சமுசா

ஞாயிற்றுக்கிழமை. மதியம் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தேன். தூங்கும் போது எந்தச் சத்தம் வந்தாலும் எரிச்சல் வந்து
சமுசா

ஞாயிற்றுக்கிழமை. மதியம் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தேன். தூங்கும் போது எந்தச் சத்தம் வந்தாலும் எரிச்சல் வந்து விடும் எனக்கு. ஆனாலும் யாராவது வந்து எரிச்சலைக்கொடுத்துக்கொண்டே யிருப்பார்கள். 
பூக்காரி வந்து, "அம்மா'' என்பாள்.
அதுவும் அவள் குரல் அடுத்த தெரு வரைக்கும் கேட்கும். 
"நான் நாளைக்கு வாங்கிக் கொள்கிறேன்'' என்று சொன்னாலும் அவள் காதில் விழாது.
அவள் அளவுக்குச் சத்தம் போட வேண்டும். அல்லது வாசல் வரை நடந்து போய்ச் சொல்லி விட்டு வரவேண்டும்.
அகலம் கம்மி நீளம் அதிகமான என் வீட்டில் அவ்வளவு தூரம் நடந்து நடந்து வருபவர்களுக்கு பதில் சொல்லி இரவில் கால் வலிக்கு தைலம் தடவிக்கொண்டு படுப்பது மனைவியின் தினசரிகளில் ஒன்று. அப்போது அவள் சொல்லும் வார்த்தை "என்னால் முடியவில்லை'. 
பூக்காரி சத்தம் போட்டுப் போன பிறகு யாரும் தொல்லைப் படுத்த மாட்டார்கள் என்று நினைத்த போது அடுத்து ஒரு குரல் கேட்டது.
இந்தக் குரல் இதுவரை கேட்காத குரல். "சமுசா... சமுசா...' 
வீட்டு கேட்டுக்கருகில் நின்று அழைத்த அந்தக் குரல் வித்தியாசமாக இருந்தது.
பொதுவாக மாலை ஏதேனும் நொறுக்குத் தீனி தின்றால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.
நான் மனைவியைக் கூப்பிட்டு, "ஏதோ சமுசா என்கிறான்..போய்ப் பாரேன்'' 
மனைவி முணுமுணுத்துக்கொண்டேஓடிச்சென்று அவனிடம் சில விஷயங்களை விசாரித்து விட்டு நான்கு சமுசா வாங்கி வத்தாள். அவன் போன பிறகு ஒரு அரை மணி நேரம் படுத்து எழுந்தேன்.
உடனே காபி சாப்பிட வேண்டும் போல் இருந்தது.
என் மனைவி சூடான காபியுடன் சமுசாவும் வைத்தாள்.
சமுசா அவ்வளவு நன்றாக இருந்தது. 
"என்ன விலை இந்த சமுசா?'' என்று கேட்டேன். 
"நான்கு சமுசா இருபது ரூபா'' என்று சொன்னாள்.
நான் கடைத் தெரு சென்று வாங்கி வந்தால் நான்கு சமுசாக்கள் 40 ரூபா கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இருபது ரூபா.... அதுவும் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிக் கொடுப்பது... என்பது மலிவானது. தரம் நன்றாக இருந்தது. அருமையான சுவை. எண்ணைக்காரல் கொஞ்சமும் இல்லை.
சில சமுசாக்கள் ஒரேயடியாக கருத்துப்போய் தீய்ந்து இருக்கும். 
ஆனால் இந்த சமுசா பக்குவமாகத் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றியது.
இதற்குப் பிறகு நாங்கள் அவன் வாடிக்கையாளர்களாகிவிட்டோம்.
தினசரி மாலை 3 மணி அளவில் இந்த சமுசாக்காரன் வந்து அழைப்பான்.
ஒரு சில நாட்களைத் தவிர, பெரும்பாலும் என் மனைவி வாங்கி விடுவாள்.
