அம்மாவும் பைரவனும்

காவல் நிலையத்தில் புகார் எழுதிக் கொடுத்து விட்டு ராஜேஸ் வாசலில் வந்து நின்றான்.
அம்மாவும் பைரவனும்

காவல் நிலையத்தில் புகார் எழுதிக் கொடுத்து விட்டு ராஜேஸ் வாசலில் வந்து நின்றான். சுற்றுச்சுவரையொட்டி வரிசையாக மரங்கள் இருந்தன. கல்லுக்குள் ஈரம் இருப்பது போல, தண்டிக்கும் இடங்களிலெல்லாம் காவலர்கள் மரம் நட்டு வளர்த்து வருகிறார்கள். உள்ளே விசாரணைக்கு வருபவர்கள் உட்காரும் இடத்துக்கு மேலே எலக்ட்ரானிக் சுவர்க் கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்று காட்டியது. மெயின் ரோட்டுக்கு வந்தான். அனல் பறக்கும் சாலையில் எதையும் பொருட்படுத்தாமல் வாகனங்கள் அடர்த்தியாகச் சென்று கொண்டிருந்தன.

பைரவன் எங்கே போயிருப்பான்? நேற்றிலிருந்து காணவில்லை. நாய் என்று சொல்ல முடியாது. ஒரு குழந்தையைப் போல பழகினான். வெள்ளையும் பழுப்புமான உடலும், மின்னும் கண்களும் கொண்ட கனத்த குட்டியாக வீட்டிற்குள் உலா வந்தான். வளைந்த வாலும், உலகத்தையே அறியத் துடிக்கும் மூக்கும், தீவிரப் பசியுமாக இருந்தான்.

""நாயெல்லாம் நாங்கள் கண்டுபிடித்துக் கொடுக்க முடியாது. எங்காவது, யார் வீட்டிலாவது இருந்தால் தகவல் சொல்லுங்கள் மீட்டுத் தருகிறோம்'' என்று காவல் நிலையத்தில் சொன்னார்கள். 

""முதலில் மாநகராட்சி நாய்கள் பிடிக்கும் பிரிவில் போய்க் கேளுங்கள்''
"மாடுகள் காணாமல் போனால் நீங்கள் கண்டுபிடித்துக் கொடுப்பதில்லையா?' மனதுக்குள் நினைத்துக் கொண்டான். இங்கே போலீசை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது.

நாயின் மூதாதையர்கள் ஆதி மனிதர்களுடன் இணைந்து வேட்டைக்குப் பிரசித்தி பெற்றவர்கள். பனிப்பிரதேசங்களில் வாழ்ந்து பழகியவர்கள். மனிதர்களைப் போல் அதுவும் தன் பூர்வீகம் மறந்து ஏன் இப்படி செல்லப்பிராணியாக வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறது என்று தோன்றும். சில நேரங்களில் அதன் மேல் ஒரு பரிவு  உண்டாகும். ராஜேஸ், பைரவனைத் தடவிக் கொடுப்பான். அது குழந்தைகளின் வெது வெதுப்பைக் கொண்டிருக்கும். அதன் நாக்கு ஓய்வற்றுத் துடித்துக் கொண்டிருக்கும். அந்த நாக்கு மொழியற்றது. எதையோ சொல்ல முயன்று வாழ்நாள் எல்லாம் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது போலும். அவனைத் தெரு நாய் போல் அடித்து இழுத்துச் சென்றிருப்பார்களோ... நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது, ராஜேசுக்கு. 

அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது பைரவன் வாசலில் அரைக்கண் மூடி தூங்கிக் கொண்டிருப்பான். வாசலைக் கடந்து உள்ளே வர அவன் வாலைத் தாண்ட வேண்டியதிருக்கும். வாலை மெல்ல ஆட்டியே வரவேற்பளிப்பான். டி.வி. பார்க்கத் தொடங்கும் போது காலடியில் படுத்துக் கொள்வான். ராஜேஸ் உற்சாகமாகக் கை தட்டி விளையாட்டினை ரசிக்கும் போது பைரவன் முகத்திலும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.

