திரைக் கதிர் 

கடந்த 2013-ஆம் ஆண்டு சுட்டுரையில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014-ஆம் ஆண்டுதான் முதல் பதிவையே அதில் பதிவிட்டார்
திரைக் கதிர் 

* கடந்த 2013-ஆம் ஆண்டு சுட்டுரையில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014-ஆம் ஆண்டுதான் முதல் பதிவையே அதில் பதிவிட்டார். முதல் மூன்று பதிவுகளில் அவரை வரவேற்ற ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரஜினி, நான்காவது பதிவாக நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவரை 116 பதிவுகளைப் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஒரு ரீ ட்வீட் கூட செய்யவில்லை. 45 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரைப் பின் தொடர்கின்றனர். அவரோ வெறும் 24 பேரை மட்டுமே பின்தொடர்கிறார். நரேந்திர மோடியின் இரண்டு கணக்குகள், அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், அனிருத், சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரைத் தவிர மற்ற எல்லாமே செய்தி நிறுவனங்களைத்தான் அவர் பின்தொடர்கிறார். ரஜினியின் ட்விட்டர் ஐடி, @superstarrajiniஎன இருந்தது. தற்போது அதில் உள்ள சூப்பர் ஸ்டாரைத் தூக்கிவிட்டு ரஜினிகாந்த் என மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, @rajinikanth என்று மாற்றியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இணைந்தார். அதிலும், தஹத்ண்ய்ண்ந்ஹய்ற்ட் என்றே உள்ளது.

* சினிமாவிலிருந்து தொலைக்காட்சிக்கு செல்வது நடிகர்களின் வழக்கமாக இருந்து வந்த நிலையில், இப்போது வெப் சீரியலில் நடிக்கும் ஆர்வம் அவர்களிடத்தில் உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி "மாமி' என்ற வெப் சீரியலில் நடித்தார். இந்த பாணியில் மாதவன் சமீபத்தில் வெப் சீரியலில் நடித்து வருகிறார். நடிகர் பாபி சிம்ஹா தொடங்க உள்ள வெப் சீரியலில் நடிக்கிறார். தமிழில் இந்த வெப் சீரியல் உருவாகவுள்ளது. தற்போது அவர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் "சாமி 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்த வெப் சீரியலைத் தயாரிக்கின்றனர். குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரியலை இயக்குகிறார். 

* தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார் அமலாபால். இந்த வகையில் அவருக்கு முக்கியத்துவம் தந்து உருவாகி வரும் படம் "அதோ அந்த பறவை போல'. கடந்த மகளிர் தினத்தன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. காஜல் அகர்வால் தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டார். காஜல் அகர்வாலும், அமலாபாலும் நெருங்கிய தோழிகள் என்பதால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர்தான் வெளியிட வேண்டும் என்று விரும்பினாராம் அமலாபால். அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகி என வர்ணித்துள்ளார். "அதோ அந்த பறவை போல' படத்தை கே.ஆர்.வினோத் இயக்குகிறார். சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஜோன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 

* அஜித் - சிவா கூட்டணியில் "விசுவாசம்' படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியின் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் முதன் முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதற்கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான இயக்குநர், தயாரிப்பாளரைத் தேர்வு செய்துள்ளார் அஜித். "விசுவாசம்' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 

* கடந்த 1979-ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற படம் "நீயா'. கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. தன் வாழ்க்கையை சிதைத்த நண்பர்களை பெண் பாம்பு ஒன்று பழி வாங்குவதாக கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சுமார் 39 ஆண்டுகளுக்குப் பின் உருவாகவுள்ள இப்படத்தில் ஜெய், வரலட்சுமி, கேத்ரின் தெரசா, ராய்லட்சுமி நடிக்கின்றனர். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார். இதில் 22 அடி நீளம் கொண்ட ராட்சதப் பாம்பு இடம் பெறுகிறது. அதன் தோற்றத்தை இறுதிசெய்ய, பல நாடுகளுக்குப் பயணித்த படக்குழு, கடைசியாக தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ராஜநாகத்தின் அமைப்பு, உடல்வாகு, குணங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உருவத்தை உருவாக்கியுள்ளது. புதுச்சேரியைத் தொடர்ந்து தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடியில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எல்.சுரேஷ். ஏப்ரல் மாத துவக்கத்தில் 
படப்பிடிப்பு தொடங்குகிறது. 
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com