ஸ்ரீதேவிக்கு காமராஜர் பரிந்துரை!

நடிகை ஸ்ரீதேவியின் அப்பா அய்யப்பனும் கவியரசு கண்ணதாசனும் நண்பர்கள். இவர்கள் அடிக்கடி காமராஜர் வீட்டில் சந்திப்பார்கள்.
ஸ்ரீதேவிக்கு காமராஜர் பரிந்துரை!

நடிகை ஸ்ரீதேவியின் அப்பா அய்யப்பனும் கவியரசு கண்ணதாசனும் நண்பர்கள். இவர்கள் அடிக்கடி காமராஜர் வீட்டில் சந்திப்பார்கள். ஒருமுறை குழந்தை ஸ்ரீதேவியுடன் காமராஜர் வீட்டுக்கு அய்யப்பன் சென்றபோது, ஸ்ரீதேவியின் துறுதுறுப்பான செயல்கள் காமராஜரை வியக்க வைத்தன. கண்ணதாசனிடம், ""இந்த குழந்தையை சினிமாவில் நடிக்க வையேன்'' என்றார். பின்னர், ""ஸ்ரீதேவி திரைப்படத்தில் நடிக்கட்டுமே..'' என்று அய்யப்பனை சம்மதிக்க வைத்து சாண்டோ சின்னப்ப தேவரின் "துணைவன்' படத்தில் நடிக்க வைத்தார் கண்ணதாசன். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது நான்கு . 

தமிழ்நாட்டிலிருந்து ஹிந்திக்குப் போய் பிரபலமான வஹிதா ரஹ்மான், வைஜெயந்திமாலா, ஹேமமாலினி, ரேகா பட்டியலில் ஸ்ரீதேவி சேர்ந்து கொடிகட்டி பறந்து கொண்டிருந்த 1995 காலகட்டம். பிரபல மலையாள பட இயக்குநர் பரதன், ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரியைச் சந்தித்தார். மலையாளப் படத்திற்கு அதிக ஊதியம் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், ""ஸ்ரீதேவி உங்கள் படத்தில் நிச்சயம் நடிப்பாள். ஏனென்றால் நீங்கள்தான் ஒரு விளம்பர படத்திற்கு ஸ்ரீதேவி மூன்று வயதாக இருக்கும்போது முதன் முதலாக படம் பிடித்தீர்கள். அந்தப் புகைப்படம்தான் ஸ்ரீதேவியின் முதல் படம். அது எத்தனை அழகாக இருந்தது. அது எங்கள் மனசில் இருக்கிறது'' என்றார். 

ஸ்ரீதேவி பரதனின் "தேவராகம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் ராஜேஸ்வரிக்கு மூளையில் பிரச்னை ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா வரை போய் வரவேண்டியிருந்ததால், "தேவராகம்' படப்பிடிப்பும் தாமதமானது. ""என்னால் படப்பிடிப்பு தாமதம் ஆகிறதே'' என்று ஸ்ரீதேவி மிகவும் வருத்தப்படுவாராம். பரதனின் மனைவியான நடிகை கேபிசி லலிதா , """பரவாயில்லை. அம்மாதான் முக்கியம்'' என்று ஆறுதல் சொல்வாராம். ""படப்பிடிப்பு நேரங்களில் அம்மாவின் நிலைமை குறித்து கவலையில் சோகமாக இருந்தாலும், நடிக்க அழைப்பு வந்துவிட்டால், துக்கத்தை மாற்றிக் கொண்டு பாத்திரத்துடன் ஒன்றி இயக்குநர் நினைத்தைவிட பல மடங்கு பாவங்களைத் தந்து அசத்துவார்'' என்று இயக்குநர் மகேந்திரன் சொல்வதை ஸ்ரீதேவி பல படங்களில் நிரூபித்திருக்கிறார்.

ஹிந்திப் படவுலகில் தயாரிப்பாளரான போனி கபூர் ஸ்ரீதேவியைச் சந்தித்தது 1984-இல். "மிஸ்டர் இந்தியா' படத்தில் நாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்ய வந்திருந்தார். அப்போது, ""சம்பளமாக பத்து லட்சம் தாருங்கள்'' என்று ஸ்ரீதேவியின் அம்மா கேட்க, போனி ""பதினொரு லட்சம் தருகிறேன்'' என்றாராம். ""கேட்ட தொகையை விட அதிகம் தரும் தயாரிப்பாளரும் உண்டா'' என்று ஸ்ரீதேவிக்கும் அவர் அம்மாவுக்கும் ஒரே ஆச்சரியம். 

போனி அப்படி செய்ததற்குக் காரணம், போனி கபூர் ஸ்ரீதேவியின் பரம ரசிகர். ஸ்ரீதேவி நடித்த தமிழ்ப் படங்களைப் பார்த்து ஸ்ரீதேவியின்பால் எழுபதுகளிலேயே ஈர்க்கப்பட்டவர். "சோல்வா சாவன்' படப்பிடிப்பின் போது சந்தித்தாலும் அப்போது ஸ்ரீதேவிக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் சரியாகப் பேச வராததால், அறிமுகத்துடன் பேச்சு நின்றுவிட்டது.

"மிஸ்டர் இந்தியா' படப்பிடிப்பின் போது போனி, ஸ்ரீதேவிக்கு எல்லா வசதிகளையும் ஸ்பெஷலாகச் செய்து கொடுத்தார். அப்போதெல்லாம் நடிகைகளுக்கு என்று தனியாக எல்லா வசதிகளும் கொண்ட "கேரவன்' வேன் கொண்டுவரும் பழக்கமில்லை. ஆனால் ஸ்ரீதேவிக்கு என்று தனியாக மேக்கப் ரூமை போனி தயார் செய்தார். "மிஸ்டர் இந்தியா' படப்பிடிப்பின்போதே போனிக்கு ஸ்ரீதேவி மீது காதல் இருந்தாலும், போனி வெளிப்படையாக சொன்னது 1993-இல் தான். போனிக்கு முதல் திருமணம் ஆகி, மனைவி மக்கள் இருந்ததால், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 1996 -இல் ஸ்ரீதேவியைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த போது ஸ்ரீதேவியின் பெற்றோர்கள் காலமாகியிருந்தார்கள் . போனி - ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள். ஜான்வி "தடக்' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆவதால் , துபாய்க்கு போகவில்லை. படத்தின் சில பாகங்களை ஸ்ரீதேவி பார்த்திருந்தாலும் , முழுப்படத்தையும் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. 

தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி அமைத்து அதிர்ஷ்டத்தையும் பட வாய்ப்புகளையும் தன் பக்கம் தக்க வைத்துக் கொண்ட ஸ்ரீதேவி.. தன்அழகையும் நிரந்தரமாக மெருகுடன் தக்க வைத்துக் கொள்ள பலவகையான அறுவை சிகிச்சைகளை அவ்வப்போது செய்து கொண்டிருந்தார். 

ஸ்ரீதேவி சினிமாவில் ஒரு சகாப்தம்..! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com