இரவில் பைரவனிடம் மென்மையாக உரையாடுவான். அதுவும் கழுத்தை வளைத்து, செவி தாழ்த்தி புரியாத மொழியில் கசிந்து வரும் பேரன்பைக் குழைத்தபடி மயிர்ச் சருமம் புல்லரிக்க நின்றிருப்பான். பைரவனிடம் யார் எது சொன்னாலும் அதில் மகிழ்ந்து வாலாட்டியபடியே எம்பிக் குதிப்பான். சுற்றி என்ன நிகழ்கிறது என்றறிய ஒற்றைக் காதைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்தாலே தெரிந்து விடும் அவனுக்கு நாய்கள் ஏன் மனிதர்களோடு இவ்வளவு நெருக்கம் கொண்டிருக்கின்றன? தன் முன்னோர்களைப் போல வேட்டையாடவோ, பனியில் தனித்து அலைந்து திரியவோ, அடிவானத்துச் சூரியனைப் பார்த்து குரைக்கவோ ஏன் இந்த நாய்கள் முயற்சிப்பதே இல்லை? அதன் மனதில் பூர்வீக நினைவுகள் துடைத்து எறியப்பட்டதை எப்படி இயல்பாக எடுத்துக் கொண்டன? அல்லது ஒரு வேளை இன்றைக்கும் அதன் கனவில் பனி பொழியும் நிலமும், துரத்தியோடும் வேகமும் இருந்து கொண்டுதானிருக்குமோ? அவன் அலுவலகம் போன பிறகு,  நாளெல்லாம் அந்த நாய் வீட்டின் சுவரை வெறித்தபடியே என்ன நினைத்துக் கொண்டிருக்கும்? தன்னைத் தானே ஏன் இந்த நாய்கள் வருத்திக் கொள்கின்றன? அவன் அந்த நாய்க்காக வேதனை கொள்வான். அப்போதும் கூட அவனால் ஒரு போதும் அதன் நிஜமான உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியாது என்று அவனுக்கு தோன்றும். ராஜேசும் அவன் மனைவி மாலதியும் அலுவலகம் சென்றவுடன் பகல் முழுக்க நாய் அவன் அம்மாவிடம் ஒட்டிக் கொள்ளும்.

நாயின் வாழ்க்கை எட்டோ, பத்தோ வருடங்கள் தான் அதற்குள் யாருக்கோ விசுவாசமாக இருந்து, யாரையோ அண்டி வாழ்ந்து,  ஒவ்வொரு நாளும் தன் விசுவாசத்தை வீடெங்கும் வழியவிட்டு, என்ன வாழ்க்கையிது... நாய் வாழ்க்கை.

மாநகராட்சி நாய்கள் பிடிக்கும் பிரிவில் நுழைந்த போது, கணினி முன்பு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். 

""மேடம்... நேற்றிலிருந்து என்னுடைய நாய் மிஸ்ஸாயிடுச்சு. இங்கே ஏதும் கொண்டு வந்திருக்கிறீர்களா?''

""சார்...  நாயைக் கொண்டு வந்து ஸ்டாக்கெல்லாம் வக்கிறது இல்லை. வெறி பிடிச்சு நாய்னு புகார் வந்தா பிடிச்சு விஷ ஊசி போடுவோம். பெண் நாய்களுக்கு கருத்தடை ஊசி போடுவோம். உங்க நாய் ஆணா, பெண்ணா?''

""ஆண்'' 

""அப்போ ஜோடியைத் தேடிப் போயிருக்கும். வேளச்சேரியிலே ஒரு பெட்சாப் இருக்கு. அங்க போய் விசாரியுங்க'' ரிப்பன் பில்டிங்கிலிருந்து பார்க் ஸ்டேசன் வந்தான். கூட்டமே இல்லை. காலை நேரத்திலும், மாலையிலும் தான் ஜனத்திரள் அதிகமாக இருக்கும்.  வேளச்சேரி  செல்ல டிக்கட் வாங்கிய சிறிது நேரத்தில் வண்டி வந்தது. 

மகிழ்ச்சி என்பது என்ன? அறிவு பரந்து விரிகிறது. வாழ்வின் வளங்களும், மனிதனின் வாழ்வுச் சாத்தியங்களும் பெருகி வளர்கின்றன. ஆனால் அவை மனிதனை மகிழ்ச்சிகரமானவனாக மாற்றுகின்றனவா?

