போர்ஹேயின் படைப்புகள்!

அர்ஜென்டினாவில் பிறந்தவர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே.  எழுத்தாளர், கவிஞர், தத்துவ அறிஞர், மொழி பெயர்ப்பாளர், விமர்சகர், நூலகர் என்று பன்முகத் திறன் படைத்தவர். 30ஆம் வயதில் பார்வையை
போர்ஹேயின் படைப்புகள்!

அர்ஜென்டினாவில் பிறந்தவர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே.  எழுத்தாளர், கவிஞர், தத்துவ அறிஞர், மொழி பெயர்ப்பாளர், விமர்சகர், நூலகர் என்று பன்முகத் திறன் படைத்தவர். 30ஆம் வயதில் பார்வையை இழந்தபின், சொற்பொழிவாளராக விளங்கியவர்.  85-ஆம் வயதில் ஜெனிவாவில் மறைந்தார்.  போர்ஹேயின் கதைகள் ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆண்ட்ரூ ஹர்லியால் மொழியாக்கம் செய்யப்பட்டு மொத்தமாக தொகுதியாகவும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் வாசகர்களுக்கு போர்ஹேயின் கதைகளையும் போர்ஹேயின் வாழ்க்கைச் சம்பவங்களையும் எடுத்துக்கூறுகிறது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "என்றார் போர்ஹே' என்ற நூல். அதிலிருந்து ஒரு பகுதி: 
இந்திய சரித்திரம், தத்துவம் மற்றும் காப்பியங்கள் மீதான போர்ஹேயின் பார்வை  நமக்கு மிக நெருக்கமானது.

போர்ஹே, கீழைத்தேய நாடுகளின் இலக்கியம் மற்றும் தத்துவங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார். கபாலா மரபின் மீது அவருக்கு இருந்த அக்கறையைவிடவும் புத்த மதம் குறித்த அவரது தேடுதல் மிக முக்கியமானது. போர்ஹேயை உருவாக்கியதில் கீழைத்தேய சிந்தனைகளுக்கு முக்கிய இடமிருக்கிறது. போர்ஹே ஓர் இலக்கியவாதி என்பதைத் தாண்டி இலக்கியத்தின் வழியாக தத்துவம், கணிதம், உயர் விஞ்ஞானம், புனைவின் எல்லையற்ற சாத்தியங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர்.

புத்தகங்களை அவர் தனித்த பிரபஞ்சமாகக் கருதினார். புத்தகத்தின் விதி உலகின் விதியை விடவும் மர்மமானது மற்றும் புதிரானது என்ற கருத்து அவரிடமிருந்தது. போர்ஹேயின் ஆர்வம் கதைகளை வளர்த்து எடுப்பதில் கூடுவதில்லை. மாறாக கதைகளின் வழியாக வாழ்வின் புதிர்களை எப்படிக் கடந்து செல்வது என்பதில்தானிருக்கிறது. போர்ஹே, கதையை ஒரு புதிர்கட்டம் போன்றோ, க்யூப் போன்றோதான் கருதினார். அவரைப் பொறுத்தவரையில் கதை என்பது முடிவற்ற சாத்தியங்களுக்கான துவக்கப்புள்ளி. கதை ஒரு சம்பவத்தை விவரிப்பதோடு முடிந்து விடுவதில் அவருக்கு உடன்பாடில்லை.

போர்ஹேயின் புனைகதைகளைப் போலவே அவரது கட்டுரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. நூல் விமர்சனம், செவ்விலக்கியங்கள் பற்றிய பதிவுகள், மீள்பார்வைகள், கவிதை மற்றும் தத்துவம் குறித்த தனித்த கட்டுரைகள், சினிமா விமர்சனம், முன்னுரை என்று 1200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதில் பெரும்பான்மை இன்னமும் ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கமே செய்யப்படவில்லை.

இதுபோலவே பல்கலைக்கழகங்களிலும் தனித்த இலக்கிய அமைப்புகளில் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்கள் குறித்து இவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் மிகச் சிறப்பானவை. குறிப்பாக ஷேக்ஸ்பியர், தாந்தே, புத்தர் குறித்த அவரது சொற்பொழிவுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அத்தோடு கவிதை குறித்த அவரது தொடர் சொற்பொழிவுகள் கவிதை ரசனையை வளர்த்தெடுப்பதில் உதவி செய்ததோடு கவிதையைப் புரிந்துகொள்வதற்கான சாத்தியங்களை உருவாக்கியது.

பார்வை குறைபாடு காரணமாக முப்பது வயதில் அவரிடமிருந்து உலகம் மறையத் துவங்கியது. பார்வையற்றவராகவே அவர் தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் கழித்தார். அந்த நாட்களில் சொற்பொழிவு ஆற்றுவதே அவருக்கு நெருக்கமான வடிவமாக இருந்தது. போர்ஹே அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஆங்கில இலக்கியம் குறித்த அவரது பார்வைகள் சம்பிரதாயமான ஆங்கில இலக்கிய விமர்சகர்களை நிலைகுலையச் செய்தது.

போர்ஹே  ஒரு விஞ்ஞானியைப்போல கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இவரது கண்டுபிடிப்பிற்கான தளம் இலக்கியம். பிரதிகளின் ஊடாக அவர் கண்டுபிடித்த காலம், வெளி பற்றிய கருத்துகள் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்திற்கு எந்தவகையிலும் குறைந்ததில்லை.
-எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "என்றார் போர்ஹே' நூலிலிருந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com