கடிவாய

புதுமாப்பிள்ளை சந்திரனை நாய் கடித்துவிட்டது. 
கடிவாய

1

புதுமாப்பிள்ளை சந்திரனை நாய் கடித்துவிட்டது. 
பிள்ளையார் பால்குடித்த செய்தியைவிட இது ஊருக்குள் வேகமாய்ப் பரவியது. கல்யாணமண்டபத்தில் வரவேற்பு மேசைக்கு பன்னீர்க்கூசாவும், சந்தனக்கும்பாவும் இன்னபிற இனிப்பு, பூ, பழ வகையறாக்களை தட்டுக்களில் எடுத்துக் கொண்டிருந்த போதுமணி அம்மாளுக்கு இச்செய்தி எட்டியதும் உதகை குளிரில் கூறுகெட்டதனமாய் பச்சைத் தண்ணீரில் குளித்த மாதிரி உடம்பெல்லாம் நடுக்கத்தை உண்டு பண்ணியது. இன்னும் சிலமணிநேரத்தில் அமராவதியின் சங்குக் கழுத்தில் அவன் தாலிகட்டவேண்டும்.
""எங்க இருக்கான்?'' நிதானமாகத்தான் கேட்டாள். 
""வீட்ல''  மாடசாமி கொஞ்சம் எட்டி நின்றமானைக்கே சொன்னான். போதுமணியம்மாள் சந்திரனின் நண்பர்களை அடிக்க மாட்டாள்;  ஆனால் அசிங்க அசிங்கமா வைவாள். 
""இங்கதான இருக்கச் சொன்னே. வீட்டுக்கு எதுக்குப் போனியான் ?''
பதில் வருவதற்குள், ""ஏம் போது, என்னம்மோ சொல்றாங்க ! அப்டியா ?'' என சிலம்பாயிக் கிழவி, பின்கொசுவச் சேலை சரசரக்க விசாரணைக்கு வந்தாள். 
""என்னத்த சொல்றாங்கனு இங்கனவந்து சிந்திக்கிட்டுத் திரியிற ?''
""மாப்ளகாரனுக்கு...''  முடிக்க விடவில்லை.
""ஆமா, மாப்ளகாரனுக்கு மாட்டுவண்டிய கட்டிக்கிட்டு மதுரைலருந்து மணக்க மணக்க மல்லியப்பூ அம்பாரம் கொண்டுக்கு வாராக. வேலயப்பாப்பியா...
வேறொண்ணுமில்லீல்ல... நல்லாருக்கான்ல'' போதுமணியின் பதிலில் கிழவிக்கு சமாதானமாகவில்லை.
இதற்குமேலும் இங்கிருந்தால் ஆளுக்காள் வந்துநின்று துளைத்து எடுத்துவிடுவார்கள். முதலில் சந்திரனைப் போய்ப் பார்க்கவேண்டும். 
""சித்த மிந்திதானடா இங்கன இருந்தான். அதுங்குள்ள எந்தக் கோட்டயப் பிடிக்க வீட்டுக்கு படையெடுத்தானாம் ?'' போதுமணி நெஞ்சடைக்கக் கேட்டாள். அவளது கேள்விக்கு பதில் சொல்ல அங்கே மாடசாமி இல்லை. சிலம்பாயிக்கிழவி வந்தபோதே அவன் கழன்று கொண்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் போதுமணியும் அவுக் அவுக்கென நாலுஎட்டு வைத்து வீடுநோக்கி நடக்கலானாள். மண்டபத்தில் டி.எம்.எஸ்சும் பி.பி.சீனிவாசனும் "நல்லவன் எனக்கு நானே நல்லவன்' என முறைவைத்துப் பாடிக்கொண்டிருந்தனர். மணமேடைப் பக்கம் இருந்த மணமகள் அறைவாசலில் பெண்வீட்டார்கள் அங்குமிங்கும் ஓடியபடி மணமகளுக்கு அலங்காரம் செய்யும் முனைப்பு தெரிந்தது. மணமேடைக்குக் கீழே பிளாஸ்டிக் சேர்களை ஒழுங்குபடுத்தும் வேலையிலிருந்த கணவர் வேலுப்பிள்ளையைக்கூட அழைக்கத் தோன்றவில்லை. போதுமணிக்கு. 