தினமும் பைரவனை நடைப்பயிற்சிக்கு உடன் அழைத்துச் செல்வது ராஜேசுக்கு மிக உற்சாகமாக இருக்கும். கடற்கரையில் விதவிதமான உடல் வடிவமைப்பில் ஆண்களும், பெண்களும் அணிஅணியாக நடந்து வருவார்கள். பைரவன் எல்லாரிடமும் அன்பாகப் பழகுவான்.

மாலதிக்கு நாய் வளர்ப்பே பிடிக்காது. நாய்க்கு உணவு வைப்பது அவனும் அம்மாவும் தான். அவனுக்குப் பின் அலுவலகம் செல்லும் அவள் மாலை அவனுக்கு முன்பே வந்துவிடுவாள்.

பைரவனுக்கு வாரம் இரண்டு நாள் எலும்புக் கறி. காலையும், மாலையும் பால், பிஸ்கட். மதியம் அம்மா தான் சாப்பிடுவதிலிருந்து பகுதி சாதத்தை அவனுக்குக் கொடுப்பாள்.

வேளச்சேரியிலுள்ள பெட் சாப்பில் பலவகையான நாய்க்குட்டிகள் இருந்தன. ராஜபாளையம், கோம்பை, அல்சேசன் என்று இனவாரியாகப் பிரித்து வைத்திருந்தார்கள். கருப்பு, வெள்ளை, கருப்பும், வெள்ளையும் கலந்து, முகம் மட்டும் கருப்பு மீதி உடல் முழுக்க வெள்ளை, உடம்பு நீளமாகவும் கால்கள் குட்டையாகவும் உள்ள நாய்கள், கால்கள் உயரமாகவும் உடம்பு நீளமில்லாமலும் குட்டிகள், பிஸ்கட் கலரிலும் குட்டிகள் இருந்தன. 

ஆனால் தூய வெள்ளைக்கும், சுத்த கருப்புக்கும் தான் மதிப்பு அதிகம். சில நேரங்களில் தெரு நாய் ஈன்ற குட்டிகளைத் தூக்கி வந்து, அதற்கு ஓர் இனப்பெயரைச் சூட்டி கலந்து விற்றுவிடுவார்கள். குட்டிகள் பணக்கார நாயாக ஆவதற்கும், தெருநாயாகப் போவதற்கும் வளரும் சூழலே காரணமாகிறது. நகரத்தில் வழி தப்பிய வளர்ப்பு நாய்களைக் கொண்டு வருவதற்கென்றே ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

மனித இனத்திற்கு முன்பே இப்பூமியில் தோன்றிய நாய்கள். மனிதரோடு வாழும்போது, மனிதன் ஏற்படுத்திய சாதியப் பாகுபாடுகளை நாய்களிடத்திலும் உருவாக்கிவிட்டிருக்கிறான். பங்களாவில் வாழும் நாய்கள் உயர்ந்த சாதியாகவும், சாதாரண வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் அதற்கு அடுத்த சாதியாகவும், தெரு நாய்கள் தாழ்ந்த சாதியாகவும் பிரித்து வைக்கப்படுகின்றன. அதே போல நாய்கள் மேய்த்தல் என்பது பங்களாக்களில் நடக்கிறது. காலையில் அவிழ்த்து நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதும், இரவில் வீட்டுச் சுற்றுச்சுவர் ஓரமாக கூட்டிச் செல்வதும் ஒருவித நாய் மேய்த்தலே.  

செல்லப்பிராணிகள் விற்கப்படும் அந்தக் கடையில் உள்ள நாய்களைக் கண்டவுடன் ராஜேசுக்கு மிருக பாசம் தொற்றிக் கொண்டது. தங்களை எந்த மனிதராவது வெளியுலகிற்கு அழைத்துச் செல்லமாட்டார்களா என்ற ஏக்கம் அவற்றின் கண்களில் தெரிந்தது. நாய்களின் வால்கள் நன்றியுணர்வைக் காட்டினாலும், வாலாட்டல் மூலம் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்துகின்றன என ராஜேஸ் புரிந்து கொண்டான்.

பனிமலையில் மனிதர்களை வண்டியில் வைத்து இழுத்துச் சென்றவற்றின் வழித்தோன்றல்களா இந்த நாய்கள்? பலமும் பராக்கிரமும் கொண்ட குட்டிகள் பட்டியில் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆதியில் துருவப் பிரதேசங்களில் எஸ்கிமோக்கள் நாய்களை எப்படி வேட்டைக்கும், போக்குவரத்துக்கும் பழக்கப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதை பள்ளிப் பாடங்களில் படித்த நினைவு வந்தது.

