திரைக் கதிர்

"மைனா' படத்தின் மூலம் பிரபலமான அமலாபால் தொடர்ந்து சில கவனிக்கத்தக்க படங்களில் நடித்தார்.
திரைக் கதிர்

"மைனா' படத்தின் மூலம் பிரபலமான அமலாபால் தொடர்ந்து சில கவனிக்கத்தக்க படங்களில் நடித்தார். விஜய் ஜோடியாக "தலைவா' படத்தில் நடித்தார். அப்போது அப்படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய்யுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து அமலாபால் மீண்டும் நடிக்க வந்தார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான "ராட்சசன்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ச்சியாக கதாநாயகி மற்றும் தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார். இந்நிலையில் மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் உண்டா என்ற கேள்விக்கு அமலாபால் பதில் அளித்திருக்கிறார். அதில் அவர், ""முதலில் நான் செய்துகொண்ட திருமணம் எனது விருப்பத்தைப் பொறுத்து நடந்தது. ஆனால் அது வெற்றியாக அமையவில்லை. எனவே எனது மறுதிருமணம் பற்றிய முடிவை எனது பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்கு நான் சம்மதம் தெரிவிப்பேன். அதேசமயம் நான் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.


"காலா' படத்தில் வில்லனாக நடித்தவர் நானா படேகர். பாரதிராஜா இயக்கிய "பொம்மலாட்டம்' படத்திலும் நடித்திருந்தார். ஹிந்தியில் கவனித்தக்க நடிகராக வலம் வரும் இவர் மீது  நடிகை தனுஸ்ரீ தத்தா "மீடூ' விவகாரத்தை கிளப்பினார். அதில் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.  10 வருடத்துக்கு முன்பு ஒரு படத்தில் நடித்தபோது நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இந்த புகாரை மறுத்த நானா படேகர், தனுஸ்ரீ மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதற்கு பதிலடி தரும் வகையில் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் பாலியல் புகார் அளித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் "ஹவுஸ்புல் 4- ஆம் பாகம்'  பட ஹீரோ அக்ஷய்குமார் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.  அத்துடன் தான் நடிக்கும் படத்தில் பாலியல் தொல்லை புகார் கூறப்பட்ட ஒரு நடிகர் நடிப்பதை ஏற்க முடியவில்லை. அவர் மீதான குற்றத்துக்கு சட்டப்படி அவர் தீர்வு கண்டு வந்த பிறகே இப்படத்தின் படப்பிடிப்பில் நான் கலந்துகொள்வேன். அதுவரை படப்பிடிப்பை தள்ளி வையுங்கள் என்று தயாரிப்பாளரிடம் தெரிவித்தார். இந்நிலையில் ஹவுஸ்புல் 4-ஆம் பாகம் படத்திலிருந்து நானா படேகர் விலகிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


"சுப்ரமணியபுரம்', "வடகறி', "யட்சன்', "யாக்கை' போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு சில படங்கள் வெற்றியைத் தேடித் தந்தாலும் அடுத்தடுத்து சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தெலுங்கு சினிமாவிலும் இதேநிலைதான் சுவாதிக்கு தொடர்ந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. இதற்கிடையில் காதல் கிசுகிசுக்களில் சுவாதி சிக்கினார். இந்நிலையில் தனது நீண்டநாள் நண்பரை மணக்க உள்ளதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஆண்டு சுவாதிக்கும் அவரது நண்பருமான, விமான பைலட்டுமான விகாஸ் வாசுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு,"" கணவர் சம்மதித்தால் நடிப்பேன்'' என்று கூறிவந்தாலும் புதிய படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம் சுவாதி. சினிமாவில் நடிக்க மறுத்து வந்தாலும் திரையுலகில் ஏற்கனவே நடித்த நடிகர்களுடன் நட்பாகப் பழகி வருகிறார் சுவாதி. சமீபத்தில் நடிகர் ராணாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தபோது சுவாதி பங்கேற்றார். விரைவில் சென்னைக்கு வந்த தனது தமிழ் சினிமா நண்பர்களையும் சந்திக்க உள்ளார்.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம்  "தர்மபிரபு'. இப்படத்தை முத்துகுமரன் எழுதி இயக்குகிறார்.  விமல் நடித்து  வரும் "கன்னிராசி' படத்தை இயக்கி முடித்துள்ள இவர்,  அப்படம் வெளிவருவதற்கு முன்பாக இப்படத்தை  இயக்குகிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்குப் போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டிச் செல்கிறார்கள்.... தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.  இப்படத்திற்காக பிரத்யேக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. எமலோகம் போன்ற அரங்குகள் அமைக்கப்படுகிறது. கலை இயக்குநராக சி.எஸ். பாலசந்தர் பொறுப்பேற்றுள்ளார். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடிக்கிறார். "விஸ்வாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அஜித்  ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்றது. மும்பையில் தற்போது சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்துக்குப் பிறகு "சதுரங்க வேட்டை' மற்றும் "தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக உள்ளது.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான "பிங்க்' படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். , "பிங்க்' படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. எனவே, இந்தப் படத்திலும் பாடல்கள் இருக்காது என்கிறார்கள். அஜித் ரசிகர்களுக்காகத் பாடல்களைச் சேர்க்கலாமா என படக்குழுவினர் விவாதித்து வருகின்றனர்.

- ஜி.அசோக் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com