ஆளில்லா விமானம் ஓட்டும் அஜித்

நடிகர் அஜித்தின் பொழுது போக்கை பற்றி எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். ஆரம்பத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தில் (மோட்டார் பைக்) பந்தயத்தில் பற்று கொண்டவராக இருந்தார்.
ஆளில்லா விமானம் ஓட்டும் அஜித்

நடிகர் அஜித்தின் பொழுது போக்கை பற்றி எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். ஆரம்பத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தில் (மோட்டார் பைக்) பந்தயத்தில் பற்று கொண்டவராக இருந்தார். சில காலத்திற்கு பிறகு அது நான்கு சக்கரவாகனமாக மாறியது. பின்னர் ஆளில்லா வாகனங்களை ஓட்டும் அளவிற்கு உயர்ந்தார். பிறகு தனது கேமராவில் அழகான காட்சிகளைப் படம் பிடிக்க ஆரம்பித்தார். அஜித் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்யக் கூடியவர். அதாவது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, தான் உபயோகிக்கும் பொருளைப் பற்றி சரியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளும் பழக்கம் அவரிடம் உண்டு. அதே போன்று ஆளில்லா விமானத்தை ஓட்டினாலும் சரி, கேமராவைக் கையாண்டாலும் சரி, எல்லாவற்றிலும் அவர் சமர்த்தர். ஒரு பொருள் வேலை செய்யவில்லை என்றால் ஏன் வேலை செய்யவில்லை, என்று கண்டுபிடிக்கும் ஆர்வமும் இவரிடம் இருக்கிறது. தான் உபயோகிக்கும் பொருளில் ஏதாவது பிரச்னை என்றால் அதை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்துப் போட்டு திரும்பவும் அழகாக மாட்டும் திறன் நடிகர் அஜித்திடம் நிறையவே உண்டு. அதுதான் இன்று இவரை இந்தியாவின் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்றானஎம்.ஐ.டி. (MIT) வரை அழைத்து வந்திருக்கிறது. 
சிறுவயதிலிருந்தே இவர் ஆங்கிலத்தில் கூறப்படும் ஏரோ மாடலிங்கில் விருப்பம் கொண்டிருந்தார். கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து, இந்த சிறிய ரக விமானங்களை இயக்குவதிலும், சோதனை செய்வதிலும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது பொழுதைக் கழித்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் தொழில் நுட்பக் கல்லுரியான எம்.ஐ.டி. நிர்வாகம் அழைத்தபோது இவர் விருப்பத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். 
அது சரி, எதற்கு இவரை எம்.ஐ.டி. நிர்வாகம் அழைக்கிறது? ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற "மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 யுஏவி சேலஞ்ச்' எனும் போட்டியில் எம்.ஐ.டி வெற்றி பெற வேண்டும் என நினைத்து இவரை தங்களது ஆலோசகராக ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொருமுறையும் இவர் கல்லூரிக்கு வந்தால் இவரது பயணப்படி ரூபாய் 1000 வழங்கப்படும். இதை இவர் அந்தக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கே வழங்கி விட்டார். இறுதிச் சுற்று வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. 
இந்த போட்டியில் எம்.ஐ.டி. மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? "ஒரு மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தவிக்கும் நோயாளிகள் அல்லது தொலை தூர கிராமங்களில் உள்ள நோயாளிகளின் ரத்த மாதிரியைப் பெற்று வரும் வகையில் ஆளில்லா விமானத்தை உருவாக்குவது தான், இந்த போட்டிக்கான சவால். இதை எப்படி வடிவமைக்கலாம், எப்படி திரும்பவும் வரும் வகையில் செய்யலாம் என்று திட்டமிட்டு அதைச் செய்வதில் தான் இங்குள்ள மாணவர்களின் திறமையே இருக்கிறது. இந்த போட்டியில் 100 நாடுகள் பங்கு கொண்டன. அதில் சரிபாதிக்கு மேல் அதாவது 55 நாடுகள்தான் இரண்டாவது சுற்றுக்கே தகுதி பெற்றுள்ளன. "இதில் வெற்றி பெறுவதற்காகவே எங்கள் மாணவர்கள் அல்லும் பகலும் உழைக்கிறோம்'' என்று கூறுகிறார் எம்.இ.டி. கல்லுரியின் ஏரோஸ்பேஸ் ஆய்வு மையத்தின் பொறுப்பு இயக்குநரான துணை பேராசிரியர் கே.செந்தில்குமார். "தனியார் நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், அரசாங்கம் தான் இந்த போட்டிக்கு நிதி அளிக்கிறது. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போட்டிக்கு தயாராகிக் கொண்டு வருகிறோம். இந்த துறையில் அஜித்தின் திறமை மற்றும் அனுபவம் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்'' என்றார் அவர். 
-எஸ்.ஆர். அசோக்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com