2

""ங்ஙொம்மாவுக்குத் தாக்கல் சொல்லியாச்சுப்பா'' மாடசாமி பதட்டம் மாறாமலேயே பேசினான். சந்திரனின் இந்த நிலைக்கு தானே காரணம் என்கிற குற்றவுணர்ச்சி அவனை ஆட்டுவித்தது. இரவெல்லாம் மண்டபத்தில் அலங்கார வேலைப்பாடுகளிலும், தெருவெங்கும் ஃப்ளக்ஸ் தட்டிகளைச் சுமந்து சென்று பந்தக்கால்கள் ஊன்றி விளம்பரம் வைத்தும் உறக்கத்தை தொலைத்தார்கள். சந்திரனின் மாமா வந்து சத்தம் போட்டதனால் புதுமாப்பிள்ளை சந்திரனை மட்டும் கொஞ்சம் முன்னாடியே உறங்க அனுமதித்தனர்...
காலையில் ஜிம்முக்குப் போகவேணாமென அம்மா உத்தரவிட்டிருந்தது, ""ஒருநாப்போல ஒருநா இருக்காது. நல்லநாள் அதுவுமா எக்சசைஸ் பண்ணுகிறபோது இரும்பாகப்பட்டது கையிலகாலில விழுந்து ரத்தக்காயம் படுறது நல்லதில்லை''. ஆனால் வெளியூரிலிருந்து வந்த நண்பர்களை அழைத்துக்கொண்டு மீருசமுத்திரம் கண்மாயைச் சுற்றிப் பார்க்க போனார்கள். முக்கியமாக நீர்நிலையில் புதுமாப்பிள்ளை முகம் காட்டக்
கூடாது என்ற நிபந்தனை எப்படியோ மறந்து போனது. கண்மாயில் நீர் வடிந்த பகுதியில் வெள்ளரித்தோட்டம் பயிரிட்டிருப்பார்கள் அதைக் காண்பிக்கலாம் என மாடசாமி சொல்லியிருந்தான். அதனடிப்படையில் ஐந்தரைக்கெல்லாம் மண்டபத்து மைக்செட்காரன் 
"விநாயகனே  வெவ்வினையை  வேரறுக்க  வல்லான்
விநாயகனே  வேட்கைத்  தணிவிப்பான் 
விநாயகனே  விண்ணிற்கும்  மண்ணிற்கும்  நாதனுமாம்' 
என்று கூவி எழுப்பிவிட காலைக்கடன் கழிக்க கண்மாய்க்கு பயணப்பட்டனர். 
அந்த அதிகாலைப்பொழுதில்தான் வெள்ளரித் தோட்டத்தில் காய் பறிப்பு நடக்கும். நடந்து கொண்டிருந்தது. கடன் "கழித்து' கண்மாயில் காலை அலம்பிவிட்டு ஃப்ரஸ் வெள்ளரிக்காய் வாங்க தோட்டத்துக்குள் மொத்தமாய் நுழைந்தனர். பால்பிஞ்சு வெள்ளரியாய் வாங்கி பேண்ட் பாக்கட்டில் திணித்துக்கொண்டு திரும்புகிறபோது காவலுக்கு கிடந்த நாய் என்ன நினைத்ததோ சந்திரனின் பின்னாலேயே வந்து கொண்டிருந்த அது, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் "லவக்' கெனக் கடித்து விட்டது. பின்னங்காலில் மணிக்கட்டுக்கு சற்றுமேலே "டண்டாண்' நரம்பைக் கவ்வியதில் இருபுறமும் இரண்டிரண்டு பல்தடங்கள் விழுந்திருந்தன. அத்துடன் தோல் உரிந்து ரத்தச்சுவடும் தென்பட்டது.
அதைக்கண்டதும் விருதுநகரிலிருந்து வந்திருந்த மணிமாறன் நாயை காலால் ஓங்கி எத்தினான்... உதைத்த வேகத்தில் நாய் உதைபந்துபோல தூரமாய்ப் போய் விழுந்தது. அதே வேகத்தில் எழுந்து மறுபடியும் சந்திரன்மேல்தான் பாயப்போனது. வெள்ளரித் தோட்டக்கார அம்மாள் ஊளையிடுவதுபோல ஒரு சத்தம் கொடுத்தாள். மாயம்போல் சந்திரனை விட்டுவிட்டு தோட்டக்காரம்மாளின் காலடியில் வந்து நின்றது நாய்.
""ஏம்பா, போனாலும் போகுதுன்னு ஒரு பச்சமண்ண இப்பிடி ஒதைக்கிறியே. மனுசப் பொறப்பு வேற இது வேறயா ? எல்லாமே ஒரு உசுர்தானப்பா; அருகில்வந்த தோட்டக்காரம்மாள் நாயது உடலை ஆதூரமாய் நீவிக் கொடுத்தாள்.
""ஏம்மா, லகளயா? கெண்டங்கால் நரம்பக் கடிச்சுக் கொதறியிருக்கு. பச்சமண்ணு செவப்புமண்ணுனு சொல்லிட்டுருக்க. பாரு பல்தடத்த'' மாடசாமி காயத்தைக் காண்பித்தான்.
""இது காயமில்ல ராசா ! லேசா பல்லு பட்டுருக்கு அவ்வளவ்தே. வெளாட்டுப் பிள்ள தம்பி நம்ம ராசுக்குட்டி எங்ககிட்டக்க இப்பிடித்தே ஆவ்ஆவ்னு பல்லக்காட்டிக்கிட்டு வெளாடுவான். அதுமாதிரி தம்பியக் கண்டதும் படுவா ராஸ்கோலுக்கு ஏதோ ஒரு சந்தோசம் வந்திருச்சு. ஏன்டா பக்கி, பக்கிரிக் கழுத, இப்புடியா ஏவாரம் வாங்க வாரவகள பயமுறுத்துவ! பாரு, ரெம்ப மனசு சங்கடப்படுறாங்கள்ல. ம்?''  கடிந்து கொள்வதுபோல் நாயைக் கைஓங்கி அடிப்பதுபோல பாவனை செய்தவள், அது கால்களை மடித்து பம்மக் கண்டதும் பாசமிகுதியால் குழந்தையைத் தூக்குவதுபோல் அதன் முன்னங்கால் அக்குளில் கைலாகு கொடுத்துத் தூக்கி முகத்தோடு முகம் இணைவைத்துக் கொஞ்சினாள்.
""என்னாங்மா வெவரம் புரியாமப் பேசறீங்க ! அவெ, கலியாண மாப்ளம்மா! பத்துமணிக்கு கலியாணம், பொண்ணு கழுத்துல அவெ தாலியக்கட்டணும்'' தேனி ஈஸ்வரன் பதட்டத்துடன் குற்றம் சாட்டினான். 
சற்றே துணுக்குற்ற தோட்டக்காரம்மாள், அதனை வெளிக்காட்டாமல் ""கொஞ்சமாச்சும் கூறுவேணாமாப்பா... ஒரு கலியாண மாப்புளய இப்பிடியாப்பட்ட எடத்துக்கெல்லா கூட்டிக்கிட்டு வரலாமா? காத்து கருப்பு சீரு அடிச்சிராதா? எளங்கன்னு பயமறியாதுன்றது சரியாத்தே இருக்கு ! இந்த நேரத்தில பைரவத் தீண்டல்கூட நல்லதுதே ! ஒரு மொடக்கு தண்ணியக் குடிச்சிட்டுப் போங்க. சரியாப் போகும்'' தன் கூடாரத்திலிருந்து கொண்டுவந்த பாட்டில் தண்ணீரைச் சந்திரனுக்கு புகட்டினாள். 
போகும்போது ஒரு நுமுசம் என்று அவர்களை நிறுத்திய தோட்டக்காரம்மாள், ""என்னாதே தங்க ஊசின்னாலும் ஊசி ஊசிதான, அதுபோல வீட்டு நாய்னாலும் செய்யறத செஞ்சிரணும்'' என்றவள், மாடசாமியிடம் அவனது செருப்பைக் கழட்டச் சொன்னாள். அதை கையில் வாங்கி,  ""சே நாயே ! சே நாயே !'' சொல்லிக்கொண்டே சந்திரனின் காலைக் காட்டச் சொல்லி கடிவாயில் செருப்பால் அடித்தாள்.

