ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..!

தீய நண்பர்களின் சேர்க்கையால் புகையிலை, மது, மாது என்றெல்லாம் பழகிப்போய், வேலையும் கிடைக்காமல், கெட்ட பழக்கங்களை விடவும் முடியாமல் ஒருவகை மனநோயாளி போல ஆகிவிட்டேன்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..!

தீய நண்பர்களின் சேர்க்கையால் புகையிலை, மது, மாது என்றெல்லாம் பழகிப்போய், வேலையும் கிடைக்காமல், கெட்ட பழக்கங்களை விடவும் முடியாமல் ஒருவகை மனநோயாளி போல ஆகிவிட்டேன். DEPRESSION என்று இதற்குப் பெயரிட்டு, சாப்பிடும் மாத்திரைகளால் தூக்கம் தூக்கமாக வருகிறதே தவிர, எந்த முன்னேற்றமுமில்லை. அதிக கோபம், விரக்தி, வெறுப்பு, ஈடுபாடு இன்மை, ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றன. மாத்திரைகளை நிறுத்தினால், பிரச்னைகள் மேலும் அதிகமாகின்றன. நான் இனி என்ன செய்வது?

-பிரதீபன், சென்னை.

சரக ஸம்கஹிதை எனும் ஆயுர்வேத நூலில், நட்புடன் பழகலாயக்கற்றவர்கள் பற்றிய விபரம் காணப்படுகிறது. அதைப் பற்றிய விபரம் - 
பாபவிருத்தவசஸத்வா - செய்யும் செயல், பேசும் பேச்சு, மனதில் எண்ணும் எண்ணம் ஆகியவை பாபத்தைச் சார்ந்ததாக இருப்பவர்கள்.
சூசகா - பிறரைப் பற்றி கோள்சொல்பவர்கள்.

கலஹப்ரியா - பிறருடன் சண்டைபோடுவதில் ஆர்வமுடையவர்கள்
மர்ம உபஹாஸின - பிறர் மனம் புண்படும் வகையில் கேலி செய்பவர்கள்.
லுப்தா - பேராசை கொண்டவர்கள்.

பரவ்ருத்தித்விஷ - பிறருடைய பொருளாதார வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்கள்.

சடா - கொடுமையான மனதுடையவர்கள்.

பரஅபவாதரதய - பிறருடைய புகழைக் கெடுக்க முயற்சிப்பவர்கள்.

சபலா - நிலையற்ற மனதையுடையவர்கள்.

ரிபுசேவின - எதிராளிக்கு உதவி செய்பவர்கள்.

நிர்க்ருணா - கருணையற்றவர்கள்.

த்யக்ததர்மான - தர்மத்தை விட்டவர்கள்.

இவர்களுடன் ஒருபொழுதும் நட்புவைத்துக் கொள்ளக் கூடாது என்று சரகர் குறிப்பிடுகிறார். அப்படியென்றால், யாருடன் நட்புவைத்துக் கொண்டால் நன்மைதரும் என்பதையும் அவர் விளக்குகிறார்.

புத்தி - வித்யா - வய - சீல - தைர்ய - ஸ்மிருதி - சமாதிபி : 

அறிவு, கல்வி, வயது - நல்லொழுக்கம், வைராக்யம், ஞாபகசக்தி, தியானம் ஆகியவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்கள்.

வ்ருத்த உபசேவின - வ்ருத்தா - ஸ்வபாவஞ - கதவ்யதா: வயது முதிர்ச்சியுடையவர்களை ஆதரிப்பவர்கள், சத்தான விஷயங்களில் பழுத்த அனுபவமுடையவர்கள், இயற்கையாகவே மனிதர்களை மதித்து நடப்பவர்கள், மனக்கவலைகள் இல்லாதவர்கள்.


சுமுகா: ஸர்வபூதானாம் - ப்ரசாந்தா:- சம்ஸிதவ்ரதா: 
எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுபவர்கள், என்றும் அமைதியுடனிருப்பவர்கள், அறநெறியின் பாதையில் மட்டுமே செல்பவர்கள்.
சேவ்யா - சன்மார்க்கவக்தார - புண்யஸ்ரவணதர்சனா: 
ஒழுக்கமுடையவர்கள், நல்வழியைக் காண்பிக்கக் கூடியவர்கள், அவர்களுடைய பெயரைக் கேட்டாலோ, நேரில் பார்த்தாலோ, புண்ணியத்தைத் தரக்கூடிய அளவிற்கு உயர்ந்தவர்களைச் சார்ந்து வாழ்வதே சுகம் தரும் என்கிறார்.


உணவு - ஒழுக்கம் - நடவடிக்கைகள் ஆகியவற்றில் தான் ஆரோக்கியம் எனும் விஷயம் மறைந்திருப்பதால், இவற்றை சீராக அமைத்து வாழ்பவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்.
தீயபழக்கங்கள் உடலையும், மனதையும் கெடுப்பதுடன், சுத்தமான இரத்தத்தையும் எடுத்துவிடுகின்றன. அதனால் நீங்கள் ரத்தப் பரிசோதனையை முழுவதுமாகச் செய்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அதிலுள்ள நச்சுப் பொருட்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவற்றை வெளியேற்றுவதுடன், தீயபழக்கங்களை மேலும் தொடராது, மனதிற்குக் கடிவாளம் போட வேண்டிய நிர்பந்தமிருப்பதால், அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.


கல்யாணக்ருதம் எனும் நெய் மருந்தை சுமார் 15 - 20 மி.லி. அளவில் காலை, மாலை என இருவேளை குறைந்தது 48 நாட்களுக்காகவாவது சாப்பிட வேண்டும். OIL MASSAGE, வியர்வை வரவழைத்தல் அதன் பிறகு குடல் சுத்தி முறைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா சிகிச்சை சிரோவஸ்தி எனும் தலையில் மூலிகைத் தைலத்தை நிறுத்தி வைக்கும் சிகிச்சை முறை, மூக்கில் மருந்துவிடுதல், மூலிகை எண்ணெய்யைக் கொண்டு வாய் கொப்பளித்தல் போன்றவை மூலம் நச்சுத்தன்மையை அறவே நீக்கி, மூளைக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் ரஸôயன சிகிச்சைகளைச் செய்ய வேண்டும்.
(தொடரும்)


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com