தெரிந்த பெயர், தெரியாத விவரம்: பிச்சாவரம்

சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் எழில்மிகு சுரபுண்ணை (மாங்குரோவ்) காடுகள், தீவுகள் அமைந்துள்ளன.  
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: பிச்சாவரம்

* சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் எழில்மிகு சுரபுண்ணை (மாங்குரோவ்) காடுகள், தீவுகள் அமைந்துள்ளன.  

* பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுண்ணை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 

* பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகள் உள்ளன. உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில்  சுமார் 4,400 கால்வாய்கள் உள்ளன. 

* ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில்  இங்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். 

* எம்ஜிஆர் நடித்த "இதயக்கனி' படத்தின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்றதால் அங்குள்ள தீவிற்கு "எம்ஜிஆர் திட்டு' என பெயர் சூட்டப்பட்டது. அதன்பின்பு, பல திரைப்படங்களின் சில காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

* கடற்கரையோரம் எம்ஜிஆர் திட்டு,  சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர். 2004  டிசம்பர் 26-ஆம் தேதி சுனாமி பேரலையின் போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பெரும்பாலோர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

* இப்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட "தில்லை மரம்' என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தில்லை மரம், தொழுநோய், ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும். தனது தொழுநோய் குணமடைய வேண்டிய முதலாம் பராந்தக சோழன் தில்லை நடராஜரை வேண்டி இங்கு வந்து தங்கி 45 நாட்கள் முனிவர் ஒருவரிடம் தில்லை மர மூலிகை மூலம் சிகிச்சை பெற்று அந்நோய் குணமடைந்ததாக வரலாறு கூறுகிறது. 

* இங்கிருந்த தில்லை மரம் சிதம்பரம் நடராஜர்கோயிலின் ஸ்தல விருட்ச மரமாக உள்ளது.

* சுரபுண்ணை செடி புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையம் சோதனை மூலம் கண்டறிந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந்த ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.  

* இந்த சுரபுண்ணை காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். குறுகிய மர சந்துகளிடையே படகில் பயணிப்பது வேறெங்கும் கிடைக்காத தனி அனுபவமாகும். படகில் பயணம் செய்யும்போது சில இடங்களில் சுரபுண்ணை செடிகள் நம் தோள்களை உரசிச்செல்லும்.

* இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். 
-சிதம்பரம் ஜி.சுந்தரராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com