ஆண்களைப் பார்த்தால் நம்ப மாட்டாள்

போன ஆகஸ்ட்டில் அம்மா இறந்து விட்டாள். திடுமென்று இறந்துவிட்டாள். இப்போது அம்மா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அம்மா கண்டிப்பானவள்.
ஆண்களைப் பார்த்தால் நம்ப மாட்டாள்

தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,000 பெறும் சிறுகதை

போன ஆகஸ்ட்டில் அம்மா இறந்து விட்டாள். திடுமென்று இறந்துவிட்டாள். இப்போது அம்மா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அம்மா கண்டிப்பானவள். அவள் பார்வையே ஒரு தினுசாக இருக்கும். எதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். டிரஸ் சரியாகப் போட்டுக் கொள்ளவில்லை என்றால் திட்டுவாள். "ஏன் எல்லாம் தெரியும்படி டிரஸ் செய்துக்கிறே?'' என்பாள். நான் வயதுக்கு வருவதற்கு முன்னாலேயிருந்து அம்மாவின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும். இப்போது எனக்குக் கல்யாணம் ஆகி என் பெண் பத்மஜா பெரியவளாகப் போகிறாள். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். 
அம்மா சொல்வாள் : "ஆண்களை எல்லாம் நம்பக் கூடாது?'' 
"ஏனம்மா இப்படிச் சொல்றே? உனக்கு எதாவது கசப்பான அனுபவம் ஏற்பட்டதா?'' 
"அதெல்லாம்ஒண்ணுமில்லை'' 
அந்தக் காலத்தில் அம்மா அழகாக இருந்திருக்க வேண்டும். சாகிற வயசில கூட அம்மா அழகாகத்தான் இருந்தாள். வயதான காலத்தில் ஒருவர் அழகாக இருக்கிறதுதான் பெரிய விஷயம். அப்படி ஒருவர் இருந்தால் அவர் சின்ன வயதில் என்ன அழகாக இருந்திருக்க வேண்டும். அம்மா அழகி. வயதான காலத்திலும் அம்மா உடை உடுத்திருக்கிற விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பாள். எனக்கு அம்மாவிடம் பிடித்தது அந்த மிடுக்கு. அம்மாவிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் தொணதொணவென்று எதாவது சொல்வது.
பாஸ்கரன் அடிக்கடி சொல்வார் : "என்னோட சினிமாவுக்கு வர்றதுக்குக் கூட உன் அம்மா சம்மதிக்க வேண்டுமா?'' என்று.
உண்மைதான். நான் பாஸ்கரனுடன் சினிமா போகிறேன் என்றால் அம்மா விரும்பமாட்டாள். "என்ன இப்ப சினிமா வேண்டியிருக்கு'' என்பாள்.
இதனாலேயே பாஸ்கரனுக்கு மாமியார் மீது கோபம் வரும். "ஏன் உங்க அம்மா இங்கயே அரைச்சு ஊத்தறா...மத்தப் பொண்ணுக வீட்டுக்குப் போக வேண்டியதுதானே?'' 
எனக்குத்தான் அம்மாவுடைய உதவி அதிகம் தேவை. நானும் ஏஜிஎஸ் அபீஸில் பணிபுரிகிறேன். நானும் பாஸ்கரனும் வீட்டைவிட்டுப் போனால் அம்மாதான் வீட்டைப் பார்த்துக்கணும். அம்மா சுறுசுறுப்பு யாருக்கும் வராது. காலையிலே எழுந்தவுடன் குளித்துவிட்டு, விடுவிடுவென்று சமையல் செய்ய ஆரம்பித்துவிடுவாள். அம்மா சமைக்கும் சமையல் வீடு முழுவதும் மணக்கும். ரசம் வைத்தால் என்றால் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். சமையல் செய்துவிட்டு போய்விடுவாள். நாங்கள்தான் எடுத்துக்கொண்டு சாப்பிடுவோம். பத்மஜாவை வேனில் கொண்டு விட்டு நாங்கள் ஆபிஸிற்குப் பறப்போம். பாஸ்கரனுக்கு பேங்கில் வேலை. டிரெயினிலே போய்விடுவார். நான்தான் கால் டாக்ஸி பிடித்துக்கொண்டு அண்ணாசாலை போக வேண்டும்.
