படைப்பு: மனநிலை

"வித்யா சமைக்கிறதில ஒங்கம்மாவ மிஞ்சிட்டம்மா... சாப்பிட என்ன பண்ணினாலும் ருசி தூள் பறக்கிது..''
படைப்பு: மனநிலை

"வித்யா சமைக்கிறதில ஒங்கம்மாவ மிஞ்சிட்டம்மா... சாப்பிட என்ன பண்ணினாலும் ருசி தூள் பறக்கிது..''
"புலிக்கி பொறந்தது பூனை ஆகுமா? எல்லாம் என்னோட ட்ரெயினிங் தெரிஞ்சுக்கிடுங்க''
"அதெல்லாம் சரிதான்... ஆனா ஒனக்கு சமைக்கிறதத் தவிர வேற என்ன தெரியும்?
சமையலறைக்கு வெளிய என்ன நடக்குதுன்னு எதாவது தெரியுமா ஒனக்கு?''
"என்னய மட்டந் தட்டலைன்னா ஒங்களுக்கு மண்ட வெடிச்சிடுமே...''
"விடும்மா... அப்பா எதோ கிண்டலுக்குச் சொன்னா அதுக்குப் போயி கோபப்படுற.. என்னடோ சமையல் குரு நீதான் சரியா?''
மதியச் சாப்பாட்டை ரசித்து புசித்தபடி இந்த உரையாடல் ஓடியது. வித்யாவின் புருசன் ராஜாராமனும் உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து எந்தவிதமான கமாண்ட்சும் இது பற்றி வெளிவரவில்லை. மூன்று நாட்களுக்கு முன் வந்த வித்யாவின் அப்பா- அம்மா மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு இன்று ஊருக்கு கிளம்புகிறார்கள்.
மாமனார்--மாமியாரை ரயில் ஏற்றி வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான் ராஜாராமன். அவனைப் பார்த்ததும், "என்னங்க ரயில் சரியான நேரத்துக்கு வந்திச்சா? மினரல் வாட்டர் பாட்டில் வாங்கிக் கொடுத்திகளா? ரயில்ல கூட்டம் சாஸ்தியா? உட்கார எடம் கெடச்சுதா?'' வரிசையாக கேள்விகளை வீசினாள் வித்யா. காதில் விழுந்த கேள்விகள் ராஜாராமுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
"இப்ப மட்டும் இத்தன கேள்விகள அடுக்கடுக்கா அடுக்கு... எங்கப்பா அம்மா வந்தா மட்டும் அலட்சியத்தக் காட்டு''
"ஏங்க ஒங்க அப்பா அம்மாவ பஸ் ஏத்தி விட்டு வந்த போது பஸ் ஏத்தியாச்சான்னு கேட்டதில்லையா? மனசாட்சியத் தொட்டு சொல்லுங்க''
"வழியனுப்பி வச்சிட்டு வரும்போது விசாரிக்கலைன்னு சொல்ல வரல... அவுங்க இங்க வந்திருக்கும் போது....''

