பித்தம் கெட்டால்... ரத்தம் கெடும்! 

வயிற்றில் பித்த ஊறல் தன் நிலையிலிருந்து கூடும் போது, அதன் இயற்கைத் தன்மையாகிய ஊடுருவும் தன்மையும்,
பித்தம் கெட்டால்... ரத்தம் கெடும்! 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
 என் வயது 53. கண் எரிச்சல், தலை சுற்றல், பாத எரிச்சல் போன்ற உபாதைகளால் கஷ்டப்படுகிறேன். கால் கட்டை விரல், நரம்பு கூச்சம் முழங்கால் மூட்டுக்குக் கீழ் கணுக்கால் வரை உளைச்சல் வலது கை ஆள்காட்டி விரல் மேல் நரம்பு உளைச்சல் உள்ளது. ரத்த அணுக்கள் 19% உள்ளது.
 -ஆரோக்யசாமி, பந்தல்குடி
 .
 வயிற்றில் பித்த ஊறல் தன் நிலையிலிருந்து கூடும் போது, அதன் இயற்கைத் தன்மையாகிய ஊடுருவும் தன்மையும், சூடான வீர்யமும், இரத்தத்தின் வழியாகவும், செரிமானத்திலிருந்து வெளிப்படும் உணவின் சாரம்சமான பகுதிகளின் வழியாகவும் உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படும்போது, கண் எரிச்சலாகவும், தலை சுற்றலாகவும், பாத எரிச்சலாகவும், அப்பகுதிகளில் தன் கோபத்தை வெளிப்
 படுத்துகிறது. இந்த கோபத்திற்கான காரணம், உணவில் சூடான வீர்யம் கொண்ட பொருட்களை ஆர்வம் காரணமாக உட் கொள்வதால், அவற்றில் பொதிந்துள்ள நெருப்பு எனும் பஞ்சமஹா பூதங்களின் அம்சமானது, பித்தத்தினுடைய நெருப்பான தன்மைக்கு உகந்ததாக இருப்பதால், அவை ஒன்றோடு ஒன்று இணைந்து, உடலெங்கும் செல்வதால் வந்த வினை எனக் கூறலாம்.
 சிவப்பு ரத்த அணுக் குறைபாடு தங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிராண வாயுவை, உடலெங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை இந்த அணுக்களுக்கு இருப்பதால், அவற்றின் அளவு தேவையான நிலையில் தங்களுக்கு இல்லாதிருப்பதால், நரம்பு உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பித்தமும் ரத்தமும் நெருங்கிய நண்பர்களாக மனித உடலில் இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. பித்தம் கெட்டுப்போனால், ரத்தமும் கெட்டுவிடும். அதனால், உங்களுடைய உடல் உபாதைக்கான தீர்வை, பித்த ஊறல் கட்டுப்பாட்டின் மூலமாகவும், இரத்த அணுக்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமாகவும் செய்ய வேண்டி இருக்கிறது.
 விரேசனம் எனும் பேதி சிகிச்சை மூலம் , பித்தம் கழிவை வெளியேற்றுவது, சிறந்த சிகிச்சை முறையாக ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளது. அவிபத்தி எனும் சூரண மருந்தை பத்து கிராம் வீதமெடுத்து, அதில் இருபது மில்லிலிட்டர் தேன் குழைத்து, மதிய வேளையில், காலை உண்ட உணவு செரித்த நிலையில் மதியம் பசி வந்துள்ள நிலையையும் நன்கு அறிந்து, சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிட சிறந்தது. இதன் மூலம் பித்த கழிவின் தேக்கத்தை குடலிலிருந்து பேதி மூலமாக அகற்றலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, நல்ல பலமுள்ள உடல்வாகு உள்ளவர்கள் இவ்வாறு செய்வதால், கண் எரிச்சல், தலை சுற்றல், பாத எரிச்சல் போன்ற பித்தம் சார்ந்த உபாதைகளைக் குணப்படுத்திக் கொள்ளலாம். திரிவிருத் லேகியம், கல்யாண குலம், மாணிபத்ரம் லேகியம், திரிபலை கஷாயம் சிவதைவேர்ப் பொடியுடன் சாப்பிடக் கூடிய, சிறப்பான மருந்துகளாலும் பித்த ஊறலை வெளிப்படுத்தலாம். இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்துத் தரக் கூடிய திறமை, ஆயுர்வேத மருத்துவர்களுக்கு மட்டுமே உள்ளது. எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத முன் குறிப்பிட்ட, அவிபத்தி சூரணம் பொதுவாக எல்லோருக்கும் உகந்ததாக இருக்கக் கூடியது என்பதால், அதை தனியாக குறிப்பிட வேண்டியிருந்தது.
 பசு நெய், தனது குளிர்ச்சியான வீர்யத்தால் பித்த ஊறலைக் கட்டுப்படுத்தும். 2 - 3 டீ ஸ்பூன் அளவில் சூடான சாதத்துடன் தினமும் சாப்பிடக் கூடியதே. இந்துகாந்தம் கிருதம், விதார்யாதி கிருதம், தாடிமாதி கிருதம், கல்யாணக்கிருதம் போன்ற நரம்பு வாயுப் பிரச்னைகளையும், எரிச்சல் பிரச்னையையும் தீர்க்க கூடிய தரமான மருந்துகளில், உங்களுக்கு எது தேவையானவையோ, அதை மருந்துவரிடம் கேட்டறிந்த பிறகு, சாப்பிட உகந்ததாகும். இம்மருந்துகள் பேதி மூலமாக பித்தத்தை அகற்றக் கூடியவையல்ல. சமனம் எனும் சாந்தப்படுத்தும் சிகிச்சை முறையாகும். நோயாளிக்கு, உடலில் அதிகம் வலு இல்லாத இடங்களில், முன் குறிப்பிட்ட சோதன சிகிச்சையை விட, மேல் குறிப்பிட்ட சிகிச்சை முறையும் சிறப்பானதுதான்.
 நரம்புகளில் ஏற்பட்டுள்ள உளைச்சலை குறைக்க, க்ஷீரபலா கேப்ஸ்யூல் எனும் மருந்தை தொடர்ந்து, 2 நாட்கள் சாப்பிட்டு வர, நரம்பு கூச்சம், உளைச்சல் போன்றவை குணமாகும். இதற்கான அனுபானம், பாலா அல்லது வெந்நீரா என்பதை மருத்துவரிடம் கேட்டறிந்து கொள்ளவும். தலைக்குக் ஷீரபலா தைலம், ஹிமசாகர தைலம், சந்தனாதி தைலம், அமிருதாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை பயன்படுத்துவதன் மூலம், பித்த ஊறலால் ஏற்படும் எரிச்சலும், பாதத்தினால் ஏற்படும் நரம்புக்கூச்சம், உளைச்சல் போன்றவற்றை மட்டுப்படுத்தலாம்.
 உணவில் காரம், கசப்புச் சுவை குறைக்க வேண்டும். நீர்க்காய்களான புடலை, சுரைக்காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், அதிகம் பயன்படுத்தலாம். புலால் உண வைத் தவிர்க்க வேண்டும். பகல் தூக்கம் கூடாது. மண்பானைத் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்த வேண்டும். இரவு உறக்கம், மிக முக்கியமானது என்பதால், எந்தக் காரணம் கொண்டும் அதை நன்கு அனுபவித்து சுகம் பெறலாம். கழுத்தில் ஸ்படிக மணிமாலை, ருத்ராட்ச மாலை அணிவதால், உடல் எரிச்சலும், நரம்புத் தளர்ச்சியும் குறைய வாய்ப்புள்ளது.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com