3

""வர்சமெல்லா ஒனக்கும் ஙொப்பனுக்கும் இதே பொழப்பாப் போச்சு. ஒரு நல்லநா பொல்லநா வந்திரக் கூடாது. அன்னைக்கீ னு பாத்துதே என்னத்தயாச்சும் வில்லங்கத்த இழுத்திட்டு வருவீக. ஒங்களோட மல்லுக்கட்டியே எனக்கும் காலம் போயிருச்சு'' என்று வீட்டுக்குள் நுழைந்ததும் தாளிக்கத் துவங்கிய போதுமணியம்மாள், ""இந்நேரத்தில அங்க போய் பேளப்போகாட்டி மண்டபத்திலதே அத்தன கக்கூஸ் வரீஸ்சையா கட்டிப் போட்ருக்கானுகள்ல. ஆயிரஆயிரமா காசும் எண்ணிக் குடுக்கறம்ல. எவனும் எங்குட்டும் போறான்... காசக் கக்கத்துல வச்சுகிட்டு காலணா கடங்கேட்டு காங்கேயம் போன கதையா இருக்கேடா ஒம்பொழப்பு. கையில கங்கணத்தக் கட்டிக்கிட்டு கண்ட எடம் சுத்தலாமா ! ஈசுவரா'' அங்கலாய்த்த நேரத்தில் வேலுப்பிள்ளையும், சிலம்பாயிக் கிழவியும் வந்து நின்றனர். 
""வலிக்கிதா அப்பனு ? மெத்தக் காயமா ! உண்டனா ரத்தம் வந்திருச்சா ?'' அக்கறையுடன் விசாரித்த கிழவிக்காக வேஷ்டியை விலக்கி காயத்தைக் காட்டினான். கடிவாய் கொஞ்சம் வீங்கிச் சிவந்திருந்தது. செந்துருக்கப் பொட்டுப்போல ரத்தம் உறைந்திருந்தது.
ஒண்ணு ரெண்டு, மூணு, நாலு என கிழவி பல்தடத்தை எண்ணிக் கொண்டிருக்க, வேலுப்பிள்ளை ""சோத்தத்தான திங்கிற'' என சேகரித்துக் கொண்டுவந்த வார்த்தைகளால் சந்திரனைக் களமாடத் துவங்கிய சமயத்தில் போதுமணி, ""ஆகவேண்டிதப் பாருங்க. சலசலனு பேசிட்டுருக்காம'' என்றவள், ""நீங்க மொதல்ல மண்டவத்துல போய் நில்லுங்க'' என மகனை கணவனிடமிருந்து தடுத்தாட் கொண்டாள்.
""நாய்க்கார வீட்ல தண்ணி வாங்கிக் குடிச்சியாடா?'' பேருக்கேனும் ஒரு கேள்வி கேட்கவேண்டியிருந்தது வேலுப்பிள்ளைக்கு. செருப்படிவரை வாங்கியதைச் சொல்லவில்லை.
""சரி விடு போதுமணி, இதும் ஒரு தத்துதே. தலைக்கு வந்தது தலாணியோட போச்சுனு நெனச்சுக்க. கொஞ்சூண்டு சுண்ணாம்பு வாங்கி தடவிவிடு. கத்தாளயப் புடுங்கி கல்உப்ப வச்சு இடுச்சு சேத்துவச்சு ஒரு கட்டப்போட்டுவிடு. இல்லியா ஊமத்தாங் கொலைய வதக்கி வச்சுக் கட்டிவிடு. ஒரு மூணுநாள், தன்னால எல்லாம் சரியாப்போகும்'' 
 சிலம்பாயிக் கிழவி தனது வைத்திய அறிவை பிரயோகம் செய்தவேளையில் மணிமாறன் மாடசாமிக்கு ஏதோ சமிக்ஞை காட்டினான். 
""கோச்சுக்காம எல்லாரும் மண்டவத்துக்குப் போங்க. அஞ்சு நிமிசத்துல ஆஸ்பத்திரிக்கிப் போயி ஒரு ஊசியப் போட்டுட்டு வந்திர்ரம். வாடா மாப்ள'' யாரது அனுமதிக்காகவும் காத்திராமல் சந்திரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கிளம்பினான் மாடசாமி. வாசலில் தயாராய் நின்றிருந்த மூன்று பைக்குகளும் பெருத்த உருமல் சத்தத்துடன் கிளம்பின.
""என்னா போது, நெற விசேசத்த வீட்ல வச்சுகிட்டு ஆஸ்பத்திரிக்கி கீஸ்பத்திரிக்கின்னு போவுதுக பிள்ளீக?'' சிலம்பாயிக்கிழவி கையறுநிலையில் திகைத்தாள். 
ஆஸ்பத்திரியில் ஊசிமட்டுமா போடுவார்கள் கடிவாயில் பெரிய கட்டுப்போட்டு அனுப்பப் போகிறார்கள். கட்டோடு மகன் மணவறை ஏறப்போகிறான் !  "ஒச்சத்தோடதான ஒம்பிள்ள தாலியக்கட்டுனான்னு அழியாத பேராகிப்போகுமே !' என்ற கவலையில் கிழவியின் பேச்சு போதுமணிக்கு காதில் ஏறவில்லை.