கடையின் உட்புறச் சுவரில் சில வாக்கியங்களை எழுதி வைத்திருந்தார்கள். 
""வீட்டில் இருக்கும் நெருக்கமானவர்களைக் கவனித்துக் கொள்வதன் மூலமாகவே அன்பு தொடங்குகிறது''

""தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீதும், உயிர்கள் மீதும், தன் மீதும் காட்ட வேண்டிய அக்கறையே ஒரு மனிதனின் முதல் பணி'' 

""சார்... நேத்தையிலிருந்து  என்னுடைய நாய் காணல. இங்கே ஏதும் வந்திருக்கா?''

""வழி தவறிப் போன குட்டிகள் லாரியிலோ, காரிலோ அடிபட்டுப் போயிடும்னு நாங்க இங்கே கொண்டு வந்திடுவோம். நாய்க்காரங்க வந்து அடையாளம் சொல்லி வாங்கிப் போவாங்க. சிறிய சேவைக் கட்டணம் வசூலிப்போம்'' 

""உங்க குட்டி என்ன கலர் சார்?''

""வெள்ளையும் பழுப்பும்''

""இதுவரையிலும் எந்த உருப்படியும் வரல. அட்ரஸ், போன் நம்பர் கொடுத்துட்டுப் போங்க. வந்துச்சுன்னா தகவல் சொல்றோம்''

வீட்டிற்கு வரும்போது சாலையில் விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன. அலுவலகம் முடிந்து மாலதி வந்திருக்கிறாள். 

ஏதாவது தகவல் கிடைத்ததா?

இல்லை. பகல் முழுக்க வெயிலில் அலைந்தது தான் மிச்சம். 

தொலைக்காட்சி சுவிட்சைப் போட்டான். தொடர்களோ, விவாதங்களோ அவனுக்குப் பிடிப்பதில்லை. பைரவன் தான் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தான். அவனுக்காக வாங்கிய பாலும், பிஸ்கட்டும் அப்படியே இருந்தது. மாலதி சாப்பிட அழைத்தாள். ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு மாற்றினாள். 
""ஏன் கவலையா இருக்கீங்க? நாய் மேலே அவ்வளவு பாசமா?''

""நீயெல்லாம் ஒரு ஜீவனை வளர்த்துப் பார்த்தால் தான் தெரியும்''

தனது சந்தோஷங்களையும், கவலைகளையும் பகிர்ந்து கொள்வதற்கு பைரவன் இல்லையே என்ற கவலை அவனைக் கவ்விக் கொண்டது. 

மாலதி இரவு உடை மாற்றி படுக்கைக்கு வந்தாள். ராஜேஸ் தூங்காமல் உட்கார்ந்திருந்தான். அம்மா நினைவு வந்தது. 

அம்மா... இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? எனக்குத் தாய்ப்பாசமும், நாய்ப்பாசமும் ஏன் வெவ்வேறாகிப் போனது?

ராஜேஸ் தாமதமாகத்தான் தூங்கினான். அதிகாலையில் கைபேசி ஒலித்தது எடுத்து காதில் வைத்தான்.

""ஹலோ மிஸ்டர் ராஜேஸ் தானே?''

""யெஸ் மேடம்... சொல்லுங்க''

""நான் முதியோர் இல்லத்திலிருந்து பேசுறேன். முந்தா நாள் நீங்க உங்க அம்மாவை இங்கே அட்மிசன் போட்டுப் போனதும், உங்க வீட்டு நாய் நேத்து காலையிலேயே இங்கே வந்திருச்சு. உங்கம்மாவும் நாயோட வராண்டாவிலேயே உட்கார்ந்துக்கிட்டு வரமாட்டேங்கிறாங்க. நாயெல்லாம் நாங்க அலோ பண்ண முடியாது சார். ப்ளீஸ்... வந்து நாயை அழைச்சிட்டுப் போங்க'' 

ராஜேஸ் போர்வையை விலக்கி படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான். சீக்கிரம் ஹோமுக்குப் போகணும். சன்னலைத் திறந்தான். வெளியே இருள் விலகி மெல்ல விடிந்து கொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com