"வந்திருக்கும் போது அவுங்களோட சண்டையா போட்டேன்?''
"சண்ட வேற போடுவியா?''
"இப்பிடி குதர்க்கமா பேசினா என்ன பண்றது?''
"யாரு குதர்க்கமா பேசுறது? விசயத்த சொல்லி முடிக்கிறதுக்குள்ள விசுக்கின்னு அவங்களோட சண்டையா போட்டேன்னு முந்திரிக் கொட்டையா முந்திக்கிட்டு சொன்னது யாரு? ஒங்கப்பா அம்மா வரும்போது சமைக்கிற சமையல்ல இருக்கிற பிரமாதம் எங்கப்பா அம்மா வரும்போது இருக்கிறதில்லையே?''
"ஒரு தடவ கூட என்னோட சமையல மாமா அத்தை ரெண்டு பேரும் குத்தம் குறை சொன்னதில்லையே... சாப்பாடு சூப்பர்னுதான் சொல்லி இருக்காங்க...இப்பப் போய் புதுசா அவுங்களுக்கு பிரம்மாதமாச் சமைக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்?''
"அவுங்களுக்கு எப்பிடித் தெரியும்? உங்க அப்பா அம்மாவுக்குச் சமைக்கிற பாங்கு?''
"இப்ப என்ன சொல்ல வர்றீங்க? மாமா அத்தை வரும்போது ஏனோதானோன்னு சாப்பாடு பண்ணிட்டு... எங்கப்பா அம்மா வந்தா மட்டும் ஒகோன்னு ஸ்பெசலா சாப்பாடு பிரிப்பேர் பண்றேன்னு சொல்ல வர்றிங்க... அப்படித்தானே..''
"ஆமா... ரெண்டு விதச் சாப்பாட்டையும் சாப்பிடுகிற எனக்குத்தான உன்னோட பித்தாலாட்டம் புரியும்.. எங்கப்பா அம்மாவுக்கு அது தெரியாது... அவுங்க நீ சாதாரணமா சமைக்கிறதயே பிரமாதம்னு சொல்லிட்டு போறாங்கன்னா அது அவுங்களோட பெருந்தன்மை...''
"என்னங்க இப்பிடி சின்னப் பிள்ளத்தனமா பேசுறிங்க?''
"ஒழுங்காப் பேசு... வார்த்த நீளுது... உள்ளதச் சொன்னா உள்ள உறுத்துதோ?''
ராஜாராமன்--வித்யா இருவருக்குள் வார்த்தைப் போர் மூண்டது. ஒரு கட்டத்தில் காட்டமான சொற்களை வித்யா மீது வீசிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான் ராஜாராமன்.

வீட்டை விட்டு வந்த ராஜாராமன் நூலகம் போனான். நூலக மேஜையில் கிடந்த வார, மாத இதழ்களைப் புரட்டினான். வாசிப்பதில் ஈடுபாடு ஏற்படவில்லை. திரும்பத் திரும்ப வித்யாவுடன் நிகழ்ந்த வாக்கு வாதமே நினைவில் வந்து நின்று சங்கடப்படுத்தியது. பேசாமல் நூலகத்தை விட்டு வெளியில் வந்தான்.
அலைபேசியை எடுத்து அன்புமணியை
அழைத்தான்.
அன்புமணி அவனது கல்லூரி காலத் தோழன். கல்யாணம் ஆன பிறகும் இவர்கனின் தோழமை தொய்வின்றித் தொடர்கின்றது. மனதில் டென்சன் ஆக்கிரமிக்கும் போது பரஸ்பரம் பிரச்னைகளைப் பகிர்ந்து ரிலாக்ஸ் ஆகிக் கொள்வது இவர்களது வழக்கம். இரண்டு பேர்களும் செயற்கைத் தன்மை இல்லாமல் பழகுகிறவர்கள். அதனால் இவர்களின் நட்பில் உன்னதமான அன்னியோன்யம் இழையோடுகின்றது.
இருசக்கர வாகனத்தில் அன்புமணி வந்ததும் மனதிற்குள் மலர்ச்சி மலர்ந்தது.
"என்ன ராஜா அதுக்குள்ள ஃபோன் அடிச்சிட்ட... லைப்ரேரிக்குச் சீக்கிரம் வந்திட்டியா?''
"இல்ல அன்பு... இன்னக்கி மனசு சரியில்ல.. படிக்கிறதுக்கு ஆர்வம் வரல..''
" ஏன்... என்னாச்சு?''
வீட்டில் உருவான விவகாரத்தை விபரமாக எடுத்துச் சொன்னான் ராஜாராமன் அன்பு மணியும் கவனம் சிதறாமல் ராஜாராமன் தெரிவித்த விசயத்தை காதில் வாங்கிக் கொண்டான்.
""தேவை இல்லாத பிரச்சனையை நீதான் கெüப்பி சண்டைக்கு வழிவகுத்திருக்க..''
"உண்மையத்தான அன்பு சொன்னேன்...''
"அதாவது சமைக்கிறதும் ஒரு வகையான படைப்புங்கிறத ஏத்துக்கிடுவயில்ல...''
"ஆமா ஒத்துக்கிடுறேன்...''
"மனசு ஆனந்தமா இருந்தா எந்தப் படைப்பும் அம்சமா அமையும் தெரியுமா?''
"ஆமா அமையும்...''
"எந்தப் பெண்ணா இருந்தாலும் அவளுக்கு பொறந்த வீட்டுல இருந்து ஆட்கள் வரும்போது... அதுவும் அம்மா அப்பா வரும்போது மனசு உற்சாகத்தில துள்ளிக் குதிக்கும்... அந்த உற்சாக மன நிலையில சமையல்ல ஈடுபடும்போது சமைக்கிற சாப்பாடு சூப்பரா வந்திடும்... இந்த உளவியலப் புரிஞ்சுக்கிடாம அவுங்க வீட்டாளுக வரும்போது நல்ல சமைக்கிறா... வேற ஆளுக வரும்போது சொதப்பிடுறான்னு சொல்றதில அர்த்தமே கெடையாது ராஜா...''
"அப்பிடியா சொல்ற?''
"ஒங்க அம்மாவுக்கும் ஒன்னோட மனைவிக்கும் அவ்வளவா உரசல் இல்லைன்னாலும்... ஒங்கம்மாவோட யதார்த்தப் பேச்சுகள்
ஒன்னோட மனைவி மனச பாதிச்சிருக்கலாம்...அந்த உறுத்தல் உணவு சமைக்கும் போது கவனத்த சிதற வச்சிருக்கலாம்... அந்தக் கவனச் சிதறல்
உணவோட ருசியில எதிரொலிக்காம இருக்காது.
நூலகத்தில போயி பத்திரிக்கைகள வரி விடாம வாசிக்கிற நீ... இன்னக்கி வாசிக்க முடியல... காரணம் உன்னோட மனசு சரியில்ல... மனசுக்கும் செய்யிற வேல சுத்தமா அமைறதுக்கும் சம்பந்தம் இருக்கு.... சில கவிஞர்கள் சொல்லுவாங்கள்ல மூட் இல்லைன்னு.... கவிதை எழுதுறதுக்கு மட்டுந்தான் மூட் முக்கியமா?''
அன்புமணி உதாரணங்களோட உரையாடிய விதம் ராஜாராமனின் மனக்குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போன்று இருந்தது. அம்மா, அப்பா இங்கு வருகிற வேளைகளில் பிரச்னைகள் என்று பெரிதாகத் தோன்றாவிட்டாலும் சில சமாச்சாரங்களில் ஏற்பட்ட சின்ன சின்ன சச்சரவுகள் அவனது நினைவிற்கு வந்து போகத் தவறவில்லை.
இதற்குப் பிறகு வேறு பல சங்கதிகள் குறித்து பேசிவிட்டு நண்பர்கள் பிரிந்தார்கள்.

