என் மனைவி - 2: சொன்னால் நம்பமாட்டீர்கள்!

நான் தேவகோட்டைக்கு சுவீகாரம் போன பின் என்னுடைய பதின்மூன்றாவது வயதில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. சொன்னால் நம்பமாட்டீர்கள், என் மனைவிக்கு நான் தாலி கட்டவில்லை!
என் மனைவி - 2: சொன்னால் நம்பமாட்டீர்கள்!

நான் தேவகோட்டைக்கு சுவீகாரம் போன பின் என்னுடைய பதின்மூன்றாவது வயதில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. சொன்னால் நம்பமாட்டீர்கள், என் மனைவிக்கு நான் தாலி கட்டவில்லை! வேறு யார் கட்டமுடியும் என்று பரபரப்படைய வேண்டாம்.

எங்கள் நகரத்தார் சமூகத்தில் முன்பு அப்படி ஒரு வழக்கம் இருந்து வந்தது. மணமகன் தொட்டுக் கொடுத்த தாலியை பங்காளிகளில் சீரும் சிறப்புமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரியவர் மணமகனின் பிரதிநிதியாகச் சென்று மணப்பெண்ணுக்கு "திருப்பூட்டுவார்'. அதன் பின்னர் நடைபெறும் மணவறை நிகழ்ச்சியில்தான் மணமகன் மணமகள் நேரடியாகச் சந்திக்கும் சடங்குகள் நடைபெறும். 

என் திருமணம் ஆறு நாட்கள் நடைபெற்றது. என் மனைவிக்கு அப்போது வயது 12. எங்கள் திருமணத்தில் பல பழக்க வழக்கங்கள் இருந்தாலும் "பெண் எடுக்கிக் காட்டுவது' என்பது சுவாரஸ்யமான ஒரு வழக்கமாகும்.

மணமகளை அதுவரையில் மணமகன் பார்த்திருக்கமாட்டான். பெண் எடுக்கிக் காட்டும் சடங்கிற்கு மணமகன் குதிரைமேல் மணப்பெண் வீட்டுக்குச் செல்வான்; மணமகள் வீட்டு வாயிலின் முன் மணமகன் வந்ததும் மணப்பெண்ணின் அத்தை மணப்பெண்ணை அழைத்து வந்து (தூக்கிக்) காட்ட வேண்டும். அப்போதுதான் மாப்பிள்ளை பிள்ளையாண்டான் தனது வருங்கால வாழ்க்கைத் துணைவியைப் பார்க்க நேரும். ஏனெனில் மணப்பெண் தன் கைகளால் முகத்தை வேறு மூடிக்கொள்ளுவாள். அவள் கையை முகத்திலிருந்து எடுக்க பலர் முயற்சிப்பார்கள், பாதி முகத்தைப் பார்த்தும் பாராமலும் தன் விதியை நொந்து கொண்டு மணமகன் திரும்ப வேண்டியதுதான்.

எனக்கும் இதே பாணியில்தான் திருமணம் நடந்தது. திருமணம் எல்லாம் முடிந்த பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து என் அன்னை "இன்று உன் பெண்டாட்டியுடன் போய் பேசிக் கொள்' என்று சொல்லி என்னைப் பள்ளி அறைக்கு அனுப்பினார்.

நானும் சரி என்று என் மனைவியுடன் பேசப் போனேன். என் மனைவி அப்போது நல்ல தூக்கத்தில் இருந்தாள். அவளுக்கு வயது 12தானே?

அவள் தூங்கும்போது நான் மட்டும் ஏன் விழித்திருக்க வேண்டும்? ஆகவே நானும் விழுந்து தூங்கினேன். எனக்கும் அப்போது வயது 13 தானே! அன்று தூங்கியதற்குப் பிராயச்சித்தமாக அதன் பிறகு எனக்காக என் மனைவி பல இரவுகள் கண் விழித்து, கண் கலங்கியிருக்கிறாள்! காரணம் என்னுடைய அரசியல்தான்!

பல நாட்கள் நான் பொதுக்கூட்டம் என்றும் மாநாடு என்றும் போய்விட்டு இரவு 11 மணி 12 மணி 2 மணி ஏன் சில சமயம் காலை 5 மணி இப்படி பல மாதிரியாக வருவேன். நான் வந்து சாப்பிட்ட பிறகுதான் அவள் சாப்பிடுவாள்.

அவளுக்கு அரசியல் எல்லாம் தெரியாது. ""எதற்காக நம் கணவர் இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டும்? நேரா நேரத்தில் சாப்பிடாமல்--தூங்காமல், தொண்டை வலிக்கப்  பேசி, பல இடங்களுக்கு அலைந்து திரிந்து ஏன் சிரமப்பட வேண்டும்?'' என்று நினைப்பாள்.