4

உள்ளூர் மருத்துவமனைகள் அப்போதும் உறக்கம் நீங்கியிருக்கவில்லை. எந்த மனையிலும் டாக்டர்கள் இல்லை. வெள்ளுடை வேந்திகள்தான் கண்களுக்குச் சிக்கினார்கள். அந்த நர்சம்மாக்களும் கூட ஏதோ ஒருமூலையில்தான் கிடந்தார்கள் தேடிப்பிடித்து விசாரிக்கவேண்டி இருந்தது. எல்லா இடத்திலும் எல்லா நர்சுப்பிள்ளைகளும் ஒரேமாதிரியான பதிலைத்தான் சொன்னார்கள். ""நாய்க்கடிக்கு ஜி.ஹெச்.தான் போகணும். மேக்சிமம் எந்த ஆஸ்பிட்டல்லயும் மருந்திருக்காது. மெடிக்கல்லயும் ரேராத்தான் மெடிசன் இருக்கும். அத வேணா வாங்கிட்டு வாங்க இஞ்சக்சன் பண்ணிவிடுறம். பெட்டர் சாய்ஸ் என்னன்னா மெடிசன் தேடி அலையிற நேரத்தில ஜி.எச். போய் அட்மிட் ஆயிடலாம்.''
நன்றி சொல்லக்கூட நேரமில்லாமல் அரசு மருத்துவமனைக்கு விரைந்தன வண்டிகள். 
சந்திரனுக்கு களைப்பாக இருந்தது. காலையில் எழுந்து ஒரு காப்பி கூட சாப்பிடவில்லை. தவிரவும் இரவு அதிகமான விழிப்பில் இருந்தமையால் ஒரு கிறுகிறுப்பும் உறக்கமும் வந்து சொக்கடித்தது. வண்டியில் பின்னால் உட்கார்ந்து பயணித்தவாக்கில் உறங்கலானான். உறக்கச்சடவில் சந்திரனின் தலை தொங்கியது கண்ட மணிமாறனுக்கு நெஞ்சம் துணுக்குற்று ஒரு பயம் வந்தது. அதனை யாரிடமும் பரப்பாமல் தன்னளவில் சரிக்கட்ட எண்ணி, வண்டியின் ஓட்டத்திலேயே உறங்கிவழிந்த சந்திரனின் முதுகில் அறைந்தான்.
அலங்க மலங்க விழித்த சந்திரன் அசிங்கமாய் மணிமாறனைத் திட்டலானான்.
""நாம என்னா மாதிரி த்ரில்லிங்ல இருக்கம். மாப்ள ஜாலியா ஒறங்கிக்கிட்டு வாரான் டா''
""நானும் பார்த்தேன்'' என மாடசாமி மணிமாறனுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தான். 
""ஒறக்கச்சடவுல கீழகீழ விழுந்துறாத அதுக்கும் ஒங்க அம்மாகிட்ட வாங்கி கட்டிக்க முடியாதுப்பா. கொஞ்சநேரத்துக்கு ஸ்டெடியா ஒக்காரு. முடியலியா,  நீ வந்து வண்டிய ஓட்டு''  புதுமாப்பிள்ளையை வேலைவாங்கக்கூடாதென்றுதான் பின்புறம் உட்கார்ந்துகொள்ள அனுமதித்திருந்தனர். 
சந்திரன் காப்பி கேட்டான். 
""அதுக்கெல்லாம் டைம் இல்லை'' மாடசாமி நிர்தாட்சண்யமாய் மறுத்தான். உள்ளூர்க்காரன் அத்தனை பழியும் அவன்தான் சுமக்கவேண்டும்.
ஊசிபோடுகிறபோது வெறும் வயிற்றில் போடக்கூடாது என்ற தத்துவத்தை சானார்பட்டி ராஜேந்திரனும் சொல்ல, அனைவரும் வழிக்கடையொன்றில் வண்டியை நிறுத்தினர். 

