சுற்றுலா: ஹிதோன் ஒரு நீர் வழி கிராமம்

வித்தியாசமான கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயற்கைக் காட்சிகள், ஓலைக் கூரைகள் கொண்ட எளிமையான பண்ணைவீடுகள்
சுற்றுலா: ஹிதோன் ஒரு நீர் வழி கிராமம்

வித்தியாசமான கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயற்கைக் காட்சிகள், ஓலைக் கூரைகள் கொண்ட எளிமையான பண்ணைவீடுகள் இவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றது தான் இந்த ஹிதோன். கிழக்கு நெதர்லாந்தில் உள்ள குட்டித் தீவு. தெருவோ, சாலைகளோ கிடையாது. எங்கும் கால்வாய்தான்; எங்கே போகவேண்டுமென்றாலும் படகு போக்குவரத்துதான்.  இது "குட்டி வெனிஸ்' எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு வரும் தபால்கள் படகு மூலமே விநியோகிக்கப்படுகிறது.
முன்பு கால்வாய் வழி போக்குவரத்து மட்டுமே இருந்தது. தற்போது சைக்கிளில் செல்லும் அளவுக்கு பாதைகள் போடப்பட்டுள்ளன. நடைப் பயணம் செய்வோர் கால்வாயைக் கடக்க, மரத்தாலான பாலங்கள் உள்ளன. இங்கு இரண்டு அருங்காட்சியகங்கள் உண்டு. 
இங்கு தங்குவதற்கு அழகான பெரிய மற்றும் சிறிய பண்ணை வீடுகளும் வாடகைக்கு கிடைக்கும். பெரும்பாலும் ஓலைக் கூரைகள் கொண்ட பண்ணைவீடுகள். கால்வாய் ஓரங்களில் உணவகங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்குள்ள கால்வாய்களில் வாழும் வாத்துகள் எழுப்பும் சத்தங்கள்தான் மற்ற பறவைகளின் சத்தத்தை விட அதிகம்.
படகு சவாரி செய்ய பெடல், துடுப்பு, மோட்டார் மற்றும் மின்சாரப் படகுகளையும் பயன்படுத்துகின்றனர். படகுகளை வாடகைக்கு எடுத்து விருப்பம் போல் சவாரி செய்யலாம். எளிதாக இயக்கும் வகையில் இருக்கும் இந்த படகுகளில் இரண்டு அல்லது மூன்றுபேர் அமர்ந்து செல்லலாம். இதற்காக பிரத்யேகமாக படகுகள் வாடகைக்கு விடும் கடைகள் ஆங்காங்கே கால்வாய் அருகில் உண்டு. குளிர் காலமான நவம்பர் முதல் மார்ச் வரை படகு சவாரி செய்ய காலை 10.30 மணிமுதல் மாலை 3.30 வரை மட்டுமே ஏற்றது. அதன்பின்னர் நீர் நிலைகள் எல்லாம் பனிக்கட்டியாக மாறிவிடும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை படகு சவாரி செய்யலாம்.  சென்னையில் இருந்து தூரம் வான்வழியாக 7787 கி.மீ.  இங்கு மக்கள் தொகை சுமார் 3 ஆயிரம் மட்டுமே. 
-ஒய்.டேவிட் ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com