அழகு என்பது இதயத்தின் ஒளி!

ஒரு நிமிட காட்சியில் கலகலவென ஈர்க்கிறது "என் ஆளோட செருப்பக் காணோம்'. வழக்கமான காதல் ஃபீலிங்ஸ் மட்டுமே இல்லாமல் எங்கெங்கும்
அழகு என்பது இதயத்தின் ஒளி!

"லீடர்.. என்ன பண்றீங்க...''
"பாத்தா தெரியல.. சைட் அடிச்சுக்கிட்டு இருக்கேன்டா...''
"யாரை...''
"எல்லாரையும்தான்...'' 
"எல்லாரையுமா...''
"ஆமான்டா... முக்கியமா நடுவுல, பச்ச கலர் ட்ரெஸ் போட்டுறுக்கா பாத்தியா ஒருத்தி...  புதுசா வாங்குன டியூப்லைட் மாதிரி... அவளத்தான் நான் சீரியஸô லவ் பண்றேன்.. மத்தவங்களையெல்லாம் சுமாரா லவ் பண்றேன்...''
"லவ்ல கூட சீரியஸ்... சுமார்.. என்ன பாஸ்...?''
"ஆமான்டா... ஒண்ணு கன்பாஃர்ம் லிஸ்ட்... மத்ததெல்லாம் வெயிட்டிங் லிஸ்ட்...''
ஒரு நிமிட காட்சியில் கலகலவென ஈர்க்கிறது "என் ஆளோட செருப்பக் காணோம்'. வழக்கமான காதல் ஃபீலிங்ஸ் மட்டுமே இல்லாமல் எங்கெங்கும் சிரிப்புத் தோரணம் அமைத்திருக்கும் படத்தின் இயக்குநர் ஜெகன்நாத். "புதிய கீதை', "கோடம்பாக்கம்', "ராமன் தேடிய சீதை' என தன் படங்களில் சீரியஸ் பக்கங்களை காட்டியவர், முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து படத்தை இயக்கி  வருகிறார்.   
"கயல்' ஆனந்தியின் செருப்பு காணாமல் போய் விடுகிறது.  அது வெறும் செருப்புதானே என்று விட்டு விடாமல், அவளை காதலிக்கும் ஹீரோ அந்தச் செருப்பைத் தேடி ஒரு சின்ன பயணம் போகிறார். அது ஒரு மழைக்காலம். சிறு தூறலும், சில்லிட வைக்கும் குளிருமாக நகர்கிறது பயணம். அப்படி அந்த பயணத்தில் அவர் சந்திக்கிற மனிதர்களும், காரணங்களும் இந்த கதைக்கு இன்னும் வலு சேர்க்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறேன். வித்தியாசமான அனுபவமாக  இருக்கும். 

இன்னுமொரு யதார்த்த சினிமாவுக்கான பரிசோதனை முயற்சியாக இருக்குமா..?  
இருக்கலாம். சார்லி சாப்ளினுக்கு நான் தீவிரமான ரசிகன். அவரின் சினிமா வாழ்க்கை, சொந்த வாழ்க்கை எல்லாமே எனக்கு பெரிய உத்வேகம். எவ்வளவு பெரிய உணர்வுகளையும் காமெடியாக நகர்த்தி விடும் அவரது பாங்கு , அவ்வளவு அழகு.  அவரைப் போல் அன்பனாய், அற்புதனாய், லட்சியவாதியாய், ஒரு புத்திசாலியாய், அறிவாளியாய் இருக்கவே துடிக்கிறது மனசு.  "தி கோல்ட் ரஷ்' என்று ஒரு படம்.  பனிமலையில் புதைந்து கிடக்கிற தங்கப் புதையலைத் தேடிப் போகிற பயணம். அதில் சார்லி சாப்ளினும் ஒருத்தர்.  ஓயாமல் அடிக்கிற பனிப்புயலில் பசி பந்தாடும். ஒரு கட்டத்தில் பசி.. பசி... அங்கே ஆரம்பிக்கும் பயம். இவன் நம்மை அடித்து தின்று விடுவானோ என்று ஒவ்வொருத்தருக்கும் பயம். தூங்காமல், நிம்மதியில்லாமல் ஒவ்வொருத்தரும் பயத்தில் அலைவதாக படம் போகும். அட, ஒரு இங்கிலாந்துக்காரன், அமெரிக்காவில்  படம் எடுத்தவன் பசியைப் பற்றி எப்படி இப்படி யோசித்தான் என்று ஆச்சரியமாக இருந்தது. அதுதான் மானுடத்தை தேடுகிற கலைஞன் மனசு.  இந்தக் கதையை யோசித்ததும், நான் சார்லி சாப்ளினின் சினிமா பாணியைத்தான் பின்பற்றினேன். காதலியின் செருப்பைத் தேடி போகிற காதலன். அவன் சந்திக்கிற மனிதர்கள், சிறு பயணம் என எங்கெங்கும் இதில் உணர்வுகள் நிறைந்து கிடக்கிற கதை. 