5

"இன்னும்  பார்த்துக்  கொண்டிருந்தால்  என்னாவது, 
இந்தப்   பார்வைக்குத் தானா  பெண்ணானது', 
என்று பி.சுசீலா, டி.எம்.எஸ் சிடம் சிணுங்கிக் கொண்டிருந்தார். 
மண்டபத்தில் நடுத்தர பாடல்கள் ஒலிபரப்பாகத் துவங்கின. மெல்லமெல்ல இனி நாதஸ்வர இசைக்கு இறங்கி விடுவார்கள். காலைச் சாப்பாடுக்கு உள்ளூர் ஆட்கள் வரமாட்டார்கள் என முடிவுசெய்து மெனு தரவில்லை. என்றாலும் சமையல்காரர் சமயோசிதமாய் ஐம்பதுபேர் சாப்பிடுகிறமாதிரி பொங்கலும், இரவு மீந்த மாவில் இட்டிலியும் செய்து வைத்திருந்தார். பெண்வீட்டுக்காரர்களும், சிறு குழந்தைகளும் பசியாறிக் கொள்ளலாம். பத்தரைக்குமேல் முகூர்த்தம் என்பதால் ஆட்களின் வருகை மந்தமாகத்தான் இருந்தது இனி முகூர்த்த நேரத்தை ஒட்டியே கூட்டம் பெருகிவரும். சமையல்கட்டிலிருந்து மணப்பெண்ணுக்கு உணவு எடுத்துக்கொண்டு ஒருபெண் மணமகள் அறைக்குள் நுழைந்தாள் 
அந்த சமயம் போதுமணியம்மாளும் பெண்ணின் அறைக்குள் நுழைந்தாள். ""நல்லா ஒறங்கினியாம்மா'' மணப்பெண்ணை விசாரித்தாள். "ம்' என முனகலில் பதிலளித்தாள் அமராவதி. அடுத்து ""காப்பி வந்திச்சா'' எனக்கேட்டாள். ""வரல அத்த நாங்க போய் வாங்கி வந்தோம்'' மணப்பெண்ணின் தோழிகளில் ஒருத்தி பொறுப்பாய் பதில் தர, இன்னொருத்தி, ""காப்பிக்கு என்னா, காலா இருக்கு நடந்து வர''  என கீச்சுக்குரலில் கிண்டலடித்ததும் மணப்பெண் உட்பட சில பெண்கள் சிரித்ததும் போதுமணிக்குக் கேட்கத்தான் செய்தது.
""சடச்சிங்காரம் வந்திருச்சு. மல்லியப்பூ பத்தாது, அத்தையம்மா !'' மணப்பெண்ணின் கூந்தலுக்கு எண்ணெய் தடவிக்கொண்டிருந்த பெண் கேட்டாள். அப்போது, ""வாங்க அத்தாச்சி'' என்றபடி வெளியிலிருந்து வந்த அமராவதியின் தாயார் போதுமணியை வாய்நிறைய வரவேற்றாள். 
""மருமகளப் பாத்துட்டுப்போக வந்திருக்காங்க''
""பின்ன என்ன ஒன்னியவா பாக்க வருவாக''
""அதொண்ணுமில்ல மல்லியப்பூ காணுமா ?''
""போதும்போதும். அதேன், சடச்சிங்காரம் இருக்கு, கனகாம்பரம் இருக்கு, பத்தாக்கொறைக்கு ரோசாப் பூவுமிருக்கில்ல. இதுக்குமேல என்னா !'' அமராவதியின் தாயார் அடக்கமாக பதிலளித்தார்.
""இங்க பூவுக்கெல்லா கொறவில்ல அத்தாச்சி. வேணுங்கறதச் சொல்லுங்க... மல்லியப்பூ ரெண்டுபந்து போதுமா. எல்லாருக்கும் வேணுமில்ல நாலுபந்தா குடுத்துவிடுறேன். அத்தாச்சி. பொம்பளப்பிள்ளைகள மொதல்ல குளிக்கச் சொல்லுங்க. அடுத்து ஆம்பளைக வந்துடுவாக. சட்டுபுட்டுன்னு சாப்பிட்டு ரெடியாகிடுங்க'' 
மணவறையில் குருக்கள் அப்போதுதான் தனது உதவியாளருடன் வந்து நின்றிருந்தார். அவருக்கு ஒரு வணக்கத்தைப் போட்ட போதுமணி அவரைச் சாப்பிடச் சொன்னாள். காலை ஆகாரம் எடுப்பதில்லை என்ற குருக்கள், உதவியாளனைப் பார்த்து சமையல்கட்டில்போய் தனக்கு ஒருதம்ளர் பால்மட்டும் தண்ணீர் கலக்காமல் வாங்கி வரச் சொன்னார். உபரியாக எல்லாரும் தயாராகிவிட்டனரா எனவும் கேட்டுக்கொண்டார். 
மணமகன் அறையில் வேலுப்பிள்ளை, சிலம்பாயி கிழவியுடன் போதுமணியின் மகள்கள் இருவரும் அவர்களது கணவன்மாரும் கேள்விகளை ஏந்தியவண்ணம் போதுமணியின் வருகையை எதிர்கொண்டனர்.  

