ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தில் இன்ன இன்ன உபாதைகளுக்கு இன்ன இன்ன பொருட்கள் சிறந்தவை என்ற குறிப்புகள் உள்ளதை?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

சிறந்தவை!
ஆயுர்வேதத்தில் இன்ன இன்ன உபாதைகளுக்கு இன்ன இன்ன பொருட்கள் சிறந்தவை என்ற குறிப்புகள் உள்ளதை?
அறிந்தால் பலருக்கும் நன்மையளிக்குமே?
- தியாகராஜன், திருச்செங்கோடு.
உயிரளிக்கும் பொருட்களில் உயர்ந்தது, பால். 
களைப்பை நீக்கும் பொருட்களுள் உயர்ந்தவை, நீராடுதல்.
உடலை பருக்கச் செய்யும் பொருட்களில் சிறந்தது, மாமிசம்.
உணவுக்கு சுவையளிக்கும் பொருட்களில் சிறந்தது, உப்பு.
இதயத்திற்கு இன்பமளிக்கும் பொருட்களில் உயர்ந்தது, புளிப்புச் சுவை.
வலிவு அளிக்கும் பொருட்களில் உயர்ந்தது, கோழி மாமிசம்.
வாதம், கபம் இவற்றைத் தணிப்பவற்றில் உயர்ந்தது, எள் - எண்ணெய் (நல்லெண்ணெய்)
வாதம் , பித்தம் இவற்றைத் தணிப்பனவற்றில் மேலானது, நெய்.
பித்தம், கபம் இவற்றைத் தணியச் செய்யும் பொருட்களில் சிறந்தது, தேன்.
உடலுக்கு மிருதுவான தன்மையளிப்பதில் சிறந்தது- வியர்வை உண்டுபண்ணும் முறை.
உடலை உறுதிப்படுத்தும் செயல்களில் சிறந்தது, உடற்பயிற்சி.
உறக்கம் தரும் பொருட்களில் மேலானது, எருமைப்பால்.
சிறுநீரை அதிகம் தோற்றுவிக்கும் பொருட்களில் சிறந்தது, கரும்பு.
அமிலபித்தம் எனும் சூடான புளிப்பு பித்தத்தை வயிற்றில் அதிகப்படுத்துவதில் சிறந்தது, கொள்ளு.
ரத்தக்கசிவு உபாதையை கண்டிப்பனவற்றில் சிறந்தது, ஆடாதோடை.
இருமலை கண்டிப்பனவற்றில் கண்டங்கத்திரி சிறந்தது. 
அடிபட்ட உட்காயங்களை ஆற்றுவதில் சிறந்தது, கொம்பரக்கு.
உடலுருக்கி நோயைப் போக்குவதற்கும், தாய்ப்பாலை பெருகச் செய்வதற்கும், ரத்தப்போக்கை தடுப்பதற்கும் சிறந்தது, வெள்ளாட்டின் பால்.
அதிக வாந்தி, நாவறட்சி இவற்றைத் தணிப்பதில் மேலானது, மண்ணாங்கட்டி. கருங்கல்லைச் சூடாக்கி, சூடான கொதிக்கும் நீரில் தோய்த்து குளிர்ந்த பின் வடிகட்டி எடுத்த நீரை அருந்துதல்.
வாந்தியை நிறுத்துவதில் சிறந்தது நெல்பொறி.
மூலம் எனும் நோய், வீக்கம், உண்ட உணவு செரிக்காத நிலையில் மலத்துடன் வெளியேறும் கிரஹணி எனும் பிணி ஆகியவற்றைத் தணிப்பதில் மேலானது, மோர்.
மலத்தைக் கட்டி, பசித்தீயைத் தூண்டி, உண்ணும் உணவை சிறந்த முறையில் சீரணிக்கச் செய்வதில் சிறந்தது, கோரைக்கிழங்கு.
சீரணிக்கச் செய்தல், பசித்தீயைத் தூண்டுதல், வயிற்றுப் பொருமலைத் தணித்தல் இவற்றிற்குப் பயன்படும் பொருட்களில் மேலானது கண்டந்திப்பிலி.
நீர்ச்சுருக்கு, வாதத்தைக் கண்டித்தல் இவற்றிற்குச் சிறந்தது, நெருஞ்சி.
நீரிழிவு நோயைக் கண்டிக்கும் பொருட்களில் உயர்ந்தது, மஞ்சள்.
பெருங்கட்டி, அக்கி, சிறுகட்டி, கண்டமாலை எனும் கப வாதங்களால் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்துவதில் சிறந்தது - உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துவது. தொடைச் சந்தில் ஏற்படும் சிறுகட்டி, குன்மம், வாயு, குத்தல் வலி இவற்றை நீக்கும் பொருட்களில் சிறந்தது, ஆமணக்கு எண்ணெய்.
குன்மம், வாயு இவற்றைப் போக்குவதில் சிறந்தது, பூண்டு.
உடலிலுள்ள தோஷங்களைச் சிதறச் செய்தல், பசியை வளர்த்தல், நேர் நிலைப்படுத்தல், வாதம், கபம் இவற்றைத் தணித்தல், இவற்றிற்கு மேலானது, பெருங்காயம்.
குஷ்டத்தைப் போக்கவல்ல பொருட்களில் மேலானது, கருங்காலி.
குடல் புழு பூச்சிகளை அழிப்பதில் வாயுவிடங்கம் சிறந்த மருந்துப்பொருள்.
வாதத்தைத் தணிப்பதில் சித்தரத்தை சிறப்பானது. 
கொழுப்பு, வாதம் இவற்றை விலக்குவதில் குக்குலு உயர்ந்த பொருளாகும். 
எளிதில் மலம் வெளிவரச் செய்வதில் சிறந்தது சிவதைவேர்.
தாதுக்களுக்குப் பலமளித்து ஆயுளை நிலை நிறுத்துவதற்குச் சிறந்த பொருள், நெல்லிக்கனி.
பற்களுக்கு உறுதியளிப்பதற்கும், சுவையூட்டுவதற்கும் சிறந்த முறை நல்லெண்ணெய்யை வாயில் விட்டுக் கொப்பளிப்பது. 
எரிச்சல், தோல் வியாதி, வியர்வை இவற்றை நீக்கும் பூச்சுப் பொருட்களில் விலாமிச்சவேரும் வெட்டிவேரும் உயர்ந்தவை.
கண், ஆண்மை, கூந்தல் வளர்ச்சி, குரல் வளம், வலிவு நிற வளர்ச்சி, உடல் மினுமினுப்பு, காயமாற்றுதல் இவற்றிற்கு பயன்படுத்தும் பொருட்களில் அதிமதுரம் சிறந்தது.
அருவருப்பான நோய்களைத் தோற்றுவிப்பவை ஒன்றுக்கொன்று எதிரிடையான வீர்யமுள்ள உணவு வகைகளாகும்.
உடலுக்கு பழக்கத்தில் ஒத்துக் கொள்ளும் உணவும், பழக்க வழக்கங்களும் பின்பற்ற வேண்டியவற்றில் உயர்ந்தவை.
இது போன்ற நிறைய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. இவை சில உதாரணங்கள் மட்டுமே! 
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com