மனிதத்தை தின்னும் அதிகாரம்

"அமைதிப்படை 2', "கங்காரு' படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இப்போது "மிக மிக அவசரம்' படத்தின் இயக்குநர்.
மனிதத்தை தின்னும் அதிகாரம்

"அமைதிப்படை 2', "கங்காரு' படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இப்போது "மிக மிக அவசரம்' படத்தின் இயக்குநர். சொந்த ஊர் பரமக்குடி.  சினிமாவின் மீது அதீத காதல். இளவயதில் அப்பாவோடு கைகோத்துக் கொண்டு நடக்கும் போது அவர் சொல்லும் சம்பவங்கள் எல்லாம் எனக்குள் திரைக்கதையாகி ஓடிக் கொண்டிருக்கும்.  எனக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த கதைகளை கோடம்பாக்கத்தில்தான் முழுமைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு சென்னைக்கு வந்தேன். தயாரிப்பாளர் ஹென்றி சாரின் "பங்கஜ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தில் கம்பெனி உதவி இயக்குநராகச் சேர்ந்து "மறுமலர்ச்சி','கள்ளழகர்','புதுமைப் பித்தன்' ஆகிய படங்களில் பணியாற்றினேன். அந்த அனுபவம் மலேசிய தொலைக்காட்சி வரை கொண்டு சேர்த்தது. மீண்டும் சென்னை திரும்பிய போது படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த அறிமுகமும் வாய்ப்புகளும்தான் "மிக மிக அவசரம்' வரை கொண்டு வந்திருக்கிறது.

அது என்ன "மிக மிக அவசரம்...' பெயரே வித்தியாசம் காட்டுதே... 
பெயர், கதையோடு தொடர்புடையது... இந்தக் கதைக்கான புள்ளி சென்னை பெரு நகரத்தின் சிறு சிறு பயணங்கள்தான். இடமும் வலமுமாக இரண்டு முன்னாள் முதல்வர்களின் வீடு இருந்த பகுதிகளில் சாலையை அவ்வப்போது கடப்பேன். ஜெமினி மேம்பாலம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை அறிவாலயம் அருகில் என எங்கு பார்த்தாலும் காலை முதல் மாலை வரை உச்சி வெயிலில் கால் கடுக்க நிற்கும் பெண் காவலர்களை பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் உறுத்தும். ஒரு முறை மீனாட்சி காலேஜ் பக்கம் ரோட்டில் கார்காரன் ஒருவனோடு ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டு இருந்த காவலர் சகோதரி, அதே மாலையில் கே.எஃப்.சி.யில் குடும்பத்தோடு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். இந்த இரண்டுக்குமான இடைவெளி நிகழ்வுகளில் எவ்வளவு வலிகளும், கஷ்டங்களும் நிறைந்திருக்கும் அவருக்கு. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்காகவே நேரம் கிடைக்கும் போது, அவர்களிடம் பேச்சு கொடுப்பேன். ஒவ்வொரு உரையாடலும் ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. அத்தனையையும் கொஞ்சமும் சிதறிவிடாமல் சேகரித்தேன்.
குறிப்புகளில் கவனம் செலுத்தினேன். அதே நேரத்தில் "கமர்ஷியல்' தன்மையுடன் வந்திருக்கிறது. படத்தின் ரஷ் பார்த்த நண்பர்கள் நன்றாக வந்திருப்பதாக பாராட்டுகிறார்கள்.  சில இடங்களில் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள். இன்று மன நிறைவோடு உங்களின் மன ஓட்டத்தை திரையரங்குகளில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.  

கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்....
கேரளக் காவல் துறையில் பல ஆண்டுகள் போலீஸ் வேலை பார்த்த ராமச்சந்திர நாயர் என்பவர் எழுதிய "நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி' என்ற புத்தகம். அப்படி இருக்கும்...  புரட்சியாளன் நர்கீஸை, மேலதிகாரிகளின் குரூரமான வற்புறுத்ததலால் தனது கையால் சுட்டுக் கொன்றதில் இருந்து, பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை மிகத் தீவிரமாக எழுதப்பட்ட பதிவு அது. அண்ணா மேம்பாலத்தில் கால் கடுக்க நின்றிருக்கும் பெண் காவலர் ஒருவர், போலீஸ் வேலை கிடைத்த தருணத்தில் என்னென்ன நினைத்திருப்பார்.. போலீஸ்காரர்களில் அற்புதமானவர்களையும் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கே நிறைய பேருடைய மனிதத்தை அதிகாரமும், அரசியலும் தின்று விடுகின்றன. அரசியலும், சாதியும், பணமும் காவல் துறையை இயக்கிக் கொண்டு இருக்கிற வரை உன்னதமான பாதுகாப்பை நம்மால் உணரவே முடியாது. முதலில், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரத்தாலும், கேவலமான அரசியல்வாதிகளாலும் காக்கிகளின் மனிதம் இங்கே மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்படி பல விஷயங்கள் மீது பொது விவாதங்களை எழுப்புவதாக இருக்கும் இந்தக் கதை.  

தயாரிப்பு, இயக்கம் எதுவாக இருந்தாலும், உங்கள் தேர்வாக பிரியங்கா இருக்கிறார்...
எனக்கு தமிழ் பேசத் தெரிந்த, நான் சொல்லுவதை புரிந்து கொள்ளத் தெரிந்த நடிகை தேவை. ஏற்கெனவே நான் தயாரித்த "கங்காரு' படத்தில் அவர் நடித்திருந்தார். அதனால் அவர் எனக்கு நல்ல பரிச்சயம். இதில் பெண் போலீஸ் சாமந்தியாக வருகிறார். நல்ல சினிமா கனவுகள் கொண்ட பெண். தமிழ்ப் பெண்ணாக பிறந்து வந்ததால்தான், சரி வர சினிமா வாய்ப்பு  கிடைக்கவில்லையோ என்ற வருத்தம் அவருக்கு உண்டு. சொல்லப் போனால், அதற்காகவே இந்த வாய்ப்பைத் தந்தேன். 
சீமான் அண்ணன்... நீண்ட இடைவெளிக்குப் பின் இதில் நடிக்கிறார். கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்காக தேடிப் போய் கேட்டேன். "நடிக்கலாம் தம்பி' என்று என் தோள் தட்டினார். சிதறிக் கிடக்கிற கோப நெருப்பைக் குவிக்கும் எண்ணத்துடன் ஓடிக் கொண்டிருப்பவர், நான் சொன்ன கதையைக் கேட்டு "அருமையா இருக்கு தம்பி... நினைத்தபடி எடுங்க..' என்று துணை நின்றார். இதில் காவல் துறை உயர் அதிகாரியாக சீமான் வருகிறார். இன்னொரு காவல் துறை அதிகாரியாக "வழக்கு எண்' முத்துராமன் நடிக்கிறார். 

தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு...
ஃபெப்சி பிரச்னை, இண்டர்நெட் என சினிமா தொழிலுக்கு ஆயிரம் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கிறது. நல்லது செய்கிறோம் என பொறுப்புக்கு வந்தவர்கள், விளம்பர ஆசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 10 வருடங்களுக்கு ஒரு முறை சினிமா மாறும் என்பார்கள். ஆனால் இங்கே வாரத்துக்கு ஒரு முறை மாற்றம் நடக்கிறது. இதுதான் தமிழ் சினிமாவின் போக்கு என சொல்வதற்கு எதுவும் இல்லை. யாரிடமும் உதவியாளராக இல்லாதவர்கள், எந்த பயமும் இல்லாத புதுப் புது இளைஞர்கள் உள்ளே வருகிறார்கள். பல வருடங்களாக உதவி இயக்குநர்களாக உள்ளவர்களுக்கு நிறைய பயம் இருக்கும். இந்த இளைஞர்களிடம் அது இல்லை.  தைரியமாக மோதி ஜெயிக்கிறார்கள். இது தமிழ் சினிமா நீண்ட நெடிய ஆரோக்கியத்துக்கு துணை நிற்குமா? என்பது பற்றித் தெரியவில்லை. இதை அமைதியாக எல்லோரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com