சர்க்கரை நோயாளியான நான் தினசரி இப்படி எண்ணெய்யில் பொரித்த சமுசாவைச் சாப்பிடுவது குறித்து என் பெண்ணுக்கு வருத்தம். போனில் திட்டுவாள். 
"ஏதோ ஒரு நாள் சாப்பிட்டால் சரி...அது என்ன இந்த வயதில் வாயைக் கட்டாமல் இருப்பது தினசரி இதைச் சாப்பிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்?' என்பாள்.
நான் மட்டுமல்ல பக்கத்து வீடு, எதிர் வீடு என எல்லா இடத்திலும் சமுசாவை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பத்து நாட்களில் அவன் சமுசா வியாபாரி என்கிற நிலையைத் தாண்டி மிகுந்த பழக்கப்பட்டவன் ஆகிவிட்டான்.
என்னுடைய மனைவி அவனுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள்.
"பாவம் வாழ்ந்து கெட்ட குடும்பம். இரண்டு பிள்ளைகள். வடக்கே இருந்து வந்தவர்கள். காலையில் வேறு ஏதோ ஒரு ஹோட்டலில் வேலை செய்துவிட்டு மதியம் இந்த சமுசாவை தயார் செய்து விற்கிறார்கள்'' என்று அவன் கதையைச் சொன்னாள்.
இப்படியே ஓரிரு மாதங்கள் போனது.
சில நாட்கள் சமுசா வாங்குவது... சில நாட்கள் வாங்காமல் இருப்பது எனக் காலம் போனது.
ஒரு நாள் காலை பத்து மணி இருக்கும்.
வாசலில் அவன் குரல் கேட்டது. 
"மதியம் தானே வருவான். காலையில் வர மாட்டான்' என்று நினைத்த நான், "சமுசாக்காரன் அழைக்கிறான் போலிருக்கிறது... போய்ப் பார்'' என்று சொன்னேன்.
அதற்குள் என் மனைவி,"நீங்களே பாருங்கள். நான் கை வேலையாக இருக்கிறேன்'' என்று சொல்ல நான் அவனிடத்திலேயே கேட்டேன், "என்னப்பா இன்றைக்குக் காலையிலேயே சமுசாவை கொண்டு வந்து விட்டாயா ?''என்று கேட்டேன்.
அவன் "இல்லை'' என்றான்.
"இன்றைக்கு சமுசா தயாரிப்பதற்கு கொஞ்சம் காய்கறி மளிகை எண்ணெய் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சமுசாவைத் தயாரித்து விற்ற செலவில் நான் அடுத்த நாள் பொருட்களை வாங்கி வைத்து விடுவேன் ஆனால் நேற்று என்னுடைய குழந்தைக்கு உடம்பு சரியாக இல்லாததினால் ஆஸ்பத்திரியில் பணம் செலவாகி விட்டது. இன்றைக்கு தொழிலுக்குப் பணம் இல்லை. எனவே நீங்கள் ஒரு ஆயிரம் ரூபா கைமாத்து தந்தால் நான் சமுசாவை விற்று விட்டு நாளை உங்கள் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவேன்'' என்றான்
எனக்கு தருவதா, வேண்டாமா என்பது சந்தேகமாக இருந்தது.
"எப்படி நீ தருவாய்?' என்று குறுக்குக் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தேன். 
அதற்குள் என்னுடைய மனைவி சமையல் கட்டிலிருந்து வந்து, "நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போங்கள்'' என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் அவனிடத்தில் பேசிவிட்டு, உள்ளே இருந்து ஆயிரம் ரூபாயைக் கொண்டு வந்து அவனிடத்திலே தந்தாள். 
அவன் பெரிதாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு, "மகராசியா இருக்கணும்... கட்டாயம் நாளைக்கு தந்துவிடுகிறேன் அம்மா'' என்றான்.
