூட அனுபவிக்க அப்பா இல்லையேன்னு நான் வருந்தாத நாள் இல்லை. ஏதோ குறைஞ்ச பட்சம் அம்மாவாவது இருக்காங்களேங்கிற ஆறுதலோட எங்கம்மாவை பார்த்து சந்தோஷப்பட்டுக்கிறேன். அதே சந்தோஷமும் பாக்கியமும் உங்களுக்கும் கிடைக்கணும்னு ஆசைப்படறேன். தயவுசெய்து அம்மாவை கூட வச்சுக்குங்க..''
""எப்போ மாட்டேன்னு சொன்னேன் ? அவங்களா வந்தா.. நான் சேர்த்துக்கிறேன்''
""பிரச்சனை என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனாலும் இப்படி பட்டும்படாம பேசலாமா?''
""பெரியவங்களுக்கு நம்ம விட ஈகோ ஜாஸ்திங்க. அதனால மூத்த மகன் நீங்களா போய் அம்மாவை கூப்பிடுவதுதான் சரி''
""அத்தா இறந்த பிறகு ஒண்ணொண்ணையும் என்கிட்டே கேட்டுத்தான் எங்கம்மா செய்தாங்களா? இல்லியே. மகனைவிட மத்த சொந்தக்காரங்களைத் தானே அதிகமா மதிச்சாங்க? நாங்க வாழ்ந்த வீட்டைக்காலி பண்றப்போகூட பெத்தவங்க புழங்கின சாமான்கள்ல எனக்கும் உரிமை உண்டுன்னு நினைக்காம... மொத்தத்தையும் பொம்பளை புள்ளைகளுக்குத்தானே வாரிக் குடுத்தாங்க?''
""நம்மளைப் பெத்தவங்க மேலே வாய்விட்டு குறை சொல்லவும் சரி... அதை காதுகொடுத்து கேட்கவும் சரி நமக்கு அனுமதி இல்லை. அது கடவுளையே கேள்வி கேட்கிற அகங்காரமாயிடும்''
""அப்போ எதுக்கு இந்த வீண் முயற்சி? விட்டுருங்க...''
""இல்லை பிரதர் ப்ளீஸ்.. நானும் உங்களை மாதிரி சராசரி மனுஷன்தான். என் தங்கைகளோட இப்பவும் எனக்கும் சண்டை சச்சரவெல்லாம் உண்டும்தான். ஆனா தாய்ன்னு வர்றப்போ விஷயமே வேற... "மாதாவின் காலடியிலதான் சுவர்க்கம் இருக்கு'னு நபிகள் நாயகம் சொன்னது மறந்துபோச்சா? இல்லை.. "உங்கள் தாய் தகப்பன் முதுமையை அடைந்துவிட்ட போது அவர்களை வெருட்டவும் வேண்டாம்... "சீ' என நிந்திக்கவும் வேண்டாம்'னு குரான்ல இருக்கறது தெரியாம போச்சா?''
""ப்ளீஸ் எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. நீங்க இவ்வளவு தூரம் தேடி வந்ததே... சந்தோஷம். நானும் நோன்பு, நீங்களும் நோன்புங்கறதால சரியா உபசரிக்க முடியலை.''
""சாயந்திரம் வர இருக்க முடியும்னா நாம சேர்ந்தே நோன்பு திறக்கலாம். இல்லே அவசரம்னா நோன்புகாலம் முடிஞ்சு வீட்டுக்கு வாங்க.''
""பெருநாளைக்கு அடுத்த சண்டே வரட்டுமா?''
""தாராளமா. ஆனா அம்மா விஷயமா பேசறதில்லைங்கிற உறுதியோட வாங்க''

ஆற்றாமையும் அதிர்ச்சியுமாக சோர்வுடன் தாம்பரம் வந்தேன். மகள்களில் மூத்தவள், வியப்பு கொப்பளிக்க விழிவிரித்து வரவேற்றாள்.
""எத்தனை வருஷமாச்சு... அண்ணனைப் பார்த்து! வாங்க வாங்க நோன்புதானே?''
""ஆமாம்மா. படிச்ச காலேஜை எட்டிப்பார்க்கலாம்னு நோன்போட பொறப்பட்டேன்'' - எனத் தொடங்கி... சகலத்தையும் சொல்லி முடிக்கையில் அந்த சகோதரி முகம் நிஜமான சோகத்தில் வாடவே செய்தது.