6

அரசுமருத்துவமனையின் வாசனை முகப்பு வாயிலிலேயே குடலை உருவியது. உள்முகமாய் இருநூறு மீட்டர் பயணித்து வண்டிகளை நிறுத்திவிட்டு ஓ.பி. சீட்டுக்கள் தருமிடத்தைத் தேடினர். மாடசாமி மட்டும் ""சீட்டு எடுத்துக்கிருங்க ந்தா வாரேன்'' என மொட்டையாய் சொல்லிவிட்டு மருத்துவமனையின் ஆகிருதிக்குள் மறைந்துபோனான். 
சந்திரனை இருக்கையில் இருக்கச் சொல்லிவிட்டு எல்லோரும் வெளிநோயாளி பிரிவினைக் கண்டுபிடித்து வரிசைக்கு ஓடினர். சினிமா கவுண்டர்போல நிக்கலில்குழாய் வளைத்து இடுப்பு உயரத்திற்கு அணைபோல நட்டிருந்தார்கள். இந்நேரத்திற்கே ஐம்பது பேருக்குமேல் வரிசை நீண்டிருந்தது. ஆனாலும் பத்து நிமிடத்திற்குள் முதல் சீட்டைப் பெற்றுக்கொண்டு ராஜேந்திரன் வர, அடுத்த இரண்டு நிமிடத்தில் ஈஸ்வரனும் ஒரு சீட்டை எழுதி வாங்கி வந்தான். 
""எதுக்குடா ரெண்டு சீட்டு ? நல்லவேள நீயும் ஒண்ணு வாங்காம வந்தியே'' அன்பழகனைப் பார்த்து விரக்தியாய்ச் சிரித்தான் சந்திரன். ""நீ ஒண்ணு வாங்கி, மாடசாமி ஒண்ணு வாங்கிட்டா வந்த எல்லாருக்கும் ஒரு ரிக்காடாகி இருக்கும்'' என அன்பழகனும் சிரித்தான். 
""மாடசாமி வந்த பெறகுதே உள்ள போகணுமா ?
உள்ளூர்க்காரெ அவெந்தான  டயமாகுது மாப்ள, மண்டபத்துல என்னா குந்தக்கேடு ஆகிக்கிட்டிருக்கோ'' என கலங்கிய சந்திரன், ""ஈஸ்வரன் இருக்கான்ல. வாடா உள்ளபோவம். மாடசாமி, வரவரைக்கும் வெய்ட்பண்ணச் சொன்னானா?'' 
அப்படி எதுவும் சொல்லவில்லை. "வரேன்' எனச் சொன்னான். ஒருவேளை அவனுக்கு எதும் பாத்ரூம் அவசரம் வந்து போயிருந்தால்... அடச்சே !
சந்திரனை எழுந்ததும் வலதுபக்கம் போவதா இடதுபக்கமா என குழம்பியது. அத்தனை பக்கமும் ஆட்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். அந்த ஹாலின் மைய பாகத்தில் இருந்த ஓர் அறையில் மருந்து குப்பிகளும் ஆள்படுக்கும் மேசையுமாய் இருந்தது. அறையின் நுழைவு வாசலில் நடுத்தர வயதுடைய நர்சுப்பெண் கைகட்டி நிச்சலனமாய் நின்றிருந்தார். அவரிடம் அன்பழகன் சீட்டைக் காட்டி, "" எங்கே போக?'' என வழிகேட்க, அப்போதும் முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் கைகாட்டி மரம்போல இடதுபக்கம் கையைக் காட்டினார்.
அத்தனை அறைகளும் பெரிதுபெரிதாய் இருந்தன. இதனால்தான் பொதுமக்கள் பெரியாஸ்பத்திரி என்கிறார்களோ? அனைத்து அறைகளிலும் நோயாளிகள் வரிசைவரிசையாய் நின்றிருந்தனர். வெளிநோயாளிகள் அறையில் நல்ல கூட்டம்.  இத்தனை பேரையும் கடந்து எழுதிவாங்கி ஊசிபோடுமிடத்தில், காயத்திற்கு கட்டுபோடுமிடத்தில், மாத்திரை வாங்குமிடத்தில் வரிசைபோட்டு . . .! ஈஸ்வரனையும் அன்பழகனையும் பார்த்தான் சந்திரன். 
""இதில என்னைக்கிடா நீஞ்சி கரையேற ?'' ராஜேந்திரன் வாய்வார்த்தையாய் சொல்லிவிட்டான். 
சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. 
நேரம் ஒன்பதரை. 
""கால் வலிக்கிதா மாப்ள ?'' ஈஸ்வரன், சந்திரனின் தோளைப்பிடித்துக்கொண்டு நோயாளிகள் வரிசையில் நின்றான்.     