இரவு மணி ஒன்பது ஆயிற்று. பிள்ளைகள் தூங்கி விட்டார்கள். வித்யா மட்டும் விட்டேத்தியாய் உட்கார்ந்திருந்தாள். அவள் மனதைக் கவலைகள் கவ்வியது.
"என்ன இந்த மனுசன் என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கி இப்பிடி புதுசா ஆவலாதி சொல்ல ஆரம்பிச்சிருக்காரு...ஒங்கப்பா அம்மா வந்தா நல்லாச் சமைக்கிற... எங்கப்பா அம்மாவுக்கு ஏனோதானோன்னு சமைக்கிறன்னு சொல்லி சண்டைய போட்டிட்டு போயிருட்டாரு... நாம அந்த மாதிரி எல்லாம் வித்யாசம் பாக்காமத்தானே செய்யுறோம்.... இவருக்கு எப்பிடி இதப் புரிய வைக்கிறது... அவருக்கு கோவம் வந்தா கோவத்த சாப்பாட்டிலதான காட்டுவாரு... சாப்பிட கூப்பிட்டா ஒண்ணும் வேணாம்னு போயிடுவாரு... அவர விட்டிட்டு நாம மட்டும் எப்பிடி சாப்பிடுறது?'
இப்படியான எண்ணங்கள் வித்யாவின் மனதிற்குள் அலைபாய்ந்த போது ராஜாராமன் வீட்டுக்குள் நுழைந்தான். அறைக்குள் போய் உடை மாற்றினான்.
"என்னங்க சாப்பிட வாரிங்களா?''
"ம்...''
அந்த ஒற்றை எழுத்துப் பதில் அவனின் கோபம் குறைந்து போனதைக் காட்டியது. வித்யாவின் உள்ளத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓட கணவருக்கு இரவு உணவு பரிமாறத் தயாரானாள் வித்யா.

செல்வகதிரவன்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com