அவள் எதுவும் கேட்டால், ""உனக்கு ஒன்றும் தெரியாது, பேசாமல் வாயை மூடிக்கொண்டு கிட'' என்று நான் எத்தனையோ முறை அலட்சியமாக அவளைப் பேசியிருக்கிறேன். ஆயினும் அதை எல்லாம் அவள் மனதில் வைத்துக் கொள்ள மாட்டாள்,  "நம் கணவன் - நம் குழந்தைகள் - நம் குடும்பம்  நன்றாக இருக்க வேண்டும். நாலுபேர் நம்மைப் பற்றி கெளரவமாக நினைக்க வேண்டும்'. இதுதான் அவளுக்குத் தெரிந்தது.

யாருக்கும் எந்தத் தீங்கும் மனதால் கூட நினைக்க அவளுக்குத் தெரியாது. 1942-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாரின் கெடுபிடியில் மிகவும் சிரமப்பட்டு விட்டாள். மக்கள் திருவாடானை சிறைச்சாலையை உடைத்து என்னை விடுதலை செய்ததும், நான் தலைமறைவாகச் சென்றுவிட்டேன். 

அச்சமயம் எங்கள் வீட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்தை ஒட்டி நான் வந்திருப்பேன் என்று போலீசார் யூகித்து, திருமண வீட்டிற்குள் பகுந்து பெருங்கலாட்டா செய்துவிட்டார்கள். அதில் என் மனைவி அகப்பட்டுக் கொண்டாள். கைக் குழந்தையுடன் இருந்தஅவளை ஓட ஓட விரட்டி அடித்தார்கள் போலீசார். அவள் விரலில் போட்டிருந்த விலை மதிப்புள்ள வைர மோதிரம் ஒன்று கீழே விழுந்து விட்டது. அதை எடுக்கக்கூடப் பயந்து எடுக்காமலேயே ஓடியிருக்கிறாள். மோதிரம் போனது போனதுதான்!

அவள் ஏற்கெனவே பயந்த சுபாவம் உள்ளவள். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டாள். ஆனால், எதிர்பாராதவிதமாக இந்த போலீசார் விரட்டிய சம்பவம் அவளைக் கொஞ்சம் தைரியசாலியாக்கியது. சிறிது அரசியலிலும் சிரத்தை ஏற்பட வைத்தது.

1944 முதல் அவள் என்னுடன் சென்னையில் வசித்தாள். நான் ஒரு அரசியல்வாதியாகையால், வியாபாரத்தை லாபகரமாக நடத்தத் தெரியவில்லை. "தமிழ்ப் பண்ணை' புத்தகங்களை அழகுறப் போடுவதிலும், புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்துவதிலும், பண்ணையை நாடிவரும் தேச பக்தர்கள், தமிழ் ஆர்வமுள்ளவர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கு உதவி செய்வதிலும் அதிக நாட்டமுடையவனாக இருந்து வந்தேன். அதனால்  லாப நஷ்டம் பார்த்து நெளிவு சுளிவு பார்த்து நடத்தக்கூடிய வியாபார நுட்பம் தெரியவில்லை. வந்ததெல்லாம் லாபம் என்று நினைத்து செலவு செய்து வந்தேன்.

இப்படியிருந்தால் எனக்குப் பணமுடை வராமல் இருக்குமா? சொன்னால் நம்பமாட்டீர்கள், எனக்குப் பணமுடை வரவில்லை. காரணம் என் மனைவி அப்போதைக்கப்போது தன் நகைகளை விற்றுப் பணமாக்கி எனக்குப் பணமுடை தெரியாமல் செய்து வந்தாள்.

டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்கள் ராஜாஜி மந்திரிசபையில் இருந்தபோது, திரு.வி.க. மணிவிழாவிற்கு அழைக்கச் சென்றிருந்தேன். ""என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று டாக்டர் ராஜன் கேட்டார்.

""புத்தகம் போட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்று சொன்னேன்.

""அது சரி... சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

நான் பளிச்சென்று, ""என் மனைவியின் நகைகளை விற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்று சொன்னேன்.

இதை டாக்டர் ராஜன், ராஜாஜி அவர்களிடம் சொல்லி விட்டார். ராஜாஜிக்கு அப்போதுதான் என் நிலைமை புரிந்தது. ராஜாஜி மறுநாள் என் வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் " இனிமேல் நகைகளை விற்பதில்லை' என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு போனார். அன்றிலிருந்து என் மனைவி எந்த நகையையும் விற்காமல் மிஞ்சியதைப் பத்திரப்படுத்தி விட்டாள்.

அவள் இறக்கும்போது, பத்திரப்படுத்திய அந்த நகைகளை என்னிடம் கொடுத்து, ""இது ராஜாஜியால்தான் மிஞ்சியது. அவர் நினைவாக இதைப் பத்திரமாக வைத்திருங்கள்'' என்று சொன்னாள்.

இன்றும் அந்த நகைகள் ராஜாஜியின் நினைவாக என்னிடம் பத்திரமாக இருக்கின்றன. அதில் என் மனைவி உமையாளின் நினைவும் பூரணமாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com