திரைக் கதிர்

எளிய கதைகளின் மூலம் எப்போதும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவர் தனது லட்சியப் படமாக  "மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி வருகிறார்.
திரைக் கதிர்

எளிய கதைகளின் மூலம் எப்போதும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவர் தனது லட்சியப் படமாக  "மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி வருகிறார். 16-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவரும், பிரிட்டிஷ்காரர்களை தீவிரமாக எதிர்த்தவருமான குஞ்சலி மரக்காரின் வாழ்க்கை வரலாறாக இது உருவாகி வருகிறது. குஞ்சலி மரக்கார் வேடத்தில் மோகன்லால்  நடிக்கிறார். இளம் வயது மோகன்லால் வேடத்தில் அவரது மகன் பிரணவ் நடிக்கிறார். 22 வருடங்களுக்கு முன் "சிறைச்சாலை', "காலாபாணி' ஆகிய படங்களில்  இணைந்து நடித்திருந்த மோகன்லால், பிரபு இருவரும், இப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். சீன நடிகர் ஒருவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கிறார். மலையாள சினிமாவில் முக்கியமான மைல் கல் சினிமாவாக இது இருக்கும் என கருதப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கேரளத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

-------------------------

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தியில் "தடக்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்து கரண்ஜோகரின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஜான்வியுடன் நடிகர் ஒருவரின் பெயரை இணைத்து காதல் கிசுகிசு வந்த வண்ணம் உள்ளது. இது பற்றி அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்...""எனக்கு சிறுவயதிலேயே ஒரு சிலர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதை காதல் என்று கூட சிலர் சொல்வார்கள். அந்த ஈர்ப்பு எனது எண்ணங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருந்தது. சில சமயம் ஹாலிவுட் நடிகர் மீது ஆசை வரும். பிறகு இன்னொருவரை பிடிக்கும். இதையெல்லாம் என்னவென்று சொல்வது? சில வருடங்களுக்கு முன் நான் இத்தாலியில் உள்ள ப்ளோரென்ஸ் நகருக்கு சென்றேன். அந்த இடத்தை பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனது திருமணம் நடந்தால் இந்த இடத்தில்தான் நடக்க வேண்டும் என்று எண்ணினேன். இன்னமும் அந்த எண்ணம் தான் எனக்கு உள்ளது. ப்ளோரென்ஸில் திருமணம் நடக்கும்போது தங்க ஜரிகை பார்டருடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு சேலை கட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார் ஜான்வி.

-------------------------

முன்னணி நடிகைகள் பட்டியலில் உள்ள ஹன்சிகா, தற்போது தனது 50-ஆவது படமாக "மஹா' படத்தில் நடிக்கிறார். இது தவிர "துப்பாக்கி முனை', "100' படங்களிலும் நடித்து வரும் அவர் 50-ஆவது படம் குறித்த தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.  ""நடிக்க வந்தது முதலே எனக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். யார் கதாநாயகன் என்பதைத் தாண்டி திரைக்கதைக்காகவே நடிக்கிறேன்.  திடீரென்று நான் ஒல்லியாகிவிட்டதாக கூறுகிறார்கள்.  திடீரென்று ஒல்லியாகவில்லை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து இரண்டு மூன்று கிலோ எடையைக் குறைத்துள்ளேன். அவ்வளவுதான். அதேசமயம் எனது முக தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பார்த்துக்கொண்டேன். 50 படங்கள் என்பது சாதனை இல்லை. இனிமேல்தான் நான் சாதனைகள் செய்ய வேண்டும்.  

சமீபகாலமாக நான் நடிக்கும் படங்களில் மேனரிஸம் (ஸ்டைலான சைகைகள்) செய்வதில்லையே என்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் என் படத்தை கடைசியாக எப்போது பார்த்தார்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது'' என்று கூறினார் ஹன்சிகா. 

-------------------------

"நேரம்', "ராஜா ராணி', "நய்யாண்டி', "திருமணம் எனும் நிக்ஹா' என தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தார் நடிகை நஸ்ரியா. முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று 2014-ஆம் ஆண்டு மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்து நடிப்புக்கு முழுக்குபோட்டார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்திருப்பதுடன் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். 

பஹத் பாசில் நடிக்க அமல் நீரத் இயக்கிய "வர்தன்' மலையாளப் படத்தை தயாரித்துள்ளார் நஸ்ரியா. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் அமல் நீரத், "" நஸ்ரியா எங்களுக்கு  தயாரிப்பாளராகக் கிடைத்தது அதிர்ஷ்டம். அவரைப்போன்று பட குழுவினருக்கும்  இயக்குநருக்கும் சுதந்திரம் தரக்கூடிய தயாரிப்பாளர் யாரையும் இதுவரை நான் பார்த்ததில்லை.

படப்பிடிப்பு பணிகளை மாலை 6 மணிக்கெல்லாம் முடிக்க சொல்கிறார். தயாரிப்பு செலவை கருதி 6 மணிக்குமேல் படப்பிடிப்பு நடத்த நான் முயன்றாலும் என் அருகில் வந்து இன்றைக்கு எடுத்த காட்சிகள் போதும் நாளை பணியைத் தொடருங்கள் என்று சொல்வார் நஸ்ரியா'' என்கிறார். 

-------------------------

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் "பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  திரு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸூதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஊட்டியைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு  டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.  தற்போது வாரணாசியில் ரஜினி, த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் இயக்குநர் மகேந்திரனும் நடிக்க இருக்கிறார். "தெறி' படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், தொடர்ந்து "நிமிர்', "மிஸ்டர் சந்திரமௌலி' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com