7

சந்திரன் சின்ன வயசாக இருந்தபோது வீட்டுக்குப் பிச்சை வாங்கவந்த குடுகுடுப்பைக்காரர், அவன் சோத்துக் கும்பாவோடு நின்ற கோலம் பார்த்து "இவன் ஒரு சாப்பாட்டு ராமன்' என பட்டம் கொடுத்தார். தொடர்ந்து, "இவன் யாருக்கும் எதற்காகவும் கவலைப்படாத ஆத்துமா' என்று குறி சொல்லி, ஒரு கும்பா சோறும், நாலணா காணிக்கையும் வாங்கிக் கொண்டு போனார்.
பள்ளிக்கூடத்திலும் வாத்தியார்களிடம் நல்லபேர் வாங்கினாலும் மார்க்கெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி  இல்லை. தவிர, எப்போ பார்த்தாலும் ஏதாவது     ஓர் இடத்தில் விழுந்து எழுவதும். கையை முறித்துக் கொண்டும், காலை உடைத்துக்கொண்டும் வருவதே வாடிக்கையாயிற்று. தேனி வரசித்திவிநாயகர் கோயில் பேட்டையிலிருக்கும் சங்கையாநாடார் எலும்புமுறிவுக்கு நல்ல வைத்தியர் அவரிடம் பற்றுவரவு வைக்குமளவு ஆகிப்போனது சந்திரனின் பாடு. 
அதைவிட இன்னொரு கொடுமை தெருவிலிருக்கும் நாய்ச் சனியனெல்லாம் சந்திரனை விரட்டாத நாளில்லை. இத்தனைக்கும் நாய்க்குட்டியென்றால் அவனுக்கு கொள்ளைப்பிரியம். வாங்கித் தின்னக் கொடுக்கிற காசெல்லம் நாய்களுக்கு பிஸ்கட்வாங்கி ஊட்டுவான்.. அப்படியும் சந்திரனை விரட்டத்தான் செய்தன.. அன்னஞ்சி நாயக்கரிடம் பெளர்ணமி பூசைபோட்டுக் கேட்டபோது, சுக்கிரன் நீசம் பெற்ற சாதகர்களுக்கு இப்படித்தான் நடக்குமாம். சூதானமா நாமதே நடந்துக்கணும் எனச் சொல்லியிருந்தார். சமீபத்தில்தான் சந்திரனின் நண்பன் சீதரன் வீட்டுநாய்களை எப்படித் தொடவேண்டும் என சின்னதாய் பாடம் எடுத்தான். ""மொதல்ல நாடிக்கு அடில கைகுடுத்து தடவி, ஹேண்ட் ஷேக் கொடுத்து, பிறகு அதோட தலையத் தடவறது பிடறிய நீவறது எல்லாம் செய்யணும்.''
""கலியாண நாளையிலும் இப்பிடித்தே ஆகும்னா என்னாதேஞ் செய்யிறது. ஒனக்காச்சும் கூறு வேணாமா ம்மா'' என போதுமணியம்மாளை மகள்கள் இருவரும் கட்டி ஏறினார்கள். 
""அதுக்காக நா, வயசுப்பய கூட பின்னாடியே திரிய முடியுமா? ராவெல்லா கிருமமாத்தான இருந்தான். காலைல கண்ணுமுழிச்சுப் பாக்கறப்ப இப்பிடி கடிவாயோட வாரான்னா விதின்னு சொல்லாம வேறென்னத்தச் சொல்ல'' போதுமணி, மகள்களை ஆற்றுப்படுத்தியபோது நேரம் பத்தாகிக் கொண்டிருந்தது. வேலுப்பிள்ளை அடிக்கடி மணிக்கட்டை பார்த்துக் கொண்டிருந்தார். ""ஒரு ஊசியப்போட இத்தன பொழுதா ! இந்த நேரத்தில யாராச்சும் ஆஸ்பத்திரிக்குப் போவாகளா. கெழவி உனக்கெலா ஒண்ணுந் தெரியாதா'' பேச்சுவாக்கில் சிலம்பாயிக் கிழவியையும் சேர்த்துக்கொண்டார். 
""எங்க நின்னு பேச விட்டாங்கெ. பேசிட்டிருக்கும்போதே மொகமூடிக் கொள்ளக்காரங்கெ போல புள்ளய அச்சுத்தூக்கா தூக்கிட்டுப் போய்ட்டாங்களே''  என பதிலளித்த போதுமணி, திடீரென வேகமெடுத்துப் பேசினாள். 
""இங்கனக்குள்ள நின்டே கொடஞ்சுக்கிட்டிருக்காட்டி எங்கடா இருக்கீகன்னு போனப்போட்டு கேக்க வேண்டீதான ! ஆம்பளைக்கு அதக் கூட சொல்லித் தரணுமா ?''
""அப்டீங்கிறயா போதுமணி, செரி . . ந்தா கேக்குறேன்''
இரண்டாம்முறை போட்டபிறகே போனை எடுத்து மாடசாமி பேசினான். 
""ஆஸ்பத்திரிலதாப்பா இருக்கம். வந்திருவம்''
""அய்யர் வந்து மணவறைல ஒக்காந்துட்டார்ப்பா. சட்டு புட்டுனு வரப் பாருங்கப்பா. அசிங்கப்படுத்தீராதீக''
""எந்த ஆஸ்பத்திரினு கேட்டீகளா ?'' 
மறுபடி போனை எடுத்தார் வேலுப்பிள்ளை. 
""எங்கனு கேட்டு, மருமகன அனுப்பிச்சுவிட்டு அவன இழுத்துவரச் சொல்லுங்க. வெளக்கமாறு வாங்கப்போனா விதியும் கூட வருது. பெருக்குமாற எடுக்கப்போனா பேயும் தொடுத்து வருதுன்ன கணக்கா ஒன்னத் தொரத்த கைய ஓங்குனா இன்னொண்ணும் தொங்கிக்கிட்டு வந்து சேருதே. ஈஸ்வரா''  போதுமணி உஸ்சுக் கொட்டியபோது, 
""அய்யரு கூப்புடுறாரு'' என மணமேடையிலிருந்து அழைப்பு வர, போதுமணிக்கு மறுபடியும் உடம்பில் உதறலெடுத்தது.