பத்மஜா ஸ்கூல் போய்விட்டு மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவாள். அம்மா ஸ்லோகம் சொல்லிக் கொண்டு உட்கார்ந்து விடுவாள். 24 மணிநேரமும் அவளுக்கு ஸ்லோகம் சொல்றதுதான் வேலை. பத்மஜாவிற்கு சில சுலோகங்கள் எல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறாள். வாழ்க்கை இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று போன ஆகஸ்டில் அதற்கு முற்றுப் புள்ளி வைத்ததுபோல் அம்மா இறந்துவிட்டாள்.
"உங்கம்மா இறந்துபோயிடுவாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை'' என்று பாஸ்கரனே கண்கலங்கிச் சொன்னது இன்னும் கூட ஞாபகத்திற்கு வருகிறது.
"எனக்கு பத்மஜாவைப் பற்றித்தான் கவலை..'' என்றேன்.
வீட்டைப் பார்த்துக் கொள்கிற பெரிய நிர்வாகியாக மட்டுமல்ல கண்ணை இமை காப்பதுபோல் பத்மஜாவையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"உன் பெண் உன்னை விட அழகி...நீ ஜாக்கிரதையா அவளைப் பாத்துக்கணும்..''
அம்மா இதைச் சொன்னபோது எனக்கு பகீரென்றது..
"உலகம் மோசமடி... யாரையும் நம்பக்கூடாது... வேனில் அனுப்பறே... டிரைவர் எல்லாம் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்கணும்''
"உனக்கு எல்லார் மீதும் சந்தேகம்''
"ஆண்களே மோசம்... ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படிப் பார்க்கிறான்னு தெரிஞ்சாலே போதும்... அவன் எப்படிப்பட்டவன்னு கண்டுபிடிச்சுடலாம்..''
"அம்மா எல்லோரையும் அப்படியெல்லாம் சந்தேகப்பட்டால் உலகத்திலே வாழ முடியாது''
"உனக்கு நரசிம்மனைத் தெரியும் இல்லே?''
எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. என் அப்பாவின் நண்பர் நரசிம்மன். அடிக்கடி வீட்டிற்கு வருவார். வந்தால் அம்மாவிடமும் என்னிடமும் வழியாமல் போக மாட்டார். 
ஒருநாள் அம்மா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. "அந்த நரசிம்மன் உன்னையும் என்னையும் பார்க்கத்தான் வர்றான்.."
அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.. நரசிம்மன் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் வருவார். எதாவது எங்கள் வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வருவார்.
"நரசிம்மா ஏன் இதெல்லாம் வாங்கிக் கொண்டு வர்றே..'' என்று என் அப்பா அடிக்கடி கேட்பார். பின் எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார். 
எங்களுக்கு இவர் எப்போதுதான் கிளம்பப் போகிறாரென்று தோன்றும். நாங்கள் குடியிருந்த இடம் மிகச் சிறிய இடம். நரசிம்மன் வந்தாரென்றாôல் அடிக்கடி சமையல் அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார். என் அம்மா கண்ணில் பட்டால் போதும் கொஞ்சம் அசடு வழிந்து பேசிக் கொண்டிருப்பார். 
