சுக்ரன் - சுக்ரவார அம்மனாக அருள் புரியும் தலம்!

சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம், புராதன பெருமை உடைய ஊர்களில் ஒன்று. முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில்
சுக்ரன் - சுக்ரவார அம்மனாக அருள் புரியும் தலம்!

சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம், புராதன பெருமை உடைய ஊர்களில் ஒன்று. முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில் 11 -ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் இதனை அறிய முடிகிறது. இங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோயில் - பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் பிரசித்தி பெற்றவை.

ஒருசமயம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ரன், இழந்த கண்பார்வையை மீண்டும் பெறுவதற்காக சிவனை நோக்கி தவம் புரிந்து வந்தார். அதே சமயத்தில் பார்வதி தேவியும் சிவனிடம் வரம் கேட்பதற்காக தவம் செய்தார். சிவபெருமான் பிரசன்னமாகி, இருவரது குறைகளையும் கேட்டபோது, முதலில் சுக்ரனுக்குப் பார்வை அளிக்குமாறு சிவனிடம் கூறினார் பார்வதி. கண்ணொளி பெற்ற சுக்ரனிடம் "பூலோகத்தில் நீ சுக்ரவார அம்மனாக மாறி, பக்தர்களுக்கு அருள் புரியவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார் பார்வதி. அதன்படியே இத்தலத்தில், சுக்ரன்-சுக்ரவார அம்மனாக அவதரித்தார் என்பது தல வரலாறு. இக்கோயிலில் அகஸ்தீஸ்வரரும், சுக்ரவார அம்மனும் முக்கிய வழிபாட்டுக்குரிய தெய்வங்கள்.

ஒருமுறை, பொம்மராஜன் என்ற மன்னன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது, இங்குள்ள குளத்தில் நீராடி குணம் அடைந்தான் என்பது பாரம்பரியமாக சொல்லப்பட்டு வரும் சம்பவம். நுங்கம்பாக்கம்-அக்காலத்தில் "பொம்மராஜபுரம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு பார்த்த சிறிய கோபுரம். வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு நுழைவாயில்கள். எதிரே பெரிய குளம். இதில் கடந்த 80 ஆண்டுகளாக தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுகிறது. கோயிலின் முக்கிய கருவறையில் அகஸ்தீஸ்வரர் சிவலிங்கமாக காட்சி அளிக்கிறார். இங்குள்ள பார்வதி, அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார். தெய்வங்களின் தோற்றம் திருவானைக்காவில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ளது போன்றே இங்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிக்ஷாடன மூர்த்தி-மோகினி, நடராஜர்-சிவகாமி, சமயக்குரவர் நால்வர், மெய்கண்ட தேவர்-அருள் நந்தி சிவம்- மறைஞான சம்பந்தர்- உமாபதி சிவம் ஆகிய சிற்பங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன. மிகவும் அரிதாக இங்குள்ள அதிகார நந்திக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் உள்ள தட்சிணா மூர்த்தி மண்டபத்தின் மேற்கூரையிலும் சுவர்களிலும் எண்ணற்ற வண்ணச் சித்திரங்களில் தெய்வ வடிவங்கள் அழகுற தீட்டப்பட்டுள்ளன. இத்தலத்தின் புனித மரம் வன்னி மரம்.

இக்கோயிலில் கி.பி.1808 -ஆம் ஆண்டில் செதுக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டின்படி, சுப்பு தெய்வநாயக முதலியார் என்பவர், இக்கோயிலின் திருவிழாக்கள் நடைபெறுவதற்கு இறையிலியாக நிலம், சத்திரம், தோப்புகள் போன்றவற்றை வழங்கியிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் - கோயில் - சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.
தமிழில்: ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com