""வாஸ்தவம்தாண்ணே. நான் என் தங்கச்சியைப் போல தனி வீட்டுல இருந்தேன்னா நீங்க சொல்றப்படி அம்மாவைக் கூப்பிட்டு வச்சுக்கலாம்தான். ஆனா கூட்டுக்குடும்பத்துல அது சாத்தியப்படாதுண்ணே''
""இப்படி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு முடிவெடுக்கிற உறவாம்மா அது. வேதத்திலே ஆண்டவன் அவ்வளவு உருக்கமா சொல்றான்.. "உன்னோட தாய் துன்பத்தின் மேல் துன்பம் அனுபவித்து உன்னை கர்ப்பத்தில் சுமந்தாள்.. நீ பிறந்தபிறகு இரண்டு வருடங்கள் வரை உனக்கு பாலூட்டினாள். ஆகவே கடவுளுக்கும், தாய் தந்தைக்கும் நன்றி செலுத்திவா. முடிவில் நீ என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது'. அந்த வசனங்களைக் கொஞ்சம் நினைச்சுப் பாரும்மா. அம்மா குடுத்த வீட்டு சாமான்களை ஏத்துக்க இடம் இருக்குது... ஆனா அம்மா உட்கார ஒண்ணரை அடியும்... படுக்க அஞ்சடி இடமும்தான் இங்கே இல்லாமப் போச்சா?''
""யாரு.. என் தங்கச்சியா இதெல்லாம் சொல்லிக்குடுத்தது? அம்மா தந்த சாமான்களை மட்டும்தானே நான் வாங்கினேன் "வீடு கட்டுறேன்.. வீடு கட்டுறேன்'னு அம்மாவோட உழைப்பையும் பென்ஷன் பணத்தையும் அவளாட்டம் வாங்கலையே.. அப்போ அவதானே அம்மாவை வச்சுக்க வேணும். இது தெரியாம என்னை குத்தம் சொல்லி நோன்போட அழ வச்சுட்டீங்களே''
அழுதவாறே உள்ளே ஓடிப்போக.. நான் குற்றவாளி போல திகைத்து நின்றேன்.

உடலும் உள்ளமும் தளர மறுபடி குரோம்பேட் வந்து கடைசி மகள் வீட்டை அடைகையில் நோன்பு திறக்க இன்னும் பத்து பன்னிரண்டு நிமிடங்களேதான் இருந்தன.
வீட்டினுள்ளிருந்து பீறிட்டு வந்த அசைவ பதார்த்த வாசனை பசிக் கொந்தளிப்பை விசிறி விட்டது. வெளிநாட்டு பணச்செழிப்பு பளீரென தெரியும் வீடு.
""ஹை அண்ணன் நீங்களா? வாங்க வாங்க. அவரைப்போல நீங்களும் அரபு நாட்ல இருக்கிறதா கேள்விப்பட்டதோட சரி. இப்படி சர்ப்ரைஸா வந்ததுல ரொம்ப சந்தோஷம்''
""ஒரு அஞ்சு நிமிஷம் உன் கிட்டே பேசிட்டு உடனே கிளம்பணும்''
""அதெல்லாம் முடியாது. சரியான சமயத்துலதான் வந்திருக்கீங்க. என் வீட்டுக்காரரோட ஃப்ரண்ட், குடும்பத்தோட வந்திருக்காங்க. ப்ளீஸ். நீங்களும் எங்களோட சேர்ந்து நோன்பு திறந்தா அந்த புண்ணியம் எனக்கு சேருமில்லே... ப்ளீஸ்ண்ணா'' 
""நோன்பை கண்ணியப்படுத்த துடிக்கிற தங்கச்சி... பெத்த தாயை அனாதையா கைவிடலாமா? கடைசியா அம்மா உன் கூடத்தான் இருந்ததா கேள்விப்பட்டேன்''
""அண்ணா எனக்கு எதுவும் தெரியாது. போன வெகேஷன்ல.. அம்மாவை நம்பி வீட்டை விட்டுட்டு அரேபியா போயிருந்தப்போ... அவங்க கொஞ்சமும் பொறுப்பில்லாம வீட்டை பூட்டி போட்டுட்டு ஊருக்கு போய்ட்டாங்க. அதுலே என் வீட்டுக்காரர் ரொம்ப அப்செட் ஆகி போன்ல கோவமா பேசிட்டார். உடனே ரோஷத்துல அம்மா தனியா போய்ட்டாங்க''
""நீங்க தடுக்கலையா?... மறுபடி கூப்பிட்டுக்கலையா?''
""இல்லை. ஏற்கெனவே எங்களுக்குள்ளே கொஞ்சம் கசப்பு உண்டும்தான். என்னோட இருக்கிறதுல அம்மாவுக்கே விருப்பம் இல்லாதப்போ நான் எதுக்கு கூப்பிடணும்?''
""அப்படின்னு அம்மா சொன்னாங்களா?''
""என் ஃப்ரண்டு காமினி சொன்னா..''
""அம்மா சொன்னதா... இல்லாததும் பொல்லாததும் சொன்ன அதே காமினி.. நீங்க சொன்னதும் சொல்லாததுமா அம்மாகிட்டேயும் ஏதேதோ சொல்லி இருக்கலாம்லே!''