அப்பாவிற்கு இதெல்லாம் ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை.. நரசிம்மனுக்கு வசதியான வாழ்க்கை.. அவர் வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. அவருக்கு ஒரே பையன். வட மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான். அப்பாவுடன் ஒரே இடத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர் நரசிம்மன். அந்த உரிமையில்தான் அடிக்கடி வீட்டிற்கு வருகிறார். சிலசமயம் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்து
விடுவார். அப்போது அவர் வழிகிற வழிசல் தாங்க முடியாது. அந்தத் தருணத்தில் அம்மா என்னைப் பார்த்து கண்ணடிப்பாள்.
"பாவம் இந்த நரசிம்மன்... அவர் வயதுக்கு அவர் ஏன் இதுமாதிரி பண்ணனும்..''
"சிலர் அப்படித்தான் வருவார்கள். ஏன் என்றால் அவர்கள் ஆண்கள்.. நாமதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..''
நான் பேசாமல் அம்மாவை முறைத்துப் பார்ப்பேன். "நீ காலேஜ் படிக்கிற பெண்..இதெல்லாம் நான் உனக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. நீ பஸ்ஸிலதானே காலேஜ்ஜுக்குப் போறே..எத்தனை ஆண்கள் உன்னைப் பார்க்கிறான்னு கணக்கு எடுத்துண்டு சொல்லு..''
"போம்மா உனக்கு வேற வேலை இல்லை. உன்னை மாதிரி ஆண் ஜென்மத்தையே வெறுக்கிற பெண்ணை நான் பார்த்ததில்லை... ஆண்கள் பார்த்தால் பார்த்துக்கிட்டுப் போகட்டுமே...''
"நீ பஸ்ஸில் கூட்டமாக இருக்கும்போது போ... எத்தனை ஆண்கள் உன்னைக் குறிவைத்து உன்னைத் தொடாமல் இருக்கிறான்னு பார்...'' என்பாள் அம்மா.
ஒவ்வொரு முறையும் நான் கல்லூரி போகும்போது அம்மா நான் எப்படி டிரஸ் செய்துகொண்டு போகிறேன் என்று பார்ப்பாள். ஏதாவது கொஞ்சம் அதிகமாக டிரஸ் செய்துகொண்டு போனால், திட்டுவாள். பார்க்கிறவர்கள் கண்ணுக்கு ரொம்ப கவர்ச்சியாகத் தெரியாதே என்பது அம்மாவின் எச்சரிக்கை. நான் புடவை கட்டிக்கொண்டு போனால் அம்மா ஒன்றும் சொல்லமாட்டாள். ஆனால் அதைப் போல் அசெüகரியமான உடை வேறு ஒன்றுமில்லை.

ஒருநாள் நரசிம்மன் வீட்டிற்கு வந்தவுடன், நான்தான் போய் கதவைத் திறந்தேன். அவர் என்னைப் பார்த்தவுடன், மகிழ்ச்சியுடன், என் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு வந்தார். எனக்குக் கூச்சமாக இருந்தது. 
"என்ன படிக்கிறே?''
"பி எஸ் எஸி கெமிஸ்டிரி..''
"ம்..பாங்க் வேலைக்குத்தான் நீ போகவேண்டும்..'' இதைச் சொல்லும்போது அவர் கை என் தோள் மீது இறுகுவதை நான் நோட்டம் விட்டேன். என் அப்பா எதிரில் வந்தவுடன் தன் கையை விலக்கிக் கொண்டார். நான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன். பின் அவர் கண்களில் படவே இல்லை. 
அம்மா தனியாக இருக்கும்போது, அம்மாவிடம் இதைப் பற்றி சொன்னேன். "அம்மா நீ சொல்றது சரின்னுதான் படுது. நரசிம்மன் அப்பாவை மட்டும் பார்க்க வரவில்லை... அப்பாவைச் சாக்காக வைத்துக்கொண்டு உன்னையும் என்னையும்தான் பார்க்க வருகிறார்.."
"ஒரு வயசுக்கு வந்தப் பெண்ணின் தோளில மூன்றாவது மனுசன் கையைப் போடறார்னா அது தப்புன்னு தெரியணும்...''