அன்று மாலை சமுசாவை எடுத்துக் கொண்டு முதலில் எங்கள் வீட்டுக்கு தான் வந்தான்.
"இது நீங்கள் கொடுத்த பணத்தில் தயாரித்தது. நீங்கள் காசு தர வேண்டாம். இந்த சமுசாவை என்னுடைய அன்பளிப்பாக உங்களுக்கு நான் தருகிறேன்'' என்றான். 
"நான்வேண்டாம். இப்படி அன்பளிப்பாக தந்தால் கடனைத் திருப்பித் தரமுடியாது. யாரிடமாவது அடுத்து கடன்தான் வாங்க வேண்டி இருக்கும். அதனால் காசு கொடுக்கிறேன். சமுசாவை கொடுத்து விட்டு போ''என்றேன்.
அவன் சிரித்துக் கொண்டே ஒரு பேப்பரில் நான்கு சமுசாவை மடித்துக் கொடுத்தான்.
அதற்கு அடுத்து ஒரு வாரம் தினசரி வந்தான்.
சமுசாவை தினசரி வாங்கிக் கொள்ள முடியாது அல்லவா... 
நான் சொன்னேன்:
"ஞாயிற்றுக்கிழமை மட்டும் வந்து சமுசாவை கொடு. மற்ற நேரத்தில் வராதே'' என்று சொல்லிவிட்டு என் மனைவியிடம் சொன்னேன் . "அவன் சமுசாவை கொடுத்தே கடனை கழித்து விடுவான் போல இருக்கு''
அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவன் வந்த பொழுது நான் கேட்டேன் 
"என்னப்பா.... ஆயிரம் ரூபா அடுத்த நாளே தந்து விடுகிறேன் என்றாய்.. தரவில்லையே...'' என்றேன். இதைக் கேட்டவுடன் அவன் தர்ம சங்கடத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டு நின்றான்.
"கட்டாயம் தந்துவிடுகிறேன் ஐயா. இப்பொழுது எனக்கு வேறு வருமானம் இல்லை. இதைத்தான் சுழற்சி முறையில் நான் செய்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் தந்துவிடுகிறேன். நிச்சயமாக உங்கள் பணத்தை ஏமாற்ற மாட்டேன்'' என்றான்.
என் மனைவி அதற்குள்,"உங்கள் புத்தியைக் காண்பித்து விட்டீர்கள் அல்லவா? இப்படியா முகத்தில் அடிப்பது போல் கேட்பது? அது என்ன அவ்வளவு கறாராக ஏழைகளிடம் வசூல் செய்ய வேண்டி இருக்கிறது ?உங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அவன் என்ன கப்பல் ஏறி ஓடி விடுவானா?'' என்று கேட்டாள்.
சரி. இதற்கு மேல் நம் பேச்சு எடுபடாது என்று விட்டுவிட்டேன்.
இரண்டு மாதம் இப்படியே போனது.
திடீரென்று அந்த சமுசாக்காரன் வரவில்லை.
ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அவனிடத்திலே வாங்குவதால் அவன் தினசரி வருகிறானா? இல்லையா என்பதைக் கவனிக்க முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காத்துக் கொண்டிருந்தபோது அவன் வரவில்லை என்று தெரிந்தது. 
அப்பொழுது நான் மனைவியிடம் சொன்னேன் 
"பார்த்தாயா... எனக்கு நன்றாக தெரியும். அவன் வரமாட்டான். பணத்தைத் தர மாட்டான் என்று. நீ தான் கேட்கவில்லை'' என்று சொன்னேன்.
என் மனைவிக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.
"எங்கே இந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு அவன் ஓடி விடப் போகிறான்? கட்டாயம் வருவான்'' என்றாள். 
நான் சொன்னேன்.
"நீ நம்பிக் கொண்டு இரு. அவன் நிச்சயமாகத் தர மாட்டான்'' 
அப்பொழுது அவள் சொன்னாள்.