""அதனாலே கூட உங்களுக்குள்ளே "கசப்பு' வந்திருக்கலாமில்லே?''
""அவ இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல மாட்டா...''
""ஃப்ரண்டு மேலே வைக்க முடிஞ்ச நம்பிக்கையை கொஞ்சம் அம்மா மேலேயும் வச்சிருக்கலாமே. "தன்னை கஷ்டத்துடன் கர்ப்பத்தில் சுமந்து கஷ்டத்துடன் பிரசவித்த தாய்க்கு நன்றி செலுத்தும்படி மனிதனுக்கு நல்லுபதேசம் செய்கிறோம்'னு குரான்ல அவ்வளவு அழகா போற்றிச் சொல்லி இருக்கிற தாயை தப்பா நினைக்கலாமா? இன்னொரு முக்கியமான முரண்பாடு தெரியுமா? பலசமயம் உண்மைகளை வெளிப்படையா பேசறதுனாலயுமே கூட நிறைய பிரச்னைகளும் பிரிவினைகளும் உண்டாகும். அதனால நம்ம வீட்டு விஷயங்களை நண்பர்கள்கிட்டே பகிர்ந்துக்கறதும் ஆபத்துதான்! இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை.. நீங்க மனசு வச்சா நாம ரெண்டுபேருமா உங்கம்மாவைத் தேடி கண்டுபிடிச்சிரலாம்''
""அய்யோ நானா? என் புருஷன் கொன்னே போட்டுருவார்''
""என்னம்மா இது? மாமியார் பெத்த பொண்ணு வேணும்... மாமியாரோட வீட்டுச்சாமான்கள் வேணும்.. வீடுகட்டிக்க தந்த உதவிகளும் வேணும். ஆனா மாமியார் மட்டும் வேணாம். அப்படித்தானே? ரொம்ப நல்லா இருக்கு. வர்றேம்மா''
""அண்ணா நோன்பு திறக்க ஒரு நிமிஷம்தான் இருக்கு. அவங்கள்லாம் உட்கார்ந்தாச்சு... நீங்களும் வாங்க... ப்ளீஸ்''

தாயைப் போற்றாத அந்த வீட்டில் என் நோன்பை முடித்துக்கொள்ள மனம் ஒப்பாது வெளியே வந்தவன், பள்ளிவாசல் நோக்கி நடக்கலானேன். வாசல் தாண்டும் முன்பே... மனைவியின் அழைப்பு.
""என்னங்க நோன்பு திறக்க டைம் ஆயிடுச்சு. அதான் போன் போட்டேன்''
""இப்பதான் சம்சுதீன் சாரோட கடைசி மக வீட்டுலேர்ந்து நேரா பள்ளிக்கு போய்ட்டு இருக்கேன்''
""என்ன சொன்னாங்க?''
""அண்ணனும் அக்காவும் என்ன சொன்னாங்களோ அதேதான் சொன்னாங்க.''
""மூணுபேருக்குமே அம்மா வேணாமா? மூணுபேருக்குள்ளேயும் நல்ல ஒத்துமை!''
""இன்னொரு ஒத்துமையும் இருந்தது''
""என்னங்க?''
""என் கிட்டே மறுப்பு தெரிவிக்கிறப்போ மூணு
பேருமே நோன்பு வச்சிருந்தாங்க...''
""யா அல்லாஹ்''
சின்ன மவுனத்திற்கு பிறகு அவளே தொடர்ந்தாள்..
""அதை நோன்புன்னு சொல்லாதீங்க. அவங்க ஜஸ்ட் பட்டினியா இருந்தாங்க... தாகமா இருந்தாங்க. அவ்வளவுதான்.. மத்தபடி அதை ஆண்டவனுக்கு அர்ப்பணமான நோன்புன்னு சொல்றதே பாவம்ங்க''
ஆமோதித்து மவுனம் காட்டினேன்.
""நீங்க இப்பவே லேட். பள்ளிவாசல் போறதுவரை காத்திருக்காம வழியிலே ஏதாவது கடையிலே தண்ணி வாங்கி குடிச்சாவது நோன்பை முதல்ல முடிங்க. ப்ளீஸ்''
நடையை நிறுத்தி பார்வையை பரப்ப... எதிரே பெரிய எழுத்தில் "வள்ளலார் டிபன் சென்டர்' பலகை தெரிந்தது! அதை நோக்கி நடக்கையில் சிறிய எழுத்தில் "தாயே தெய்வம்' தெரிந்தது !
 


எழுத்தாளர் ஐஷ்வர்யன் என்கிற பெயரில் சிறுகதைகள் எழுதிவரும் முகமது சாதிக், இந்தச் சிறுகதையை தனது மகன் சித்திக் பெயரில் எழுதியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com