"அப்பா ஏன் அம்மா இதெல்லாம் பார்த்து கண்டுக்காம இருக்கார்..''
"அவருக்குப் போறாது..''
"அப்பாகிட்டே நேரே சொல்லிடலாம்... நரசிம்மன் நம்ம வீட்டுக்கு வர்றதுப் பிடிக்கலைன்னு..''
"வேண்டாம். அப்படிச் சொல்ல வேண்டாம். இதுக்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன்,'' என்றாள் அம்மா. 

இரண்டு வாரம் கழித்து நாங்கள் நரசிம்மன் வீட்டிற்குப் போனோம். நரசிம்மன் திக்குமுக்காடி போய்விட்டார். அவர்கள் வீடு கொஞ்சம் பெரிதாக இருந்தது. வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். நரசிம்மன் மனைவி எங்களை உபசரித்தாள். 
நரசிம்மன் பேசும்போது அம்மாவைப் பார்த்தும் என்னைப் பார்த்தும் வழிவதாகவே தோன்றியது. அம்மா சமையலறைக்குப் போய் நரசிம்மன் மனைவியிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தாள். நான் நரசிம்மன் பார்வையில் படும்படி ஓர் இடத்தில் அமர்ந்திருந்தேன். கிட்டே போய் உட்காரவில்லை. வழக்கம்போல் நரசிம்மனும் அப்பாவும் எதை எதையோ பேசி அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். 
கொஞ்ச நேரத்தில் எனக்கு அங்கு இருப்பதே போரடித்துவிட்டது. நாங்கள் அவர்கள் கொடுத்த டிபனையும் காபியையும் உண்டுவிட்டுக் கிளம்பிவிட்டோம். 
வீட்டிற்கு வந்தவுடன், அம்மா சொன்னாள்: "இனிமேல் நரசிம்மன் நம்ம வீட்டிற்கு வர மாட்டாரென்று நினைக்கிறேன்..''
"எப்படி?''
"பாரேன்.''
உண்மையில் அதன்பின் நரசிம்மன் எங்கள் வீட்டிற்கே வரவில்லை. 
"என்னம்மா செய்தே? நரசிம்மன் வரவில்லையே?''
அம்மா சிரித்துக்கொண்டே சொன்னாள் : "அவர் மனைவிக்கிட்டே சொன்னேன்''என்றாள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். நரசிம்மன் இப்போதெல்லாம் வீட்டுப் பக்கமே வருவதில்லை என்று.

இதோ அம்மா போன வருடம் போய்விட்டாள். அப்பா இரண்டு வருடங்களுக்கு முன்னாலே போய்விட்டார். நாங்கள் தனியாக விடப்பட்டிருக்கிறோம். நானும் பாஸ்கரனும் இந்த வேலையைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறோம். 
பத்மஜா படிக்கிற ஸ்கூல் இந்த இடத்திலேயே நல்ல ஸ்கூல். காலையில் போனால், மாலைதான் வருவாள். போன வருடம் வரை பாட்டி இருந்தாள். அவள் வருவதைப் பார்த்துக்கொண்டு... பசியோடு பத்மஜா வருவாள் என்று உடனே ஏதாவது டிபன் செய்து கொடுப்பாள். இப்போது அது மாதிரி செய்ய முடியாது. நான் வீட்டிற்கு வருவதற்குள் இரவு ஏழரை மணி ஆகிவிடும். பாஸ்கர் நான் வந்த பிறகுதான் வருவார். அதுவரை பத்மஜா பக்கத்தில் உள்ள மங்களம் வீட்டில்தான் விட வேண்டும். மங்களம் பெண் சுகுணாவும் பத்மஜாவும் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். இருவரும் ஒன்றாகத்தான் வேனில் போகிறார்கள். 
