பேல்பூரி

படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை;பயிரிடுபவனும் கடவுள்தான்.
பேல்பூரி

கண்டது

(நாகர்கோவிலில் ஓர் ஆட்டோவில்)

தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாதுதான்...
ஆனால்... என் தகுதி எது என்று  நீ முடிவு செய்யாதே.

சு.நாகராஜன், பறக்கை.

(தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

தலையால் நடந்தான் குளம்

ஜே.மகரூப்,  குலசேகரன்பட்டினம்.

(ஒரு திருமண வரவேற்பு அழைப்பிதழில்)

படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை;
பயிரிடுபவனும் கடவுள்தான்.

சி.முருகேசன், மாப்பிள்ளைக்குப்பம். 

திருச்சி மூலக்கடையில் உள்ள கல்லறைத் தோட்ட 
வாசலில் உள்ள ஒரு பலகையில்

சாவென்ற போரிலிருந்து யாரும் விலகவோ...
பணம் கொடுத்து தப்பிக்கவோ...
முடியாது.

சண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலி டவுன்.

கேட்டது

சென்னை வண்டலூரில் உள்ள கல்லூரி அருகே இரு மாணவர்கள்

""மச்சான்... எங்கடா முடியை வெட்டினே?''
""பார்த்தா தெரியலை... 
தலைலதான்டா''

எம்.ஐ.முகமது இப்ராஹிம், சென்னை-48. 

வேலூர் எழில்நகர் மெயின்ரோடில் உள்ள தேநீர்க்
கடையில் இரு நண்பர்கள்

""ஏன்டா மச்சான்... சிகரெட் பாக்கெட் மேல் "புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்' என்று போட்டிருந்தும் சிகரெட் வாங்குறியே?''
""அதான் நான் பாக்கெட்டா வாங்காம தனியா ஒண்ணு  வாங்குறேன்''

கி.பழநி, வேலூர்-9.


மைக்ரோ கதை


காட்டில்  ஒரு பெரிய குரங்கு வாழ்ந்து வந்தது.  தன்னை மிஞ்சி யாரும் இல்லை;  சிங்கம், புலி வந்தால் கூட அவற்றை விரட்டியடிக்கும் பலம் தனக்கு உள்ளது என்று நம்பி எதற்கும் பயப்படாமல் தலைக்கனம் பிடித்து  வாழ்ந்து வந்தது. 

அப்போது ஒரு நாள் கடும் மழை பெய்தது.  மழைக்கு எங்கேயும் ஒதுங்காமல், ""என்னை இந்த மழை என்ன செய்யும்?'' என்று நினைத்து மழையில் நனைந்து கொண்டே நின்று கொண்டு இருந்தது.  சில மணி நேரங்களில் குளிரால் குரங்கு நடுங்கத் தொடங்கியது. 

ஒதுங்க இடம் இல்லாமல் மரத்தின் கீழ் நின்று கொண்டு இருந்த குரங்கைப் பார்த்து, ""குரங்கண்ணா... நீயும் எங்களைப் போல கூடு கட்டி இருந்தால் இப்போது மழையில் நனையாமல் இருக்கலாமே?''  என்று மரத்தின் கிளையில் உள்ள  கூட்டில் தனது குஞ்சுகளுடன் நனையாமல் பாதுகாப்பாக  இருந்த  சின்னஞ்சிறு குருவி கேட்டது. 

மிகுந்த கோபமடைந்த குரங்கு, மரத்தில் ஏறி குருவிக் கூட்டை கலைத்துப் போட   மரத்தில் ஏறியது.  ஆனால் மரத்தில் ஏற முடியவில்லை.   குளிரில் நடுங்கிய உடம்பை வைத்து அதனால் நிற்கக் கூட முடியவில்லை. முதன்முறையாக தனது வலிமை என்ன என்பதை குரங்கு உணர்ந்தது.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

யோசிக்கிறாங்கப்பா!

பணம் சம்பாதிப்பது
குண்டூசியால் 
பள்ளம் தோண்டுவது போல...
ஆனால் செலழிப்பதோ
குண்டூசியால் 
பலூனை உடைப்பது போல.

ஜெ.சசிகலா, ஆனைக்காரன் சத்திரம். 

அப்படீங்களா!

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள்அந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்து வெளிநாடுகளில் கார் ஓட்ட முடியுமா? சில நாடுகளில் ஓட்ட முடியும். ஒவ்வொரு நாட்டிலும் கார் ஓட்ட அனுமதிக்கப்படும் கால அளவு  வேறுபடும். நார்வே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மூன்று மாதத்துக்கு கார் ஓட்டலாம். ஜெர்மனியில் ஆறு மாதங்களும், மொரிஷியஸில் நான்கு வாரங்களும், தென்னாப்பிரிக்கா, கிரேட் பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, நியூஸிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஓராண்டு வரை இந்திய ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகும்.  ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள்.  சிலநாடுகளில் ஆங்கிலத்தோடு அந்நாட்டு மொழியில் ஓட்டுநர் உரிமத்தை மொழி பெயர்த்துக் காட்ட வேண்டும்.  பிரான்சில் பிரெஞ்ச் மொழியிலும், ஜெர்மனியில் ஜெர்மன் மொழியிலும் ஓட்டுநர் உரிமம் மொழிபெயர்க்கப்பட்டு  இருக்க வேண்டும். 

போக்குவரத்துக் காவல்துறையினர் கேட்கும்போது, "ஓட்டுநர் உரிமத்தை மறந்துவிட்டேன்' என்று தலையைச் சொறியக் கூடாது. சிக்னல்களையெல்லாம் மதிக்காமல் ஓவர் ஸ்பீடில் "கன்னாபின்னா'வென்று ஓட்டக் கூடாது.  

என்.ஜே., சென்னை-116.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com