ஆவிகளுக்கான வீடுகள்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில் 1840-ஆம் ஆண்டு பிறந்தவர் சாரா.
ஆவிகளுக்கான வீடுகள்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில் 1840-ஆம் ஆண்டு பிறந்தவர் சாரா. இவரின் 22-ஆம் வயதில் வில்லியம் விர்ட் வின்செஸ்டரை மணந்தார். வில்லியம் வின்செஸ்டர் துப்பாக்கி-பீரங்கி- போன்ற போர்க்கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவந்தார். 

இத்தம்பதிகளுக்கு 1866 -ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அனி பார்டீ என்று பெயரிட்டனர். இக்குழந்தை ஒரே மாதத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தது. குழந்தையின் மரணம் சாராவின் மனதை வாட்டியது. வேறு குழந்தையும் பிறக்கவில்லை. சாராவின் 41-ஆம் வயதில் 1881-ஆம் ஆண்டில் சாராவின் கணவர் வின்செஸ்டரும் மரணமடைந்தார்.  கணவரின் மரணத்திற்குப் பிறகும் போர்க்கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வருமானம் வந்து கொண்டிருந்தது. 

எவ்வளவு பணம் இருந்தும் சாராவுக்கு மன நிம்மதி இல்லை. தொடர்ந்து தன் குடும்பத்தில் நிகழ்ந்த சோகங்களை ஒன்றுவிடாமல் ஒரு பாதிரியாரிடம் கூறினார்.  

அதைக் கேட்ட பாதிரியார் "உன் கணவரின் நிறுவனம் தயாரித்த போர்க்கருவிகளால் பல்லாயிரம் பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ஆவிகள் அமைதியில்லாமல் அலைகின்றன. அந்த ஆவிகள் வசிக்க ஒரு பெரிய குடியிருப்பைக் கட்ட வேண்டும். இதைக் கட்டும் பணியை உன் உயிர் உள்ளவரை நிறுத்தக்கூடாது. இவ்வாறு ஆவிகளுக்கு வீடுகள் கட்டுவதால் உனக்கு மன நிம்மதி கிடைக்கும்'' என்று கூறினார்.  அதை ஏற்றுக்கொண்ட சாரா,  மேற்கு கலிபோர்னியாவில் 161 ஏக்கர் பண்ணையை வாங்கி, அதில் வீடுகள் கட்ட ஆரம்பித்தார்.  24 மணி நேரமும், 365 நாட்களும் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்தன. வீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சாராவே தன் கற்பனைப் படி வடிவமைத்துக் காண்பித்தார். 160 அறைகள், இரண்டாயிரம் கதவுகள், பத்தாயிரம் ஜன்னல்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், 1906-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் குடியிருப்பில் சேதம் ஏற்பட்டது. சாரா,  கட்டுமானத்தை இன்னும் உறுதியாகவும் அழகு மிளிரவும் புனரமைத்தார். மேலும் ஆவிகள் வந்து செல்ல சுரங்க வழிகள், பாதாள அறைகள் அமைத்தார்.  8 மாடி வீடுகள், அதில் 3 லிப்ட்களும்(!) அமைக்கப்பட்டன.  "எண்-13' ஆவிகளுக்குப் பிடித்த எண்ணாகக் கருதப் படுவதால், 13 கழிவறைகள், 13 குளியல் அறைகள், 13 விளக்குகள், ஒவ்வொரு கதவிலும், ஜன்னல்களிலும் 13 வளைவுகள் கொண்ட டிசைன்கள் அமைக்கப்பட்டன.  தொடர்ந்து, 38ஆண்டுகள் வீடு கட்டிவந்த சாரா, தன் 82-ஆம் வயதில் 1922-இல் காலமானார். சாரா கட்டடக்கலை வல்லுநர் கிடையாது. அவர் தன் மனம் போன போக்கில் இந்த வீடுகளைக் கட்டிவந்தார். ஆனால், கட்டடக்கலை வல்லுநர்களே இந்த வீடுகளின் அமைப்பைக் கண்டு வியந்து போனார்கள். சாரா வின்செஸ்டர் கட்டிய அதிசய மாளிகை இப்போது சுற்றுலாத் தலமாகவும் விளங்கி சாரா வின்செஸ்டரின் புகழைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.
-இ.கே.ஆர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com