வீட்டில் ஒரு பெரியவர் இல்லை என்றால் எதையோ இழந்து விட்டதுபோல்தான் தோன்றுகிறது. என் அம்மா மட்டும் இருந்திருந்தால், பேத்திக்கு எதை எதையோ சொல்லிக் கொடுத்திருப்பாள்.
ஒருநாள் பத்மஜா சொன்னாள் : "அம்மா அந்த வேன் டிரைவர் அவன் பக்கத்தில் என்னை உட்காரச் சொல்றான்மா..''
நான் பதறிப் போய், "உட்கார்ந்தாயா'' என்று கேட்டேன்.
"இல்லையம்மா..''
அவள் பதில் எனக்கு நிம்மதியைத் தந்தது.."அதுமாதிரி போய் உட்கார்ந்து விடாதே..'' என்று எச்சரித்தேன்.
"அவன் ஏன் உட்கார்னு சொல்றான்..'' என்று கேட்டாள் பத்மஜா.
"உனக்குச் சின்ன வயது..புரியாது..அப்படி பக்கத்தில் போய் ஒரு ஆண் பக்கத்தில் உட்காரக் கூடாது..''
பத்மஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. "சரிம்மா..'' என்று சொல்லிவிட்டு விளையாடப் போய்விட்டாள்.
அன்று இரவு பாஸ்கரன் தனியாக இருக்கும்போது இந்த விஷயத்தைச் சொன்னேன். "ஐய்யய்யோ..'' என்றார் பாஸ்கரன். "ஸ்கூலில் சொல்லி அந்த வேன் டிரைவரை மாற்றச் சொல்லலாமா?"
"அவசரப்படாதீர்கள். அவன் எந்தத் தப்பும் செய்யவில்லை'' என்றேன்.
"இப்பத்தான் உன் அம்மா மாதிரி ஒருத்தர் வேண்டும்... பக்குவமாக நம்ம பெண்ணிடம் பேசி புரிய வைப்பாள்..''
"உண்மைதான். பத்மஜாவிற்கு ரெண்டுங் கெட்டான் வயது..அவளுக்கு என்ன புரியும் என்பது தெரியாது..'' என்றேன்.
அதன்பின் சில நாட்களாக பத்மஜாவிற்கு என்ன சொல்லி புரியவைப்பது என்று மனதிற்குள் போட்டுக் குழப்பிக்கொண்டேன். நானும் ஒருநாள் வேனில் பெண்ணை ஏற்றும்போது வேன் டிரைவரைப் பார்த்தேன். அவன் பார்க்கும் பார்வையே சரியாயில்லை. 
என் அலுவலகக் கெடுபிடியில் பத்மஜாவைப் பற்றி சற்று மறந்துவிட்டேன். அவள் அதே வேனில் போய்க்கொண்டிருந்தாள். டிரைவர் பக்கத்தில் மட்டும் உட்காராதே என்று எச்சரிக்கை செய்து கொண்டிருப்பேன். பத்மஜா அதையெல்லாம் கேட்டு பேசாமல் இருப்பாள். 
பத்மஜா ஒருநாள் அவசரமாகப் போன் செய்தாள்.."அம்மா சீக்கிரமா வா.. ஒண்ணு சொல்லணும்.''
நான் பதறிப்போய் வீட்டிற்கு வந்தேன். மங்களம் வீட்டிற்குச் சென்றேன். மங்களம் பரபரப்பாகக் காணப்பட்டாள்.
"என்ன ஆயிற்று?'' என்று விஜாரித்தேன்.
சுகுணா ஒரு ஓரமாக உட்கார்ந்துகொண்டு அழுது கொண்டிருந்தாள். 
"ஏன் சுகுணா அழறா...என்ன ஆச்சு?'' என்று விசாரித்தேன்.
"அந்த வேன் டிரைவர் சுகுணாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, மோசமாக நடந்துகொண்டானாம்...''என்றாள் மங்களம் அழுதுகொண்டு.
