அன்னை தெரசாவை புகைப்படம் எடுப்பது சாதாரண விஷயமல்ல! - புகைப்படக்  கலைஞர் ரகுராய்

நாட்டில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளையும், பல்வேறு  மக்களையும் மிக சிறப்பாக புகைப்படமெடுத்த வகையில் "பத்மஸ்ரீ'  
அன்னை தெரசாவை புகைப்படம் எடுப்பது சாதாரண விஷயமல்ல! - புகைப்படக்  கலைஞர் ரகுராய்

நாட்டில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளையும், பல்வேறு  மக்களையும் மிக சிறப்பாக புகைப்படமெடுத்த வகையில் "பத்மஸ்ரீ'   விருது பெற்றவர் பிரபல புகைப்பட  ஜர்னலிஸ்ட் ரகுராய். இவர் கடந்த 40 ஆண்டுகளாக  அன்னை தெரசாவை தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து வந்ததோடு, அவரைப்பற்றி இதுவரை நான்கு புத்தகங்களைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார்  அன்னை தெரசாவுடன் பழகிய நாள்களை இங்கு நினைவு கூர்கிறார் ரகுராய்:

" 1970 -  ஆம் ஆண்டில் அன்னை தெரசாவின் புகழ் பரவத் தொடங்கியபோது, மேகசின் எடிட்டர் டெஸ்மாண்ட் டோயிக்,  அவரைப்பற்றிய புத்தகமொன்றை எழுதி வெளியிட விரும்பினார். அவருக்காக அன்னை தெரசாவை புகைப்படமெடுக்க தொடங்கினேன். பின்னர் அவரைப் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய புத்தகமொன்றை நாமே ஏன் தொகுத்து வெளியிடக்   கூடாதென்றஎண்ணம் என் மனதில் எழுந்தது.

அந்த நேரத்தில் இளவயது  என்பதால் நான் மிகவும் உணர்ச்சி வயப்படுவதுண்டு. எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலை. இதையறிந்த அன்னை தெரசா, ஒருமுறை என்னிடம் கேட்டார். "ஏற்கெனவே என்னைப் பற்றிய புகைப்பட புத்தகமொன்றை தயாரித்து வெளியிட்டுள்ளீர்கள். அதுவே போதுமென்று உங்களுக்கு தோன்றவில்லையா?'' என்று கேட்டார். "இல்லை' என்று நான் பதிலளிப்பதற்குள் அவர்  சொன்னார். 

"பிரார்த்தனை செய்ய என்னை அனுமதியுங்கள்.  அதன்பின்னர் உங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறேன்''. 
அதற்கு நான் சொன்னேன்:  "மதர், ஏற்கெனவே நான் செய்த பிரார்த்தனைக்கு,  "ஆமாம்'  என்று பதில் கிடைத்துவிட்டது'' இதை கேட்டதும் அவர்  சிரித்துக் கொண்டே புகைப்படமெடுக்க அனுமதியளித்தார். இதைத் தொடர்ந்து நான் அவரை 40  ஆண்டுகளாக புகைப்படமெடுத்து வந்தேன்.

இப்போது நான் அவரைப்பற்றி வெளியிட்டுள்ள நான்காவது புத்தகத்தின் தலைப்பு  "செயின்ட் தெரசா ஆஃப் கொல்கத்தா எ செலிபரேஷன் ஆஃப் ஹெர் லைஃப் அன்ட் லெகஸி'  என்பதாகும். அன்னை தெரசா காலமான போது என்னுடைய பயணம் அவருடனேயே முழுமையடைந்து விட்டதாக கருதவில்லை. ஏனெனில் நான் ஒரு ஆண். என்னால் மிஷனரிஸ் ஆப் சாரிடீஸ் உள்ளே நுழைய முடியாது. யாரையும் சந்திக்கவோ, பேசவோ முடியாது. மேலும் நான் கிருஸ்துவன் அல்ல.