பக்கோடா பாண்டி-கயல் ஆனந்தி என காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கே...
நானே எதிர்பார்க்காத ஒன்று இது. கயல் ஆனந்திதான் ஹீரோயின் என முடிவு செய்து விட்டேன். அவரும் ஒப்புதல் தந்து விட்டார். ஹீரோவுக்காகதான் கொஞ்சம் மெனக்கெடல் இருந்தது. அதற்காக 90 பேருக்கு டெஸ்ட் ஷூட் செய்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு காட்சி கொடுத்து நடிக்க சொன்னேன். அப்படி கடைசியாக வந்து சேர்ந்தவர்தான் பக்கோடா பாண்டி. 
"பசங்க' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். டெஸ்ட் ஷூட்டுக்காக அவர் நடித்த ஒரு காட்சி அத்தனை பிரமாதம். அவர்தான் ஹீரோ என்று தெரிந்ததும், கயல் ஆனந்திக்கு  கொஞ்சம் தயக்கம் இருந்தது.  வெவ்வேறு படங்கள் இருப்பதாக மழுப்பினார். பேச்சு கொடுக்காமல் கூட விலக பார்த்தார். நானே நேரில் போய் பார்த்து, பாண்டி நடித்த காட்சிகளை போட்டுக் காட்டினேன். பார்த்தவர், சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு,  நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று உறுதி கொடுத்தார். 
அழகு என்பது இதயத்தின் ஒளி... என புரிந்து உணர்ந்த தருணம் அது. என்னையும், என் கதையையும் மட்டுமே நம்பிய தயாரிப்பாளர் சக்திவேல் சார்  பாண்டிக்கு தமிழ் என பெயர் வைத்து நடிக்க வைத்தார். நிச்சயம் வேறு ஒரு நிலைக்கு வருவார் தமிழ். அட்வான்ஸ் வாழ்த்துகள் தமிழ்.  

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடி சீதை என படங்கள் எடுத்து விட்டு, இது மாதிரி படம் எடுக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது...
இந்த ஃபார்முலா இப்போது பரிசோதனை முயற்சி எல்லாம் இல்லை. இதுதான் இப்போது ஹிட் மந்திரம். "தென்மேற்கு பருவக்காற்று' விஜய்சேதுபதி, "அட்டக்கத்தி' தினேஷ், "மைனா' விதார்த் எல்லாம் அப்போது புதுமுகம். இப்போது ஒரே படத்தில் பளீச் அடையாளத்துடன் வளர்ந்து நிற்கிறார்களே அந்த நம்பிக்கைதான் இங்கே பலருக்கும் பரிசோதனை முயற்சிகளில் இறங்க வைக்கிறது. 
சீரியஸ் பாணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு உழைப்பதை விட, காமெடி பின்னணியில் உணர்வுகளை முன் வைக்கிற இந்த அனுபவம்  ரொம்பவே புதுசு. 
உங்களுக்கு காமெடி நல்லா வருதே... முயற்சி செய்யுங்கள் என சொன்னார்கள். அந்த சின்ன லீடை பிடித்து இந்தப் படம் இயக்கியிருக்கிறேன். ஃபர்ஸ்ட் காப்பி பார்தத்வர்கள் வாய் விட்டு சிரித்தார்கள். அந்த சிரிப்பு தியேட்டர்களில் அப்படியே 
எதிரொலிக்க வேண்டும். 
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com