நான் பதறிவிட்டேன்.. சுகுணாவைப் போய் கட்டிக்கொண்டேன். "கண்ணு பயப்படாதே..நாளைக்கே ஸ்கூல்ல கம்பளெய்ன்ட் பண்ணலாம்..'' என்றேன்.
"மாமி..இந்த ஆண்களே இப்படித்தான் இருப்பார்களா?'' என்று கேட்டாள் வெகுளியாக.
"எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள். சிலரிடம் மட்டும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்'' என்றேன்.
அடுத்தநாள் நான், பாஸ்கரன், மங்களம், அவர் கணவர் நால்வரும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, பள்ளி முதல்வரைப் பார்த்தோம். அப்போது அந்த வேன் டிரைவர் எங்கள் கண்களில் தட்டுப்படவில்லை. நாங்கள் சொன்னதைக் கேட்டவுடன் பதறி விட்டார் முதல்வர். 
உடனே அந்த வேன் டிரைவரை நீக்கி விட்டார்கள். வேற ஒரு டிரைவரை நியமித்தார்கள். மாணவிகளுடன் தினமும் வேனில் செல்ல ஓர் ஆசிரியையையும் நியமித்தார்கள். 
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பத்மஜாவைக் குறித்துக் கவலைப்படாமல் நிம்மதியாகத்தான் இருந்தேன். சுகுணாவும் நார்மலுக்கு வந்துவிட்டாள். ஆனால் வேனில் போவதற்கு அவளுக்குச் சற்று அச்சமாகத்தான் இருக்கிறது.
ஒருநாள் பத்மஜா என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது,
"அந்த வேன் டிரைவர் முதல்ல என்னைத்தான் கூப்பிட்டான்..''
நான் திகைப்புடன் பத்மஜாவைப் பார்த்தேன். 
"ஆனா...நான் அங்கு வந்து உட்கார 
முடியாது..'' என்று சொல்லிவிட்டேன் என்றாள்.
கொஞ்சநேரம் பத்மஜா திரும்பவும் சொன்னாள். "அம்மா பாட்டியை நாம மிஸ் பண்றோம்மா..''
"ஏன் திடீர்னு பாட்டி நினைப்பு''
"நான் பாட்டி பக்கத்திலதான் தினமும் படுத்துப்பேன்..பாட்டி நிறையப் பேசுவாள்..'' இதைச் சொல்லும்போது பத்மஜா கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. பாட்டி இறந்தபோது அதைத் தாங்காமல் ரொம்ப நேரம் பத்மஜா அழுது கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது.
"பாட்டியை நினைச்சு வருத்தப்படாதே..பாட்டி கடவுள் மாதிரி நம்ம கூடத்தான் இருக்காள்..''
"அம்மா..பாட்டிதான் எல்லாம் சொல்வாள்..''
"எல்லாம் சொல்வாளா!''
"ஆமாம்மா.. "குட் டச்' "பேட் டச்'சுன்னு சொல்வா.. ஆண்களைப் பற்றி பாட்டி சரியா கணிச்சுச் சொல்வாள்...அதனால்தான் அந்த வேன் டிரைவரைப் பார்த்தாலே பிடிக்காது.. இப்ப எல்லாம் சரியாகப் போய்விட்டது..''
"பத்மஜா நீ பெரிய மனுஷிடி..'' என்று அவளைக் கட்டிப் பிடித்தேன்.
"சரி, இப்ப இது குட் டச்சா பேட் டச்சா..'' என்று கேட்டேன்.
"குட் டச் அம்மா..'' என்றாள்.
அன்று இரவு பத்மஜா தூங்கியபிறகு பாஸ்கரன் கிட்டே எல்லாவற்றையும் சொன்னேன். பாஸ்கரன் அதைக் கேட்டுவிட்டு, "உங்க அம்மா..
பெரிய ஆள்..நாமதான் மிஸ் பண்ணிட்டோம்..'' என்றார்.

அழகியசிங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com