தமிழ் எழுத்துலகிற்கு...மிகப்பெரிய இழப்பு!

எஎழுத்தாளர் பாலகுமாரன் கவிஞராகத் தொடங்கி, சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல பரிமாணங்களுடன் மிளிர்ந்தவர்
தமிழ் எழுத்துலகிற்கு...மிகப்பெரிய இழப்பு!

எழுத்தாளர் பாலகுமாரன் கவிஞராகத் தொடங்கி, சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல பரிமாணங்களுடன் மிளிர்ந்தவர். ஆன்மிக நோக்குடன் அவர் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்து, சிறப்பான கருத்துகளை தம் பேச்சில், எழுத்தில் பதித்தவர். எல்லாரையும் கவரும் அவருடைய எழுத்தும் பேச்சும் என்றென்றும் அவரை நினைவில் வைத்திருக்கும். அவரைப் பற்றிய சில நினைவுகள்...

எழுத்தாளர் இந்துமதி: 
எங்கள் நட்பு சுமார் 50 ஆண்டுகால நட்பு. அவர் TAFE அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனந்தவிகடன் பத்திரிகையில் எனது கதைகள் வந்து நான் பிரபலமான நேரம், "ஆனந்தவிகடன் பத்திரிகையில் என் கதைகள் வர என்ன வழி?'' என்றார். நான், பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, மாலன் ஆகிய நால்வரும் நல்ல நண்பர்கள். பல நாட்கள் நாங்கள் அனைவரும் புல்வெளியில், வீட்டின் திண்ணையில் என்று நேரம் போவது தெரியாமல் பலவிஷங்களைப் பேசியிருக்கிறோம். காரசாரமான விவாதங்களும் ஏற்படும். ஆனால் எங்கள் நட்பு இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கிறது. நான் அவரை "பாலா' என்றுதான் அழைப்பேன். அவர் மறைந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் நான் உடனே மருத்துவமனை சென்றேன். அங்கிருந்து அவரது பூத உடலுடன் அவரது வீட்டிற்கு வந்தோம். அவரது உடலையே பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருந்தேன். என் அருகே வந்த மாலன், "அவர் போன இடத்திற்கு நாமும் போகத்தான் போகிறோம். வா'' என்று என்னை கூட்டிக் கொண்டு வந்தார். நல்ல நண்பரை நான் இழந்து நிற்கிறேன்.

இயக்குநர் வசந்த் சாய்: 
நானும் பாலகுமாரனும் எங்கள் இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களிடம் உதவியாளராக இருந்தோம். "சிந்து பைரவி' படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக நாங்கள் சென்றபோது பாலகுமாரனுக்கு அப்பொழுதுதான் கல்யாணமாகி இருந்தது. மனைவி தந்த ஒரு கோப்பையை எடுத்து வந்திருந்தார். அதில்தான் அவர் காபி அருந்துவார். படப்பிடிப்பு முடிந்து எல்லாரும் வீட்டிற்குத் திரும்பும் நேரம். அவர் கொண்டுவந்த கோப்பையைக் காணவில்லை. மிகவும் வருத்தப் பட்டார் என்று கூறினால் அது சரியாக இருக்காது. அந்த ஓட்டலில் வேலை செய்யும் ஒரு பெண்மணி இவருக்கு ஒவ்வொரு டம்ளராக எடுத்து வந்து எடுத்து வந்து காட்டிக் கொண்டிருந்தார். இவர் அது இல்லை என்று கூற, டம்ளர் இல்லாமல் இவர் சென்னை வரமாட்டாரோ என்று நான் நினைக்கும் அளவிற்கு அவரது நடவடிக்கை இருந்தது. சென்னை வந்த பிறகு குமுதம் வார இதழில் "டம்ளர்' என்ற தலைப்பில் ஒரு கதை வந்திருந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது. நடந்த நிகழ்வு எனக்கு தெரியும். அதை எவ்வளவு அழகாக இவர் கதையாக்கி உள்ளார் என்று நினைத்து நான் வியந்து போனேன். எனக்கு அவரது எல்லா கதைகளும் பிடிக்கும், "புன்னகை மன்னன்' வெளிப்புற படப்பிடிப்பின்போது நாங்கள் இருவரும் சுமார் இரண்டு மாதம் ஒன்றாகவே இருந்தோம். அந்த நாட்கள் எல்லாம் மிகவும் இனிமையான நாட்கள் என்று சொல்லலாம். நல்ல மனிதர், சிறந்த எழுத்தாளர், இதை எல்லாம் விட இளைஞர்கள் மனதில் அவரது கதைகள் மட்டும் அல்ல, பேச்சும் நம்பிக்கை என்ற விதையை ஆழமாக விதைத்தவர் என்று கூறினால் அது மிகை இல்லை. 