"அவன் ஏழை. எத்தனையோ பேருக்கு உதவி செய்கிறோம். அந்தப் பணம் உதவி செய்ததாகத்தான் இருக்கட்டுமே'' 
நான் சொன்னேன். 
"அவன் கேட்கும் பொழுது உதவி என்று கேட்டு இருந்தால் அதை உதவியாக செய்திருக்கலாம். கட்டாயம் அடுத்த நாளே திருப்பித் தந்து விடுவேன் என்று ஏன் சொல்ல வேண்டும்? அது வாக்கு நாணயம் தவறிய செயல் அல்லவா?'' என்றேன்.
என் மனைவி உடனே சொன்னாள்.
"சரி... சரி... நீங்கள் ஒன்றும் புலம்ப வேண்டாம். ரொம்ப சிக்கனச்சிகாமணி. இந்த 1000 ரூபாயில் தான் உங்களுக்கு வந்துவிட்டது. நான் அதை உங்களுக்கு தந்து விடுகிறேன்'' என்றாள்.
நான் உடனே கிண்டலாகக்கேட்டேன்.
"எங்கே இருந்து தருவாய்? என் சட்டைப் பையில் இருந்து எடுத்து தருவாயா?'' என்று கேட்ட உடனே அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.
பேசாமல் சமையல் கட்டுக்குப் போய் விட்டாள்.
இதன் பிறகு இந்த விஷயத்தை நான் முற்றிலுமாக மறந்து விட்டேன்.
ஆனால் என்னுடைய மனைவி மறக்கவில்லை.
" அவன் இப்படி ஏமாற்றி விட்டானே. குறைந்தபட்சம் சொல்லிவிட்டுப் போய் இருக்கலாமே' என்று நினைத்தாள்.
அதனால் அவள் சில நேரங்களில் என்னிடத்தில் கூட வருத்தப்பட்டாள்.
நான் இப்பொழுது அவளுக்கு ஆறுதல் சொன்னேன்.
"அதை பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? 1000 ரூபாய்தானே... போனால் போகிறது'' என்று சொன்னேன்.
ஆறு மாதம் போய்விட்டது. இந்த விஷயம் எங்கள் நினைவை விட்டு முற்றிலுமாக மறந்து விட்டது. 
ஒருநாள் மதியம் வாசலில் உட்கார்ந்து இருந்தேன்.
அப்பொழுது தபால்காரர் வந்து எங்கள் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு என் அருகில் வந்தார் 
"என்ன... தபாலா'' என்றேன்.
உடனே, "தபால் இல்லை சார்... மணியார்டர்'' என்றார்.
நமக்கு யார் மணியார்டர் அனுப்பப் போகிறார்கள் என்று பார்த்தேன்.
"எவ்வளவு சார் ?'' என்று என்று கேட்டேன்.
"ஆயிரம் ரூபா வந்து இருக்கிறது'' என்றார்.
"ஆயிரம் ரூபா நமக்கு யார் அனுப்பி இருக்க போகிறார்கள்' என்றபடி மணியார்டர் பாரத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வாங்கினேன்.
மணியார்டர் பாரத்தில் மேலே கிறுக்கலான ஒரு கடிதம் போல சில வரிகள் இருந்தன.
முயற்சி செய்து படித்தேன்.
"ஐயா, உங்களிடம் ஆறு மாதம் முன்னால் சமுசாவுக்காக வாங்கிய ஆயிரம் ரூபா பணத்தை, இத்துடன் அனுப்பி இருக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். என் சூழல் அந்த ஊரை விட்டு புறப்படும்படி ஆகிவிட்டது. சமயத்தில் தாங்கள் செய்த உதவிக்கு கோடானு கோடி நன்றிகள்'
நான் அப்படியே நிலை குலைந்து சிலையாக நின்றேன். 

எஸ்.கோகுலாச்சாரி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com