8

மாடசாமி தேடிப்போன ஆள் கண்ணுக்கு சிக்கவில்லை. மருத்துவமனையின் நான்குமாடியும் ஏறி இறங்கிவிட்டான். வார்டு வார்டாய் நுழைந்தும் பார்த்து
விட்டான். எங்குமே தென்படவில்லை. போனும் போகமறுத்தது. தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தது. ஆபரேசன் தியேட்டரில் இருக்கலாமோ ? இந்த நேரத்தில் ஆபரேசன் நடத்துவார்களா ? இப்படி கேள்வியும் பதிலுமாய் குழம்பியபடி இண்டு இடுக்கெல்லாம் சுற்றி வந்தான். 
முகூர்த்தத்துக்கு நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது என்கிற சிந்தனையும் வந்து போய்க்கொண்டிருந்தது. "ஆள்' இருந்தால் பத்து நிமிசம்தான். நேரே டாக்டரிடம் கையெழுத்து வாங்கி ஊசியைப் போட்டுவிடலாம். 
கீழேவந்தபோது வெளிநோயாளிகள் வரிசையில் கட்டக் கடேசியில் நண்பர்கள் புடை சூழ நின்றிருந்தான் சந்திரன். மாடசாமியைக் கண்டதும் ஆளாளுக்கு கட்டிஏறினர். அந்தச் சத்தத்தில் வரிசை நிலைகுலைந்தது. நெறிப்படுத்திக் கொண்டிருந்த நபர் ஓடிவந்து ,""சத்தம் போடாதீங்க'' என இவர்களைப் பார்த்து சத்தம் போட்டான்.
மாடசாமி அனைவருக்கும் தன்னிலை விளக்கம் தந்தான். 
""ஒனக்கே தெரியாட்டி யாராச்சும் வேலபாக்கற ஸ்டாப்புகிட்ட கேக்கலாம்ல'' 
ஈஸ்வரனது யோசனைப்படி சத்தம்போட்ட நபரிடமே "விஜயலட்சுமி - ஸ்டாப் நர்சு' குறித்துக் கேட்டான் மாடசாமி. அனைவரது கண்களும் விரிந்தன. அந்த நொடியில் சந்திரனின் பிரச்னையை மறந்தனர். மாடசாமி கமுக்கமாய் கண்சிமிட்டி "நம்மாளுதே' என்றான். 
நாலைந்து விஜயாக்கள் இருப்பதாகச் சொன்ன நபரிடம் சரணடைந்து சந்திரனது பிரச்சனையை விளக்கி உதவிடக் கோரினர். நூறுரூபாய்த் தாளையும் கண்ணுக்கு காட்டினர். அதிசயம் போல் நடந்தது அது. ரூபாய் நோட்டைப் பார்க்காமலேயே வரிசையிலிருந்து சந்திரனை விலக்கி டாக்டரிடம் அழைத்துப் போனான் அந்நபர்.
"நிஜமாவா?' டாக்டர் தனது வெள்ளுடையில் தீட்டுப்படாமல் அவ்வப்போது ஒதுங்கி ஒதுங்கி இருந்து கொண்டு சந்திரனைப் பரிசோதித்தார்.
""காலக் காமிடா!'' ராஜேந்திரன், சந்திரனது காலை, டாக்டரின் பார்வைக்கு ஏதுவாய்த் திருப்பினான். அந்தத் திருகல் சந்திரனுக்கு முழங்காலில் சுள்ளென வலியைத் தந்தது.
""கலியாணம்றது நிஜமாப்பா?'' டாக்டர் காயத்தைப் பார்க்காமல் சந்திரனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.
""ஆமா சார்'' சந்திரன் மெலிந்த குரலில் சொன்ன பொழுது, மாடசாமி சட்டைப்பையிலிருந்த கல்யாணப் பத்திரிகையை எடுத்துக் காட்டினான். ரெம்பவும் கசங்கி இருந்தது. 
பத்திரிகையையும் காயத்தையும் ஒருசேரப் பார்த்தார். ""பேண்ட்ட மேல தூக்கு. ம்... போதும். என்ன நாய் ?''
யாருக்கும் ஜாதி தெரியவில்லை. நண்பர்கள் மாடசாமியைப் பார்த்தனர். ""நாட்டு நாய்தான் சார்''
""வீட்டு நாயா? வெறி நாயா ?''
""தோட்டத்து நாய் சார்''
""ப்ச், நாக்கத் தொங்கவிட்டுகிட்டு, வாய்ல எச்சில்கிச்சில் வடிஞ்சதா. இட்டீஸ் ரேப்பீஸ் ?''
""அப்பிடியெல்லா மில்ல சார்''
""ரைட், இப்பத்தைக்கி ஒரு டிடி இஞ்செக்சன் போட்டுக்க, ரெண்டுநாள் கழிச்சு, ஏ ஆர் வி போட்டுக்க. இப்ப அங்க ஆள் வந்திருக்க மாட்டாங்க... வர கொஞ்சம் லேட்டாகும்''
""கட்டுப்போடணுமா சார்?''
""டெஃபனெட்டா''
டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஊசி போடுமிடம் வந்தபோது அந்த அறையில் விஜயலட்சுமி சிரிஞ்சில் மருந்தேற்றிக் கொண்டிருந்தாள்.
விஜி ... மாடசாமி வரிசையை குலைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். 
ஊசி போட்டுமுடித்ததும், ""கட்டுப்போட வேணாம். டிங்சர் போதும்'' என்று விஜியே நேரில் வந்து சந்திரனது காயத்தைக் கழுவி மருந்திட்டாள்.
""கல்யாண மாப்ள குளிச்சிட்டாரா ?'' விஜிதான் கேட்டாள். 
""போய்த்தான்''
""வேண்டாம்... குளிக்க வேண்டாம். ஊசிபோட்டுட்டு குளிக்கக் கூடாது''
""குளிக்காம தாலிகட்டவா?'' 
கை கால், முகம் மட்டும் கழுவிவிட்டு பட்டுத்துணிகளை உடுத்திக்கொண்டு மணவறை ஏறினான்,  சந்திரன்.

9

""ஏங்க, தொப்புள்ளயா ஊசி  போட்டாங்க ?''
முதலிரவில் பால்ச் செம்பை அவனிடம் தந்துவிட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து சந்திரன் பால் குடிக்கும் "அழகை' நோட்டம் விட்டபடி கேட்டாள் அமராவதி. 
சுவரில் தெரிந்த அவனது நிழல் வானத்தை நோக்கி ஊளையிடும் நாயை நினைவூட்டியது அவளுக்கு.          
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com