இயக்குநர் கே.பாக்யராஜ்: 
எனக்கு சினிமாவினால் எப்படி பெண் விசிறிகள் அதிகமோ அதே போல் தனது எழுத்தினால் பெண் விசிறிகளை நிரம்பப் பெற்றவர்தான் பாலகுமாரன். மறைந்த மனோரமா கூட பாலகுமாரனின் விசிறி என்று அவரே என்னிடம் கூறியுள்ளார். ஒருமுறை எங்கள் படப் பிடிப்பில் அவரை நான் ஆச்சிக்கு அறிமுகப் படுத்தியபோது அவர் மிகவும் சந்தோசப்பட்டார். என்னுடன் வேலை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பி வந்து இணைந்தார். பின்னர் அவர் இயக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பத்தை நான் நிறைவேற்ற விரும்பி "இது நம்ம ஆளு " படத்தை அவர் இயக்கத்தில் நான் நடித்தேன். என்னைப் பொறுத்தவரை ஜெயகாந்தனுக்கு பிறகு இவரது எழுத்துகளை நான் மிகவும் நேசிக்கிறேன். எழுத்தாணி என்று எழுதுகோலை கூறுவார்கள். உண்மையில் இவரது எழுத்துகள் காலத்தால் மறக்க முடியாத எழுத்தாணியால் செதுக்கப்பட்ட எழுத்துகள் என்று கூறலாம். என்னுடன் வேலை செய்ய விரும்பி வந்தவர் பின்னர் எனது உறவினராகவும் மாறினார். எனது அண்ணன் மகனுக்கு அவர்கள் வழியில் பெண் எடுத்து எனது உறவினரானார். அவர் மறைவு என்னைப் பொறுத்தவரை பெரிய இழப்பு. தமிழ் கூறும் நல்லுலகிற்கு, குறிப்பாக எழுத்துத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும்.

எழுத்தாளர் சா.கந்தசாமி: 
திருவல்லிக்கேணியில் கவிஞர் ஞானக் கூத்தன் அறையில்தான் நான் முதலில் பாலகுமாரனைப் பார்த்திருக்கிறேன். அதிகம் பேசமாட்டார். வந்தாலும் ஞானக் கூத்தன் அவர்கள் அருகில் உட்கார்ந்து விடுவார். ஆரம்பகாலத்தில் அவர் அதிகமாக எழுதியது கவிதைகள்தான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கதைகள், கட்டுரைகளை அவர் எழுத ஆரம்பித்தார். அவரது கடுமையான உழைப்பு, அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம். அவருக்கு கலை மீதும் எழுத்துமீதும் ஆர்வம் அதிகம். அதனாலதான் அவரால் சுமார் இரண்டு டஜன் படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுத முடிந்தது. ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து விட்டு என்வீட்டிற்கு வந்தார். அவர் எழுதி உள்ள "உடையார்' என்ற நாவலை எனக்கு காண்பித்தார். ஒரு பெரிய பூ பந்தை என்மனைவிக்கு கொடுத்து விட்டு. அத்துடன் அவர் வணங்கும் ராம் சூரத் குமார் புகைப்படத்தையும் அளித்தார். தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது கிடையாது. அவருக்கு ஒரே வருத்தம் தான் இருந்தது. தனக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைக்க வில்லையே என்று வருத்தம்தான் அது. ஒரு நல்ல நண்பரை நான் இழந்து விட்டேன் என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. 
-சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com