அதனால் நான் நினைத்தபடி எதையும் செய்யவோ, கிரகித்துக் கொள்ளவோ முடியவில்லை. ஆனால் பல ஆண்டுகள் கழித்து கருணை இல்லத்தில் உள்ள மூத்த சகோதரி ஒருவர், எனக்கு அனுப்பிய கடிதத்தில் "அன்னை தெரசாவுக்கு வாடிகனில்  நடக்கும் புனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா?'' என்று கேட்டிருந்தார்.  இந்த அருமையான வாய்ப்பை  மறுக்க இயலுமா? அந்நிகழ்ச்சிக்கு செல்ல எவ்வித திட்டமும் என்னிடம்  இல்லை என்றாலும், கடிதம் கிடைத்ததும் போக வேண்டுமென்று முடிவு செய்தேன். அங்கு சென்று வந்த பின்னர் அந்த அனுபவத்தை புத்தகமாக  எழுதத் தீர்மானித்தேன். 

இந்த  புத்தகத்தில் வாடிகன் நகர் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் அன்னை தெரசாவுக்கு  வழங்கப்பட்ட  புனிதர் பட்டம் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் மட்டுமின்றி 1970-ஆம் ஆண்டு முதல் அன்னை வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய  தகவல்கள் மற்றும் அவரது மறைவுக்குப் பின்னர் கொல்கத்தா கருணை இல்லம் எப்படி செயல்படுகிறது என்ற தகவல்களும் புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

2003-ஆம் ஆண்டு அன்னை தெரசாவைப் பற்றிய என்னுடைய மூன்றாவது புத்தகம் வெளியானபோது அதற்கு, "புனிதர் அன்னை'   என்று தலைப்பிட்டிருந்தேன்.  "எதற்காக நீங்களாகவே அன்னையைப் புனிதர் என்று குறிப்பிட்டுளீர்கள்?'' என்று பதிப்பாளர் என்னிடம் கேட்டார். அவர்  செய்துவரும் தொண்டின் காரணமாக அவர் ஒரு வாழும் புனிதர் என்று கருதியே அந்த தலைப்பை வைத்ததாக கூறினேன். பத்தாண்டுகள் கழித்து வாடிகன் அவருக்கு புனிதர் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் அவரை புகைப்படமெடுப்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு கோணத்திலும் படமெடுத்தவுடன் அதைப்பற்றி அவரிடம் விளக்கி சமாதானப் படுத்துவேன். ஒருவர் வெளிப்படுத்தும் உணர்வுகள், ஏக்கங்களை படம் பிடிக்கும்போதுதான் அவரது சக்தியை உணர முடியும். இவை அனைத்துமே மனிதனின் வெளிப்பாடுகள். பாதுகாக்கப்பட வேண்டியவை. முதல் புத்தகம்  தயாரானவுடன் அவரிடம் கொண்டுபோய்  கொடுத்தபோது, மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார். "ஓ, புத்தகம் வெளியாகிவிட்டதா?'' என்று கேட்டபடியே  சில பக்கங்களைப்  புரட்டிப் பார்த்தவர், பக்கத்தில் இருந்த சகோதரியிடம் கொடுத்து பத்திரமாக வைக்கும்படி கூறினார். அந்த புத்தகத்தில் அவரது நற்பணிகளை வெளிப்படுத்தியிருந்த புகைப்படங்களைப்  பற்றி அவர் கண்டுகொள்ளவே இல்லை. தான் செய்யும் தொண்டு இறைவனால் இடப்பட்ட  கட்டளையாகவே கருதினார்.

அன்னை தெரசாவைப் பற்றி தொகுத்து வெளியிட்ட புகைப்பட புத்தகங்களை போலவே,  கடந்த 15 ஆண்டுகளாக தலாய்லாமாவுடன் நான் பழகிய நாட்களையும், அவரை வைத்து எடுத்த புகைப்படங்களையும்  தொகுத்துப்  புத்தகமொன்றை இந்த ஆண்டுக்குள் வெளியிடவுள்ளேன். ஏனெனில் அவர் எனக்குப் பிடித்தமானவர் மட்டுமல்ல. என் இதயத்தில் அவருக்கென்று தனி இடமும், மதிப்பும் உள்ளது'' என்றார் ரகுராய்.
- அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com